வாசகர்கள் பேசுகிறார்கள்

எழுத்தாளர்களுக்கு உந்து சக்தியாக இருப்பது அவர்களின் வாசகர்கள்தான். ஆடிட்டர் சந்திரசேகர், மணிபாரதி, டாக்டர் ஸ்ரீராம், காளி பிரஸாத் என நான்கு வாசகர்கள் தங்களுக்குப் பிரியமான எழுத்தாளர்களைப் பற்றிப் பேசுகிறார்கள்.

ஆடிட்டர் சந்திரசேகர்
ஆடிட்டர் சந்திரசேகர்

எஸ்.ரா. எழுத்தழகு

பல ஆண்டுகளுக்கு முன்னால் புத்தகக் கண்காட்சியின் ஒரு கடையில் உப பாண்டவம் என்ற நூலை எடுத்தேன். கடைக்காரர் இந்நூலின் ஆசிரியர் அதோ நிற்கிறார் என்று எஸ்.ராவைக் கை காட்டினார். அவருடன் ஒரு சில நிமிடங்கள் உரையாடினேன். பின்னர் ஆனந்த விகடனில் அவரது துணையெழுத்து தொடர் வெளியானபோது பெரிதும் ஈர்க்கப்பட்டேன். குறிப்பாக அதில் ஒரு பெரியவரும் சிறுமியும் மழை நாளொன்றில் ஒரு முகவரியைத் தேடி அலைவார்கள். அந்த முகவரி ஒரு கட்டடக் காவலாளியினுடையது. அந்தச் சிறுமியின்               சிகிச்சைக்கு செய்தித்தாளில் வெளியான விளம்பரம் பார்த்து பணம் அனுப்பியவர் அவர். அவரைப் பார்த்து நன்றி சொல்லவே அந்த பெரியவரும் சிறுமியும் வந்திருப்பர். அக்காவலாளி தன்னிடம் இருக்கும் கத்தையான மணிஆர்டர் ஒப்புகைச் சீட்டுகளைக் காட்டுவார். யாரோ பணம் அனுப்புவார்கள் என்ற நம்பிக்கையில்தான் விளம்பரம் கொடுக்கிறார்கள். எனவே நானும் என் சம்பளத்தில் என்ன முடியுமோ அதை அனுப்புகிறேன் என்பார். எனக்குள் பெரிய மாறுதலை அது உருவாக்கியது. அன்றிலிருந்து நானும் அதையே கடைப்பிடிக்க ஆரம்பித்தேன். பின்னர் எஸ்.ரா. அவர்களின் முகவரி வாங்கி, அவரைச் சென்று சந்தித்தேன். நல்ல நட்பாக அது மாறியது. அவர்களின் குடும்பத்திலும் ஓர் உறுப்பினர் போலானேன். என் மகள் திருமணம் சமீபத்தில் நடந்தபோது தமிழைக் கொண்டாடுவோம், தமிழால் கொண்டாடுவோம் என்று தீம் வைத்து முதல்நாள் மாலை இசை நடன நிகழ்ச்சியும் மறுநாள் இயல் என்ற பெயரில் உங்களுடன் ஒரு நிமிடம் என்ற தலைப்பில் எஸ்.ரா.வின் பேச்சுக்கும் ஏற்பாடு செய்திருந்தேன். மணமக்கள் தாலி கட்டி முடிந்தவுடன் மேடைபோட்டு எஸ்.ரா.வின் உரை. வந்திருந்த அனைவரும் அப்படியே அமர்ந்து அவரது உரையைக் கேட்டு மகிழ்ந்தனர். அவர் பேசிய மேடையின் பின்னால் திருவாரூர் தேர் படம் போட்டு திருவாரூர் தேரழகு; எஸ்.ரா எழுத்தழகு என்ற வாசகங்களை இடம்பெறச் செய்திருந்தேன். ‘‘நேற்றுவரை திருமண ஏற்பாடுகள், சாப்பாடு அருமை என்றவர்கள் இப்போது அதை மறந்து எஸ்.ரா. பேச்சு அருமை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்களே.'' என்று  சொல்லும் அளவுக்கு அவர் உரை அமைந்துவிட்டது! நான் தேசிய பார்வையற்றோர் சங்கத்தில் பொறுப்பில் இருப்பவன். அந்த திருமண அழைப்பிதழையும் கூட பிரெய்லியில் அச்சடித்திருந்தேன். பார்வையற்றவர்கள் சுமார் 100 பேர் வரை வந்திருந்து வாழ்த்தியதையும் எஸ்.ரா. பாராட்டினார்.

