“இந்தியில் கலை இல்லை; காவியம் இல்லை; நீதி நூல் இல்லை.
அம்மொழி மூலம் அறியக் கிடக்கும் விஞ்ஞானத் தத்துவங்களும் இல்லை. ஆகவே, 100க்கு 97 பேர் விரும்பாத அம்மொழி ஏன் இங்கு புகுத்தப்பட வேண்டும்?”
(சென்னை செயின்ட் மேரீஸ் அரங்கில், 17.7.1948 அன்று பெரியார் ஆற்றிய சொற்பொழிவில்)…
இந்திய வரலாற்றில் ஆட்சி மாற்றத்துக்கு மாணவர்கள் போராட்டம் இட்டுச்சென்ற குறிப்பிடத்தக்க இரண்டு நிகழ்வுகள் உண்டு. ஒன்று 1965-ல் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம். இரண்டாவது அசாமில் நடந்த மாணவர் போராட்டம். (1979-1985). தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புபோரில் கலந்துகொண்ட இரண்டு முக்கியமான இப்போது வெவ்வேறு துருவங்களில் இயங்குகின்ற முன்னாள் மாணவர் தலைவர்களின் அனுபவங்கள் இந்த இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
1965-ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப்போராட்டம் திடீரென்று வெடித்த போராட்டம் அல்ல. 1937-ல் ராஜாஜி இந்தி பள்ளிகளில் கட்டாயப்பாடமாக்கப்படும் என்று அறிவித்தபோது முதல் கண்டனக்குரல் துறையூரில் நடந்த சுயமரியாதை இயக்க மாநாட்டில் (27, ஆகஸ்ட் 1937) எழுந்தது. எழுப்பியவர் அண்ணா. அதே நாளில் தஞ்சையில் இந்தித் திணிப்பை எதிர்த்து கரந்தை தமிழ்ச்சங்கத்தில் தமிழறிஞர்கள் உரையாற்றிய கூட்டம் நடைபெற்றது. ஆகஸ்ட் 29-ஆம் தேதி திருவையாறில் இந்தியை எதிர்த்து பேராசிரியர் கோவிந்தசாமிப்பிள்ளை, சோமசுந்தர தேசிகர் தலைமையில் திருவையாறு தமிழ்ச்சங்கம் சார்பில் ஊர்வலம் சென்றார்கள். ஆக கணக்கிட்டுப்பார்த்தால் தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப்போராட்டத்துக்கு இந்த 2012 ஆகஸ்டில் 75 வயது நிரம்பியிருக்கிறது.
அதிக பட்சம் பார்த்தால் சுமார் 500 வயதிருக்கலாம் இந்தி என்ற மொழி உருவாகி. சுமார் 2300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட ஒரு மொழியைப் பேசுபவர்களுக்கு இயல்பாகவே இந்தி திணிக்கப்படுகையில் கசப்பு ஏற்படும். அத்துடன் விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழகத்தில் பிரிவினைக்குரல் சுயமரியாதை இயக்கத்தினரால், தமிழ் அறிஞர்களால் எழுப்பப்பட்டு வந்தது. இதுவும் இந்தி எதிர்ப்புப் போராட்டம், வடவர் ஆதிக்கத்துக்கு எதிராக பெரும் மக்கள் போராட்டமாக வடிவெடுக்க உதவி செய்தது எனலாம்.
1937-- -ல் தொடங்கி பெரியார், அண்ணா, போன்ற அரசியல் தலைவர்களாலும் மறைமலை அடிகள், பாரதிதாசன் உள்ளிட்ட எண்ணற்ற தமிழறிஞர்களாலும் அடுத்த பத்தாண்டுகளில் முன்னெடுத்து செல்லப்பட்ட இந்தித் திணிப்புக்கு எதிர்ப்புப் போராட்டம் ஒருவிதத்தில் தமிழர்களை சாதிய பிளவுகளைதாண்டி ஒன்றிணைய உதவியது. இதற்காக ராஜாஜிக்கு நன்றி சொல்லலாம். ஆனால் அதே ராஜாஜி 1965-ல் வந்த இந்தி அரசு அலுவல்மொழி ஆகும் பிரச்னையின் போது தன் நிலைப்பாட்டை மாற்றியிருந்தார். 1957-ல் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில் பெரியாருடன் அவர் கலந்துகொண்டிருந்தார்.
1937-ல் இந்தியை கட்டாயப் பாடமாக்கும்போது “இந்தி என்பது இலையில் வைக்கப்பட்டிருக்கும் சட்னி. வேண்டுமென்றால் தொட்டுக்கொள்ளுங்கள்” என்றவர் ராஜாஜி. ஆனால் அது சட்னி அல்ல. விஷம் என்று தமிழறிஞர்கள் சொன்னதை ஞாபகம் கொள்கையில் ராஜாஜி தன் நிலைப்பாட்டை மாற்றியது பற்றிய கேள்வி வரும்.
