மடமடவென்று வெடித்த இரட்டைக்குழல் துப்பாக்கி!
ஓவியம்: ரவி பேலட்

மடமடவென்று வெடித்த இரட்டைக்குழல் துப்பாக்கி!

தமிழ்நாட்டில் மட்டுமின்றி. உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் பலர் சேர்ந்திருப்பதும், பிறகு பிரிந்துவிடுவதுமான நிகழ்வுகள் நடந்தேறியிருக்கின்றன. பிரிந்தவர்கள் மீண்டும் இணைவதும் உண்டு.

அந்த வகையில், தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் சேர்ந்திருந்த காலமும், பிரிந்திருந்த காலங்களும் உண்டு. அவர்கள் மீண்டும் இணைந்ததை நாம் பார்த்தோம். எனினும் ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாட்டை, இங்கு சொல்ல வேண்டும். வேறு எங்கும் காண முடியாத வகையில், சேர்ந்திருந்த போதே பிரிவதற்கான கருத்துகளை கொண்டவர்களாகவும், பிரிந்திருந்த போதும் அன்பு, பாசத்தின் அடிப்படையில் சேர்ந்திருந்தவர்களாக அவர்களைப் பார்க்க முடிகிறது. இதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகளை சொல்லலாம். 1949 செப்டம்பரில் தான் பெரியாரை விட்டு தனியாகப் பிரிந்து, தி.மு.கழகத்தை அண்ணா கண்டார் என்றாலும்,  சேர்ந்திருக்கும் போதே, அவர்களுக்கு சில கருத்துகளின் அடிப்படையில் பிரிவினை ஏற்பட்டுவிட்டது. மணியம்மையார் திருமணம் தான் பிரிவுக்கு முற்று முழுதான காரணம் என்று சொல்லிவிட முடியாது. அதுதான் உடனடி காரணம் என்று வேண்டுமானால் சொல்லலாம். அதற்கு முன்பே, அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வரத் தொடங்கிவிட்டன. அதற்கு வித்திட்டது இந்திய விடுதலை நாள் என்று சொல்ல வேண்டும்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதில் பெரியாருக்கோ, திராவிடர் கழகத்துக்கோ மகிழ்ச்சி இல்லை என்று சொல்லிவிட முடியாது. இதை விடுதலை ஏட்டிலேயே பெரியார் பதிவு செய்து இருக்கிறார். ஆனாலும் கூட, அது முழு விடுதலை அன்று என பெரியார் கருதுகிறார். பெரியாரின் கருத்தை ‘எஜமானன் மாறும் நாள்‘ என்று குத்தூசி குருசாமியார் ஒரு கட்டுரையை விடுதலையில் எழுதியிருக்கிறார். ஆகவே, 1947 ஆகஸ்ட் 1ஆம் தேதி மிகத் தெளிவாக, 'ஆகஸ்ட் 15 துக்க நாள்‘ என்று கட்டுரை வெளியாகியிருக்கிறது. அந்த 15ஆம் நாள் கொண்டாட்டத்தில் திராவிடர் கழகத்தை சேர்ந்த யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று அறிவித்துவிடுகிறார். ஒரு முதலாளியிடமிருந்து இன்னொரு முதலாளியின் கைகளுக்கு சாவி மாறுகிறதே தவிர, நம் கைவிலங்குகள் அப்படியேதான் இருக்கப் போகின்றன என்பது பெரியாரின் வாதம். இதனை அறிஞர் அண்ணா ஏற்கவில்லை. இரண்டு முதலாளிகளில், ஒருவன் நம்மை விட்டுப் போவது நல்லதுதானே. இன்னொருவனை நாம் பிறகு பார்த்து கொள்ளலாம். அதற்காக, இருக்கின்றவன் வெளியேறுவதை நாம் கொண்டாட வேண்டாமா? என்று கருதியதோடு நிற்காமல், தன்னுடைய திராவிட நாடு ஏட்டில், 1947-ஆகஸ்ட் 10 ஆம் தேதி அண்ணா ஒரு கட்டுரை எழுதினார். அதற்கு ‘ஆகஸ்ட் 15 இன்ப நாள்‘ என்று தலைப்பிட்டார். ஆகஸ்ட் 15 துக்க நாளா?, இன்ப நாளா? என்பதில் தான் பெரியாருக்கும் அண்ணாவுக்குமான முதல் பிரிவு ஏற்பட்டது. எனவே இந்திய விடுதலையை அவர்கள் இருவரும் எந்தெந்த கோணத்தில் பார்த்தார்கள் என்பதைப் பொருத்து அந்த பிரிவை நாம் கண்டோம். எனவே, சேர்ந்திருக்கும் போதே பிரிந்திருந்தவர்களாகவும் அவர்கள் இருந்தனர். அதற்குப் பிறகு, தூத்துக்குடியில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் அறிஞர் அண்ணா அவர்கள் கலந்து கொள்ளவில்லை. மிகப் பெரிய எதிர்பார்ப்பு தொண்டர்களுக்கு இருந்தது. இறுதி நேரத்திலாவது அண்ணா வந்துவிடுவார் என்று கருதினார்கள். ஆனால் அந்த மாநாட்டில் அண்ணா கலந்து கொள்ளவே இல்லை.

