பொதுப்போக்குவரத்தை ஊக்குவியுங்கள்

பொதுப்போக்குவரத்தை ஊக்குவியுங்கள்

புதிய அரசு என்ன செய்யவேண்டும்?

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் உள்ள கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளுக்கும் இப்போது வெளியாகும் அறிக்கைகளுக்கும் இடையில் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இந்த மாதம் 7ஆம் தேதி திருச்சியில் திமுக நடத்திய ‘தமிழகத்தின் விடியலுக்கான முழக்க‘ பொதுக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட ஏழு பிரகடனங்களில் நீர் வளம், வேளாண்மை, நகர திடக்கழிவு மேலாண்மை போன்ற சூழல் சார்ந்தவை முக்கிய இடத்தை பிடித்தன. 2021 தேர்தலுக்காக வெளியிடப்பட்டுள்ள அனேக கட்சிகளின் தேர்தல் அறிக்கையில்‘சுற்றுச்சூழல்‘ சார்ந்த விஷயங்கள் இடம் பிடித்துள்ளன. இது போதுமா? நிச்சயம் போதாது, இது ஒரு தொடக்கப் புள்ளி. போகவேண்டிய தூரம் நிறையவுள்ளது.

புதிய அரசு என்ன செய்யவேண்டும்?

மே மாதம் தமிழகத்தில் பதவியேற்கவுள்ள புதிய அரசு, குறைந்தபட்சம் அடுத்த பத்தாண்டுகளுக்கான திட்டங்களை கணக்கிலெடுத்துக் கொள்ளவேண்டும். அரசு பொறுப்பேற்றவுடன் முதல் வேலையாக ‘காலநிலை அவசரநிலையை‘ அறிவிக்கவேண்டும். தமிழ்நாட்டில் திட்டமிடப்பட்டுள்ள சூழலை கெடுக்கக்கூடிய திட்டங்களை நிறுத்தி அவற்றை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

தமிழத்தில் எந்தெந்த துறைகள் (எரிசக்தி உற்பத்தி, போக்குவரத்து, விவசாயம் மற்றவை) எவ்வளவு கார்பனை உமிழ்கின்றன் என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டு அதன் அளவை வரும் 2040 ஆண்டிற்கு ‘நிகர பூஜ்ஜியமாக்க‘(Net Zero) அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தமிழகத்தை 2040ஆம் ஆண்டிற்குள் ‘கார்பன் நியூட்ரல்‘ மாநிலமாக்க வேண்டும்.

மின்சார உற்பத்தி: தமிழகத்தின் மின்னுற்பத்தி கொள்கையை,  குவிக்கப்பட்ட மின்னுற்பத்தி யிலிருந்து பரந்துபட்ட உற்பத்தி கொள்கைக்கு மாறவேண்டும். சுற்றுச்சூழலை கெடுக்கக்கூடிய அனல் மற்றும் அணு மின் திட்டங்களை தவிர்த்து புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களை நோக்கி பயணப்படவேண்டும். அரசு புதிதாக திட்டமிட்டுவுள்ள உப்பூர், உடன்குடி மற்றும் நெய்வேலி மின் திட்டங்களை கைவிட்டு விடவேண்டும். கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் விரிவாக்க திட்டங்களை நிராகரித்து, சூரிய சக்தி, காற்றாலை திட்டங்களில் முதலீடு செய்யவேண்டும். அந்த அந்த பகுதிக்கு தேவையான மின்சாரத்தை அங்கேயே உற்பத்தி செய்து பயன்பாட்டிற்கு கொண்டுசெல்லும் வகையில் ‘மைக்ரோ அல்லது மினி கிரிட்‘ உருவாக்கப்படவேண்டும். சில வருடங்களுக்குள்ளாக மின்சாரத்தை சேமிக்கக்கூடிய தொழில்நுட்பத்தை வளர்த்தெடுத்து அனைத்து அனல் மின்திட்டங்களையும் கைவிடவேண்டும். இது வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் காற்றாலை மின்திட்டங்கள் எல்லாம் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்டவை. அவற்றின் உற்பத்தித் திறன் மிகக்குறைவு. இப்போது எட்டு மெகாவாட்டு வரை உற்பத்தித்திறன் கொண்ட காற்றாலைகளை நிறுவி தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யவேண்டும். காற்றாலையில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பகிர்மானத்திற்கு கொண்டு செல்லும் வழித்தடங்களை உருவாக்கவேண்டும்.

தமிழகத்திற்கென மின்சார சிக்கன நிறுவனத்தை உருவாக்கவேண்டும்.

