பெறாத பிள்ளை!

பெறாத பிள்ளை!

எழுபதுகளின் பிற்பகுதியிலான காலங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரி வகுப்புகளில், பெண்கள் பயில்வதென்பதும், குறிஞ்சிப்பூ மலர்வதென்பதும் ஒன்றுதான். எங்களது வகுப்பறையும் அப்படித்தான். எங்கள் வகுப்பில் பயின்ற மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களில் நாங்கள் ஆறு பேர் மட்டுமே பெண்கள்!

நான் படித்த சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியிலேயே கால்நடை ஈனியல் துறையில் இப்போதுதான் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தது போலுள்ளது, ஆனால் கிட்டத்தட்ட முப்பத்து மூன்றாண்டுகள் கடந்தோடிவிட்டன.

ஒரு மருத்துவராக கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து, அவற்றின் உற்பத்தியைப் பெருக்குவதில் பங்காற்றுவதே எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. அதிலும் குறிப்பாக எனக்கு மாடுகளிடத்திலும், அவற்றைக் கொண்டுவரும்

விவசாயிகளிடத்திலும் கொஞ்சம் இயல்பாகவே ஈடுபாடு இருந்துள்ளது. ஏனெனில், மாடுகள்தான் அவற்றை வளர்க்கும் விவசாயிகளின் வாழ்வாதாரமே. எப்போதுமே சரியான நேரத்தில் மாடு சினைப்படும் பருவத்துக்கு வருவதைக் கண்டறிதல், கருவூட்டம் செய்தல், சினைபிடிக்காத மாடுகளின் குறை நிவர்த்தி செய்து சினைபிடிக்க வைத்தல் ஆகியவற்றைச் செய்யும்போது, நாமும் ஒரு வகையில் நாட்டின் பொருளாதாரத்துக்குப் பங்களிக்கிறோம் என்கிற பெருமிதமும் திருப்தியும் கிடைக்கிறது.

சிறந்த சொல் - ‘செயல்'!

காலை பதினொன்றரை மணிக்கு ஈனியல் வார்டு முடிகிறது என்றால், எப்போதுமே பதினொன்று இருபத்தைந்துக்குத்தான் அந்த மனிதர் மாட்டை இழுத்துக்கொண்டு நுழைவார். பார்த்தாலே எங்கள் மருத்துவக் குழுவினர் மனதிற்குள் சற்றே குமுறுவர். ஏனெனில், விடுமுறை நாட்களில் காலை 11.30 மணிக்குப் பிறகு உடனாளர்கள் இருக்கமாட்டார்கள். இதனைப் பலமுறை அவரிடம் சொல்லிப் பார்த்தாகிவிட்டது சீக்கிரம் வந்துடுங்க என்று. ஆனால் அவரோ,'அதான் நேரம் முடியறதுக்குள்ளே வந்துட்டேனே' என்பார், ஓர் நமட்டுச் சிரிப்புடன்.