எனினும் அந்தப் பிரிவு முழுமையடைந்து விடவில்லை. மீண்டும் 1948ஆம் ஆண்டு ஈரோட்டில் நடந்த மாநாட்டில் பெரியார் அவர்களும் அறிஞர் அண்ணா அவர்களும் சேர்ந்து கலந்து கொண்டனர். அதுதான் அவர்கள் இருவரும் இணைந்து பங்கேற்ற இறுதி மாநாடு என்றாலும், அந்த மாநாட்டில் மீண்டும் அவர்கள் சேர்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. அந்த மாநாட்டில் , அண்ணாவை ரதத்தில் உட்கார வைத்துவிட்டு, பெரியார் முன்னால் நடந்து சென்றார். எனவே இனி பிரிவினை இருக்காது என பலரும் கருதினர். ஆனால் அவர்களுக்குள் ஒரு பிரிவு இருந்து கொண்டேதான் இருந்திருக்கிறது, அந்த மாநாட்டில் பேசுகிற போதே, அறிஞர் அண்ணா அவர்கள் ‘தேர்தலில் நின்றால், நாம் ஆட்சியைக் கைப்பற்றிவிட முடியும். ஆனால் பெரியார் அதற்கு நம்மை அனுமதிக்கமாட்டார். ஆட்சியை கைப்பற்றி விட முடியும் என்று நான் சொல்வது அதிகாரத்தின் மீது இருக்கிற மோகம் காரணமாக இல்லை. அதிகாரத்தின் மூலமாக சிலவற்றை மக்களுக்கு செய்ய முடியும் என்பதால் தான்' என்று பேசினார்.

எனவே அந்த மாநாடு உரை, தேர்தலில் நிற்பது பற்றி ஒரு மறு ஆய்வை அறிஞர் அண்ணா கொண்டு வந்திருக்கிறார் என்பதை புலப்படுத்தியது. அப்போதும் பெரியாரும் அண்ணாவும் சேர்ந்திருந்தாலும் கருத்தளவில் பிரிந்து தான் இருந்திருக்கிறார்கள். இப்படி ஒரு முரண் இருந்தது என்றால், இன்னொரு வித்தியாசமான முரணையும் நம்மால் பார்க்க முடிகிறது. அதாவது பிரிந்து போன பிறகும் அவர்கள் சேர்ந்திருந்த அந்த நிலை தான் அந்த முரண். அறிஞர் அண்ணா திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறிய பிறகு அடுத்த ஆண்டான 1950இல், அவரது ஆரிய மாயை நூல் தடை செய்யப்பட்டு கைது செய்யப்படுகிறார். பெரியார் அவர்களும் ‘பொன்மொழிகள்‘ என்ற நூலை எழுதியதற்காக கைது செய்யப்படுகிறார். வேடிக்கை என்னவென்றால், இருவரும் திருச்சி சிறைச்சாலையில் எதிரெதிர் அறைகளில் அடைக்கப்படுகிறார்கள். அப்போது ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. பெரியாரைப் பார்க்க வந்தவர்கள் பழம், ரொட்டி எல்லாவற்றையும் கொண்டு வருகிறார்கள். இரவு நேரத்தில் அந்த சிறைக்காவலர் ஒருவரை பெரியார் அழைத்து, ‘நான் ரொட்டி அதிகம் சாப்பிட மாட்டேன். எதிர் அறையில் இருக்கிற அண்ணாதுரைக்கு இந்த பிஸ்கெட் ரொம்ப பிடிக்கும் இதை கொண்டு போய் கொடுங்க‘ என பெரியார் சொல்கிறார்.‘இதை பெரியார் உங்களிடம் கொடுக்க சொன்னார்‘ என அந்த காவலர் அதை கொடுத்த போது, அதை வாங்கிக் கொண்ட அண்ணாவின் கண்கள் கலங்கின. அவர்கள் பிரிந்திருந்தாலும் சேர்ந்தேதான் இருக்கிறார்கள் என்பதற்கு இந்தக் காட்சி ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது.

