மாவட்ட கழக குடும்பங்கள்!

மாவட்ட கழக குடும்பங்கள்!

தி முகவில் மாவட்ட அளவில் முக்கிய புள்ளிகளாக உலாவரும் குடும்பங்களைப் பட்டியலிட்டால் அது நீளமாகவே உள்ளது.

1)ஐ.பெரியசாமி

கடந்த தி.மு.க ஆட்சியின்போது கருணாநிதிக்கு மிக அணுக்கமாக விளங்கியவர்களில் திண்டுக்கல் ஐ.பெரியசாமியும் ஒருவர். அப்போது வருவாய் மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர். 2011 சட்டமன்றத் தேர்தலில் ஐ.பெரியசாமி ஆத்தூர் தொகுதியில் நின்று வென்றார். அவரது மகன் ஐ.பி.செந்தில்குமாருக்கு பழனி தொகுதியை வாங்கித்தந்தார். ஆனால் அவரால் வெல்ல முடியவில்லை. இருப்பினும் 2016 தேர்தலில் மகன் பழனியையும் தந்தையை ஆத்தூரையும் வென்றார்கள். இருப்பினும் ஆட்சிக்கு தி.மு.க வரமுடியவில்லை!

2)டி.ஆர். பாலு

தலைமைக்கு நெருக்கமான மூத்த தலைகளில் ஒருவரான டி.ஆர்.பாலு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தன் வழக்கமான சென்னையை விட்டு தஞ்சாவூருக்கு வந்து போட்டியிட்டுத் தோற்றுப்போனார். ஆனாலும் கடந்த இரு சட்டமன்றத் தேர்தல்களிலும் மன்னார்குடி தொகுதியில் மகன் டி.ஆர்.பி.ராஜாவை களமிறக்கி வெற்றி பெற வைத்திருக்கிறார்.

3)அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திருச்சி அருகே உள்ள கிராமத்தைப் பெயரில் தாங்கிய அன்பில் தருமலிங்கம், திமுகவின் ஆரம்பகட்ட தளகர்த்தர். கருணாநிதியின் நம்பிக்கைக்கு முழுவதும் உரியவர். அவரது மகன் அன்பில் பொய்யாமொழி அதேபோல் மு.க. ஸ்டாலினுக்கு அணுக்கமானவர். இருமுறை திருச்சி&2 தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தவர். 1999&ல் இவரது திடீர் மரணத்தை Akzx இவரது சகோதரர் அன்பில் பெரியசாமி, அத்தொகுதி இடைத்தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட்டார். பின்னர் பொய்யாமொழியின் மகன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 2016 தேர்தலில் களமிறக்கப்பட்டார். திருவெறும்பூர் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருக்கும் மகேஷ் இப்போது ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கு மிகுந்த அணுக்கமாகவும் அவரது ரசிகர் மன்றப் பொறுப்பாளராகவும் இருக்கிறார். மூன்று தலைமுறைகளாக இரு குடும்பங்களும் இணக்கமாக இருப்பது அரிதான ஒன்று.

4)தங்கம் தென்னரசு

திமுகவின் தென் மாவட்ட தளகர்த்தர்களில் ஒருவரான தங்கபாண்டியன் அருப்புக்கோட்டை தொகுதியிலிருந்து வென்று அமைச்சராகப் பணியாற்றியவர். அவரது மரணத்தையொட்டி, அமெரிக்கா செல்ல இருந்த மகன் தங்கம் தென்னரசுவை கட்சித் தலைமை அரசியலில் களமிறக்கியது.  இடைத்தேர்தலில் அவரது மகன் தங்கம் தென்னரசு போட்டியிட்டு வென்றார். 2011, 2016 தேர்தல்களில் திருச்சுழியில் போட்டியிட்டு தொடர்ச்சியாக வென்ற இவர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராகப் பணி புரிந்திருக்கிறார்.  இவரது சகோதரி தமிழச்சி தங்கபாண்டியனும் அரசியலில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறவரே.

5)சுப. தங்கவேலன்

ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக நீண்டகாலம் பணியாற்றிய திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சுப. தங்கவேலன் திமுகவில் அமைச்சராகவும் இருந்தார். இவரது இரு மகன்களுமே கட்சியில் செயல்படுகின்றனர். 2011 தேர்தலுக்குப் பின்னர் இவரது மகன் சுப.த. சம்பத் மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். பிறகு தங்கவேலனே மீண்டும் செயலாளர் ஆகி, பிறகு அவரது இன்னொரு மகன் சுப.த. திவாகரனுக்கு அந்தப் பதவி வந்தது. 2016 தேர்தலில் சுப.த. திவாகரன் திருவாடானை தொகுதி வேட்பாளாராகப் போட்டியிட்டு தோற்றார். இப்போது மா.செ. பதவி தங்கவேலன் குடும்பத்தைச் சாராத ஒருவருக்குச்சென்றுள்ளது.

