புஞ்சையிலிருந்து புரிசைக்கு

புஞ்சையிலிருந்து புரிசைக்கு

இலக்கியத்தில் நவீனத்துவத்தின் வரவு புதிய மாற்றங்களை உருவாக்கியது. சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து' சிறு பத்திரிகை சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய  சமயத்தில்,  அவருடன்  கி.அ.சச்சிதானந்தம்,  வைத்தீஸ்வரன், ந. முத்து சாமி போன்றோர் சேர்ந்து செயல்பட்டார்கள்.

தமிழில் நாடகங்கள் அவ்வளவாக இல்லாத சூழலில், ‘எழுத்து' பத்திரிகையில் சில மொழிபெயர்ப்பு நாடகங்களைக் கொண்டு வந்தார்கள். மொழிபெயர்ப்பு நாடகங்களுக்கு நிகராக தமிழில் இலக்கியத் தரம் வாய்ந்த நாடகங்கள் இல்லாததைக் குறித்து சி.சு செல்லப்பாவும், ந.முத்துசாமியும் மற்றும் உடனிருப்பவர்களும் விவாதிக்கிறார்கள். இந்த நேரத்தில் 'எழுத்து' பத்திரிகை நிதி திரட்டலுக்காக கோபாலி இயக்கத்தில் எக்மோர் மியூசியம் அரங்கில் நடந்த  ‘மிஸ். ஜூலி' எனும் நாடகம் ந. முத்து

சாமியின் பிரக்ஞையில் ஒருவிதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. எழுத்துவின் வாசகர்கள், சந்தாதாரர்கள் என்று 200 பேர் அந்த நாடகத்தைப் பார்த்திருக்கிறார்கள்.

நாடக நிகழ்வையொட்டி செல்லப்பாவுக்கும் முத்து சாமிக்கும் உறவு கெட்டுப் போகிறது. கல்லூரி நண்பரும், கவிஞருமான சி. மணி ‘நடை' எனும் பத்திரிகை தொடங்க, அதற்காக ‘காலம் காலமாக' எனும் தன் முதல் நாடகத்தை எழுதுகிறார் ந.மு. ‘காலம் காலமாக' தலைமுறை இடைவெளிப் பற்றி பேசிய நாடகம். மனிதர்கள் தம் குற்றங்களை ஒத்துக் கொள்ளாமல் பிறர் மேல் சாற்றிவிட்டுத் தப்பிக்கும் மனித அகங்காரத்தைச் சொல்லும் நாடகம். உருவத்தைப் பற்றி கவலையில்லாமல் எழுதப்பட்ட நாடகம். தமிழில் எழுதப்பட்ட முதல் நவீன, அபத்தவகை நாடகம். அதன் பிறகு ந. முத்துசாமி தொடர்ந்து ‘அப்பாவும் பிள்ளையும்' ‘நாற்காலிக்காரர்' என இரண்டு நாடகங்களை எழுதினார். இரண்டும் ‘கசட தபற' சிற்றிதழில் பிரசுரமாயின. ‘நாற்காலிக்காரர்' தமிழின் மிகச் சிறந்த அரசியல் அங்கத நாடகம்.

சிறந்த சிறுகதைகளைக் கொண்ட ‘நீர்மை' எனும் தொகுப்பிற்கு சொந்தக்காரான ந.முத்துசாமி இப்படித்தான் முழு நேர நாடக எழுத்தாளரானார்.

டில்லியில் நடந்த நடேசத் தம்பிரான் தெருக்கூத்து பற்றி வெ.சாமிநாதன் எழுதியிருந்ததைப் படித்திருந்த ந. முத்துசாமி அதே நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நிகழ்ந்த போது நண்பர்கள் சச்சிதானந்தம், க்ரியா ராமகிருஷ்ணன்,  ஓவியர் கிருஷ்ணமூர்த்தி, பிரக்ஞை வீராச்சாமி ஆகியோருடன் சேர்ந்து போய் பார்த்திருக்கிறார்.  தெருக்கூத்தில் இருந்த நாடக அம்சங்கள் ந.முத்துசாமி மற்றும் நண்பர்களைக் கவர்ந்தன. தெருக்கூத்து தமிழர்களின் வீரியம் மிக்க தியேட்டர் என்பதை உணர்ந்த ந.முத்துசாமி ‘மரபை நவீனமாக்குவது, நவீனத்தை மரபாக்குவது' என்கிற புரிதலுக்கு வந்து சேர்ந்தார்.

தெருக்கூத்து குறித்த பெருமைகளை தமிழ் சமூகத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று தொடர்ச்சியாக எழுதி ‘அன்று பூட்டிய வண்டி' எனும் தொகுப்பைக் கொண்டு வந்தார். தெருக்கூத்து பற்றிய தமிழின் மிக முக்கியமான இத்தொகுப்பை முதலில் அன்னம் பதிப்பகம் கொண்டு வந்தது.

