புலனாய்வு - டாப் டென் கட்டுரைகள்

இதழியலின் ஆரம்பகாலத்தில் இருந்தே புலனாய்வு செய்து உண்மைகளைத் தோண்டும் பாணி தொடங்கிவிட்டது. கடந்த நூறு ஆண்டுகளில் உலகம் முழுக்க எண்ணற்ற புலனாய்வுக் கட்டுரைகள் வந்துள்ளன. அவற்றில் உலகெங்கும் பிரபலமானவை என்று பார்த்தால் அவையும் ஏராளமாக இருக்கின்றன. அவற்றில் சல்லடை போட்டு சலித்து சில சுவாரசியமான, அதே சமயம் அவை ஏற்படுத்திய சமூக அரசியல் விளைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பத்தே பத்தை தேர்ந்தெடுத்து வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

வில்லியம் தாமஸ் ஸ்டெட்
வில்லியம் தாமஸ் ஸ்டெட்

1.சிறுமியை விலைகொடுத்து வாங்கினார்!

இது நடந்தது 1885 - ல். பிரிட்டனில் சுயவிருப்பத்துடன் கூடிய பாலியல் உறவுகொள்வதற்கான குறைந்த பட்ச வயது பெண்களுக்கு 13 - ஆக இருந்தது. இதை 16 ஆக உயர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதற்கான சட்டம் கொண்டுவர பிரபுக்கள் சபையில் பெரும்பான்மை இல்லை.

குறைந்த வயதே போதும் என்பதால் சிறுமிகள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவது லண்டனில் அதிகரித்திருந்தது. ஆயிரக்கணக்கான சிறுமிகள் லண்டன் தெருக்களில் பாலியல் தொழிலாளிகளாகத் திரிந்தனர். இதைத்தடுக்க எண்ணம் கொண்டார் வில்லியம் தாமஸ் ஸ்டெட் என்ற பத்திரிகையாளர். இதை எப்படி நிகழ்த்துவது? தான் ஆசிரியராக இருந்த பத்திரிகையின் சார்பில்  புலனாய்வுக் கட்டுரை வெளியிடுவது என்று தீர்மானித்தார். ஒரு சிறுமியை விலைக்கு வாங்கி, பாலியல் தொழிலுக்காக விற்று, அப்பெண் தன் முதல்வாடிக்கையாளரால் வலுக்கட்டாயமாக அடையப் படுவதுவரை அந்த கட்டுரை படிப்படியாக விவரித்தது. இதற்காக எலிசா ஆர்ம்ஸ்ட்ராங் என்ற ஏழைச் சிறுமியை அவளது குடிகாரத் தாயிடம் 2 பவுண்ட் பணம் கொடுத்து ஒரு மாதத்துக்கு வீட்டு வேலைக்கு என்று ஏற்பாடு செய்தனர். அந்த சிறுமியை  கருக்கலைப்பு பெண்மணி ஒருவர் மூலமாக கன்னித்தன்மை பரிசோதனை செய்தனர். அந்த பெண்மணி, இச்சிறுமி பாலியல் உறவின் போது பெரும் வலியை அடைவாள். எனவே அவளுக்கு க்ளோரோபார்ம் கொடுத்தால் நல்லது என்று ஆலோசனையும் கூறியதாக பின்னர் தன் கட்டுரையில் ஸ்டடெட் எழுதுகிறார்.

ஒரு விபச்சார விடுதிக்கு அச்சிறுமி கொண்டு செல்லப்பட்டாள். அவளின் முதல் வாடிக்கையாளராக ஸ்டெட் சென்றார். சிறுமிக்கு குளோரோபார்ம் கொடுக்க முயற்சி செய்தனர்.  பலனளிக்கவில்லை! ஸ்டெட் அறைக்குள் நுழைந்தபோது அப்பெண் விழிப்புடன் அமர்ந்திருந்தாள். அவரைக் கண்டதும் அலறினாள். ஆனால்...*****

ஸ்டெட் இந்த முழு சம்பவத்தையும் மூன்றாவது ஆளாக இருந்து இதைப் பார்ப்பதாகவும் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாகவும் எழுதினார்.

உண்மையில் அப்படி வன்புணர்வில் ஈடுபட வில்லை. சால்வேஷன் ஆர்மி அமைப்பு மூலமாக சிறுமி ப்ரான்ஸ் நாட்டுக்கு பத்திரமாக அனுப்பப்பட்டாள். இந்த கட்டுரையை பால் மால் கெசட் என்ற அவரது பத்திரிகையில் மூன்று பாகமாக வெளியிட்டதும் லண்டனில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. பத்திரிகையில் அந்த கட்டுரை வந்த சமயத்தில் பத்து லட்சம் பிரதிகளாக விற்பனை அதிகரித்தது. பலவாசகர்கள் தாங்களே  முன்வந்து பிரதிகளை வாங்கி விற்றுத்தந்தனர்.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கொடுத்த அழுத்தத்தால் பெண்களுக்கான பாலியல் உறவுக்கான வயது 16 ஆக உயர்த்தும் சட்டம் நிறைவேறியது. ஸ்டெட்டின் நோக்கம் வெற்றி பெற்றது.இன்றுவரை பெண்களுக்கான குறைந்த பட்ச பாலியல் வயது 16 ஆக பிரிட்டனில் நீடிக்கிறது.

சில மாதங்கள் கழித்து இந்த கட்டுரையில் வந்த பெண் என்ன ஆனாள்? என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது. ஸ்டெட் உண்மையைச் சொல்லவேண்டி வந்தது. அவர் மீது சிறுமியை விலைக்கு வாங்கிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு மூன்று மாதங்கள் சிறைக்கு அனுப்பப்பட்டார். அந்த மாதங்களை ஸ்டெட் மிக மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார். சிறைக்குள் இருந்தவாறே பால் கெசட்டின் ஆசிரியர் பொறுப்பையும் கவனித்தார். ‘என் வாழ்வின் மகிழ்ச்சியான நாட்கள் அவை' என்றார் பெருமையுடன். விடுதலையான பின் ஒவ்வொரு ஆண்டும் தான் சிறைக்குச் சென்ற தினத்தில் சிறைச் சீருடையை அணிந்து கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

பின்குறிப்பு: 1912 - ல் ஸ்டெட் மரணம் அடைந்தார். புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல்  மூழ்கிய விபத்தில் இறந்தவர்களில் ஸ்டெட்டும் ஒருவர்.

ரோனன் பாரோ
ரோனன் பாரோ

2. மீ டூவுக்கு வித்திட்ட புலனாய்வுக் கட்டுரைகள்

பணமும் அதிகாரமும் படைத்தவர்கள் பெண்களை வேட்டையாடுவதை அம்பலப்படுத்தும் மீ டூ விஷயங்கள் இன்று உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளன. இதன் ஆரம்ப கட்டம் ஒரு புலனாய்வுக் கட்டுரைதான்.

