ஒ ருவர் மனதில் இடம் பிடிக்க முதலில் அவர் வயிற்றில் இடம் பிடிக்க வேண்டும் என எங்கள் கிராமத்தில் சொல்வார்கள்! இந்த வார்த்தைகளில் மிகவும் ஈர்க்கப்பட்டவன் நான். அது மட்டுமல்லாது நான் ஒரு பயணி. பயணங்களால் ஆனது எனது வாழ்க்கை. பயணம் என்றாலே சோறு அதன் இரட்டைப் பிறவி தானே! நாம் எடுக்கும் உணவு தானே நம்மை அடுத்த நாள் ஊர் சுற்ற ஊக்கப்படுத்தும். முதல் நாள் எடுத்த உணவு ஒவ்வாமை தந்தாலோ, புட் பாய்சனாகவோ இருந்தால் அடுத்த நாள் பயணத்தை எப்படி தொடர முடியும்?
நான் உணவகம் தொடங்கிய என் கிராமம் ஒரு சுற்றுலாத் தலத்தில் இருந்தது எதேச்சையானது. சுற்றுலா வரும் பயணிகளுக்கு நமக்குக் கிடைத்த கசப்பான உணவு அனுபவங்கள் கிடைக்கக் கூடாது என்று முதல் கட்டமாக தோன்றியது. உணவு சுவையாக இருந்தால் மட்டும் போதாது. அது ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும் என்பது அடுத்த படி. ஆரோக்கியம் என்றதும் ஒரு பத்திரிகை கட்டுரையில் ஜப்பானில் மீன் உணவு எடுப்பதாலேயே வயதானாலும் திடமானவர்களாக இருக்கிறார்கள் என படித்தது நினைவுக்கு வந்தது. எனவே ஒமேகா 3 , கால்சியம், புரதம், மெக்னீசியம் மற்றும் விட்டமின் சத்துகள் அடங்கிய கடல் மீன் உணவகத்தை துவங்கலாம் என்று ஆரம்பித்ததுதான் எங்களது நெய்தல் கடல் உணவகம்.
கடற்கரையை ஒட்டிய சுற்றுலாத் தலம் என்பதால் கடலும் கடலை சார்ந்த திணை நிலத்தின் பெயரான நெய்தல் பெயரும் உணவகத்திற்கு சூட்டப்பட்டது. உணவகத்தை துவங்க எவ்வித கூடுதல் பிரயத்தனத்தையும் நாங்கள் செய்யவில்லை. நாங்கள் எப்போதும் சமைக்கின்ற மண் பாத்திரங்கள் தான். வீட்டிலுள்ள விறகடுப்பு. இவை இரண்டும் போதாதா உணவின் சுவைக்கு! . கடற்கரையை ஒட்டிய பகுதி என்பதால் தண்ணீரிலிருந்து நேரடியாக அடுப்பங்கரைக்கு மீன் உணவுகள் வர வைக்கப்பட்டு சமைப்பதால் அந்த மீன்கள் இன்னும் அதிக ருசியை தருகின்றன. இதில் அதிகப்படியாக எங்களுடைய பங்கு என்றால் நாங்கள் அரைக்கும் மசாலாவும் கொஞ்சம் கை பக்குவமும் தான்.
எமது கடலுணவகத்திற்கு நெய்தல் என பெயர் சூட்டியதற்கு மகிழ்ந்த தருணமும் ஒன்று வந்தது. மதிய உணவு வேளையில் ஒருநாள், பிஎம்டபிள்யூ கார் ஒன்று வழுக்கி வந்து நின்றது. அதிலிருந்து மீசை மழித்த முகம், கருப்பு கண்ணாடியோடு பெர்முடாஸ் அணிந்த ஒருவரும் அவரோடு நால்வரும் வந்தனர். எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்ற எண்ணம் மட்டும் எட்டிப் பார்த்தது. எளிதாக அடையாளம் காண முடியவில்லை. கை கழுவிக் கொண்டிருந்த ஒருவரிடம் கேட்ட போதுதான், அவர் இயக்குநர் மிஷ்கின் என உறுதியானது. மேலும் அவர்கள் ஷூட்டிங் ஸ்பாட் பார்க்க வந்திருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்தது. உணவருந்துகையில், ''என்னங்க இந்த சின்ன உணவகத்துக்கு வந்துருக்கீங்களே,'' என துவங்குவதற்கு முன் அவரே ''உங்க உணவகத்தின் பெயர் தான் என்னை இங்கே சாப்பிட அழைத்து வந்தது. கடலும் கடலைச் சார்ந்த இடத்தின் பெயரான நெய்தல் என்ற பெயர் தான், என்னை உள்ளே வர வைத்தது. அதைவிட மண்சட்டியில் சமைத்து அதையே சிறிய மண்
சட்டியில் பரிமாறுவது ஆஸம்ங்க' என்றவர். மசாலாலாம் செம. இது நீங்களே அரைச்சது தானே?''என்றும் கேட்டார்.