இதேபோல், இன்னொரு நிகழ்வையும் இங்கு குறிப்பிடலாம். 1957ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவது என முடிவு செய்து திமு கழகம் தேர்தலில் பங்கேற்றது. அப்போது பெரியாரும்  அண்ணாவும் எதிரெதிராக சந்தித்துக் கொள்ளும் ஒரு நிகழ்வு உருவாயிற்று. பெரியார் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து குறிப்பாக காமராஜரை ஆட்சியை ஆதரித்து உரையாற்றி விட்டு, புதுக்கோட்டையிலிருந்து தேவக்கோட்டையை நோக்கி செல்கிறார். அன்றைக்கு திமுகழகத்திற்கு வாக்குகளைக் கேட்டுவிட்டு அண்ணா காரைக்குடியிலிருந்து திருச்சி நோக்கி  செல்கிறார். இருவரும் திருமயம் என்ற ஊரில் ரயில்வே கேட் போடப்பட்டிருந்த இடத்தில், இந்தப் பக்கமும், அந்தப் பக்கமுமாக கார்களில் அமர்ந்திருக்கிறார்கள். அண்ணா தன்னோடு வந்திருக்கிற நண்பரை பார்த்து “கேட்டுக்கு அந்தப் பக்கம் நிற்கிற வேனைப் பார்த்தால், ஐயாவோட வேன் மாதிரி இருக்கே. இறங்கிப் பாருங்கள்‘ என்கிறார். அவர் கீழே இறங்கிப் பார்த்துவிட்டு ‘ஆம் அது ஐயாவுடைய ஊர்தி தான்‘ என்று  சொன்னவுடனே, அண்ணா தன் காரிலிருந்த பழங்கள் சிலவற்றை எடுத்துக் கொடுத்து “போய் ஐயாவிடம் கொடுத்துவிட்டு வந்துடுங்க. அதுக்குள்ள ரயில் வந்துடுச்சுனா, அங்கேயே இருங்க, நானே வந்து கூட்டிட்டுப் போறேன்' என்று சொல்கிறார். அந்த நண்பர், “நான் போய் கொடுக்கிறதுல ஒண்ணும் சிக்கல் இல்லை. அதை நீங்களே கொண்டு போய் கொடுத்தால் இன்னும் நல்லாருக்குமே' என்று சொல்கிறார். அதற்கு அண்ணா, “நன்றாகத்தான் இருக்கும். ஆனால், ஐயாவை நேரில் பார்த்துவிட்டால், பிறகு மீண்டும் இந்த காருக்கு வருவேனா என்று சொல்ல முடியாது' என்று சொல்கிறார். எனவே பிரிந்திருந்தாலும், ஐயாவின் மீதான மதிப்பு, ஒரு முறை பார்த்துவிட்டால் கூட, மீண்டும் திரும்பி வர முடியாது எனும் அளவுக்கு அந்த பிணைப்பு இருந்திருக்கிறது என்று புரிகிறது. பிரிந்திருந்த நேரத்திலும்  சேர்ந்திருந்தவர்கள் அவர்கள்.