நியூயார்க்கரில் ரோனன் பாரோ என்ற இளம் பத்திரிகையாளர் எழுதி அக்டோபர் 10, 2017 -ல் இது வெளியானது.  இதில் அம்பலப்பட்டவர் அமெரிக்க திரை உலகின் சக்தி வாய்ந்த தயாரிப்பாளர் ஹார்வீ வீன்ஸ்டீன். திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் இளம் பெண்களை தன் இச்சைகளுக்காக வேட்டையாடுவதை ஹார்வி ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார். பலருக்கும் பல ஆண்டுகளாக இது தெரிந்திருந்தும் சக்தி வாய்ந்த அவருக்கு எதிராக எதையும் சொல்லமுடியாமல் இருந்தனர். அப்படி ஏதும் வெளிவந்தாலும் வழக்கறிஞர்களைக் காட்டிமிரட்டிவிடுவார்; எதிர்ப்பவர்களின் எதிர்காலம் நாசமாகிவிடும். உதாரணத்துக்கு இச்சம்பவத்தைச்

சொல்லலாம். வாய்ப்பு தேடி வந்த இத்தாலிய மாடல் ஒருவரிடம் ஹார்வி தவறாக நடந்துகொள்ள, அவர் நியூயார்க் போலீஸிடம் புகார் அளித்தார். அவர்கள் இவரை மீண்டும் ஹார்வியிடம் அனுப்பி பேசச் செய்து குரல்களைப் பதிவு செய்தனர். இதற்கிடையில் அப்பெண்ணைப் பற்றி கிசுகிசுக்கள் பத்திரிகைகளில் வெளியாயின. இந்த பின்னணியில் இந்த புகாரின் நம்பகத்தன்மை பொதுமக்கள் மத்தியில் வீழ்ந்தது. அவரை விசாரிக்க முடியாமல் போலீசார் புகாரை கைவிட்டனர். உலகம் முழுக்க சக்திவாய்ந்த ஆணின் மீது  குற்றம் சாட்டும் பெண்ணின் பழைய வரலாறு கிளறப்பட்டு அவள்மீதே பழி சுமத்தும் வழக்கம் ஒரே போல் இருக்கிறது. இதன் பின்னர் ஹார்வீயின் வழக்கறிஞர்கள் இது பற்றி எதுவும் பேசக் கூடாது என்று அந்த பெண்ணிடமே ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர். இதுபோல் எத்தனையோ சம்பவங்கள். ஹார்வியை அம்பலப்படுத்த பலர் முயற்சி செய்தும் எது நிகழாத சமயத்தில்  நியூயார்க்கரில் வெளியானது ரோனன் பாரோவின் கட்டுரை. ரோனன் எழுதிய கட்டுரையில் பதிமூன்று பெண்கள் ஹார்வி மீது கற்பழிப்பு, தகாத உறவுக்கு முயன்றது, அசிங்கமாக நடந்துகொண்டது என பல குற்றச்சாட்டுகளைக் கூறினர்.

இது மிகக்கவனமாகச் செய்யவேண்டிய புலனாய்வு. தவறினால் ஹார்வியின் செல்வாக்குக்கு முன்னால் மண்டியிட வேண்டி இருந்திருக்கும். பத்து மாதங்கள் இந்த கட்டுரைக்காக உழைத்ததாக ரோனன் கூறுகிறார். இடையில் ஹார்வியின் மிரட்டல்களாலும், பின் தொடரும் அவரது அடியாட்களாலும் வீடு மாறி வாழ வேண்டி இருந்ததாக அவர் கூறி இருக்கிறார். முன்னதாக அவர் பணிபுரிந்த என்பிசி தொலைக்காட்சிக்காக ஹார்வி பற்றிய புலனாய்வுக்கு உழைத்தபோது அந்த தொலைக்காட்சியில் பணிபுரிந்தவர்கள் ஒத்துழைக்கவில்லை. எனவே அந்த கட்டுரையுடன் நியூயார்க்கருக்கு வந்துவிட்டார்.

ஹார்வி
ஹார்வி

இங்கே ஹார்வி குறித்த கட்டுரை வெளியாவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னால் நியூயார்க் டைம்ஸில் இதே போல் ஆனால் வேறு பட்ட கட்டுரை வெளியானது. பத்திரிகையில் யார் முந்திக்கொண்டு செய்தி வெளியிடுகிறார்கள் என்ற போட்டி இருந்தபோதும் நியூயார்க்கர் இந்த கட்டுரையை பொறுமையாகக் காத்திருந்து வெளியிட்டது. பொதுச்சேவைக்கான இதழியலின் புலிட்சர் பரிசை இந்த இரு கட்டுரைகளும் பகிர்ந்துகொண்டன. அமெரிக்காவில்  பத்திரிகைகளுக்கான உயரிய விருது இது.

இப்போதைக்கு ஜர்னலிசத்தின் புதிய ஹீரோ 30 வயதான ரோனன். இவர் புகழ்பெற்ற இயக்குநர் உட்டி ஆலனின் மகனும் கூட. ஆனால் அப்பாவையும் தன் தங்கை கூறிய பாலியல் குற்றச்

சாட்டில் எதிர்க்க இவர் தவறவில்லை! இவரது அம்மா மியா பாரோ புகழ்பெற்ற நடிகை. இந்த கட்டுரைகள் வெளியான Akzu மாதம் அலிசா மிலானோ என்ற அமெரிக்க நடிகை மீ டூ என்ற சொற்களுடன் பாலியல் வன்கொடுமைகளை அம்பலப்படுத்தக் கோரினார். அதன் பின்னர்தான் உலகமே மீ டூ என்று கொதித்தெழுந்தது.

3. அணு அணுவாக..

ரோஷிமாவுக்கு வந்தால் சுமார் 25 அல்லது 30 மைல்கள் சுற்றளவுக்கு கட்டடங்களையே பார்க்க முடியாது. மனிதன் உருவாக்கிய இந்த பேரழிவைக் காணும்போது உங்களுக்கு ஒரு வெறுமையான உணர்வு உண்டாகும்.'' 1945-ல் ஹிரொஷிமா மீது அமெரிக்கப் படையினர் அணுகுண்டு வீசியபின்னர் அங்கு சென்ற முதல் வெளிநாட்டுப் பத்திரிகையாளர் வில்ப்ரெட் பர்செட். இவர் எழுதி வெளியான கட்டுரையின் ஆரம்பத்தில் இந்த வரிகள் இடம் பெற்றிருந்தன. டோக்கியோவில் இருந்து தனி ஆளாக ஹிரோஷிமாவுக்கு சென்ற அவர் அங்கு ஏற்பட்ட பேரழிவை கட்டுரையாக்கினார். குண்டு வீசப்பட்டு முப்பது நாட்கள் கடந்த பின்னரே அவர் அங்கு சென்றார். அதுவரை உலகுக்கு இதன் கொடூரம் தெரியாமல் கூட்டுப்படைகள் பார்த்துக்கொண்டன. அவரது கட்டுரையே மனிதனால் ஏற்படுத்தப்பட்ட முதல் பேரழிவை உலகுக்குச் சொன்னது. கூட்டுப்படையினர் இந்த அழிவைப் பற்றிய செய்திகள் வெளியாவதை விரும்பவில்லை. ஆரம்பத்தில் வில்ப்ரெட்டின் கட்டுரை கூறிய தகவல்களை அமெரிக்க பத்திரிகையாளர்களே புறம் தள்ளினர். ஜப்பானிய பிரசாரத்துக்கு இவர் பலியாகிவிட்டார் என்றனர். அமெரிக்கப் படைத்தளபதி மெக் ஆர்தர் சிலகாலம் ஜப்பானுக்குள் நுழைவதற்கே வில்ப்ரெட் பர்செட்டுக்குத் தடை விதித்தார்  என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஹிரோஷிமாவில் குண்டு விழுந்ததும் அதாவது தரைமட்டத்தில் இருந்து 2000 அடி உயரத்தில் அந்த குண்டு வெடித்ததும் உருவான வெப்பத்தில் அங்கிருந்த ஆயிரக்கணக்கானோர் பஸ்பமாகினர். அதாவது சாம்பல்கூட எஞ்சாது மறைந்தனர்.