6) சேடப்பட்டி முத்தையா

சட்டப்பேரவைத் தலைவராக இருந்தவர். அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு நம்பிக்கையானவராக இருந்த இவர் ஒரு கட்டத்தில் அங்கே ஒதுக்கப்பட்டு திமுகவில் சேர்ந்தார். அவரது மகன் மணிமாறன் 2011 - ல் திருமங்கலம் தொகுதியிலும் 2016 - ல் திருப்பரங்குன்றம் தொகுதியிலும் திமுக சார்பாகப் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றார். இரு தேர்தல்களிலும் அவருக்குத் தோல்வியே கிட்டியது.

7) என்.பெரியசாமி

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக என்றால் பெரியசாமிதான். பல ஆண்டுகளாக மாவட்டச்செயலாளராக இருந்த பெரியசாமி தன் மகன் ஜெகன், மகள் கீதா ஜீவன் இருவரையுமே அரசியலுக்குக் கொண்டுவந்தார். கீதா ஜீவன் சமூக நலத்துறை அமைச்சராகவும் இருந்தார். 2014&ல் ஜெகன் திமுக சார்பில் நாடாளுமன்ற வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

8) பூங்கோதை ஆலடி அருணா

 வழக்கறிஞரும் திராவிட இயக்கச் சிந்தனையாளருமான ஆலடிஅருணா 1962&ல் இருந்து தேர்தல் அரசியலில் ஈடுபட்டவர். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்தவர். திமுகவில் 1996 ஆட்சியின்போது சட்ட அமைச்சராகவும் இருந்தார். இவர் 2004 -ல் படுகொலை செய்யப்பட்டபின்னர் அவரது மகள் மருத்துவர் பூங்கோதை ஆலடி அருணா 2006 -ல் சட்டமன்றத்துக்குப் போட்டியிட்டு வென்றதுடன் அமைச்சராகவும் பதவி வகித்தார். 2011 -ல் அதே தொகுதியில் தோற்ற இவர் 2016 - ல் வெற்றிபெற்றுள்ளார்.

9) பொங்கலூர் பழனிச்சாமி,

கொங்குமண்டலத்தில் திமுகவின் முகம். இரண்டுமுறை அமைச்சராக இருந்திருக்கும் இவரது மகன் பைந்தமிழ்ப் பாரியும் அரசியலில் தீவிரமாக இயங்குகிறார். இப்போது இளைஞரணிப் பதவியில் இருக்கும் இவர் திமுகவில் வேட்பாளராகக் களமிறங்க முயன்று வருபவர்.

10) என்.கே.கே.பி. ராஜா

2006 - ல் எம்.எல்.ஏ ஆகி கைத்தறித்துறைஅமைச்சராகவும் ஆனவர். இவரது தந்தை என்.கே.கே பெரியசாமி, 1996 - ல் தி.மு.க ஆட்சியில் அமைச்சராகப் பதவி வகித்ததுடன் நீண்டகாலமாக ஈரோடு மாவட்டச் செயலாளர் பதவியிலும் இருந்தார். ராஜா ஒரு சில சர்ச்சைகளில் சிக்கி பதவி பறிக்கப்பட்டாலும் கட்சியில் தொடர்ந்து இயங்கிவருகிறார்.

11) பெரியண்ணன் அரசு

இரண்டுமுறை புதுக்கோட்டையில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும் 2016 தேர்தலில் வென்றுள்ளார். திமுகவின் மாவட்டச் செயலாளரும் கூட. இவரது தந்தை பெரியண்ணன் புதுக்கோட்டையிலிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்வானவர். மாவட்டச் செயலாளரும்கூட. அவரது மறைவுக்குப் பின் அரசுவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்திய விடுதலைப்போரில் குடும்பத்துடன் கலந்துகொண்ட போது மக்களால் பெருமையுடன் பார்க்கப்பட்ட நிலை, இன்று குடும்பத்துடன் அரசியலில் இறங்கும்போது இல்லை. அரசியல் லாபகரமான தொழிலாகப் பார்க்கப்படுவது இதற்கு ஒரு காரணமாக இருக்குமோ?

செப்டெம்பர், 2018.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com