அன்றைய ஞாயிற்றுக்கிழமையிலும் அப்படித் தான். அவர் தூரத்தில் வந்துகொண்டிருந்தார். அவரைச் சற்றே விரக்தியுடன் பார்த்துவிட்டு அவர் கொண்டுவந்திருந்த மாட்டினைப் பார்த்தேன். உடனே என்னுள் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஒரு பெரிய எருமை மாடு, கன்று ஈனமுடியாமல் தவித்த நிலையில் கொண்டுவரப்பட்டு இருந்தது. கணமும் யோசிக்காமல் இனப்பெருக்கப்பாதை வழி கைவிட்டு ஆராய்ந்து பார்த்ததில், கன்று உயிருடன் இருந்தது தெரிய வந்தது. ஆனால் கருப்பை திருகிக்கொண்டிருந்தது. இதற்கு முதற்கட்ட மருத்துவமாக மாட்டைப் படுக்க வைத்து, படுத்த நிலையிலேயே புரட்ட வேண்டும். ஆனால் அதற்கு சுமார் எட்டுப்பேராவது வேண்டும். அப்போதுதான் திருகிக்கொண்டிருக்கும் கருப்பை சரியாகும். ஆனால் இங்கோ நானும் என் உதவியாளரும் மட்டுமே இருக்கிறோம். பக்கத்தில் இருக்கும் வேறு சிகிச்சைப் பிரிவுகளிலும் அழைத்தாலும் வரும் அளவுக்கு யாரும் இல்லை. ஏனெனில் அலுவலக நேரம் முடிந்துவிட்டிருந்தது. எனவே கையைப் பிசைந்துகொண்டிருந்த நிலையில்தான் அந்த மனிதரை பார்த்தேன்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அவர் ‘ டாக்டரம்மா, என்ன வேணும்?' என்றார். உடன் ‘‘அய்யா.. இங்க வந்து கொஞ்சம் உதவி செய்யமுடியுமா?'' என்று அவரிடமே நிலையை விளக்க, உடனே அவர் ‘யே.. வாங்கப்பா.. டாக்டரம்மா கூப்பிடறாங்க..'' என்றவாறு வெளியே போய் ஐந்தாறு பேரை எங்கிருந்தோ எப்படியோ கூட்டி வந்துவிட்டார். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து எருமையைப் படுக்க வைத்துப் புரட்டியதில் கருப்பைத் திருகல் சரியாகி கன்று உயிருடன் வெளியே வந்துவிட்டது. பொதுவாக மாடு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமல்ல; கன்றை வெளியே கொண்டுவரும் மருத்துவருக்குமே உயிருள்ள கன்றைக் கண்டால் இயற்கையிலேயே மகிழ்ச்சி ஏற்படும். அன்றைக்கு எனக்கும் அப்படித் தான். மேலும் எப்போதும் விதண்டாவாதம் பேசுபவர், அப்போதுதான் ‘டாக்டரம்மா...உங்க கஷ்டத்தை இன்னிக்கு கண்ணாற பார்த்திட்டேன். இனிமேல் தேவையில்லாம நேரம் கடத்தாம, காலையிலேயே முடிஞ்ச வரைக்கும் மாடுகளைக் கூட்டியாந்திடுறேன்' என்றபடி விடைபெற்றார்.

போலிகளைக் கண்டு ஏமாறாதீர்!

கறவை மாடுகளுக்கு பல சமயங்களில் சில காரணங்களினால் கருப்பை வெளியே தள்ளப்பட்டுவிடும் சம்பவங்கள் நடக்கும். அதை கருப்பை வெளித்தள்ளப்பட்ட நிலை (Uterine Prolase) என்று எங்கள் மருத்துவத்துறையில் அழைப்போம். இந்த மாதிரியான சூழலைக் கையாள்வதில் பயிற்சி பெற்ற மருத்துவர்களே சற்று திணறிப்போவார்கள். ஆனால் நம்மூரிலோ சில சமயம் பயிற்சி அற்ற போலிகள் சிலரை நம்பி மாட்டுக்காரர்கள் சிகிச்சை அளிக்கச் சொல்வர். அவர்களோ வாயில்லா ஜீவனென்றும் கருதாமல் கோணி ஊசியைக் கொண்டெல்லாம் வைத்துத் தைத்துவிட்டு மாட்டுக்காரரிடம் கிடைக்கும் தொகையினை லவட்டிக்கொண்டு சென்றுவிடுவர். ஆனால் அந்தப்போலி அடுத்த தெருவைத் தாண்டுவதற்குள் தையல் பிரிந்து கருப்பை மீண்டும் வெளியே வந்துவிடும் சம்பவம் அடிக்கடி நிகழ்வதுண்டு.

அப்படியாக, மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாடு ஒன்றை ஓட்டி வந்தார், ஒருவர். வழிப்போக்கனையெல்லாம் மருத்துவனென்று நம்பி ஏமாந்த சோகத்தில், அவர் முகமே வீங்கிப் போயிருந்தது. என்னைப் பார்த்த்துமே ‘எப்படியாவது எம்மாட்டை சரி பண்ணி விட்டுடுங்கம்மா; இந்த மாட்டை நம்பித்தான் எங்க சாப்பாடே  இருக்கு' என்று கெஞ்சலாகச் சொன்னார். மாட்டின் பின் பகுதியில் யாரோ போட்ட தையல் பிய்ந்து, பின் புறம் முழுக்க அழுகி மிக மோசமாக இருந்தது. என்ன செய்வது என்று கணக்கிட்டவாறே ‘‘ஐயா.. உங்க மாடு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கு, இதனால் படுக்கவே முடியாது, தகுந்த சிகிச்சையளிக்கத் தவறினால் அதன் உயிருக்கே ஆபத்து ஏற்படும்!