சிறு கீறல்கள் அல்லது எதுவுமே ஆபத்து இன்றி தப்பியவர்கள் ஒருசில வாரங்களில் கொடும் நோய்க்குள்ளாகி இறந்தனர். அவர்களுக்கு ஊசி போடப்பட்டால், போட்ட இடம் அழுகிவிட்டது. உடல் முழுக்க நீலப்புள்ளிகள். இறுதியில் மரணம். இது ஏதோ விஷ வாயு. இதற்கு அமெரிக்கர்கள் முறிவு மருந்து தருவர் என்றுகூட ஜப்பானிய மருத்துவர்கள் நினைத்திருந்தனர். லண்டனில் இருந்து வெளியாகும் டெய்லி எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிகையில் வில்ப்ரட்டின் கட்டுரை செப்டம்பர் 5, 1945&ல் வெளியானது. அணுக்கொள்ளை நோய் என்ற தலைப்பில் முதல் பக்கத்தில் வெளியான இந்த கட்டுரையில் அவரது பெயர் தவறாக பீட்டர் பர்செட் என்று அச்சானது. இக்கட்டுரையை உலகுக்கு இது ஒரு எச்சரிக்கை என்று அவர் மிகச்சரியாக குறிப்பிட்டு எழுதி இருந்தார். ‘‘ 53000 பேர் இறந்தவர்கள். 30000 பேரைக் காணவில்லை. இதற்கு அர்த்தம் அவர்கள் உறுதியாக இறந்துவிட்டனர் என்பதே. நான் ஹிரோஷிமாவில் இருந்த தினத்தில் 100 பேர் இறந்தனர். அது குண்டுவீச்சுக்கு ஒரு மாதம் கழித்து என்பதை நினைவில் கொள்ளுங்கள். சுமார் 13000 பேர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் 100 பேர் வீதம் சாகிறார்கள்.

வில்ப்ரெட் பர்செட்
வில்ப்ரெட் பர்செட்

இவர்கள் அனைவருமே இறந்துவிடுவர். இன்னும் 40,000 பேர் குறைந்த அளவுக்கு காயம் பட்டுள்ளனர். ஹிரோஷிமாவில் பேங்க் ஆப் ஜப்பான் கட்டடம் மட்டுமே இருக்கிறது. மீதி எதுவும் இல்லை. போருக்கு முன்பாக இதன் மக்கள் தொகை 310000,'' இவ்வாறு தன் கட்டுரையில் விவரித்துள்ளார் வில்ப்ரெட். இக்கட்டுரை இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான புலனாய்வு கட்டுரை என்று குறிப்பிடப்படுகிறது. வில்ப்ரெட் ஆஸ்திரேலியாவில் பிறந்து லண்டனில் பத்திரிகையாளராகப் பணிபுரிந்தார். இடது சாரி ஆதரவாளராகக் கருதப்படுபவர். வியட்நாம், கொரியப் போர்களில் அமெரிக்காவை எதிர்த்து எழுதியவர். இவருடைய பிரிட்டிஷ் பாஸ்போர்ட் திருடுபோனபோது ஆஸ்திரேலியா அவருக்கு பாஸ்போர்ட் வழங்கமறுத்தது. பிரிட்டனையும் கொடுக்கக் கூடாது என்றது. ஆகவே பிடெல் காஸ்ட்ரோ க்யூபாவின் பாஸ்போர்ட் வழங்கினார். இவர் மீது கேஜிபியின் ஏஜெண்டாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு உண்டு. இதை அவர் கடுமையாக மறுத்தார். 1982 - ல் அவர் இறந்தார். அதன் பிறகு பத்தாண்டுகள் கழித்து கேஜிபி ஆவணங்களில் அவர் பெயர் இருந்தது வெளிப்பட்டாலும் வில்ப்ரெட் இன்றும் ஒரு நாயகன் தான்!

4. மை லாய் படுகொலைகள்!

மெரிக்காவின் வியட்நாம் போரின்போது 1968 ஆம் ஆண்டு ஒரு நாள் விடியற்காலையில் மை லாய் என்ற சிறிய கிராமத்தைச் சுற்றி ஹெலிகாப்டர்களில் அமெரிக்க வீரர்கள் இறங்கினர்.

அங்கே மக்கள் வீடுகளுக்கு வெளியே சோறு ஆக்கிக்கொண்டிருந்தனர். வீடுகளுக்கு மேல் புகை எழுந்துகொண்டிருந்தது. அங்கிருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் குழந்தைகள், முதியவர்கள் உட்பட பொதுமக்களை அவர்கள் சுட்டுக்கொன்றனர். ஏன் எதற்கு கேட்க நாதி இல்லை. அங்கு வியட்காங் உறுப்பினர்கள் இருந்ததாகவும் அவர்களுடன் ஏற்பட்ட மோதலில் 128 கெரில்லாக்கள் கொல்லப்பட்டனர் என்றும் அதிகாரபூர்வமாக செய்தி வெளியிடப்பட்டது. அந்த செய்திதான் அமெரிக்காவுக்கும் சொல்லப் பட்டது. வியட்நாம் போரின்போது நடந்த ஒரு சாதாரண மோதலாக இது கொள்ளப்பட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் வரை. ஆனால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரொனால்ட் ரைடன்ஹவர் என்கிற முன்னாள் ராணுவவீரர், அந்த தாக்குதலில் ஈடுபட்ட வீரர்களுடன் பேசியதில் இது பற்றி அறிந்து மனம் நொந்து, வெள்ளை மாளிகை, வெளியுறவு அமைச்சகம், காங்கிரஸ் உறுப்பினர்கள் - ஆகியோருக்கு கடிதங்கள் அனுப்பினார்.

