புதுச்சேரி – நாகப்பட்டினம் – கிழக்கு கடற்கரை சாலை

புதுச்சேரி – நாகப்பட்டினம் – கிழக்கு கடற்கரை சாலை

புதுச்சேரியிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 45ஏ -யில் (கிழக்குக் கடற்கரை சாலை) சிதம்பரம்,சீர்காழி, பூம்புகார், காரைக்கால் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் 145 கிமீ பயணித்து நாகப்பட்டினம் வரை செல்ல புறப்பட்டோம். வரலாற்று உணர்வுள்ள யாருக்கும் புல்லரிக்க வைக்கும் பயணமே இது. பிரெஞ்சு தலைநகரான புதுச்சேரியிலிருந்து சோழர்களின் முக்கிய நகரமான சிதம்பரம் வழியாக டேனிஷ்காரர்களின் குடியேற்றமான தரங்கம்பாடி. அதன் பின்னர் சோழர்கால துறைமுகங்களில் ஒன்றான நாகப்பட்டினம்.

 புதுச்சேரியிலிருந்து கடலூர் வரை வரிசையாக கட்டடடங்களும் பரபரப்பான நகரம் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது. வழியில் வரும் பாலம் ஒன்று மட்டுமே இரண்டும் வேறு வேறு ஊர்கள் என்பதை நினைவுறுத்துகிறது. மூன்று ஆறுகள் கூடுவதால் கூடலூராய் இருந்து வெள்ளையர் ஆட்சியில் கடலூராய் மாறிப்போன அந்த ஊரில், நிசப்தமும் கடலின் பேரிரைச்சலும் சேர்ந்து, சூழ்நிலையின் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பை வீசியபடி இருந்தது. கடலூர் ஓல்டு டவுனில் இருக்கும் பாரி கோடௌன் மிகவும் பிரசித்திப் பெற்றது. அருகில் இருக்கும் ஊரான் நெல்லிக்குப்பத்தில் 1842-ல்  பாரி நிறுவனத்தால் தொடங்கப்பட்ட சர்க்கரை ஆலை உலகின் மிகப்பழமையான சர்க்கரை ஆலைகளில் ஒன்று.  இன்று அது முருகப்பா நிறுவனம் வசம் இருப்பினும் 200 ஆண்டு பழமையான அதன் லெட்ஜர்கள் இன்னும் இந்த கோடவுனில் உள்ளன. ஆங்கிலயேர் கால இந்த கட்டடம் பற்றிய வேறு சில கதைகளும் உள்ளன.

கடலூர் துறைமுகத்திற்கு வண்டியை செலுத்தினோம். அதிக பரபரப்பில்லாமல் துறைமுகம் சோம்பல் கொண்டிருந்தது. பிரெஞ்சுப் படையும் ஆங்கிலப் படையும் ஏழு ஆண்டுகள் மோதிக் கொண்ட துறைமுகம் இன்று சென்னையும் காரைக்காலும் மீதம் வைத்த பொருட்களைச் செரித்து உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.

கடலூரிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் 45 கிமீ பயணத்தில் சிதம்பரம் வழியெங்கும் பெரும்பாலான நிலங்கள் கல் பதித்து வண்ணக் கொடிகளுடன் நகர் பெயர் பலகையுடன் நீண்டிருந்தது. நெல்விளைந்த பூமியில் இன்று மண் விளைகிறது. கடலூருக்கு மிக அருகில் அல்லது சிதம்பரத்திற்கு மிக மிக அருகில் என்று உள்ளூர் சேனல்களில் டிவி நடிகர்கள் யாராவது அழைத்துக் கொண்டிருக்கலாம்.

சிதம்பரத்தில் மதிய சாப்பாடு. தில்லை நடராசனின் பெருமையை உள்ளூர்காரரிடம் கேட்டுவிடுவோம் என ஹோட்டல்காரரிடம் விசாரித்தால் ‘சிவனின் பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாச ஸ்தலம் இது... ஆனந்த தாண்டவமாடும் எம் மகாசிவனை பார்க்க கண் கோடி வேண்டுமே...’ என்று உணர்ச்சி பெருக பேசத் தொடங்கினார் அந்த சிவபக்தர்.

