மேடை இலக்கியம் : அன்று தெருவெல்லாம் தமிழ் முழக்கம்

மேடை இலக்கியம் : அன்று தெருவெல்லாம் தமிழ் முழக்கம்
Published on

என்னுடைய டீன் ஏஜும் இளமைக் காலமும் கலந்த ஆண்டுகள் (1957 - 62) அவை. தெருவெல்லாம் தமிழ் முழக்கம் கேட்ட நாட்கள். நாடு விடுதலை ஆனதால் சுதந்திரக் காற்று வீசி, தாய்மொழிகளை செழிக்கச் செய்திருந்தது என்று நினைக்கிறேன்.

சென்னையின் பல இடங்களில் கம்பன் விழா, பாரதியார் விழா, சிலம்பொலித் திருநாள், வள்ளுவருக்கு விழா என்று - அடிக்கடி தமிழோசை கேட்கும். அங்கெல்லாம் வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! தமிழ் வெறி மிகுந்து கபிலன், ஆண்டாள் அடிப்பொடி அப்பர் தொண்டன், தமிழ்வேந்தன் என்றெல்லாம் இளைஞர்கள் தமிழ்ப் பெயர்களைச் சூட்டிக் கொண்டனர்!

இருபது இளைஞர்கள் சேர்ந்து தமிழ்மன்றம் நடத்தினோம். வித்வான் மே.வீ.வேணுகோபால பிள்ளை தலைவர். பல தமிழ் அறிஞர்களை பேச அழைத்து, அவர்களது இலக்கியப் பேச்சில் சொக்கினோம்.

பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளையை அழைக்கச் சென்றோம். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர். எம்.ஏ.பி.எல். படித்து, தமிழ் அறிஞராக சுடர் விட்டவர்.

அன்போடு வரவேற்றார். எங்கள் அழைப்பைக் கேட்டு மெல்ல சிரித்தார். “தம்பிகளா! என்னைக் கூப்பிடுகிறீர்களே...! நான் பேசினால் எல்லோரும் எழுந்து போய்விடுவார்களே!” என்றார். திகைத்து விழித்தோம். “நான் சொல்லின் செல்வர் இல்லையா!” என்றார்!

சைவ நெறி பற்றியும், தூக்கிய திருவடி பற்றியும் அவர் நிகழ்த்திய சொற்பொழிவைக் கேட்டவாறு, பெரும் கூட்டம் காதில் தேன்வந்து பாய்ந்த கிறக்கத்தோடு அசையாமல் அமர்ந்திருந்தது. இன்றும் தில்லையம்பதி சென்று நடராசரை தரிசனம் செய்யும்போது, சொல்லின் செல்வரின் ‘தூக்கிய திருவடி’யே தரிசனம் ஆகும்! சேதுப்பிள்ளை அவர்களின் பேச்சிலும், எழுத்திலும் நகைச்சுவை நிறைய இருக்கும்! “கெட்டும் பட்டணம் சேர் என்பார்கள்! ஆனால் பட்டணத்துக்கு வந்து கெட்டுப்போனது கூவம்” என்று கூறினார் அவர்!

ராஜாஜி மண்டபத்தில் கம்பன் விழா நடக்கும். ஜஸ்டிஸ் மகராஜன், தெ.பொ.மீனாட்சி சுந்தரம் போன்றோரின் பேச்சை, மணிக்கணக்கில் நின்றவாறு பெரும் கூட்டம் கேட்கும்! உட்கார இடம் இருக்காது.

அந்த விழாவில் கி.ஆ.பெ.விசுவ-நாதம் பேச்சைக் கேட்டு மெய் மறந்தேன். அவருடைய சொல்லாட்சி, அழகு தமிழ் - தமிழ் மீது என் காதலை மிகைப்படுத்தியது. அப்போது எல்லார் சொற்பொழிவையும் அகில இந்திய வானொலி ஒலிபரப்பிக் கொண்டிருந்தது. கி.ஆ.பெ. தன் பேச்சை ஒலிபரப்ப தடை விதித்திருக்கும் தகவலைக் கூறினார்! வானொலியின் தமிழ் விரோதப் போக்கே காரணம் என்றார்! கூட்டம் கொதித்தது! நான் கி.ஆ.பெ. அவர்களின் தாசன் ஆகிவிட்டேன். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களை மன்றத்தில் பேச வைத்தோம். அவர் கண்களில் ஒளி இருக்கும். கம்பீரத் தோற்றம். நிமிர்ந்த நடை. இளைஞர்கள் சுயமரியாதை உணர்வு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும், தமிழ் மொழி சுயமரியாதையை கற்றுத்தரும் உயர் மொழி என்றும் பேசினார்.

‘ஸ்ரீரங்கநாதனையும் தில்லை நடராசரையும் பீரங்கிக் கொண்டு பிளக்கும் நாள் எந்நாளோ!’- என்று ஒரு கவிதை அன்று அடிக்கடி மேடைகளில் சொல்லப்படும். அது பாரதிதாசன் எழுதியது என்று கூறிவந்தார்கள். “சே! இது நான் எழுதியது அல்ல. நான் இப்படி  சொல்ல சிந்தனை அற்றவனா?

சிற்பிகளின் சிறந்த கலை நுட்பத்தை ரசிக்கும் மனப்பக்குவம் எனக்கு உண்டு” என்றார் பாரதிதாசன். அன்றோடு அந்த கவிதை  செயல் இழந்தது.

