மருத்துவம் படிப்பவர்கள் தான் உயர்சாதியா?  

மருத்துவம் படிப்பவர்கள் தான் உயர்சாதியா?  

கல்வியில் இந்தப் படிப்புதான் உயர்வானது, இது தாழ்வானது என்பதாகச் சொல்வதையும் அப்படி யோசிப்பதையும் தவறு எனக் கருதுகிறேன்.

அனைத்துப் படிப்புகளையும் அனைத்து மாணவர்களும் கற்க வாய்ப்பு இருக்கிறது என்கிற நிலையில், மாணவருக்கு உரிய துறையைத் தேர்ந்தெடுத்தால் அருமையான கல்வி அடைவைப் பெறமுடியும். அப்படியான கல்விச் சூழல் இங்கு இல்லை. உயர்கல்வி நிறுவனங்கள் புற்றீசல்களைப் போல பெருகிவிட்டன. இதில் (சந்தைக்குத்) தேவையை மீறி பட்டதாரிகளை உருவாக்குவதாக ஒரு கருத்து இருப்பது உண்மைதான்.

போட்டி அதிகமாகத்தான் இருக்கிறது. திறன்மிக்கவர்கள் தேவை என்கிறபோது ஒரு இடத்துக்கு பல மடங்கு பேர் போட்டியிடுகின்றனர். அந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டும்; வெல்லவும் முடியும்.

எப்படியென்றால், இன்ன படிப்புக்கு இங்கு வேலை இல்லை என்றால், வெளிமாநிலங்களில், வெளி நாடுகளிலும் அதற்கு வேலையே இருக்காதா என்ன? உலகம் முழுவதும் பொறியியல் கல்விக்கான தேவை இருக்கிறது. உலக அளவில் பொறியாளர்களை உருவாக்கும் இடமாக நாம் ஏன் மாறமுடியாது?

கல்வியில் சேரும் ஒவ்வொரு மாணவரையும் கடைத்தேற்றுவதுதானே சரியான கல்வியின் இயல்பாக இருக்கும். முறையாகக் கல்வி அளித்தால், சரியாகப் படித்தால் எந்த மாணவரையும் கடைத்தேற்ற முடியும். ஆனால் இங்கு உலகளாவிய வேலைத்திறனை அளிக்கும்படியான கல்வி வழங்கப்படுவதில்லை. மருத்துவம்தான் உசத்தி, கலை- அறிவியல் படிப்பு தாழ்ச்சி என, பிற்போக்கான சிந்தனையும் அதனால் பின்தங்கிய நிலைமையும் காணப்படுகிறது. தரமற்ற கல்விச் சேவையும் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு நிலை. இதனால் பெற்றோர்கள் ஒரு குழப்பத்தில் ஆழ்ந்துபோகிறார்கள். ஜூன் - ஜூலை வந்தாலே இது ஒரு பெரும் இக்கட்டானதாக இங்கு நிலவுகிறது.

உலக அளவில் எந்தப் படிப்பும் உயர்ந்தது, தாழ்ந்தது என இல்லை. எல்லாமே சமம்தான். ஆண்டுதோறும் இந்தக் காலகட்டத்தில் ஆரூடம் சொல்பவர்களைப் போல சிலர், இன்ன படிப்புதான் அடுத்த சில ஆண்டுகளுக்கு, இன்ன படிப்பு கதைக்கே ஆகாது என்பதாகக் கதைசொல்கிறார்கள்.

பெற்றோரும் குழப்பத்தில் 20 - 40 இலட்சம்வரை செலவழித்து பிள்ளைகளை குறிப்பிட்ட படிப்பில் படிக்கவைக்கிறார்கள். படிப்பை முடித்ததும் மாதம் 40- 50 ஆயிரம் ரூபாய்வரை கிடைக்கும் என கணக்குப் போடுகிறார்கள். ஆனால், அதில் பரவலாக தவறு ஏற்படுகிறது.

நினைப்பது நடப்பதில்லை. பெற்றோர் ஏமாற்றம் அடைகிறார்கள்.

இப்படிச் சேர்க்கப்படும் பிள்ளைகளில் கணிசமானவர்கள் படிப்பில் திறனை வெளிப்படுத்துவதில்லை; அவர்களால் முடிவதில்லை. பலர் உளரீதியாக சிக்கலுக்கு உள்ளாகிறார்கள். இன்னும் ஒரு தொகையினர் படிப்பை பாதியில் விட்டுவிடுகிறார்கள்.

இப்படி எப்படியோ படித்து முடித்து வெளியே வரும் கணினிப் பொறியாளர், கணினி இயக்குபவராகத்தான் இருக்கமுடிகிறது. மோசமான யதார்த்தம் இது.

இதைத் தவிர்த்து, ஒவ்வொரு மாணவரின் கல்விக்கும் மொத்த கல்விச் சூழலுக்குமான நல்லது செய்யவேண்டும் என்றால், எந்தப் படிப்பையும் தேர்வுசெய்வது மாணவருடையதாக இருக்கவேண்டும்.