செய்மோர் ஹெர்ஷ்
செய்மோர் ஹெர்ஷ்

அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது பற்றி ஆதாரத்துடன் குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து ராணுவ விசாரணை நடத்தப்பட்டு காலே என்ற 26 வயது லெப்டினென்ட் மீது 109 பேரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பு எத்தனை பேரை அவர் கொன்றார் என்ற தகவலைச் சொல்லாமல் ‘ எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை' என்றது. இச்செய்தியை பத்திரிகைகளும் பொருட்படுத்தவில்லை. நியூயார்க் டைம்ஸில் இச்செய்தி சின்னதாக 14வது பக்கத்தில் வெளியிடப்பட்டது.  ஒன்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் என்றே அச்செய்தியில் இருந்தது. இதற்குச் சில நாட்கள் கழித்து செய்மோர் ஹெர்ஷ் என்ற ப்ரிலான்ஸ் செய்தியாளர், போருக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் ஒருவரிடம் இருந்து இந்த மைலாய் சம்பவம் பற்றி லேசாகக் கேள்விப்பட்டார். இது பற்றி விசாரிக்கத் தொடங்கினார். பெண்டகனில் ஓர் அதிகாரியைச் சந்தித்தார். அவரும் பெரிதாக எதுவும் சொல்லவில்லை.

‘‘காலே முழங்காலுக்கு மேல் யாரையும் சுடவில்லை என்கிறான்'' என்று மட்டும் சொன்னார். அந்த நிருபருக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரிந்துவிட்டது. காலே அடைக்கப்பட்டிருந்த சிறைக்குச் சென்றார். அங்கிருந்த அதிகாரிகள் அப்பாவிகள். காலே மீதான குற்றச்சாட்டு நகலை வாசிக்கக் கொடுத்தனர். காலேவிடம் பேசவும் அனுமதித்தனர். பேசிவிட்டு வந்ததும் கட்டுரையை எழுதினார். எடுத்துக்கொண்டு போய் அணுகிய இரு பெரிய பத்திரிகைகள் இச்செய்தியை புறக்கணித்தன. என்ன செய்வதென்று தெரியாமல் டெஸ்பாட்ச் என்ற சின்ன நியூஸ் ஏஜென்சி மூலமாக வெளியிட்டார் எல்லா பத்திரிகை அலுவலகங்களுக்கும் இக்கட்டுரை போய்ச் சேர்ந்தது. அதன்பிறகு எல்லா செய்தித்தாள்களும் இதை வெளியிட்டன. இந்த செய்தியை எழுதிய செய்மோர் ஹெர்ஷ், இதற்காக புலிட்சர் விருது பெற்றார். ‘‘காலே தன் குற்றத்துக்காக வருந்தவில்லை.

காலே
காலே

விரைவில் இதிலிருந்து விடுதலையாகி மீண்டும் ராணுவப்பணிக்கு செல்ல விரும்பினார்'' என்று தன் கட்டுரையில் குறிப்பிட்டார் செய்மோர். இதைத் தொடர்ந்து வியட்நாம் போருக்கு எதிரான மக்களின் போராட்டம் அமெரிக்காவில் வலுப்பட்டது. பல அதிகாரிகள் இந்த குற்றத்தை மறைத்ததற்காக விசாரிக்கப்பட்டனர். ஆனால் யார் மீதும் நடவடிக்கை இல்லை. காலேவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அதிபர் நிக்ஸன் தலையிட்டு தண்டனையைக் குறைத்து, வீட்டுச்சிறையில் வைக்க ஆணையிட்டார். காலே தொடர்ந்து தன் தண்டனைக்கு எதிராக அப்பீல் செய்தார். கடைசியில் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துவிட்டது. அவர் பிறகு நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்தார். 2009 - ஆம் ஆண்டுதான் அவர் தன் குற்றங்களுக்காக மன்னிப்புக்கோரினார். அதிலும் மேலதிகாரிகள் சொன்னதை நான் செய்தேன் என குறிப்பிட்டிருந்தார்.

5. அமெரிக்க அதிபரை பதவி விலகச் செய்த இருவர்!

மெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழு அலுவலகம் வாட்டர்கேட் என்ற ஓட்டல் கட்டடத்தில் இருந்தது. அது 1972 ஆம் ஆண்டு. அப்போது குடியரசுக் கட்சியின் சார்பில் நிக்ஸன் அதிபராக இருந்தார். அவர் மீண்டும் அப்பதவிக்குப் போட்டியிட விரும்பினார். அதற்கான பிரசார வேலைகள் நடந்து கொண்டிருந்தன.

அந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு நாள் வாட்டர்கேட் ஓட்டலில் உள்ள ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் புகுந்து கொள்ளையிட முயற்சி செய்ததாக ஐந்து பேர் பிடிபட்டனர். இது வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் முதல் பக்கத்தில் அடிப்பகுதியில் செய்தியாக வெளியானது. இந்த செய்தியைத் தொடர்ந்து அப்பத்திரிகையில் சங்கிலித்தொடராக வெளியான செய்திகள் அனைத்தும் வாஷிங்டனை இரு ஆண்டுகள் ஆட்டிப்படைத்தன. அமெரிக்க அரசியலையே எப்போதைக்குமாக மாற்றி அமைத்துவிட்டன.

சாதாரண கொள்ளைச் செய்தியாக கடந்துபோயிருக்கவேண்டிய இந்த செய்தி கார்ல் பெர்ன்ஸ்டீன், பாப் வுட்வார்ட் ஆகிய இரு இளம் செய்தியாளர்களின் கண்ணை உறுத்தியது. இருவருமே வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில்தான் பணிபுரிந்துகொண்டிருந்தனர். இந்த செய்திக்குப் பின்னால் ஏதோ வில்லங்கம் இருப்பதாக இவர்கள் தீர்மானித்து ஆராய ஆரம்பித்தனர். மறுநாள் அவர்கள் வெளியிட்ட செய்தி  கைதானவர்களில் ஒருவர் நிக்ஸனை மீண்டும் தேர்ந்தெடுக்க அமைக்கப்பட்ட குழுவைச் சேர்ந்தவர் என்பதாகும்.

