புதுக்கவிதையும் புதுப்புதுச் சண்டைகளும்

புதுக்கவிதையும் புதுப்புதுச் சண்டைகளும்

இரண்டு கவிஞர்களுக்குச் சார்பாகவும் அணி திரண்டது. சூழல், உன்னதம், உள்ளொளி போன்ற சொற்கள் அறிமுகமானதும் இக்காலகட்டம்தான்.

பாரதியின் வசன கவிதைகளையும் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனின் ‘புல்லின் இதழ்க’ளையும் வாசித்துப் பெற்ற ஊக்கத்தில் சிறுகதை எழுத்தாளரான ந.பிச்சமூர்த்தி செய்து பார்த்த கவிதைச் சோதனைகள்தாம் இன்றைய புதுக் கவிதைக்கு அடிப்படை. ‘காதல்’ என்ற தலைப்பில் முதலாவது மரபில்லாக் கவிதை வெளியானது.இது நடந்தது 1934 இல். அவரைப் பின் தொடர்ந்து நாவலாசிரியர் க.நா.சுப்ரமணியம்  1939 இல் ‘மணப்பெண்’ என்ற தலைப்பில் புது வடிவக்கவிதையை எழுதினார்.ஒரு டஜன் எண்ணிக்கை வரை புதுக் கவிதைகள் எழுதிப்பார்த்த  பின்னர் அந்தச் சோதனை கைவிடப்பட்டது. மீண்டும் 1950 வருடங்களில் இந்தப் பரிசோதனை வடிவம் புத்துயிர் பெற்றது. விமர்சனத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட ‘எழுத்து’ ( ஆசிரியர் - சி.சு.செல்லப்பா ) இந்த முயற்சிக்குக் களமானது. நிறைய பேரின் நிறைய கவிதைகள் வெளிவந்தன. புதுக்கவிதை என்ற போக்கும் உருவானது. 

புதுக்கவிதை எழுபதுகளில் பெரும் வீச்சாகப் பரவிய கவிதைச் சூழலில் இரண்டு கவிஞர்கள்  மோதிக் கொண்டது வரலாற்றுச் சுவாரசியம். அது பிரமிளும் ஞானக்கூத்தனும். தர்மு சிவராமு எழுத்து பத்திரிகையில் கவிதை எழுதினார். ஞானக்கூத்தனுக்கு எழுத்துப் பத்திரிகையில் இடம் மறுக்கப்பட்டது. பிரமிளை அபூர்வமான கவிதை ஆளுமை என்று செல்லப்பா அறிமுகப்படுத்தினார். கவனப் பிசகாகக் கூட ஞானக் கூத்தனின் பெயர் தனது பேச்சிலோ எழுத்திலோ வராமல் பார்த்துக் கொண்டார். ஞானக்கூத்தன் புதுமையான கவிஞர் என்று க.நா.சு. வக்காலத்து வாங்கினார். அவரும் பிரமிளின் கவிதையைப் பற்றி மூச்சு விடவில்லை. இரண்டு கவிஞர்களுக்குச் சார்பாகவும் அணி திரண்டது. சூழல், உன்னதம், உள்ளொளி போன்ற சொற்கள் அறிமுகமானதும் இந்தச் சந்தர்ப்பத்தில்தான். சூழல்தான் ஒரு கவிஞனை உருவாக்குகிறது என்று விமர்சகர் வெங்கட் சாமிநாதன் சொல்ல, ‘உமக்கு ஒரு புண்ணாக்கும் புரியாது. கவிஞன் தானாக மலர்கிறான்’ என்று சொந்த அணி ஆட்டக்காரரையே பிரமிள் காலை வாரி விட்டார். ஞானக்கூத்தன் கவிதையெல்லாம் செயற்கையானது என்று பிரமிள் விமர்சித்தார். கொஞ்சம் கழித்து ஞானக்கூத்தன் பார்ப்பான் என்று அவருடைய ஜாதகத்தைத் துப்புத் துலக்கினார். ‘காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான் எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்’ என்று ஞானக்கூத்தன் எழுதிய கவிதை வரி பார்ப்பானின் மேலாதிக்கத்தையும் திமிரையும் காட்டுவதாகக் கண்டுபிடித்தார். இன்னும் கொஞ்சம் போய் வெண்மணிச் சம்பவம் பற்றி ஞானக்கூத்தன் எழுதிய கவிதை மனிதாபிமானமற்றது என்று சாடினார். ஒண்டிக்கு ஒண்டியாக நின்று கட்டுரைகள்,  மறுப்புக் கட்டுரைகள் எழுதி தன்னை காபந்து பண்ணிக் கொண்டார். அதுவரை இடதுசாரி முகாமிலிருந்த கார்லோஸ் என்ற விமர்சகர் தமிழவன், ஞானக்கூத்தன் அணியில் வாலண்டியராகப் போய்ச் சேர்ந்து பிரமிள் எழுதிய கவிதைகள் எல்லாம் வெளிநாட்டுக் கவிதைகளின் திருட்டு அல்லது நகல் என்று ஆய்வு செய்தார். இதில் ஒரு பலன் விளைந்தது. அதுவரை தெரியாமலிருந்த பாப்லோ நெரூதா, மயாகாவ்ஸ்கி, டி.எஸ் இலியட், லோர்க்கா, பாளையங்கோட்டை லோர்காஸ் ஆகிய உலக மகா கவிகள் தமிழுக்கு அறிமுக மானார்கள். ஒரு கட்டத்தில் கவிதைப் போரின் உச்சத்துக்குப் போன பிரமிள் ‘போய்யா டுபுக்கு’ என்று புதிய இலக்கியச் சொல் லைத் தமிழுக்குப் பங்களித்தார். இன்றுவரைக்கும் அந்த வார்த்தையின் பொருள் பற்றி தீவிரக் கவிதை வாசகர்கள் ஆராய்கிறார்கள். (அர்த்தம் தெரிந்து ஆடிப்போனவர்களும் இருக்கிறார்கள்!)

மானுடம் பாடும் வானம்பாடிக் கவிஞர்களின் குழாமிலிருந்து ஒரு கவிஞர் ஞானக் கூத்தனை மிகவும் வாஞ்சையோடும் மனிதாபிமானத்துடனும் ‘கேனக்கூத்தன்’ என்று விளித்துக் கவிதை யாத்தார். அந்தக் கவிதைக்கு எதிர்க் கவிதையை எழுதியவர் ஞானக் கூத்தனல்ல; பிரமிள்.

உச்சகட்டமாக நிகழ்ந்ததுதான் சுவாரசியமானது. புதுக் கவிதையை எதிர்த்த பண்டிட்ஜீக்களும் காம்ரேடுகளும் புதுக்கவிதை எழுதிக் குவித்த அதிசயம் சம்பவித்தது. புதுக் கவிஞராக அறியப்பட்ட சி.மணி இப்படி எழுதினார். ‘இலக்கியம் செய்வதென்றால் எளிதில்லை எழுத்தாளா, கலக்கினால் காவிரியும் கழிவுப் பொருள் பலகாட்டும்’.                                             ------கே.நாராயணன்

டிசம்பர், 2013

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com