''ஆமாங்க கால் கிலோ மிளகாய்க்கு முக்கால் கிலோ மல்லியோடு, கட்டி மஞ்சள், மிளகு, எளிதில் செரிப்பதற்கு சோம்பு, சீரகம், வெந்தயம் போன்றவை, வறுவல் மீன் க்ரிஸ்ப்பியாக இருக்கணும் என்பதற்காக கடலைப்பயிறு, துவரம் பயிறு சேர்த்து அரைத்த மசாலாங்க. கோவாவில்
சமைக்கும் கொங்கனி உணவில் மொறுமொறுப்புக் காக ரவா மாவை சேர்ப்பார்கள். நாங்க கடலை மாவையும் துவரையையும் லைட்டா மீன் வறுவல் இறால் வறுவலுக்கு சேர்ப்போம்,'' என்றேன்.
''சில கடல் உணவங்களில் உள்ளே நுழைந்ததுமே ஒரு கவுச்சி அடிக்குமே அதை காணோமே நீதி?'' என எனது பெயரைக் கேட்டு உரிமையோடு அதை சேர்த்து வினவினார்.
''உண்மையில் இவர் உணவுப் பிரியர்தான்.., அதுதான் வயிற்றைப் பார்த்தாலே தெரியுதே.. நம்மளோட ஸ்பெசல் அனைத்தையும் கேள்விகளாலேயே கேட்டுப் பெறுகிறாரே,'' என்று எனக்குள் மைண்ட் வாய்ஸ் ஓடியது.
''மீனை சுத்தமாக க்ளீன் செய்வதில் தாங்க அந்த ஸ்மெல்லை குறைக்க முடியும். இங்கே ஐந்து பேர் அதுக்காகவே இருக்காங்க.. அதனால் இங்கே அந்த கவுச்சி வாடையே இருக்காது,'' என்றேன். அத்துடன் மீன் குழம்பில் மாங்காய்
சேர்த்தால் குழம்பில் இன்னும் சற்று கவுச்சி குறையும் என்பதையும் குறிப்பிட்டு சொன்னேன்.
ஒரு வாரம் கழித்து மீண்டும் வந்தார். பிச்சாவரம் வனப்பகுதியில் நடைபெற்ற துப்பறிவாளன் படத்தின் இரண்டு செட்யூலாக நடந்த 54 நாட்களும் எங்களது கடலுணவுதான் அவருக்கும் அவரது சகாக்களுக்கும் விருந்தாக படைக்கப்பட்டது.
அவரைப் பற்றி இங்கே குறிப்பிடுவதற்கு காரணம், அவருக்கும் அவரது படத்தில் நடித்த ஷாஜிக்கும் கடலுணவு பற்றிய பெரும் அனுபவம் இருந்தது தான். நான் பால் சுறாவை புட்டு செய்து கொண்டு வருகிறேன் என்று சொன்னால் வேண்டாம் பூண்டு மிளகு அரைத்து போட்டு மீன் குழம்பு செய்து கொண்டு வாங்க என்பார்கள். அதுதான் மருந்து குழம்பு என்பார். அப்புறம் எங்கள் வட்டார உணவுகளான பழைய கஞ்சி மீன் சினை புரட்டல் போன்றவற்றை விரும்பி கேட்பார் மிஷ்கின். இறுதி நாள் சூட்டிங் முடிந்ததும் என் பைக்கில் உணவகம் வந்து பழைய கஞ்சி, சினை சாப்பிட்டுவிட்டே விடை பெற்றார்.
இணைய காலத்தில் நாம் எந்த விளம்பரமும் உணவு வியாபாரத்திற்கு செய்யத் தேவையில்லை. விளம்பரத்திற்கு ஒதுக்கும் சிரத்தையை, சுவையை பாதுகாக்க ஒதுக்கினால் போதும். விருந்தினர்கள் நம்மீது அன்பை பொழிவார்கள். அன்பின் வெளிப்பாடாய் நம்மோடு செல்பி எடுப்பார்கள். அதை இணையத்தில் பதிவார்கள். இந்த பாராட்டுகள் தான் நம் உணவகத்தை தேடி ஆயிரக்கணக்கானோரை வரச் செய்யும்.
எல்லாவற்றையும் வணிக ரீதியாக அணுக முடியாது. அதில் மிக முக்கியமானது உணவகங்கள். நம் உணவகத்தை பொருத்த வரையில் பெரு உணவங்களைப் போல அதிக அளவில் உணவுகளை செய்வதில்லை. வீட்டில் வைக்கும் குழம்பிற்கும் உணவகங்களில் வைக்கும் குழம்பு மற்றும் பதார்த்தங்களின் சுவை மாறுபாட்டுக்கு காரணம் அளவுக்கு அதிகப்படியாக செய்வது தான். ஐந்து பேருக்கு செய்யும் குழம்பின் சுவை ஐம்பது பேருக்கு செய்யும் போது மாறுபடும். அதனாலேயே நெய்தல் உணவகத்தில் வருகைக்கு ஏற்றார் போல் குறைவான அளவில் சமைக்கப்படுகிறது. எனக்கு சோறு போடும் இத்தொழிலில் வணிகத்தை விட மனிதத்தை போற்றுவேன் என்ற நம்பிக்கையோடு இப் பயணத்தை தொடர்கிறேன்.
அக்டோபர், 2019.