இப்படிப் பிரிந்திருந்தாலும் மீண்டும் இணைந்தார்கள். இணைந்த அந்த நிகழ்வும் கூட வரலாற்று  சிறப்புடையது. 1967ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அண்ணா காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பல கட்சிகளை சேர்த்துக் கொண்டு, ஒரு பெரும் கூட்டணியை அமைத்தார். அந்தக் கூட்டணியில் வலதுசாரி கருத்துடைய ராஜாஜியும் இருந்தார். இடதுசாரி கருத்துடைய கம்யூனிஸ்ட் கட்சிகளும் இருந்தன. முஸ்லீம் லீக்கும் இருந்தது. சிலம்பு  செல்வர் ம.பொ.சி-யின் கட்சியும் இருந்தது. இப்படி பல்வகையான, கதம்பமான ஒரு கூட்டணியை 1967இல் அறிஞர் அண்ணா உருவாக்கினார். அந்த தேர்தலில் பேசுகிற போதுதான் ராஜாஜி, ‘இனி யாரும் அண்ணா துரையை சந்தேகிக்க வேண்டாம். இடது கையால் பூணூலைப் பிடித்துக் கொண்டு, வலது கையால் உதய சூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள்' என்று கேட்கிறார். அவர் கேட்டதால் தான் வெற்றி வந்தது என இன்றும் சிலர் சொல்கிறார்கள். ஆனால், சுதந்திரா கட்சிக்கு இருந்த செல்வாக்கு மிகவும் குறைவானது. திமுகழகம் பெரும் செல்வாக்கோடு இருந்தது. தேர்தலில் திமு கழக கூட்டணி யாரும் எதிர்பாரத வகையில் வெற்றி பெற்றது. அப்போது பலரும் அண்ணா அவர்களிடம் ஒரு கருத்தினைச் சொன்னார்கள். அப்படி சொல்ல வைக்கப்பட்டது. திமுகவிலிருந்த ராஜாராம் அவர்களிடமே அந்த கருத்து சொல்லிவிடப் பட்டதாக சிலர் கூறுகின்றனர். வேறு ஒன்றுமில்லை, “நாம் ஆட்சிக்கு வந்துவிட்டாலும் நமக்கு அரசியல் அனுபவம் இருக்கிறதே தவிர; ஆட்சி அனுபவம் இல்லை. ஆதலால், கவர்னர் ஜெனரல் பொறுப்பிலிருந்து பல்வேறு பெரும் பதவிகளில் இருந்த ராஜாஜியை முதலமைச்சர் ஆக்கலாம்' என்கிற கருத்து வெளிப்படுத்தப்பட்டது. இது திட்டமிட்ட ஒன்று. இக்கருத்துக்கான விடையை தன் செயல் மூலம் அண்ணா தந்தார். பதவி ஏற்பதற்கு முன்பு, நாவலரையும், கலைஞரையும் அழைத்துக் கொண்டு திருச்சிக்கு சென்றார். திருச்சியில் அன்பில் அவர்களுக்காக காத்திருந்தார். நால்வரும் பெரியாரை பார்த்து, ‘இந்த ஆட்சி உங்களுக்கு காணிக்கை. நாங்கள் எப்போதும் உங்களின் பிள்ளைகள் தான்' என்று சொன்னார்கள். தன் வாழ்நாளிலேயே முதன் முதலாக பெரியார். “என்னை வெட்கப்பட  வைச்சுட்டீங்க' என்று குறிப்பிட்டார். மறுபடியும் அவர்கள் இணைந்தார்கள் என்பது மிக முக்கியமான வரலாற்று செய்தியாக அன்று நிகழ்ந்தது.

1949-க்கும் 1967க்கும் இடைப்பட்ட 18 ஆண்டுகளில் இரு கட்சிகளுக்கும் இடையே பல உரையாடல்கள், விமர்சனங்கள் இருந்திருக்கின்றன. பெரியார் அன்றைக்கு சற்று கடுமையாகவே திமுகழகத்தினரை, அறிஞர் அண்ணாவை விமர்சித்த தருணங்கள் இருக்கின்றன. திமுகவிலிருந்தும் சில எதிர்வினைகள் எழுந்திருக்கின்றன. ஆனால், அறிஞர் அண்ணா எந்த இடத்திலும் தன் நிலை தடுமாறாமலேயே தான் இருந்திருக்கிறார். அண்ணா தேர்தலில் போட்டியிட்ட போது, அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு கேட்க பெரியாரை அழைத்து வந்திருக்கிறார்கள். அந்நேரத்தில், அண்ணா ஆற்றிய உரை வரலாற்று சிறப்பு மிக்கது. “நீங்கள் யாரை வேண்டுமானாலும் அழைத்து வாருங்கள். ஆனால் என்னைத் தோற்கடிக்க, என்னை வளர்த்து, உருவாக்கிய என் ஆசான், ஐயா பெரியாரையா நீங்கள் அழைத்து வர வேண்டும்? நான் உண்ணும் ஒவ்வொரு வேளை சோற்றிலும், ஒழுகாத குடிசையில் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நான் யாரை எண்ணிப் போற்றுகிறேனோ, அந்தக் கிழவனையா என்னை எதிர்த்து பேச நீங்கள் அழைத்து வந்திருக்கிறீர்கள்...' என அண்ணா தன் உரையில் குறிப்பிட்டார்.