சமீபத்தில் அவரது தேசாந்திரி பதிப்பகத் தொடக்க விழாவில் அவர் எழுதிய படிக்கத் தெரிந்த சிங்கம் என்ற குழந்தைகள் நூலை பிரெய்லியில் வெளியிட்டோம்! அப்போது நான் குறிப்பிட்டது:  ‘‘எஸ்.ரா. ஒரு எழுதத்தெரிந்த சிங்கம்!''

மணி பாரதி
மணி பாரதி

எங்கே குட்டிப் பிசாசு?

வா.மு.கோமுவின் குட்டி பிசாசு சிறுகதையை நான் உயிர்மையில் படித்தேன். அவரது கதைகளை ஏற்கனவே சிற்றிதழ்களில் படித்திருக்கிறேன். பாலியல் தொடர்பான கதைகளை மிகவும் துணிச்சலாக எழுதியிருந்தார். இந்த எழுத்தை இன்னும் பத்து வருடத்திற்கு முன்பு நான் படித்திருந்தால் நிறைய பெண்களை நானே பறிகொடுத்திருக்கமாட்டேன். விபரம் தெரியாமல் கூச்சப்பட்டுவிட்டேன். வாழ்க்கை, புனிதம் என்று கற்பனை செய்துட்டேன். இவரை உடனே சந்திக்கணும் என்று சொல்லி ஒரு பனிக்காலத்தில் புத்தகத்தைக் கையில் எடுத்துகொண்டு ஈரோட்டுக்கும் திருப்பூருக்கும் மத்தியில் உள்ள குக்கிராமமான வாய்ப்பாடிக்கு கிளம்பிவிட்டேன். ஏற்கனவே போன் போட்டு சொல்லியிருந்ததால் என்னைக் கூப்பிட வண்டியில் வந்திருந்தார். அவருக்கு என்னை பார்த்தவுடன் பிடித்துவிட்டது. உடனே மதுக்கடைக்கு சென்றோம். அவரது வீட்டில் குளிப்பதற்கு வெந்நீர் போட்டுக் கொடுத்தார்கள். சாப்பிட பிரியாணியும் செய்திருந்தார்கள்.

