''மக்களுக்கு சேவை செய்ய பதவி தடையாக இருந்தால் தூக்கி எறிவேன். ராஜினாமா கடிதம் எப்போதும் என் சட்டை பையில் இருக்கிறது!''-இப்படி முழங்கி விட்டு, ஒற்றை காகிதத்தை எடுத்து உயர்த்தி காட்டுவார் தலைவர். வட்டாரத்தை அதிர வைக்கும் கரகோஷம். கடிதத்தில் என்ன எழுதி இருந்தது என்பது கடைசிவரை எவருக்கும் தெரியாது.
பழைய பள்ளிக்கூட நோட்டில் ஒரு தாளை கிழித்து அதில் நாலு வரி எழுதினால் போதும் என்று பலர் நினைக்கிறார்கள். ராஜினாமா கடிதம் எழுதுவதும் கொடுப்பதும் அத்தனை சுலபமான விஷயம் கிடையாது. அதற்கென சில நடைமுறைகள் உண்டு. வகிக்கிற பதவிக்கு ஏற்ப நடைமுறை மாறுபடும்.
இதை எழுதும்போது ஒரு செய்தி வருகிறது. இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவசா ராஜினாமா செய்திருக்கிறார். பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி விட்டார், ஜனாதிபதி அதை ஏற்று கொண்டாரா என்று தெரியவில்லை. இது செய்தி.
தேர்தல் ஆணையர் என்பது இந்திய அரசியல் சாசனம் உத்தரவாதம் அளிக்கின்ற முக்கியமான பதவி. அதற்கு ஒருவரை தேர்வு செய்வதும் நியமிப்பதும் மத்திய அரசு. ஆனால் பதவி மீது அரசு ஆதிக்கம் செலுத்த முடியாது. சேஷன் ஒரு முறை சொன்னார்: நான் மத்திய அரசின் ஆணையர் அல்ல; இந்திய தேர்தல் ஆணையர்! அவ்வளவு கவுரவம் மிகுந்த பொறுப்பில் இருந்து அசோக் லவசா விலகுகிறார். ஏடிபி என்கிற ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் பதவிக்காக இதை உதறுகிறார். ஆணையராக அவரை நியமிக்கும் ஆணையில் கையெழுத்துப் போட்டவர் ஜனாதிபதி. ஆகவே ராஜினாமா கடிதத்தை ராஷ்ட்ரபதி பவனுக்கு அனுப்பினார். சரியான நடைமுறை. எனினும், இதோடு முடியவில்லை.
அசோக் லவசாவை நியமிக்க ஜனாதிபதிக்கு பரிந்துரைத்தது மத்திய அரசு. ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்கலாமா கூடாதா என்பதையும் அரசுதான் தீர்மானிக்க வேண்டும். தேர்தல் ஆணையர் பொறுப்பில் இருந்தபோது அசோக் லவசா ஏதேனும் தவறு செய்தார் அல்லது முறைகேடு புரிந்தார் என்று அரசுக்கு தகவல் கிடைத்திருந்தால், ராஜினாமாவை ஏற்க வேண்டாம் என பரிந்துரைக்கலாம். உரைத்தாலும், மேல் நடவடிக்கை எடுக்க அரசு விரும்பினால் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படும். அது வேறு விஷயம்.
பெரிய பதவி வகிப்பவர்கள் விலகும்போது இது போன்ற தர்மசங்கடம் உண்டாவதை விரும்ப மாட்டார்கள். அதனால், விஷயம் வெளிச்சத்துக்கு வருவதற்கு முன்பே இரு தரப்பும் பேசி முடிவுக்கு வந்து, பிறகுதான் ராஜினாமா அறிவிப்பு வரும். இது அரசுக்கு மட்டும் அல்ல. தனியார் துறைக்கும் பொருந்தும். அத்தகைய சமரச உடன்பாடு எட்ட முடியாததால் டாடா குழுமத்தின் உயர் மட்டத்தில் நடந்த தேவையற்ற பலப்பரீட்சையை ஆண்டு தொடக்கத்தில் பார்த்தோம்.
திமுக எம்.எல்.ஏ செல்வம் விஷயத்தில் நடந்தது இன்னொரு வகையான விசித்திர கூத்து. கட்சியை விட்டு விலகிய செல்வம் ராஜினாமா கடிதம் கொடுக்கவே இல்லை. அவரை சஸ்பெண்ட் செய்த திமுக மேலிடம், நீண்ட சங்கடத்துக்கு பிறகே நீக்குவதாக அறிவித்தது. என்ன வேடிக்கை என்றால், ராஜினாமா செய்தால் பதவி போய் விடும். கட்சியே நீக்கினால் பதவி பிழைக்கும். அதனால் விளைந்த கண்ணாமூச்சி ஆட்டம்.