விவசாயம்: தமிழகத்தில் நடைபெறும் உணவு உற்பத்தியை முழுவதும் மீளாய்வுக்கு உட்படுத்தி, இப்போதைய காலநிலைக்கு தகுந்தவாறு தானியங்களை தேர்வு செய்து பயிரிடவேண்டும். நெல் உற்பத்தியை ஒற்றைநாற்று நடவுமுறைக்கு மாற்றவேண்டும். முழுவதும் இயற்கை விவசா யத்தை பின்பற்றும் வகையில் கொள்கைகள் வகுக்கப்படவேண்டும். சிறுதானியங்கள் அனைத்திற்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து, விவசாயிகள் விளைவிக்கக்கூடிய எல்லா தானியங்களையும் அரசு கொள்முதல் செய்யவேண்டும். கூட்டுறவு

சங்கங்கள், உழவர் சந்தைகள், ரேஷன் கடைகள் என எல்லா இடங்களிலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் கிடைக்கச்செய்யவேண்டும். பணப்பயிர்களின் சாகுபடி நிலப்பரப்பை கட்டுப்படுத்தவேண்டும். தமிழகம் ஏற்கனவே

நீர் பற்றாக்குறையால் திணறுகிறது, இதில் பணப்பயிருக்கு அதிக முக்கியத்துவம் தருவது நீர் சிக்கலை மேலும் அதிகரிக்கும். இயற்கை முறையில், ரசாயன உரங்கள் இல்லாத பொருட்கள் உற்பத்திக்கு சான்றளிக்கும் மையங்களை அரசு உருவாக்கவேண்டும். உயிர்பன்மையத்திற்கு முக்கியத்துவம் தரக்கூடிய விவசாய முறைகளை ஊக்குவிக்கவேண்டும். மரபணு மாற்ற பயிர்களுக்கு ஒருபோதும் தமிழத்தில் இடம் தரக்கூடாது. ஒருங்கிணைந்த பண்ணைகளை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்படவேண்டும்.

நீர் வளம்: நீரின் அடிப்படை கோட்பாடு ‘எங்கே விழுகிறதோ அங்கே பிடித்துக் கொள்ளவும்‘ என்பதாகும்.  இதை கருத்தில்கொண்டுதான் நம்முடைய முன்னோர்கள் தமிழ்நாடும் முழுவதும் 40,000 க்கும் மேற்பட்ட நீர்நிலைகளை உருவாக்கி வைத்திருந்தார்கள். அழித்ததெல்லாம் போக மீதமிருக்கின்ற நீர்நிலைகளை தூர்வாரி, அதன் வரத்து கால்வாய்களையும், போக்கு கால்வாய்களையும் செப்பனிட்டு தண்ணீரை சேமித்தாலே நமக்கான தண்ணீர் கிடைத்துவிடும்.

சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை ‘நீரியல் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டங்களாக‘ அறிவித்து அவற்றிலுள்ள நீர்நிலைகளை பாதுகாக்கவேண்டும். சென்னை, கோவை, மதுரை மற்றும் பெரு நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ‘கழிவுநீரை சுத்திகரிக்கும்‘ திட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று விதிகள் வகுக்கப்படவேண்டும். மேற்கு தொடர்ச்சி மலைகளைப் பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்றப்பட்டு, கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கையை அமல்படுத்தவேண்டும்.

போக்குவரத்து: தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்க, பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும். நல்ல தரமான பேருந்துகளை இயக்கினால் பயன்பாடு அதிகரிக்கும் என்பது தரவுகளின் அடிப்படையில் புரிந்துகொள்ளமுடிகிறது. தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள் போன்ற வணிக நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்கி ‘தனிநபர்‘ வாகனங்களை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப் படவேண்டும். மின்சாரத்தில் இயங்கக்கூடிய பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்க நடவடிக் கைகளை மேற்கொண்டு, ‘சார்ஜிங் பாயிண்ட்‘ அமைக்கவேண்டும்.

காடுகள்: தமிழகத்தில் அடிக்கடி நடக்கும் மனித-விலங்கு மோதலை கட்டுப்படுத்த காடுகளின் பரப்பை அதிகரிக்கவேண்டும். இதே நிலையில் யானைகளின் இறப்பு தொடருமானால் இன்னும் 25ஆண்டுகளில் தமிழ்நாட்டில் யானைகள் இருக்காது. இதை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கென சிறப்பு யானைப் பாதுகாப்புத் திட்டம் தீட்டப்பட்டு நடைமுறைப்படுத்தவேண்டும்.

 சர்வதேச அளவுகளின் படி, தமிழ்நாட்டின் காடுகளின் பரப்பளவை 33% அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.    

 சூழலியல் பிரச்னைகளை அவை வரும்போது  பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தால், அப்பிரச்னைகள் வந்தால் பார்ப்பதற்கு எதுவும் மிஞ்சாது என்பதை நினைவில் கொண்டு புதிய அரசு கடமையாற்ற வேண்டும்.

ஏப்ரல், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com