நீங்கள் கூடவே இருந்து தீவனம் அளித்துப் பார்த்துக் கொள்வீர்களா?'' என்று கேட்டேன். அவரோ, ‘‘என் பிழைப்பே இதை நம்பித்தாம்மா இருக்கு! இதை விட வேறென்ன வேலை?'' என்றவாறு உடனே ஒப்புக்கொண்டார்.

உடன் பாதிக்கப்பட்ட மாட்டினை உள்நோயாளியாக மருத்துவமனையிலேயே கட்டி வைத்து, ஐந்து நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தோம்.  ஒருவழியாக மாடும் நன்கு தேறி சரியானது. அந்த ஐந்து நாட்களும் மாட்டுக்காரரும் மிகுந்த சிரத்தையுடன் பார்த்துக் கொண்டார். இப்போது அவருக்கு, தங்கள் குடும்பத்துக்கு வருமானம் தருகிற ஒரு ஜீவனை எப்படிப் பேணிப் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிந்திருந்தது. இப்படி எங்கள் சிகிச்சை ஒருபுறம், அவர் காட்டிய அக்கறை மறுபுறம் எனச் சேர்ந்து, அந்த மாடு விரைவில் குணமாகிச் சென்றது.

பெறாத பிள்ளை..!

செல்லப் பிராணிகள் ஈனியல் பிரிவில் நான் பணியிலிருந்த நேரத்தில் ஒரு நாள், பெண்மணி ஒருவர் தனது டாபர்மேன் நாயுடன் வந்தார். வந்த வேகத்தில் 'டாக்டர் என்னோட நாய் மலடு ஆகிவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்றுமுறை ஆண் நாயுடன் இணைசேர்த்துப் பார்த்துவிட்டேன்; கருத்தரிக்கவே இல்லை. இவளுக்கு என்னவாவது சிகிச்சை அளித்து குணப்படுத்துங்கள்''

 என்று படபடத்தார். உடனே அவளை, அதாவது அந்த பெண் டாபர்மேனைப் பார்த்தேன். ஆரோக்கியமாகவே தெரிந்தாள். அவள் சினைக்கான பருவத்துக்கும் அப்போது வந்திருந்தாள். அதனால் எப்போது இணைசேர்த்தால் கருப்பிடிக்கும் என்று கண்டறிவதற்கான பரிசோதனை செய்தோம். அன்று பருவத்துக்கு வந்து ஏழாவது நாள் என்று தெரிந்தது. ஆனால் அன்று கருப்பிடிக்கும் வாய்ப்புகள் இல்லை என்பது சோதனையில் தெரிய வந்தது. எனவே இரண்டு நாட்கள் கழித்து வரச் சொன்னேன். சரியாக அடுத்த இரு நாட்களுக்குப் பிறகு அதாவது பருவத்தின் பத்தாவது நாள் வந்தார். அன்றும் பரிசோ தித்தோம். கருப்பிடிக்கும் வாய்ப்பு இல்லை. மீண்டும் பதின்மூன்றாவது நாள் வரச்சொன்னோம். அன்று பார்த்தாலும் கருபிடிக்க வாய்ப்பில்லை என சோதனையில் தெரிந்தது..!

இப்போது அந்தப் பெண்மணி புலம்பி விட்டார். ஏனெனில், ஒன்பதிலிருந்து பதின்மூன்று நாட்களுக்குள் நாய்களை இணைசேர்த்துவிடுவதுதான் வழக்கம். அப்போதுதான் கருப்பிடிக்கும். அந்நாட்களில்தான் பெண் நாயும் ஆண் நாயை இடச்சேர்க்கைக்கு அனுமதிக்கும். இதனால் மனம் நொந்தவாறு திடீரென்று அழ ஆரம்பித்துவிட்டார். அப்போதுதான் தெரிந்தது, இளம் வயதிலேயே கணவனை இழந்திருந்த அவருக்கு குழந்தைகள் கிடையாது. ஆகவே தான் பெற்ற மகளைப் போல அந்நாயை வளர்த்து வருகிறாரென்று.