 நான் புதுசா அவங்க வீட்டிற்கு வந்ததால் இரவில் நாங்கள் பேசுவதற்காக சென்னிமலை ரோட்டிற்குச் சென்றோம். அங்கு ஆட்கள் நடமாட்டம் ரொம்பக் கம்மி. எப்பவாவது ரோட்டில் லாரி செல்லும். அவர் கையில் டார்ச் எடுத்துக்கிட்டு கம்பளிப் போர்வை போர்த்தி கொண்டு நாங்கள் இருவரும் ரொம்ப நேரம்   பேசிகொண்டிருந்தோம். திடீரென்று அவர்  நீங்கள் என்னைப்பார்க்க எதற்காக வந்தீர்கள். என்று கேட்டார். உங்க கதைகளை படித்தவுடன் உங்களைப் பார்க்க ஆசை. அப்புறம் குட்டிப் பிசாசு கதையைப் படித்தவுடன் அந்தக் கதையில் வரும் குட்டிப்பிசாசு என்ற பெண் உண்மையாக இருப்பதுபோல் தெரிந்தது. உங்கள் கதைகளில் வரும் ஏதாவது ஒரு பெண்ணை எனக்கு காட்டுங்கள் என்றேன்.. நான் இப்படி சொன்னவுடன்  அவர் ரொம்ப நேரம் சிரித்தார். என்னிடம் யாருமே இப்படிக் கேட்டது கிடையாது. என் கதை படித்தால் நல்லா இருக்கு அப்படின்னுதான் சொல்லுவாங்க. கதையில வருகிற கதாபாத்திரத்தை எனக்கு அறிமுகப்படுத்தச் சொல்லி யாருமே என்னை பார்க்க வந்ததில்லையே என ஆச்சரியமாகப் பார்த்தார். பனிக்காலத்தில பொங்கல் சோறுகூட நல்லா சாப்பிடாம வந்திருக்கேன். எனக்கு உங்க கதையில வருகிற பெண்ணைக் காட்டுங்கள் என்றேன். இப்ப அவளை பார்க்க முடியாது எனக்கும் அவளுக்கும் பிரச்னை. மூஞ்சியைத் தூக்கி வைச்சிக்கிட்டு இருக்கா. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தா நாளைக்கு காட்டுறேன். அவ மில்லில் தங்கியிருந்து வேலை பார்க்கிறா. நாளைக்குப் போவோம் என்றார். காலையில் எழுந்திருச்சவுடனே குட்டிப் பிசாசை பார்க்கப்போனோம். அவள் வேலை பார்க்கிற மில்லுக்கு வெளியில் காத்திருந்தோம். அவள் கடைக்கு வருவாள், உனக்கு தைரியம் இருந்தால் நீ என் பெயரைச் சொல்லி பேசிக்கோ என்று சொன்னார். அங்கே வந்தவர்களில் நிறைய பேர் எனக்கு தெரிந்தவர்களே. எனக்கே ஆச்சரியமாக இருந்தது. திருநெல்வேலிக்காரர்கள்தான் அங்கு  நிறைய பேர்  இருக்கிறார்கள். அந்தப் பெண்ணை கடைசிவரை பார்க்கமுடியவில்லை. கோமுவுடைய கதைகளில் வரும் பெண்கள் எனக்கு மிகவும் ரொம்ப பிடிக்கும் என் வாழ்க்கையிலும் அதே போல் பெண்களைச் சந்தித்திருக்கிறேன். அதனால்தான் இந்தப் பெண்ணைப் பார்க்கணும்போல இருந்தது.

ஒருவேளை சில எழுத்தாளர்கள் குறிப்பாக கலாப்ரியா சசியை கொண்டாடுவதுபோல் ஏதேனும் ஒரு பெண்ணைக் கொண்டாடுவார்கள். அதேபோல் இருக்குமோ என்று சந்தேகம் வந்தது.  ஆனா அப்படி ஒரு பெண் இருந்தா என்கிட்ட காட்டியிருப்பாரு. எனக்குள் குழப்பமே மிஞ்சியது. இது உண்மையா என்பது வா.மு. கோமுக்குதான் வெளிச்சம்.

டாக்டர் ஸ்ரீராம்
டாக்டர் ஸ்ரீராம்

எழுத்தின் செய்தி

கல்லூரியில் ஆங்கில பல்ப் நாவல்களை மட்டுமே படித்திருந்தேன் -ஆர்தர் ஹெய்லி, சேத்தன் பகத், விகாஸ் ஸ்வரூப், அரவிந்த் அடிகா. நண்பன் ஒருவன் ‘தல ராக்ஸ்' என்ற அறிமுகத்துடன் ‘அள்ளிப்பூசிய அமாவாசை இரவு' என்ற கட்டுரையை முகநூலில் பகிர்ந்திருந்தான். அங்காடித் தெரு படத்திற்கு சாருவின் விமர்சனம். அதன்பின் charuonlineஐ தினந்தோறும் வாசிக்கத் தொடங்கினேன். மூன்று வருடங்கள் கழித்து ஸீரோ டிகிரி வாங்கி, ஓரிரவில் படித்து முடித்தேன். இந்த நூலை எழுதியவன் சாதாரண ஆள் கிடையாது என்று தோன்றியது. உடனே, சாருவுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். பின், அவரின் எல்லா கட்டுரைத் தொகுதிகளையும் ஒவ்வொன்றாகப் படித்தேன். ராஸ லீலா, தேகம் என்று தேடித்தேடி வாசித்தேன். மிகவும் பிடித்த நாவல்கள்: புதிய எக்ஸைல் (Marginal Man), ராஸ லீலா, தேகம் (Corpus), காமரூப கதைகள்.