அதிமுக உருவானதில் இருந்தே இரண்டு திராவிட கட்சிகளிலும் எம்.எல்.ஏ.க்கள் இப்படி தலைமைக்கு தண்ணி காட்டிய சம்பவங்கள் உண்டு. அதன் தொடர்ச்சியாகத்தான் சட்டமன்ற உறுபினர் பதவியை ராஜினாமா செய்வதற்கென்று கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அவற்றில் முக்கியமானது எது என்று தெரிந்தால் சிரிப்பீர்கள். உண்மையாக காரணத்தை கடிதத்தில் குறிப்பிடக் கூடாது என்பதுதான் அது. இதே வார்த்தைகளில் விதி எழுதப்படவில்லை. என்றாலும் சாரம் இதுவே.
சொந்த காரணங்களால் ராஜினாமா செய்கிறேன் என்று எழுத வேண்டும். உடல் நிலை காரணமாக என்றும் சொல்லலாம். வேறு எதையாவது காரணமாக குறிப்பிட்டால், கடிதம் செல்லாது.
ராஜாராம் சபாநாயகராக இருந்தபோது, ராஜினாமா கடிதம் எழுதுவது எப்படி என்று எம்.எல்.ஏ.க்களுக்கு வகுப்பு எடுத்தார். அந்த பாடத்தின் சில குறிப்புகள்: 1. கடிதம் ரத்தின சுருக்கமாக இருக்க வேண்டும். இணைப்புகள் இருக்கக் கூடாது.
2. சொந்த காரணங்களுக்காக என்பதை தவிர வேறு எதையும் காரணமாக குறிப்பிடக் கூடாது. 3. யார் மீதும் அதிருப்தி, கோபம், அச்சம் போன்ற எந்த விதமான உணர்ச்சிகளும் கடிதத்தில் பிரதிபலிக்கக் கூடாது. 4. சபாநாயகர் பெயருக்கு எழுத வேண்டும். கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், சட்டமன்ற கட்சித் தலைவர், கொறடா போன்றவர்கள் வழியாக தரப்படும் கடிதங்கள் செல்லாது. 5. நேரில் வர இயலாத சூழ்நிலையில் பதிவு தபாலில் அனுப்பலாம். சபாநாயகர் அழைத்து நேரில் விசாரித்து உறுதி செய்த பிறகே முடிவு எடுக்கப்படும்.
இப்படி விதிகளை விளக்கி சொன்னார் ராஜாராம். நேரில் வந்து கடிதம் கொடுத்தவரிடம், அவர் சுய நினைவுடன் தானாக முடிவு எடுத்து ராஜினாமா செய்கிறாரா, வேறு எதேனும் நிர்பந்தம் இருக்கிறதா என்பதையும் விசாரித்து, தேவைப்பட்டால் அவகாசமும் கொடுத்து இறுதி முடிவை அறிவிக்கும் புதிய மரபை அவர் உருவாக்கினார்.
பதவி ஏற்றதுமே எம்.எல்.ஏ.க்களை மிரட்டி தேதி போடாமல் ராஜினாமா கடிதம் வாங்கி வைத்து கொள்ளும் வழக்கம் அப்போது சில கட்சிகளில் இருந்தது. அதற்கு ராஜாராம் மூலமாக எம்ஜிஆர் முற்றுப்புள்ளி வைத்தார் என்று ஒரு அமைச்சர் தனிப்பட்ட முறையில் செய்தியாளர்களுக்கு விளக்கம் சொன்னார்.
தனியார் நிறுவனங்களில் தொழிலாளர் நல சட்டங்களை முழுமையாக அமல்படுத்துவது இல்லை. அதிகாரிகள் கண்டும் காணாமலும் இருந்து விடுவார்கள். ஆகவே ராஜினாமா கடிதங்களுக்கு பெரிய மரியாதை கிடையாது. எழுதிக் கொடுத்து விட்டு போ என்று நிர்வாகம் சொன்னால் அப்படியே செய்வது வழக்கம். தொழிற்சங்கம் ஓரளவு வலிமையுடன் செயல்படும் நிறுவனங்களில் இந்த நடைமுறை சற்று மாறுபடும். அங்கேயும் ஒயிட் காலர் ஒர்க்கர் என்று சொல்லப்படும் மத்திய தர ஊழியர்களை காட்டிலும் ப்ளூ காலர் ஒர்க்கர் என்று அழைக்கப்படுகிற தொழிலாளர்களுக்கு கிடைக்கும்
சட்ட பாதுகாப்பு அதிகம். அதற்கு ஏற்ப ராஜினாமா கடித வார்த்தை கோர்ப்பில் வேறுபாடுகள் உண்டு. காரணம் குறிப்பிடாமல் ராஜினாமா கடிதம் தருமாறு வலியுறுத்துவதில் நிர்வாகம் பாரபட்சம் காட்டுவது கிடையாது.