கார்ல் பெர்ன்ஸ்டீன், பாப் வுட்வார்ட்
கார்ல் பெர்ன்ஸ்டீன், பாப் வுட்வார்ட்

அப்படியானால் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தேர்தல் ரகசியங்களை அறிவதற்காகவே நிக்ஸன் குழுவினர் இந்த கொள்ளை முயற்சியை நடத்தினர் என்ற சந்தேகம் ஏற்பட்டது. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஒருவரின் வங்கிக் கணக்கில் நிக்ஸனின் தேர்தல் பிரசார நிதியில் இருந்து 25000 டாலருக்கான காசோலை செலுத்தப்பட்டதையும் இந்த நிருபர்கள் எழுதினர். இதைத் தொடர்ந்து எப்பிஐ இந்த கொள்ளை குறித்து விசாரித்தது. இதற்கிடையில் இது தொடர்பாக வரிசையாக பல தகவல்களை இவர்கள் இருவரும் வெளியிட்டுக்கொண்டே இருந்தனர். நியூயார்க் போஸ்ட் காழ்ப்புணர்ச்சியுடன் நிக்ஸனுக்கு எதிராக இக்கட்டுரைகளை வெளியிடுகிறது என்று சொல்லப்பட்டது. இந்த செய்திகளை வேறெந்த செய்தித்தாளும் அப்போது வெளியிட முன்வரவில்லை. 1972 - ல் நிக்ஸன் அதிகமான வாக்குகளைப் பெற்று மறுபடியும் அதிபராகத் தேர்வானார். வென்று வந்த நிக்ஸன் எப்படியெல்லாம் பழிவாங்குவாரோ என்று போஸ்டின் பதிப்பாளர் அச்சம் கொண்டார். ஆனால் இந்த கொள்ளையர்களின் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி ஜான்சிரிகா, விசாரணை அதிகாரிபோல் செயல்பட்டு, பிரச்னையின் அடி ஆழம் வரை துருவினார். தங்களுக்குத் தொடர்பே இல்லை என வெள்ளை மாளிகை சொல்லிவந்தாலும் எப்பிஐ அதிகாரிகள் வெள்ளைமாளிகையுடன் இந்த கொள்ளை முயற்சிக்குத் தொடர்பு இருப்பதாக நிறுவினர். நிக்ஸனின் நெருக்கமான அதிகாரிகள் நால்வர் தலை இதில் உருண்டு அவர்கள் பதவி விலகினர்.

இந்நிலையில் இந்த வாட்டர்கேட் விவகாரம் அமெரிக்காவின் பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. நிக்ஸன் தான் யாருடன் தொலைபேசியில் பேசினாலும் அதை ரகசியமாக பதிவுச் செய்யும் வழக்கம் வைத்திருந்தார். இந்த கொள்ளை வழக்கை காதும் காதும் வைத்தமாதிரி முடிக்க அவர் முயற்சி செய்ததால் அவர் போனில் பேசிய டேப் நீதிமன்றத்துக்கு வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அந்த டேப்களை முதலில் நிக்ஸன் தரமறுத்தாலும் பின்னர் கொடுத்தாகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவருக்கு இந்த நிகழ்வில் உள்ள தொடர்பு நிரூபிக்கப்பட்டது. அவர் 1974 - ல் பதவி விலகினார். இடையில் பதவி விலகவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளான முதல் அமெரிக்க அதிபர் நிக்ஸன் தான்! வாஷிங்டன்போஸ்டின் நிருபர்களுக்கு வேண்டிய தகவல்களைக் கொடுத்தவர் பெயர் கடைசிவரை ரகசியகமாகவே இருந்தது.

அவரை டீப் த்ரோட் என்ற பெயரில் இந்த நிருபர்கள் அழைத்தனர். முப்பத்து மூன்று ஆண்டுகள் வரை அவர் யாரென்று உலகுக்குத்தெரியாமல் ரகசியம் காக்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் தங்கள் செய்தியின் சோர்ஸ்களை கடைசி வரைக் காக்கவேண்டும் என்கிற பால பாடம் இது. 2005 - ல் நான் தான் டீப் த்ரோட் என்று எப் பி ஐயின் மூத்த அதிகாரியாக இருந்த மார்க் பெல்ட் ஒப்புக் கொண்டார், இந்த வாட்டர்கேட் நடவடிக்கை தொடர்பாக இரு இதழாளர்களும் நூல் எழுதினர். அது ஆல் தி பிரெசிடென்ட்ஸ் மென் என்ற பெயரில் படமாகவும் வெளியானது. இன்றும் புலனாய்வு இதழியலில் முக்கிய பாடமாக வாட்டர்கேட் கட்டுரைகள் நிலைத்து நிற்கின்றன.

6. போதை மாபியாவுக்குப் பலி!

சிறையில் அமர்ந்துகொண்டு இணையத்தில் துழாவி கட்டுரைகளை எழுதும் பத்திரிகையாளர் அல்ல டிம் லோபஸ். அவர் நேரடியாக களமிறங்கி தகவல் களைச் சேகரிப்பவர்.

பெரும்பாலும் தன் அடையாளத்தை மறைத்து புலனாய்வு செய்கிறவர். பிரேசில் தலைநகரான ரியோடி ஜெனிரோவில் சேரிப்பகுதிகளில் வாழ்கிறவர்கள் போதைப்பொருள் கும்பல்களிடம் எப்படிச் சிக்கி சீரழிகிறார்கள் என்றொரு புலனாய்வு செய்திக்காக மாறுவேடத்தில் களமிறங்கி இருந்தார். மைக்ரோ காமிரா ரகசியமாக உடலோடு பதுங்கி இருந்தது. டிம் லோபஸ் சமீபத்தில் செய்திருந்த புலனாய்வு, தெருக்களில் கூவிக்கூவி கொக்கைன் விற்கும் போதை மருந்து வியாபாரிகளை ரகசிய காமிராவுடன் படம் பிடிப்பது. ஏகே 47 போன்ற ஆயுதங்களுடன் தெருக்களில் இவர்கள் திரிந்ததையும் படம் பிடித்திருந்தார். இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, போதைப் பொருள் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டனர். அரசு ஓரளவுக்காவது நடவடிக்கை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக உயர்விருதும் வழங்கப்பட்டிருந்தது. அன்று அலுவலகத்தில் இருந்து கிளம்பியவர் அடையாள அட்டை, செல்போன் போன்றவற்றை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றிருந்தார். தன்னை எளிதில் யாரும் அடையாளம் காணக்கூடாது என்ற திட்டம். தெருவொன்றில் நின்று போதைப் பொருள் கடத்தல்காரர்களை ரகசிய கேமரா மூலம் படம் பிடித்தபோது, இடுப்பில் இருந்த காமிராவின் சிறு வெளிச்சம் அவர்களின் கவனத்தை ஈர்த்தது. அவர் தாக்கப்பட்டு கடத்தப்பட்டார். அவர் தப்பி ஓடாமல் இருக்க காலில் சுடப்பட்டார். அவரை  போதைமருந்து கும்பல் தலைவன் ஒருவனிடம் கொண்டு சென்றனர். அங்கே அவரை ஒரு கடத்தல்காரன் அடையாளம் கண்டுகொண்டான். பின்னர் அவரை மரத்தில் கட்டிவைத்து தாக்கினர். அந்த குண்டர் தலைவன், நீண்ட கத்தியை எடுத்து அவரை வெட்டி துண்டு துண்டாக்கினான். அவரது உடல் எரிக்கப்பட்டது. அவர் காணாமல் போன பிறகு நடந்த தேடுதல் வேட்டையில் அவரது உடலின் எஞ்சிய பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இந்த கொலையின் குரூரம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சம்பவம் நடந்த இரவு, தான் திரும்பிவரும்போது அழைத்துச் செல்ல ஒரு காரை தயாராக வைத்திருந்தார் டிம்.