மின்னஞ்சல்கள், தொலைபேசி உரையாடல்கள், வாசகர் வட்ட சந்திப்புகள் மூலம் சாருவுடனான நட்பு வலுபெற்றது. சாருவிடம் பிடித்தது, அவரது எழுத்தைப் போலவே அவரும் ‘a man of integrity'. எழுத்திலும் தனி வாழ்க்கையிலும் இருவேறு நபராக இருக்கமாட்டார். 

 இரண்டு வருடங்கள் முன் நடந்த சம்பவம் இது: ஒரு வாசகர் வட்ட சந்திப்பில் ஒவ்வொரு நண்பரையும் மற்றவர்களுக்கு சாரு அறிமுகம் செய்துகொண்டிருந்தார். அந்தக் கூட்டத்தில்,  சாருவுக்கு நெருக்கமான, ஆனால் மற்றவர்களுக்கு அறிமுகமில்லாத ஒரு இருபது வயது கல்லூரி மாணவன் வந்திருந்தார். அவர் தன்னைப் பற்றி கூற வேண்டாம் என சாருவிடம் கேட்டுக்கொண்டார். மற்ற நண்பர்கள் அவரைப் பற்றிக் கூறுமாறு வலியுறுத்தியும் சாரு மறுத்துவிட்டார்; இதுதான் சாரு. அடுத்தவரின் சுதந்திரத்தில் குறுக்கிடாமலும் அதே சமயம் நம்முடைய தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்காமலும் வாழ்வதே அவர் எழுத்தின் செய்தி.

பழுப்பு நிறப் பக்கங்களில் சாரு அறிமுகம் செய்த அனைத்து எழுத்தாளர்களையும் வாசித்துள்ளேன். சாருவுக்கு அடுத்து அசோகமித்திரனின் எழுத்து என்னை வசீகரித்தது.

பிடிக்காத விஷயம் என்றால், சாரு தான் எழுதும் எதையும் சேமித்து வைக்கமாட்டார். சார்த்தரின் Intimacy  உள்ளிட்ட மொழிபெயர்ப்புகள், எண்பதுகள் மற்றும் தொன்னூறுகளில் வந்த சில சிறுகதைகள் ஆகியவை எவ்வளவு தேடியும் கிடைக்க வில்லை. இன்னொரு விஷயம், அவரது நிறைய கட்டுரைத் தொகுப்புகள் நாவல்களாக வந்திருக்க வேண்டியவை. அவ்வளவு கவனம் பெறாத ‘மலாவி என்றொரு தேசம்' நூலுக்கு திருப்பூரில் ஒரு பெரிய வாசகர் வட்டமே இருக்கிறது. கச்தடூணி Paulo Coelho - வின் ‘Eleven Minutes' போல பிரபலம் அடைந்திருக்க வேண்டிய நூல் அது. அதே போல் ‘கெட்ட வார்த்தை' தொகுப்பும் சுவாரசியமான நாவலுக்கான content உள்ள நூல்.