படுகளமும், அர்ச்சுனன் தபசும் ந. முத்துசாமி திரும்பத் திரும்பப் பார்த்த தெருக்கூத்துகள். பின்னர் இவற்றை நவீன நாடகங்களாக எழுதி மேடையேற்றவும் செய்தார். கண்ணப்பத் தம்பிரானோடு சேர்ந்து வேலை  பார்த்த சமயங்களில் கூத்தர்களின் வருமானம் ஒரு விவசாயக் கூலியின் வருமானம் அளவுக்காவது இருக்க வேண்டும் என்று பல முயற்சிகளை செய்து பார்த்திருக்கிறார். ஒரு சடங்காக மட்டும் இருக்கும் கூத்தை சடங்குகளுக்கு அப்பாலும் மக்கள் பார்த்து மகிழத்தக்க ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவும் ஆர்வத்தோடு வந்து ரசிப்பதற்கான ஒரு நிகழ்வாகவும் மாற்ற வேண்டும் என்று எண்ணி வேலை செய்தார்கள். பல தோல்விகளுக்குப் பின் ‘வாலி வதம்' கூத்திற்குப் பின் வெற்றிகரமான ஒரு வழியை கண்டு பிடித்தார்கள். சிக்கலும் போராட்டமும் இல்லாத கதை நல்ல கூத்து வடிவத்தைப் பெறாது என்கிற உண்மையை உணர்ந்து அதனடிப்படையில் கூத்திற்கான கதைகளை தேர்வு செய்தார்கள். இந்த அனுபவத்தை பின்னாட்களில் ந.மு. தான் எழுதிய எல்லா நாடகங்களிலும் கையாண்டார். நான் கூத்துப்பட்டறையில் சேர்ந்த புதிதில் ‘படுகளம்' நாடகத்தில் கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்த கணம் இன்றைக்கும் என் மனதில் உறைந்திருக்கிறது.

‘இழுக்க இழுக்க எட்டாய் வருகுதே - திரௌபதையாடை இழுத்த கைகளும் அசந்து போகுதே - திரௌபதை யாடை'   என்று நடிகர் பழனி பதைபதைத்து சினம் கொண்ட காளையாக நின்ற அசைவு ஓர் அபாரம். கூத்தில் எளிதாக உருவங்களை உருவாக்கும் உத்திகளை கூத்துப்பட்டறை நடிகர்கள் கற்றுக்கொண்டு பின்னர் நவீன நாடகங்களில் பயன்படுத்தினார்கள். சில உதாரணங்கள் இரண்டு துணிகளைக் கொண்டு விநாயகர் செய்தல், இரண்டு நபர்களையும் நீண்ட துணியையும் கொண்டு பிணத்தை உருவாக்குதல், நீண்ட துணியை கவட்டில் வைத்துக் கொண்டு குதிரையை உருவாக்குதல், பெரிய துணியால் ஐந்து கால் மண்டபத்தை உண்டாக்குதல், திரையை பலவிதமாக உபயோகித்தல் ஆகியவை எல்லாம் நவீன நாடகம் தெருக்கூத்திலிருந்து கடன் பெற்றவை.

‘கூத்துப்பட்டறை என்பது ஒரு நடிகனுடைய இடம். ஒரு நடிகன் இருபத்து நான்கு மணி நேரமும் செயல்பட வேண்டுமானால் அதற்கு சரியான இடம் வேண்டும். அந்த இடம்தான் கூத்துப்பட்டறை,' இது ந.முத்துசாமி ஒரு நேர்காணலில் சொன்னது. நாற்பது வருடங்களாக கூத்துப்பட்டறை நடிகர்களுக்காகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. தமிழில் நிகழ்த்தப் பட்டிருக்கும் நவீன நாடகங்களில் பெரும்பான்மை நாடகங்கள் கூத்துப்பட்டறையின் தயாரிப்பு.

நாடகம் சார்ந்த ந. முத்துசாமியின் அணுகுமுறைகளின் மீதும், கூத்துப்பட்டறையின் செயல்பாடுகளின் மீதும் விமர்சனங்கள் இருந்தாலும் அவரது பாதிப்புக்குட்படாத தமிழ் நாடகச் செயல்பாட்டாளர்கள் எவரும் இல்லை என்றே சொல்லலாம். அவர் எழுதிய நாடகங்களில் நாற்காலிக்காரர், சுவரொட்டிகள், இங்கிலாந்து, படுகளம் ஆகிய நாடகங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.

 ‘காலம் காலமாக' நாடகத்தை அவர் எழுதி ஏறக்குறைய நாற்பது வருடங்கள் கழித்து கூத்துப்பட்டறையின் பயிற்சி மாணவர்களை வைத்து நான் இயக்கியிருக்கிறேன்.  ‘நாற்காலிக்காரர்' நாடகத்தை என் இயக்கத்தில் மேடையேற்ற வேண்டும் என்பது என் நீண்ட  நாள் கனவு.

( சோழன் வாலறிவன், நடிப்புக்கலை பயிற்றுநர்)

அக்டோபர், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com