சொன்ன நேரத்துக்கு அவர் வராததால் அந்த ஓட்டுநர் இவரது தொலைக்காட்சி நிறுவனத்துக்குத் தகவல் தெரிவித்தார். அதன் பின்னர் பதினொரு மணி நேரம் காத்திருந்துவிட்டு டிவி நிறுவனம் போலீசை அணுகியது. மூன்றரை மாதம் நடந்த வேட்டைக்குப் பின் அவரைக் கொன்றவர்கள் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கும்பல் தலைவனுக்கு 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. டிம் லோபஸின் மகன் 2012 - ல் தன் தந்தையைக் குறித்த ஆவணப்படம் ஒன்றை எடுத்தார். டிம் லோபஸுக்கு அவரது மரணத்துக்குப் பின்னர் பிரேசிலின் உயரிய மனித உரிமை விருது வழங்கப்பட்டது.

7. நிருபரை  மாற்றுங்கள்! கோரிய அமெரிக்க அதிபர்!

 

1962-இல் வியட்நாமுக்கு வந்து சேர்ந்தார் டேவிட் ஹல்பெர்ஸ்டாம். இளம் பத்திரிகையாளரான அவரை தி நியூயார்க் டைம்ஸ் அங்கு நடந்துகொண்டிருந்த போர் பற்றி எழுத அனுப்பி இருந்தது.

தெற்கு மற்றும் வடக்கு வியட்நாம் இடையிலான மோதலில் தெற்கு வியட்நாம் சார்பாக அமெரிக்கப் படைகள் களமிறங்கி இருந்தன. அமெரிக்கப் படைகள் கம்யூனிஸ்ட் கெரில்லாக்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அவர் போய்ச்

சேர்ந்தபோது அமெரிக்கப் படைகளின் கை ஓங்கி இருப்பதாக படைத்தளபதிகளும் அதிகாரிகளும் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் உண்மை நேர்மாறாக இருந்தது. டேவிட் ஹல்பெர்ஸ்டாம் ஒரு தேசபக்தராக நடந்து ராணுவத்துக்கு எதிராக எழுதாமல் இருந்திருக்கலாம். ஆனால் உண்மையை எழுதுவதே ஒரு பத்திரிகையாளரின் கடமை என்று கருதினார். எனவே படைகளின் தோல்வியைப் பற்றி துணிந்து செய்தி வெளியிட்டார். அமெரிக்கதூதரும் படைத்தளபதியும் பொய் சொல்கிறார்கள். அமெரிக்க படைவீரர்களை வீணே பலிகொடுக்கிறார்கள். வியட்நாமின் அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள் என்று டேவிட் நம்பினார். 1963 - ல் வியட்நாமுக்கான அமெரிக்கத் தூதர் நால்டிங் அலுவலகத்தில் நடந்த விருந்து சந்திப்பு ஒன்றில் அமெரிக்கப் படைத்தளபதியான பால் ஹார்கின்ஸுடன் கைகுலுக்க அவர் மறுத்தது இன்றும் பிரபலமான சம்பவமாக நினைவுகூரப்படுகிறது. ‘‘டேவிட்டுக்கு 28 வயது. எனக்கு 26. எங்கள் பத்திரிகை ஆசிரியர்கள் எங்கள் சொற்களை நம்ப மறுத்தனர். ஒரு 4 ஸ்டார் தளபதி, மூத்த தூதரக அதிகாரி ஆகியோர்

சொல்வது எப்படி தவறாக இருக்க முடியும்? இந்த இளைஞர்களை எப்படி நம்புவது என அவர்கள் நினைத்தனர்.'' என்று நினைவு கூர்கிறார் டேவிட்டுடன் இணைந்து அங்கே பணியாற்றிய இன்னொரு பத்திரிகையின் செய்தியாளரான

 நீல் ஷீஹன். சைகோனில் இருந்த படைத் தலைமையகத்தில் டேவிட் வெறுக்கப்பட்டார். ஆனால் போர்க்களத்தில் மீகாங் ஆற்று டெல்டாவில் நெல்வயல்களில் போரிட்ட அமெரிக்க தளபதிகளும் வீரர்களும் டேவிட் உண்மையை எழுதுவதை உணர்ந்திருந்தனர். அங்கு அவர் களச் செய்திக்காக செல்லும்போது மிகுந்த மரியாதையைப் பெற்றார். அவரது கட்டுரைகள் வாஷிங்டனில் அதிர்வுகளை ஏற்படுத்தின. அதிபர் ஜான் எப் கென்னடி, நியூயார்க் டைம்ஸ்  பத்திரிகை அதிபரைத் தொடர்புகொண்டார். டேவிட்டை வியட்நாமை விட்டு திரும்ப அழைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அந்த அதிபரோ மறுத்துவிட்டார். ‘‘ஒரு செய்தியாளருக்கு களைப்படையும் உரிமை இல்லை'' என்று டேவிட் கூறுவாராம். எவ்வளவு நேரமானாலும் செய்தி அறிக்கை அனுப்புவதை அவர் தள்ளிப்போட மாட்டார். அவரது செய்தி அறிக்கைகளுக்காக 1963 -ல் அவர் புலிட்சர் விருது பெற்றார். 2007 - ல் தன் 73 ஆம் வயதில் இவர் விபத்தொன்றில் காலமானார். 

மனநலக் காப்பகத்தில் நோயாளியாய்ச் சேர்ந்த பெண் நிருபர்!

1880களில் நியூயார்க்கில் உள்ள ப்ளாக்வெல்ஸ் தீவு(இப்போது ரூஸ்வெல்ட் தீவு) என்கிற சிறிய தீவுப்பகுதியில் மனநலக்காப்பகம் ஒன்று இயங்கி வந்தது.

அதில் அடைக்கப்படும் மகளிர் மிகமோசமாக நடத்தப்படுகிறார்கள் என்ற செய்தி அறிந்தார் நியூயார்க் வோர்ல்ட் என்ற பத்திரிகையில் புதிதாக சேர்ந்திருந்த செய்தியாளர் நெல்லி ப்ளை. இந்த பத்திரிகையின் உரிமையாளர் ஜோசப் புலிட்சர். (இவர் பெயரால்தான் புலிட்சர் விருது வழங்கப்படுகிறது). ஒரு நாள் புதிதாகச் சேர்ந்திருந்த இளம் பத்திரிகையாளரான  நெல்லியை அழைத்தார் புலிட்சர். ‘‘ உனக்கு ஒரு அசைன்மென்ட். ப்ளாக்வெல் தீவு மனநலக்காப்பகத்தில் மனநோயாளியைப் போல் நடித்து சேர வேண்டும். அங்கு நடக்கும் கொடூரங்களை எழுதவேண்டும்,'' ‘‘ஸார், அங்கே போனால் வெளியே நிரந்தரமாகத் திரும்பமுடியாதே... உள்ளேயே இருக்கவேண்டுமே..'' ‘

 ‘கவலையே படாதே... பத்துநாட்கள் மட்டும் அங்கே இருந்தால்போதும். எப்படியாவது உன்னை வெளியே கொண்டுவந்துவிடுகிறேன்''

‘‘முடியாவிட்டால்..''