இதை உணர்ந்த நான், ‘இருங்கம்மா.. எல்லா விலங்குகளுக்கும் ஒரே மாதிரி இருக்காது... கொஞ்சம் தினங்களில் மாறுதல் இருக்கும்'' என்று, மீண்டும் பதினைந்தாம் நாள் பரிசோதித்தோம். இப்போது எல்லா முடிவுகளும், கருவுறும் தருணம் இது என்று சொல்லின. அன்றே ஆண் நாயுடன் இணை சேர்க்குமாறு கூறினோம். இது நடந்து முப்பது நாட்கள் கழித்து அவர் தன் நாயுடன் வந்து சேர்ந்தார். பக்கத்துக் கட்டடத்துக்குப் போய் ஸ்கேன்

பரிசோதனை செய்துவருமாறு கூறினேன். போய்வந்தவர் முக மலர்ச்சியுடன் ‘டாக்டர்... அவ வயித்தில குட்டி இருக்காம்' என்று மிக மகிழ்வாகச் சொன்னார். அறுபது நாட்கள் கழித்து அந்நாய், குட்டிகளை ஈன்று தன் வளர்ப்புத்தாயை இன்னொருமுறை தனது குட்டிகளுக்குத் தாயாக்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

உயிர்களனைத்தும் உறவுகள்!

இப்படியாக இன்னொரு நாள் காலையில், அடிபட்ட நாயொன்றைத் தூக்கிக்கொண்டு அரசு உயர் அதிகாரி ஒருவர் பதற்றத்துடன் மருத்துவமனைக்கு வந்தார். அவரது செல்ல நாய், திறந்திருந்த கதவின் வழியாக வெளியே ஓட, ஏதோ வாகனம் அடித்துவிட்டது. வரும்போதே மிகவும் மோசமான நிலையில் வந்திருந்தது. சற்றும் தாமதிக்காமல் உடனே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தோம். அவருடன் மேலும் பல உறவினர்கள்,  உதவியாளர்கள், அலுவலர்கள் வந்திருந்தனர்.

மறுபக்கம் தீவிர சிகிச்சைப்பிரிவில் எங்கள் மருத்துவர்கள் அனைத்து உயரிய உபகரணங்களைக்கொண்டும் மரணத்தின் தருவாயிலிருந்த அந்நாயைப் பிழைக்க வைக்க போராடிக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக எங்களது மருத்துவர்களுக்கு அந்நாயானது உயிர் பிழைக்கும் என்ற நம்பிக்கை குறைந்தது. பின்னர் அந்த அதிகாரியிடம் அந்த நாயின் நிலையைக் கூறி அது பிழைக்க வாய்ப்பில்லை என தெளிவுபடுத்தினோம். முதலில் சற்று தடுமாறினாலும் அவர் மனதைத் திடப்படுத்திக் கொண்டார். சற்று நேரத்தில் அந்நாயும் இறந்துவிட்டது.

எல்லோரும் அழுது தீர்த்தார்கள். அவர்கள் வீட்டினரில் ஒருவர் அந்த இடத்திலேயே அவர்களை அழைத்து, உரத்த குரலில் இறந்த நாய்க்காக வழிபாட்டு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அது முடிந்ததும், பெரிய விஐபியின் மரண ஊர்வலம் போல ஏராளமான கார்களின் அணிவகுப்புடன் அதன் உடல் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டதை  வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தோம்.

புரிதல் அழகு!

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி சிகிச்சைத்துறை என்பது எப்போதுமே பரபரப்பாக இயங்கக்கூடியது. அப்படிப்பட்ட துறைக்கு நான் தலைவராகப் பணிபுரிந்து இதர மருத்துவர்களை வழிநடத்தியதெல்லாம் கடவுளின் கிருபைதான். அப்படியான நாட்களில் ஒரு நாள் காலை சிகிச்சை நேரம் எல்லாம் முடிந்து மதியம் இரண்டு மணி இருக்கும். காக்கர் ஸ்பேனியல் வகை நாய் ஒன்றுடன் என் அறைக்குள் ஒரு பெண் வந்தார். பார்த்தவுடனே தெரிந்தது வட நாட்டுப் பெண்ணென்று. தான் ராணுவத்தில் பணிபுரியும் குடும்பத்தைச் சேர்ந்தவரென்றும், டெல்லியில் இருந்து ஆவடிக்கு சமீபத்தில் வந்திருப்பதாகவும் ஆங்கிலத்தில் கூறியவர், தனது நாய்க்கு வழக்கமான பரிசோ தனைக்காக (Regular Checkup) வந்திருப்பதாகச் சொன்னார்.