அறிஞர் அண்ணா பெரியாரிடம் மாறாத பற்றுடையவராக இருந்திருக்கிறார். பெரியாரும் தான் வளர்த்த பிள்ளைதான் அண்ணா என்றாலும், அவரை உரிய மதிப்போடு மாண்புமிகு முதலமைச்சர் அண்ணாதுரை என்று தான் பிற்காலத்திலும் அழைத்திருக்கிறார். எனவே, அவர்கள் இரண்டு பேரும் மறுபடியும் சேர்ந்தார்கள், 1967 மார்ச் மாதம் நடைபெற்ற பெரும் நிகழ்வில். அவர்களுடைய பிரிவும் சந்திப்பும் இரண்டு தனி மனிதர்களின் பிரிவு சந்திப்பு என்று கருதிவிட முடியாது. கொள்கை அளவில் இருவருக்கும் பெரிய வேறுபாடு இறுதிவரை இல்லை. அதனால் தான் திராவிடர் கழகமும், திமு கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்று கூறிய நேரத்தையும் நாம் பார்க்க வேண்டும். பிரிந்திருந்த போதும் இரட்டை குழல் துப்பாக்கியாகத்தான் இருந்தார்கள். சேர்ந்த பிறகு அந்த இரட்டை குழல் துப்பாக்கி மடமடவென்று வெடிக்க தொடங்கியது.

சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டியவர் அண்ணா என்றாலும், அதனை 1955இறுதியிலேயே வலியுறுத்தியவர் பெரியார். சங்கரலிங்கனாரின் பட்டினிப் போராட்டம் 1956இல் நடைபெற்றது. அதற்கும் முன்பு 1955ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி விடுதலை இதழில் தமிழ்நாடு என பெயர் வைக்க வேண்டும் என்று எழுதியவர் பெரியார். அவருடைய விருப்பத்தை அண்ணா நிறைவேற்றினார் என்று கூற வேண்டும். அதனைக் காட்டிலும் மிகப் பெரிய செய்தி, சுயமரியாதை திருமணத்தை அறிஞர் அண்ணா சட்டப்படி செல்லும் என்று ஆக்கியதுதான். அதுவும் இனிமேல் நடக்கும் திருமணங்கள் என்று இல்லாமல், இதுவரைக்கும் நடந்த, இனி நடக்க இருக்கும் அனைத்து சுயமரியாதை திருமணங்களும் செல்லுபடியாகும் என்று அண்ணா அறிவித்தது, பெரியாருக்கு அவர் கொடுத்த பரிசு. தந்தைக்கு தனயனின் பரிசு என்று தான் அவரே குறிப்பிட்டார். அத்தனை நெருக்கமான கொள்கை ஒற்றுமை இருந்தது. அதைப் போலத்தான் 1968- ஜனவரி 23ஆம் தேதி, சட்டமன்றத்தை மொழிச்சிக்கல் பற்றி ஆய்வதற்காக மட்டுமே கூட்டி, இருமொழி கொள்கைதான் தமிழ்நாட்டின் கொள்கை என அறிஞர் அண்ணா அறிவித்ததும் பெரியாருக்கு மிக இனிப்பான செய்தி என்று சொல்ல வேண்டும். இது ஆங்கிலத்தின் மீது இருக்கின்ற மோகம் காரணமாக இல்லை. தாய் மொழியோடு, மற்ற மொழியினரோடு தொடர்பு கொள்ள இன்னொரு மொழி வேண்டும் என்கிற நிலையில், ஆங்கிலமே உலகம் முழுவதும் பரவியிருப்பதால், அதனை ஏற்றுக் கொள்வதே நடைமுறைக்கு உகந்தது என்பது அவர்களின் கருத்து. எனவே, இரண்டு பேருக்கும் மொழி கொள்கையில் ஒரே கருத்து இருந்தது. இந்தி நம்மீது ஆதிக்கம் செலுத்துகிறது. ஆங்கிலம் நமக்கு பயன்படுகிறது என்பதுதான், இரண்டுக்கும் இடையில் இருக்கிற வேறுபாடு என்பதை அவர்கள் இருவருமே உணர்ந்து இருந்தார்கள். இப்படி என்றைக்கும் அவர்கள் கருத்துகளில் ஒத்திருந்த நிலையைப் பார்க்கிற போது, பிரிந்து இருந்தார்கள் என்பது வெறும் தோற்றம் தானோ! என்று தோன்றுகிறது. இருவரும் சேர்ந்திருந்தார்கள். மீண்டும் சேர்ந்தார்கள். இடையில் பிரிந்தது போன்ற ஒரு தோற்றம் தான் இருக்கிறதே தவிர அது உண்மையான பிரிவு இல்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஏப்ரல், 2023 அந்திமழை இதழ்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com