‘‘நீ செய்தியாளர் என்ற தகவலை வெளிப்படுத்தியாவது கொண்டுவந்துவிடுகிறேன். இது என் வாக்குறுதி'' பத்திரிகை உரிமையாளரின் வாக்குறுதியை மட்டும் நம்பி, நெல்லி அந்த மனநலக் காப்பகம் புகுந்தார். அதற்காக மனநலம் பாதிக்கப்பட்டபெண்ணாக நடித்தார். அவரை மருத்துவர்கள் பல கட்டங்களில் பரிசோதித்தனர். அவரை வெளியே வைத்திருந்தால் ஆபத்து என்று தீவுக்கு மாற்றினார்கள். அங்கே  சரியான உணவு, சிகிச்சை இல்லாமல் காப்பக ஊழியர்களின் கையில் கொடுமையான சித்திரவதைக்கு பெண்கள் உள்ளாவதை ப்ளை நேரில் பார்த்து அனுபவித்தார். இரண்டே சீப்பு, 45 பெண்கள். ஒவ்வொரு நாள் காலையிலும் அங்கிருக்கும் இரண்டு நர்ஸ்கள் 45 பேருக்கும் கொடுமையாக தலை சீவுவார்கள். பின் காப்பகத்தைச் சுத்தம் பண்ணவேண்டும். பிறகு  நாள் முழுக்க நிமிர்ந்த நிலையில் அமர்ந்தே இருக்கவேண்டும். பூச்சிகள், புழுக்கள் நிறைந்த உணவு. கிடைப்பதே பெரும்பாடு. உள்ளே நல்ல மனநிலையில் இருக்கும் பெண்களும் அடைக்கப்பட்டிருப்பதை நெல்லி கண்டார்.  ‘‘பிரெஞ்சு மொழி மட்டுமே எனக்குத் தெரியும். மருத்துவர்களுக்கு என் மொழி புரியாததால் என்னை இங்கே அடைத்தனர். இங்கே நான் அழுதால் இங்குள்ள ஊழியர்கள் தொண்டையை நெரிக்கிறார்கள்'' என்பது ஒரு பெண்ணின்

சோகக் கதை. அடி உதை எல்லாம் அங்கே சர்வசாதாரணம். உள்ளே வந்தவர்கள் சில மாதங்களில் அவர்களாகவே மனநலம் பிறழ்ந்துவிடுவர். பத்துநாள் ஆனதும் சொன்னபடி, புலிட்சர், இவரை வெளியே மீட்டார். நெல்லி இந்த புலனாய்வுக் கட்டுரையை எழுதினார். இதைத்தொடர்ந்து பெரிய பரபரப்பு ஏற்பட்டு, அந்த காப்பகம் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டு, மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மீதான கவனம் கூடியது. அந்த காப்பகத்துக்கான நிதி உதவியும் அதிகரிக்கப்பட்டது. நெல்லி ப்ளை லேசுப்பட்ட பெண்மணி இல்லை! இதைத் தொடர்ந்து உலகை தனியாக 72 நாட்களில் சுற்றிவரும் சாகசத்தைச் செய்ய முன்வந்தார். நியூயார்க் வேர்ல்ட் பத்திரிகை சார்பாக இந்த சாகசம். ஜூல் வெர்ன் என்ற எழுத்தாளரின் 72 நாட்களில் உலகைச் சுற்றும் சாகசம் என்ற நூலைப் பின்பற்றி இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதை அறிந்ததும் போட்டிப்பத்திரிகை ஒன்று தன் நிருபர் ஒருவரை இதேசாகசம் செய்ய அனுப்பியது. கிட்டத்தட்ட போட்டிப் பயணமாக ஆகிவிட்டது இது.

நெல்லி பயணித்த திசைக்கு எதிர்திசையில் போட்டியாளர் பயணித்தார். இப்போட்டியில் கடைசியில் ப்ளை வென்றார். அவரை விட நான்கு நாட்கள் தாமதமாகவே போட்டியாளர் வர முடிந்தது. அந்த காலகட்டத்தில் ஒரு பெண் தனியாக பயணம் செய்து உலகை வலம் வந்தது ஒரு சாதனையாகும். 31 வயதில் 73 வயதான ஒருவரை மணந்துகொண்ட நெல்லி பிறகு பத்திரிகைத் துறையில் இருந்து விலகி, தொழிலதிபர் ஆனார். பெண்களே பிள்ளை பெறத்தான் படைக்கப்பட்டார்கள் என்று கருதப்பட்ட காலத்தில் பத்திரிகைத் துறைக்கு வந்து இளம் வயதிலேயே பெரும் புகழை அடைந்தவர் நெல்லி.

9. கமலாவின் விலை 2300 ரூபாய்

அந்த கட்டுரை இந்தியன் எக்ஸ்பிரஸின் முதல் பக்கத்தில் வெளியாகி 37 ஆண்டுகள் ஆகிவிட் டன. ஆனாலும் அதை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள். காரணம் அது உருவாக்கிய அதிர்ச்சி அலைகளும் சமூக விளைவுகளும்தான். சீழ் பிடித்த சமூக அமைப்புக்கு அவ்வப்போது இப்படிப்பட்ட அறுவை சிகிச்சைகளும் தேவைப்படுகின்றன. 1981 -ல் இந்தியன் எக்ஸ்பிரஸின் செய்தியாளர் அஸ்வினி சாரினும் எக்ஸிக்யூட்டிவ் ஆசிரியர் அருண்சௌரியும் ரகசியமான நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டார்கள். உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களும் சந்திக்கும் இடமான தோல்பூர் என்ற ஊர்ப்பக்கம் அஸ்வினி அடிக்கடி சென்றுவந்தார்.

அது வறுமையில் வாடும் பெண்கள் விற்கப்படும் இடம். இந்த கொடுமையைப் பற்றி ஒரு கட்டுரையை எழுதலாம் என்று யோசித்தபோது, நேரடியான கட்டுரை எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்ற அருண் சௌரி, இதை வேறுமாதிரியாக அணுகவேண்டும் என்று முடிவெடுத்தார். அஸ்வினியிடம் விலைகொடுத்து ஒரு பெண்ணை வாங்குமாறு கூறினார். ஆனால் இது இந்திய சட்டங்கள் படி குற்றம். எனவே சமூகத்தில் உயர்ந்த குற்றமற்ற நபர்களிடம் மட்டும் இந்த நடவடிக்கையின் உயர்ந்த நோக்கத்தைக் கூறி ஆதரவு பெற்று செயல்படுவது என்று முடிவானது. உச்சநீதிமன்ற நீதிபதி பி என் பகவதி உள்ளிட்ட மூவருக்கு அருண் சௌரி கடிதம் எழுதினார். ஆனால் சீலிட்ட கடிதத்தை தாங்கள் சொல்லும் வரை பிரிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அலுவலகத்தில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்துக்கொண்டனர். உரிமையாளர் கோயங்காவுக்குக் கூட சொல்லவில்லை.