காளி பிரஸாத்
காளி பிரஸாத்

அபார நினைவாற்றல்

எழுத்தாளர் ஜெயமோகனை முதலில் அறிந்தது சங்கசித்திரங்கள் வழியாகத்தான் என்றாலும் அதை துவக்கமாகச் சொல்ல இயலாது. அதற்குப்பின் பல வருடங்கள் கழித்து என் ஆர்க்குட் நண்பர்கள் வழியாகவே நான் இலக்கிய வாசகனாகவே ஆனேன். இலக்கிய உலகில்  ஒரு ஆளுமையை அடையாளங்காண எளிய வழியாக இன்றுவரை இருக்கும் 'சர்ச்சை' வழியாகத்தான்  அவரை மீண்டும்  படிக்கத்துவங்கியது. அந்தவகையில் நான் படித்த இரண்டாவது கட்டுரை தீராநதியில் வெளிவந்த காசிரங்கா தொடர்தான்.  அது பற்றி ஒரு கடிதம் எழுதியிருந்தேன். நான் எழுதியது சாதாரணமான படித்தேன் ரசித்தேன் வகை நாலுவரிக்  கடிதம்தான். நான் அவர் நாவல்களை சிறுகதைகளை அச்சமயம்  படித்திருக்கவில்லை. அவரது நகைச்சுவைக் கட்டுரைகளை இன்றும் படித்துச் சிரிப்பதுண்டு. ஆனால் முதல் முறை கண்ணில்படாத ஒன்று  இப்போது துலங்கி நிற்கும். ஒரு ஆரம்ப வாசகனாக அதில் சிரிக்க சில விஷயங்கள் இருந்தன. இந்த எட்டு வருடங்களில் அவரின் படைப்புகளைப் படித்து அத்வைத, விசிஷ்டாத்வைத கருத்துகளை உள்வாங்கிய பின்பும் அதில் படித்துச் சிரிக்க வேறு விஷயங்கள் இருக்கின்றன. ஆர்க்குட்  நண்பர் அதியமான்,  ‘விஷ்ணுபுரம்', ‘பின்தொடரும் நிழலின் குரல்' நாவல்களை  வாசிக்க அளித்தார்.   அதற்கும் பிறகு  ஆறு ஆண்டுகள் கழித்துதான் அவருடன் நேரில் உரையாடியது. அதற்கிடையே அவரின் புத்தகவெளியீடு மற்றும் கேணி போன்ற கூட்டங்களில் கண்டதோடு சரி.  அவரிடம் அறிமுகப்படுத்திக்-கொண்டபோது, நீங்கதானா? அப்ப லெட்டர் போட்டிருந்தீங்களே என்றார். அந்த நினைவாற்றல் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. எழுத்தாளர் வாசகன் நினைவில் வைத்திருப்பது எளிதான  ஒன்று. ஆனால், ஒவ்வொரு வாசகரையும் நினைவில் வைத்திருக்கும்  எழுத்தாளராக அவர் இருப்பது அவ்வளவு எளிதானதல்ல.  அவரோடு உரையாடும் நேரங்களில் வியப்பது அவரின் நினைவாற்றல் குறித்துத்தான். ஒருமுறை தி.ஜா.பற்றி பேச்சு வந்தது. ஒரு சிறுகதையில் இப்படி வரும் எனச் சில சம்பவங்களைக் கூறினேன். அவர் அந்தச் சிறுகதையின் தலைப்பைக் கூறினார். அதன் கதாபாத்திரங்களின் பெயரை, பின் சிறுகதை  எப்படித் துவங்கும் என. தி.ஜா என்றில்லை, தமிழின் முக்கியமான அத்துணை படைப்புகளையும் வாசித்திருக்கிறார் என்பதை அறிந்தபோது இன்னும் வியப்பாக இருந்தது. முன்னோடிகள்,  சக எழுத்தாளர்கள் மற்றும் இளையவர்களின் படைப்புகளையும் வாசித்து அது எங்கே எதனுடன் மாறுபடுகிறது என விளக்கினார். அதிக வாசகர் களைக்கொண்ட  எழுத்தாளராக இருந்தபோதிலும் பிற எழுத்தாளர்களின் முதன்மை வாசகர் என்ற இடத்தை அவர் யாருக்கும் விட்டுத்தருவதில்லை. ஒரு வாசகனாக அந்த இடத்தை நோக்கித்தான் நானும் போகவேண்டும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com