அவர் கொண்டு வந்திருந்த நாயை நோட்டமிட்ட நான், அது நல்ல நிலையில் இருப்பதை உணர்ந்து, ‘‘இன்று பார்வை நேரம் முடிந்துவிட்டதே.. மருத்துவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். வழக்கமான சோதனைதானே, நாளை காலை எட்டு மணிக்கு வாம்மா... பார்த்துக்கொள்ளலாம்!'' என்று சொல்லி அனுப்பினேன்.

ஆனால் அப்பெண் அடுத்த நாள் காலையில் மருத்துவ மனைக்கு வராமல், நேராக புகார் கொடுக்க காவல்நிலையம் போய்விட்டார்.

காவல் ஆய்வாளர் மஃப்டியில் அப்பெண்ணையும், அவரது தந்தையையும் அழைத்துக்கொண்டு பதினொரு மணி அளவில் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். அவர்கள் மூவரும் என் அறைக்குள் நுழைந்த மறுகணத்தில், நடப்பதேதும் அறியாமல் நான் அப்பெண்ணைப் பார்த்ததும் ‘‘ஏனம்மா... காலையில் எட்டுமணிக்கு வரச்சொன்னால் மீண்டும் நேரம் கடந்து வந்து நிற்கிறாய்?'' என ஆங்கிலத்தில் கடிந்துகொண்டு உடனே செல்லப்பிராணிகள் பிரிவிற்கு நாயைக் கொண்டு

செல்லும்படியும், ஏற்கெனவே நீங்கள் காலையிலேயே வருவீர்கள் என்று அந்தப்பிரிவு பணி மருத்துவரிடம் தெரிவித்திருப்பதாகவும் கூறினேன்.

 அப்போதுதான் மஃப்டியில் வந்திருந்த காவல் ஆய்வாளருக்கு மருத்துவமனையில் முறையாகத்தான் சிகிச்சையளிக்கிறார்களென்றும், இந்த சம்பவத்தில் இப்பெண்தான் அவசரப்பட்டு புகார் தெரிவித்திருக்கிறார் என்றும் தெரியவந்தது. அதனையடுத்து அக்காவலர் அப்பெண்ணையும், அவரின் தந்தையையும் பார்த்து சற்றே கோபமாக எச்சரிக்க, அப்பெண்ணின் தந்தை என்னிடம் அருகில் வந்து மன்னிப்பு கேட்பதாகச் சொன்னார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போதுதான் அவர் விவரம் தெரியாமல் தன் பெண் பதற்றத்தில் காவல்நிலையம் போய்விட்டதாக உண்மையைக் கூறினார், நானோ ‘பரவாயில்லை  சார்... ஒரு மருத்துவராக உங்கள் நாயின் நிலையைப் பார்த்துவிட்டு தான் அடுத்த நாள் வர சொன்னேன். ஏனெனில், காலையிலிருந்து கொஞ்சமும் ஓய்வெடுக்காமல் ஏறக்குறைய எட்டு மணிநேரத்திற்கும் மேல் எங்கள் மருத்துவர்கள் பணி புரிகிறார்கள். பணி நேரம் முடிந்த பிறகு அவர்களின் துறைத்தலைவராக அவர்களுக்கு வேண்டிய ஓய்வளித்து அவர்களின் நலன் காப்பதும் எனது கடமையள்ளவா?' என்றவாறு அந்த நாய்க்கு பரிசோதனைகளை செய்யுமாறு மருத்துவர் ஒருவரைப் பணித்தேன். எல்லாம் முடிந்து நன்றி கூறிவிட்டுப் போன அப்பெண் சில நாட்கள் தொடர்ந்து நாயைக் கொண்டுவந்து சிகிச்சை பெற்றார்.

பிறகு அந்தப் பெண் என் நினைவில் இருந்து மறைந்துவிட்டார். ஒரு மாதம் கழித்து டெல்லியில் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. யாரய்யா நமக்கு டெல்லியில் இருந்து எழுதுவது என்றவாறு பிரித்துப்படித்தேன். அந்த வடிந்தியப் பெண்தான் எழுதியிருந்தார். தான் இப்போது டெல்லி திரும்பிவிட்டதாகவும், தனது நாய் நன்றாக இருப்பதாகவும், தான் நடந்துகொண்டமுறைக்கு மன்னிப்புக் கோரியும் எழுதி இருந்தார். முறையான புரிதல் தான் எவ்வளவு அழகு..!

(பேராசிரியர் மரு, செசிலியா ஜோசப், இப்போது கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி இயக்குநராக உள்ளார்)

ஜூன், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com