காரணம் குறிப்பிடுவதில் என்ன சிக்கல் என்பது கடிதம் கொடுப்பவர்களுக்கு தெரிந்திருக்காது. இந்தப் பக்கம் தொழிற்சங்க நிர்வாகிக்கும் அந்தப் பக்கம் எச்சார் (ஏகீ) எனப்படும் மனிதவள நிர்வாகிக்கும் மட்டுமே அந்த ரகசியம் தெரியும். சில காரணங்கள் எதார்த்தமாக தோன்றும். ஆனால் வழக்கு என வந்து விட்டால் நிர்வாகத்துக்கு தலைவலியாக மாறிவிடும். ராஜினாமா கடிதம் கொடுத்த பிறகு வழக்கு எப்படி வரும் என்று சிலருக்கு கேள்வி எழலாம். என்னை நிர்பந்தம் செய்து ராஜினாமா கடிதம் எழுதி வாங்கினார்கள் என்று தொழிலாளர் கோர்ட்டுக்கு வரும் வழக்குகள் ஏராளம். சூழ்நிலை ஒத்துக் கொள்ளாததால் ராஜினாமா செய்கிறேன் என்று ஒருவர் கடிதம் கொடுப்பார். நிர்வாகம் அதை ஏற்று அவருக்கு கணக்கு தீர்க்கும். அதில் இரு தரப்புக்கும் கருத்து வேறுபாடு உண்டாகும். ஊழியர் கோர்ட்டுக்கு போவார். சூழ்நிலை என்று கடிதத்தில் எழுதி இருப்பதே நிர்வாகத்தின் முறைகேடான நடவடிக்கையைத்தான் என்று வாதம் செய்வார். என்ன முறைகேடு என்று கேள்வி வரும். அதில் தொடங்கும் நீண்ட சட்ட போராட்டம்.
சிறப்பான நிர்வாகம் நடைபெறும் பிரபலமான நிறுவனத்தில் ஒரு விவகாரம் வெடித்தது.நெருக்கமாக இருந்த மேல்மட்ட ஊழியருக்கும் நிர்வாக தலைமைக்கும் திடீரென புட்டுக் கொண்டது. உடனே வெளியேறு என்றார் முதலாளி. வேறு வேலை கிடைத்ததும் போய்விடுவேன் என்றார் ஊழியர். பிடித்து தள்ளுவேன் என்றார் அவர். முடிந்தால் செய் என்றார் இவர். சட்ட ஆலோசகரின் உதவியை நாடினார் எச்சார். ஆவணங்களை புரட்டிப் பார்த்த ஆலோசகர் கைவிரித்தார். ஏகப்பட்ட பாராட்டு சான்றிதழ்கள், அடுத்தடுத்த பதவி உயர்வு என்று பகிரங்கமாக கவுரவித்தவர் மீது திடீரென உச்சகட்ட நடவடிக்கை எடுக்க வழி இல்லை என்றார். முதலாளி இறங்கி வந்தார். ராஜினாமா கடிதம் கொடு; இழப்பீடு தவிர பெரிய தொகையும் தருகிறேன் என்றார். அதையும் ஊழியர் ஏற்கவில்லை. வேறொரு சட்ட நிபுணரின் ஆலோசனைப்படி, யாரும் எதிர்பார்க்காதகுற்றச்சாட்டு ஒன்றை சுமத்தி ஊழியரை நீக்கியது நிர்வாகம். கோர்ட்டுக்கு போனபோது, அவர் தொழிலாளர் என்ற வரையறைக்குள் வர மாட்டார் என வாதிட்டது. முடிவு என்ன ஆயிற்று என்பதை விட, ராஜினாமா கடிதத்தின் மதிப்பு என்ன என்பதை இந்த நிகழ்வு உணர்த்தும்.
வேலைக்கு விண்ணப்பம் எழுதுவது எப்படி என்று கற்றுக் கொடுக்க பல வெப்சைட்டுகள் வந்து விட்டன. ராஜினாமா கடிதம் எழுதுவது எப்படி என்றும் சொல்லித் தருகிறார்கள். வகை வகையாக மாதிரி கடிதங்கள் பதிவேற்றுகிறார்கள். மனதை புண் படுத்தாமல், யாரையும் குற்றம் சொல்லாமல், அளித்த வாய்ப்புக்கு நன்றி சொல்லி, அடுத்த வேலையில் சிறப்பாக செயல்பட ஆசி கேட்டு எழுதப்படும் மாடல் கடிதங்களே அதிகம் உள்ளன. தெரியாமல் செய்த தவறுகளை மன்னிக்க கோரிக்கை விடுப்பதையும் பார்க்க முடிகிறது.
பொதுவாக பார்த்தால், அதிக சம்பளத்துக்காக மட்டுமே வேலையை உதறுபவர்கள் குறைவு. அதை தாண்டி சில உறுத்தல்கள் இருந்தால்தான் பழக்கப்பட்ட சூழலை விட்டு ஒருவர் விலகுவார். எது உறுத்தியது என்பதை இறுதி வரை வெளியே காட்டிக் கொள்ளாமல் தவிர்ப்பது புதிய எதார்த்தம்.
செப்டெம்பர், 2020.