டாக்டர் மு.வரதராசனார் அவர்களின் எழுத்துகள் அன்று எங்களை வழிநடத்திய அதிசய சக்தி பெற்றிருந்தன. அவரது கரித்துண்டு, கயமை, கள்ளோ காவியமோ ஆகியவற்றை நூலகங்களில் படிக்க இளைஞர்களிடையே போட்டா போட்டி! அவர் நூல்களையே

பரிசளிப்-போம். மு.வ., மேடைப்பேச்சுகளை முடிந்தவரையில் தவிர்ப்பார். மேடைப்பேச்சுகள் பயனில்லை என்று கூறுவார். நேரமும் உழைப்பும் வீண் என்பார். ஆனால் அவர் பேசினால், ‘வார்த்தைகளா.. வைரங்களா’ என்பது போல சொற்கள் அமையும்.

அந்நாட்களில் தமிழ் இளைஞர்களின் உள்ளம் கவர் பேச்சாளர் அன்றைய குன்றக்குடி அடிகளார்! அந்த காவி உடையும், நெற்றியில் பளிச்சிட்ட வெண்ணீறும், பளிச் சிரிப்பும்...! ‘ஓம்’ என்ற தலைப்பில் அவர் பேச்சு காதுகளில் இப்போதும் ஓங்காரம் செய்கிறது. தமிழ் அர்ச்சனையை வற்புறுத்திய துறவி அவர். பெரியாரின் மதிப்பை பெற்றவர். பெரியார் நடத்திய மகாநாடுகளில் மேடை ஏறினார்  திருநீறு அணிந்து. ‘மகா சந்நிதானம் அவர்களே’ என்று அழைப்பார் பெரியார்.

ஒரு சமயம் ஜீவானந்தம் பேச, அடிகளார் தலைமை வகித்தார். ‘முடிவுரையில் நான் விபரமாக பேசுவேன்’ என்று ஆரம்ப உரையை சுருக்கமாக முடித்தார் அடிகளார். அப்பர் பற்றி ஜீவா பேசினார்! அப்பர் சமய சீர்திருத்தவாதி மட்டுமல்ல. சமூக சீர்திருத்தவாதி என்று ஜீவா பேசப் பேச  கூட்டம் வியப்பில் ஆழ்ந்தது. அவர் பேசி முடித்தார். “என் முடிவுரை கிடையாது. ஜீவா அவர்களின் பேச்சை மனதில் நினைத்தவாறு செல்லுங்கள்” என்றார் அடிகளார்!

ஆக்கூர் அனந்தாச்சாரி என்ற தேசத் தியாகி, மகா கவி பாரதியின் பக்தர். ஆண்டுதோறும் மகா கவியின் பிறந்தநாளில் மூன்று நாட்கள், தி.நகர் வாணிமகாலில் விழா எடுப்பார். மூன்று நாட்களும் சிலம்புச்செல்வர் ம.பொ.சி பேசுவார்! “பாரதி சிங்கம் நிகர் கவிஞன். சிங்கம் நடை போடும்போது, சற்று பின்னோக்கிப் பார்த்து பிறகு முன்னோக்கிப் பார்க்கும். பாரதி கடந்த கால பெருமையை மனதில் கொண்டு எதிர்கால சிந்தனையோடு பாடிய சிங்கம் நிகர் கவிஞர்” என்று ஆரம்பிப்பார் ம.பொ.சி. எங்கள் மனமேடையில் பாரதியை ஏற்றி வைத்தவர் அவரே! தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் பாரதியின் ‘குயில் பாட்டு’ பற்றி ஒரு மணி நேரம் பேசினார்!

அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ் துறைத்தலைவர் சிதம்பரநாதன் செட்டியாரை தமிழ் உலகம் மறந்தது ஓர் அநியாயம். நடு வகிடு எடுத்து, கம்பீரமாக நின்று, நளினமான குரலில் சிலப்பதிகார காட்சிகளை கூறுவார்! காவிரிபூம்பட்டினத்தில் இளங்கோ நடை பயின்றதை விவரிப்பார்! தமிழ் கொஞ்சும் அவரிடம்! அதேபோல, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முதல்வர், பேராசிரியர் அ.சீனிவாசராகவன்! கவர்ச்சிகரமான மென்மை குரல்! ஆண்டாள் பற்றிய அவர் பேச்சு பரவசமூட்டும்! என்றும் மறக்கவே முடியாத இன்னொரு இலக்கிய பேச்சாளர் - கி.வா.ஜகன்னாதன். தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யரின் நேர் சீடரான இவர், பெரும் கல்விமான். அடக்கமே உருவானவர்.

ஒரு விழாவில் பேராசிரியர் அன்பழகனும், அ.ச. ஞானசம்பந்தமும் பேசினார்கள். தமிழில் பிறமொழி சொற்களை கலக்கக் கூடாது என்று பேசினார் பேராசிரியர் அன்பழகன். அப்படி பிறமொழி சொற்களை அவசியம் ஏற்பட்டால் கலப்பதில் தவறில்லை என்று பேசினார் அ.ச.ஞானசம்பந்தம். என் பக்கத் தில் ஒருவர் குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தார்! பிறமொழி கூடாது என்று பேசிய அன்பழகன் பேச்சில் 36 பிறமொழிச் சொற்கள்! பிறமொழி கலக்கலாம் என்ற அ.ச.ஞா. பேச்சில் ஒரு பிறமொழி சொல் கூட இல்லை!

அன்று சுவைத்த இலக்கிய இன்பம் நெஞ்சில் நிறைந்திருக்கிறது! நான் நன்றியுடன் அந்த அறிஞர்களை நினைக்கும்போது, என் கண்கள் பனிப்பது உண்மை.

ஆகஸ்ட், 2013.

logo
Andhimazhai
www.andhimazhai.com