1963-ல் சுயராஜ்யம் பத்திரிகையில் இந்தி பற்றிய தன் நிலைப்பாட்டைச் சொல்கையில் ராஜாஜி, “ தென்னிந்தியாவில் இந்தியைப் பிரபலப்படுத்த நான் முயற்சி செய்தேன். ஆனால் இங்கே இந்தியைத் திணிப்பது நியாயமானதாகவும் சாத்தியமானதாகவும் தோன்றவில்லை. எனவே என் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டேன்”என்று விளக்குகிறார்.
1965-ல் இந்தி எதிர்ப்பலை தமிழகம் முழுவது கொழுந்து விட்டு எரிந்தது. மாணவர் தலைவர்களும் கைதானார்கள். இதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே ஆண்டுமுழுவதும் திமுக எதிர்ப்புப் போராட்டம் நடத்தியிருந்தது. மாணவர்களிடம் எழுந்த இந்த மொழி உணர்ச்சி, காங்கிரசை 1967 தேர்தலில் வீழ்த்த திமுகவுக்கு பெரிதும் கை கொடுத்தது. காமராசரை விருதுநகரில் வீழ்த்திய சீனிவாசன் பிரபலமான இந்தி எதிர்ப்பு மாணவர் இயக்கத் தலைவர் அல்லவா?
தேர்தலில் வென்று ஆட்சிக்கு திமுக வந்த பின்னர் மத்தியில் ஆங்கிலமும் இந்தியும் காலவரையின்றி அலுவலகப் பயன்பாட்டு மொழியாக நீடிக்க வழிசெய்யும் சட்டத்திருத்தம் 1963-ஆம் ஆண்டு அலுவல் மொழிச்சட்டத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால் இது போதாது என்று 1967-ல் மீண்டும் மாணவர் போராட்டம் வெடித்தது. வன்முறையும் நடந்தது. இதை அடுத்து அண்ணா மாணவர்களுடன் பேசினார். சட்டமன்றத்தில் சில தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு மாணவர் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இதற்கு அடுத்ததாக இதன் எதிரொலிகள் தொண்ணூறுகளின் ஆரம்பம் வரைக் கேட்டுக்கொண்டிருந்தன. ராஜிவ் காந்தி 1986-ல் தேசியக்கல்விக் கொள்கையை அறிமுகப்-படுத்தி நவோதயா பள்ளிகளை நிறுவி அதில் இந்தி கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்த போது தமிழத்தில் திமுக அதை எதிர்த்தது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 17-வது பிரிவை எரித்துப் போராட்டம் நடத்தியது. விளைவாக தமிழ்நாட்டில் இன்றுவரை நவோதயா பள்ளிகள் திறக்கப்படவில்லை. அவ்வப்போது ரயில்வேயில் இந்தி, நெடுஞ்சாலைகளில் இந்தி என்று சின்ன சின்னதாய் அதிர்வுகளை இன்றும் எழுப்பும் அளவுக்கு இந்தி எதிர்ப்பு உணர்வு தன்னை மெலிதான உயிரோட்டத்துடன் வைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் தலைமுறைகள் மாறிவிட்டன. 1965-ல் இந்தி எதிர்ப்பில் ஈடுபட்ட மாணவர்கள் ஆசிரியர்களாகி, அரசு அதிகாரிகளாகி, சிலர் அரசியல்வாதிகளாகி இன்று பெரும்பாலும் பொதுவாழ்வின் விளிம்பில் உள்ளனர். அவர்களில் பலர் தங்கள் பேரப்பிள்ளைகள் சிபிஎஸ்சி பள்ளிகளில் இந்தி படிப்பதை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருக்கலாம். தங்கள் பேரன் 12ஆம் வகுப்பு வரை தமிழே தெரியாமல் படித்து கல்லூரிக்குச் சென்றிருப்பதை ‘பெருமை’யோடு ரசித்துக் கொண்டிருக்கலாம்!
இப்போது சென்னையில் ஹோட்டல்களுக்குச் சென்றால் சாப்பாடு ஆர்டர் செய்ய பல இடங்களில் இந்தி தெரிந்திருக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் வடநாட்டுத் தொழிலாளர்கள்! கட்டட கட்டுமானப்பணியில் இருந்து செக்யூரிட்டி ஆட்கள் வரை வடநாட்டு ஏழைத்தொழிலாளிகள் குவிந்துள்ளனர். ஒருவேளை அரசால் திணிக்க-முடியாத இந்தியை தமிழகத்தில் படையெடுக்கும் ஏழைத் தொழிலாளிகள் சாதித்துவிடக்கூடுமோ? இருக்கலாம். நாம் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தித் திணிப்பை அல்லவா எதிர்த்தோம்?
அக்டோபர், 2012.