அங்கே அஸ்வினி கமலா என்ற பெண்ணை வாங்கினார். கொடுத்த விலை 2300 ரூபாய் மட்டுமே! பஞ்சாப்பில் ஒரு எருமை மாட்டின் விலையில் பாதிதான் இது! சிகரெட் பாக்கெட்டுகள் எளிதாக கடையில் கிடைப்பதுபோல் நாட்டுத்துப்பாக்கிகள் விற்பனையாகும் இடம் அது. இது ஒரு துணிச்சலான நடவடிக்கை! அப்பெண்ணை டெல்லிக்குக் கொண்டுவந்து தன் வீட்டில் வைத்துக்கொண்டார். மறுநாள் இந்தியன் எக்ஸ்பிரஸின் முதல் பக்கத்தில் இச்செய்தி வெளியானது. அஸ்வினி சாரின், தனக்கு வந்த முதல் பாராட்டுத் தொலைபேசியே முக்கியமான போலீஸ் அதிகாரியுடையதுதான் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் மத்தியபிரதேச அரசு அப்படி நினைக்கவில்லை. செய்தியாளருக்கு எதிராக ஆட் கடத்தல் பிரிவுகளில் வழக்குத் தொடர்ந்து கைது செய்ய டெல்லிக்கு காவலர்கள் வந்தனர். ஆனால் இத்தகவல் கசிந்து எக்ஸ்பிரஸ், உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனுபோட்டு கைதுக்கு தடைவாங்கியது.

அதே போல் இந்த வழக்கில் நீதிபதிகள் மூன்று மாநிலங்களும் பதில் அளிக்கவேண்டும் என்றனர். கமலா என்ற பெயரில் இச்சம்பவத்தை விஜய் டெண்டுல்கர் நாடகம் ஆக்கினார். பிறகு இது திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. தீப்தி நாவல் கமலாவாக நடித்தார். சரி கமலா என்ன ஆனார்? உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கமலா சார்பில் ஆஜராக புகழ்பெற்ற வழக்கறிஞர் சோலி சொராப்ஜி முன்வந்தார். கமலா டெல்லியில் அரசு மகளிர் காப்பகத்தில் பாதுகாப்பாக சேர்க்கப்படவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் இது நடக்கும் முன்பாக கமலா காணாமல் போய்விட்டார். அவர் பிறகு கண்டுபிடிக்கப்படவே இல்லை! அவரைக் கண்டுபிடிப்பதில் அருண்சௌரி ஈடுபாடு காட்டவில்லை என்று நீதித்துறை அறிஞரும் டெல்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான உபேந்திரா பாக்ஸி கட்டுரை ஒன்றில் குற்றம் சாட்டினார் என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும்.

10. போபர்ஸ்: அரசியல் வானில் வெடித்த பீரங்கி!

ஸ்வீடன் அரசு வானொலி 1987 - ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முக்கியமான செய்தி அறிக்கை ஒன்றை ஒலிபரப்பியது. ஸ்வீடனில் உள்ள ஏபி போபார்ஸ் என்கிற ஆயுத தயாரிப்பு நிறுவனம் இந்தியாவிற்கு 400 பீரங்கிகளை விற்க ஒப்பந்தம் போட்டது. 1437 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வர அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை அது வெளியிட்டது. சித்ரா சுப்ரமணியம் என்ற செய்தியாளர் ஜெனிவாவில் இருந்தார்.

அவருக்கு ஸ்வீடனில் இந்த ஊழல் தொடர்பாக முக்கிய ஆவணங்கள் ஏப்ரல் 1988 - ல் கிடைத்தன. அவற்றைக் கொண்டு இந்த ஊழலை வெளிக்கொணரும் கட்டுரைகளை இந்து ராமும் இவரும் எழுதினர். ''அக்டோபர் 1989 வரை இது பற்றிய தகவல்களை எழுதினோம். தொடர்ச்சியாக, பொறுமையாக, நியாயமாக இந்த விஷயத்தில் நடந்துகோண்டோம்'' என்று பேட்டி ஒன்றில் சொல்கிறார் ஹிந்து ராம். இந்த ஊழல் நாட்டையே உலுக்கியது. சிபிஐ இயக்குநர் சென்னைக்கு வந்து ராமை சந்தித்தார். அப்போதைய ராணுவ அமைச்சர் கேசி பந்த் ராமை அழைத்து ராஜிவ் காந்தியின் சார்பில் கொஞ்சம் அடக்கி வாசிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் இது பலிக்கவில்லை! இதைத் தொடர்ந்து அவர் பதவி விலகவேண்டி வந்தது!

போபர்ஸ் நிறுவனத் தலைவர் மார்டின் கால் ஆர்போ என்பவரிடமிருந்து ஸ்வீடனில் ஒரு டைரி கைப்பற்றப்பட்டது. அதை நகல் எடுத்துக்கொண்டு அவரிடம் அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அதில் லஞ்சம் பெற்றவர்களாக இடம் பெற்றிருந்த பெயர்களின் முதலெழுத்துகள் பெருமளவுக்குப் புயலைக் கிளப்பின. இத்தாலியைச் சேர்ந்த ராணுவ இடைத்தரகர் ஒட்டாவியோ கொட்ராச்சி, ஹிந்துஜா சகோதரர்கள், போபர்ஸின் இந்திய ஏஜெண்ட் வின் சத்தா, ராணுவச் செயலாளர் எஸ்.கே. பட்நாகர், போபர்ஸ் நிறுவன தலைவர் ஆர்போ ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அடுத்து வந்த 1989 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் இந்த ஊழல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தது. அதன் எதிரொலிகள் இன்றும் கேட்டுக்கொண்டிருக்கின்றன. இது தொடர்பான நபர்களில் பலர் இறந்துவிட்டனர். டெல்லி உயர்நீதிமன்றம் இந்த ஊழல் வழக்கை ஆதாரம் இல்லையென தள்ளுபடி செய்தது. சிபிஐ இந்த வழக்கில் நான்கு ஆண்டுகள் காத்திருந்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தபோது அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. ராஜிவ் காந்தி போபர்ஸ் வழக்கில் குற்றமற்றவர் என 2004 - ல் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. காங்கிரஸ் கட்சிக்கு அவசியமான நிம்மதிப் பெருமூச்சை இது அளித்தது. இந்த போபர்ஸ் ஊழல் கட்டுரை வெளியாகி இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து அதன் ஆவணங்களை இந்து நிருபர்களுக்கு கொடுத்தவர் யார் என்பது வெளியானது. ஸ்வீடனில் அப்போது காவல்துறை அதிகாரியாக இருந்த லிண்ட்ஸ்டரோம் என்பவர் நான் தான் அளித்தேன் என்று ஒப்புக்கொண்டார். இந்த புலனாய்வு கொலம்பியா இதழியல் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் செய்தவற்றுள் 100 தலைசிறந்த கட்டுரைகளில் ஒன்றாகத் தேர்வாகியது. ராம் கொலம்பியா பல்கலை மாணவர்.

டிசம்பர், 2018.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com