ரசித்து செய்தால் அதற்கான மதிப்பு உண்டு!  - ரோஹிணி மணி - ஓவியர்

ரசித்து செய்தால் அதற்கான மதிப்பு உண்டு! - ரோஹிணி மணி - ஓவியர்

எழுத்தோடும் கலையோடும் சேர்ந்ததுதான் என்னுடைய வாழ்க்கை.

நான் கலைத்துறைக்குள் வருவதற்கு நிறையக் காரணங்கள் இருந்தாலும், அதன் மீதிருந்த மோகமே முக்கியமானது. பள்ளி படிப்பை முடித்து ஓவியம் படிப்பதற்கு வந்தபோது நிறையபேர் வேண்டாம் என்றனர். எனக்கு பிடித்ததை செய்ய பெற்றோர்கள் அனுமதித்ததால் எனக்கான பொறுப்பு அதிகமானது.

நான் கருப்பாக இருப்பதால், அதுவே என்னுடைய அடையாளமாக மாறியது. அது என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. நிறம் சார்ந்த கேள்வியும் பதிலுமே என்னை அடுத்த கட்டத்திற்கு உந்தி தள்ளியது. என்னை நானே வரைந்து கொள்ள ஆரம்பித்தேன். ஒரு முகம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. கலை பற்றிய பெரிய பார்வையை என்னுடைய முகம் தான் எனக்கு ஏற்படுத்தியது.

ஒரு துறையில் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தால் பணம் முக்கியமே இல்லை. தைரியமாக வாழலாம். மாற்றங்களை எளிதாக எதிர்கொள்ளலாம். அதேபோல், ஒரு கலையை மட்டும் தெரிந்து கொண்டு முன்னேற முடியாது. பலவிதமான கலைகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கற்றுக் கொண்டதை எளிமையாக சொல்லும் அளவுக்குத் திறமை வேண்டும்.

என்னைப் பாதித்த விஷயங்களை வைத்தே ஓவியம் வரைகிறேன். கலை என்பது எல்லோரிடமும் உண்டு. அது உணர்வைக் கடத்தக் கூடியது. எதை ஒன்றையும் ரசித்து செய்தால் அதற்கான மதிப்பு என்பது இருக்கும். கலைசார்ந்து தீவிரமாக இயங்கும் போது அதற்கான பெயர், புகழ், பணம் நிச்சயம் கிடைக்கும். ஆனால் கொஞ்சம் தாமதமாகும். இருந்தாலும் நம்மை நாம் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

நான் வியாபாரத்திற்காக எதையும் செய்யவில்லை. வியாபாரம் என்று வந்துவிட்டால், அதில் சமரசங்கள் செய்துகொள்ள வேண்டியிருக்கும்.

கலை சார்ந்து இயங்கினால் பணம் சம்பாதிக்க முடியாது என்பது தொடக்கத்திலேயே தெரிந்தாலும், அது இன்று வரை மாறாமல் இருப்பது தான் ஆச்சரியம்.

பிப்ரவரி, 2023.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com