சிதம்பரத்திலிருந்து சீர்காழிக்கு செல்லும் வழியில் பயணிக்கத் தொடங்கியதுமே திடீரென்று வேறு உலகத்திற்குள் நுழைந்த மாதிரி அத்தனையும் பசுமை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை பசேல் வயல்கள். கடைமடை காவிரியின் கைங்கர்யத்தால் தமிழகத்தில் இன்னும் செழித்திருக்கும் சில பகுதிகளில் இதுவும் ஒன்று. வல்லம்படுகை தாண்டி வழியில் கொள்ளிடத்தைக் கடந்தோம். அங்கிருக்கும் ரயில்வே பாலம் உலகப்புகழ் பெற்றது என்பது ஞாபகம் வந்தது. இதுபற்றி எழுத்தாளர் ரவிக்குமார் கடக்கமுடியாத நிழல் என்ற தன் கட்டுரைத்தொகுப்பு நூலில் எழுதியிருக்கிறார். வெள்ளையர்கள் காலத்தில் இந்தப் பாலம் கட்ட உள்ளூர்த் தொழிலாளர்கள் வற்புறுத்தி சித்திரவதை செய்யப்பட, இதை விசாரிக்க பிரிட்டிஷ் அரசு ஆணையம் ஒன்று அமைத்திருக்கிறது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி பற்றி எழுதுகையில் காரல்மார்க்ஸ் இந்த தொழிலாளர் சுரண்டல் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார் என்று ரவிக்குமார் தன் கட்டுரையில் சொல்கிறார்.

தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமோ என்னமோ சுமாராக தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. சீர்காழி வழியாக பூம்புகாருக்குள் நுழைந்தோம். சிலப்பதிகார கலைக்கூடம், கண்ணகி மணிமண்டபம், ஒரே கல்லால் ஆன நடுகல் மண்டபம் போன்றவற்றை ஒரு சுற்று சுற்றிவிட்டு கீழையூர், மணிக்கிராம படகு துறைக்கு வந்தாயிற்று.

பூம்புகாரில் இருந்து தரங்கம்பாடி 26 கிமீ தூரம். வழியில் மார்க்கண்டேயனை சிவபெருமான் காப்பாற்றிய, இன்று திருமணங்களுக்குப்புகழ்பெற்றிருக்கும் திருக்கடையூர். தாண்டிச் சென்றால் தரங்கம்பாடி. டேனிஷ் கோட்டை கடற்கரையில் கிபி 1620-ல் கட்டப்பட்ட கோட்டை கம்பீரமாக நிற்கிறது. அதன் பீரங்கிகள் இன்னும் கடலை நோக்கிப் பார்த்துக்கொண்டிருகின்றன. தமிழில் முதல் முதலில் அச்சு இயந்திரம் செய்து பாதிரியார் சீகன் பால்கு அச்சிட்ட இடம். 17-ஆம் நூற்றாண்டில் முக்கிய வாணிபத் தலமாக விளங்கிய ஊர்.

நாகை நோக்கிச் செல்கையில் இடதுபுறம் சில கிலோமீட்டர் தூரத்திலேயே கடல் இருக்கிறது என்ற எண்ணம் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. காரைக்கால் வழியாக நாகூர் தர்காவைப் பார்த்துக்கொண்டே நாகப்பட்டினம் வந்து சேர்ந்திருந்த போது இருட்டியிருந்தது. நாகையில் கடலைக் கண்டோம். சூடாமணி விஹாரத்தில் உடல்நிலை சரியில்லாமல் அருள்மொழிவர்மன் தங்கியிருக்கும் காட்சி மனக்கண்ணில் வந்து அழியாமல் நின்றது. பூங்குழலி என்கிற அந்த ஓடக்காரப்பெண்ணை நினைத்துக்கொண்டேன். தவிர்க்க இயலாமல் ஆழிப்பேரலையில் பறிபோன உயிர்கள் நினைவுக்கு வந்தார்கள்.

ஜூலை, 2014.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com