மாணவர் மையப்படுத்திய பாடத் தேர்வே நிரந்தரமானது மட்டுமல்ல, உடனடியாகவும் செயல்படுத்தக்கூடிய தீர்வு ஆகும்.

பள்ளிக்கல்வியை முடித்து பொறியியல் உட்பட உயர்படிப்புக்குச் செல்லும் மாணவருக்கு, அவருக்கு எதில் ஆர்வமும் திறனும் ஈடுபாடும் இருக்கிறதோ அதை அவரே தேர்வுசெய்ய வேண்டும். அப்படி நடக்கிறபோது அவர் படிக்கும் எந்தப் படிப்பிலும் சிறந்தவராக வெளியில் வரமுடியும்.

அறிவியல், தொழில்நுட்பக் கல்வியைப் பொருத்தவரை, அறிவியலிலும் கணிதத்திலும் ஆர்வம் உள்ளவர்களுக்குப் பொருத்தமானது. இல்லையென்றால் பிள்ளைகள் சிரமப்படுவார்கள். படைப்பாற்றலும் தற்சார்பும் தானே முடிவு எடுக்கக்கூடிய தன்மையும் கொண்டவர்களுக்கு இது பொருத்தமான தெரிவாக இருக்கமுடியும். தான் சிந்தித்ததைச் செயல்படுத்திக் காட்டக்கூடிய மனப்பாங்கு உடையவர்கள், அதற்குரிய பக்குவம் கொண்டவர்களுக்கு பொறியியல், தொழில்நுட்பக் கல்வி தோதானதாக இருக்கும்.

இதை எப்படி பெற்றோர்கள் கண்டறிவது; அதுவும் கடைசிக் கட்டத்தில் எப்படி முடிவெடுப்பது எனக் கேள்வி வரலாம். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வயதுவந்த பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர் முடிவெடுப்பது என்பதே இல்லை. தொடக்கப்பள்ளியிலிருந்து மாணவரின் படிநிலை வளர்ச்சியில் அவருடைய ஆர்வமும் திறனும் ஈடுபாடும் பள்ளிக் கட்டத்திலேயே தெரிந்துவிடும். மேல்நிலைப் பள்ளிப் பருவத்தில் கிட்டத்தட்ட குறிப்பிட்ட மாணவரே தன்னுடைய திறன், ஆர்வம், ஈடுபாட்டுக்கு ஏற்ற படிப்பையும், அந்தப் படிப்பு வழங்கப்படக்கூடிய கல்லூரியையும் அவராகவே தேர்வுசெய்துகொள்வது சர்வசாதாரணம். குறிப்பிட்ட கல்லூரிக்கு போட்டி ஏற்பட்டால் அதில் வென்றுகாட்ட வேண்டும் என்பது வேறு. அதில் மேல்தட்டு, கீழ்தட்டு என எந்தப் பாகுபாடும் பெரும் தடையாக இருப்பதில்லை.

இங்கு இப்போதைய கல்வி நடைமுறையில், நகரத்தில் உள்ளவர்கள், கொஞ்சம் படித்தவர்கள் எப்படியாவது பிள்ளைகளைப் பற்றி தோராயமான மதிப்பீட்டுக்கு வரமுடிகிறது. ஊரகப் பகுதிகளில், நகர்ப்புறத்திலும் குறைந்த கல்வி அறிவு உள்ளவர்களுக்கு அது சாத்தியமில்லாமல் இருக்கிறது.

நம் நாட்டில் சமூகத்தில் சாதி எப்படியோ, அந்த அளவுக்கு மருத்துவம் படிப்பவர்கள் உயர்சாதியைப் போலவும் அவருக்குதான் திருமணம் போன்றவற்றில் முன்னிலை தரப்படுவதும் மற்ற படிப்புகளைப் படித்தவர்கள் கீழ்சாதியைப் போலவும் கருதப்படும் பிற்போக்கான சிந்தனை இருக்கிறது என்று சமூகமே பின்தங்கியதாக இருக்கிறது. அதற்காக பணத்தைக் கொட்டி இறைக்கிறார்கள். அப்படித் தரப்படும் கல்வியின் தரமும் சரியானதாகவும் இருப்பதில்லை.

இதில் அரசாங்கமும் பெற்றோரும் மாணவர்களும் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் தங்களின் சிந்தனையை மாற்றியாக வேண்டும்.

அரசாங்கம் கொள்கைரீதியாக சரியாக முடிவெடுத்து, அதைப் பரந்துபட்ட மக்களிடம் எடுத்துச்சென்று உணர்த்தவேண்டும். அமைப்புரீதியாக இதற்கான வேலைத்திட்டங்களில் இறங்க வேண்டும். தனிநபர்கள் தங்களின் சிந்தனைப் போக்கை அலசிப்பார்த்து மாற்றிக்கொள்வதும், சரியான கல்வியைப் பெறுவதற்கு அவசியமானதாகும்.

(தொகுப்பு. இரா.தமிழ்க்கனல்)

ஜுன், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com