வாசிப்பின் வழியாகத் திறந்துகொண்ட கதவுகள்

பலரையும்போல பாலமித்ரா அம்புலிமாமா கதைகளிலிருந்துதான் என் வாசிப்பு தொடங்கியது. மாய, மந்திரக்கதைகளில் மயக்கம் கொண்டிருந்த சிறு பிராயம் அது. என் வாசிப்பு ஆர்வத்தைக் கவனித்த என்னுடைய அண்ணன் ஜெயபாலன், ‘இந்தப் புத்தகத்தைப் படித்துப்பார்' என்று ஜெயகாந்தனின் 'பாரிசுக்குப் போ' நாவலை எனக்குக் கொடுத்தார். அந்தப்புத்தகம், எனது வாசிப்பின் பாதையை வேறொரு திசைக்கு மாற்றியது. அந்த நாவலின் பின்புலமாக விவாதிக்கப்பட்ட மேற்கத்திய, கர்நாடக இசை குறித்த தர்க்கம் எதுவும் அந்த வயதில் எனக்குப் புரிந்திருக்கவில்லை. ஆனால் சாரங்கன், லலிதா பாத்திரப்படைப்புகளும், அவர்கள் இருவருக்கும் இடையிலான உறவைப் புரிந்துகொள்கிற லலிதாவின் கணவன் மகாலிங்கமும் என்னுடைய மனதில் அழியாமல் பதிந்து விட்டார்கள். பதின்பருவத்தில் தேடித்தேடி வாசித்த எழுத்தாளர்களைவிட்டு காலப்போக்கில் வெகுதூரம் நகர்ந்து வந்துவிட்டேன்.

ஆனால் இன்றும் மனித உறவுகளைப் புரிந்து கொள்வதற்கு ஏதோ ஒருவகையில் ஜெயகாந்தனின் எழுத்துக்களும் ஒரு காரணமாக இருப்பதை பல சமயங்களில் என்னால் உணரமுடிகிறது. எல்லோரிடமும் நேசம் கொண்டவளாகவும், அதே சமயத்தில் வாழ்க்கையின் சிக்கல்களை எதிர்கொள்ளும்போது வலிமை மிகுந்தவளாகவும் ஒருசேர என்னை உணர்வதற்கு அன்று படித்த மஞ்சளழகியும், நந்தினியும் காரணமாக இருக்கலாம் என நம்புகிறேன். என்னுடைய தொடர்ந்த வாசிப்பின் போக்கில் ஏதோ ஒருகட்டத்தில் உரைநடையிலிருந்து கவிதையின் வரிகளுக்கு என் மனம் நகர்ந்தது. நான் எழுதத்தொடங்குவதற்கு முன்பு ஏராளமான கவிதை நூல்களை வாசித்தேன்.

அவற்றுள் கலாப்ரியாவின், ‘அந்திக் கருக்கலில் திசை தவறிய பெண் பறவை தன் கூட்டுக்காய் தன் குஞ்சுக்காய் அலைமோதிக் கரைகிறது எனக்கதன் கூடும் தெரியும் குஞ்சும் தெரியும் இருந்தும் எனக்கதன் பாஷை புரியவில்லை.' என்கிற கவிதை முதல் வாசிப்பிலேயே என்னுள் பதிந்துவிட்டது. நான் எண்ணுவதை மிகத் துல்லியமாக பிறரிடம் வெளிப்படுத்த முடியாத பல தருணங்களில் இந்தக்கவிதை வரிகள் தன்னிச்சையாக நினைவில் மேலெழுந்து வரும். இதுபோலவே வாழ்வின் நெருக்கடியான தருணங்களில் நினைவில் எழுகின்ற இன்னொரு கவிதை ‘புதிர்' என்கிற தலைப்பில் எஸ். வைத்தீஸ்வரன் எழுதியது.

‘இருட்டை வரைந்திருக்கிறேன் பார்' என்கிறான் ‘தெரியவில்லையே' என்கிறேன் ‘அது தான் இருட்டு' என்கிறான் ‘இன்னும் தெரியவில்லை' என்கிறேன் மேலும் உற்றுப் பார்த்து ‘அதுவே அதனால் இருட்டு' என்கிறான் இவன் இருட்டு எனக்கு எப்போது வெளிச்சமாகும்.' என் மனதை இருள் சூழ்ந்த சில சந்தர்ப்பங்களில் எனக்கு வெளிச்சத்தைத் தந்தவை இவ்வரிகள். சிறுவயதில் நான் விரும்பி வாசித்த பல நூல்களை இப்பொழுது திரும்ப வாசிக்கும் போது அந்த அளவிற்கு ஈர்ப்புடையனவாக இருப்பதில்லை. ஆனால் ஏதோ காரணத்தால் உணர்வின் அடிப்படையில் ஒரு படைப்பு நம் மனதிற்குள் பதிந்துவிட்டால் அது எந்தக்காலத்திலும் மறைவதில்லை. பல்வேறுவகையாக படைப்புகளை வாசிப்பதன் வழியாக விதவிதமான மனித மனங்களை அடையாளம் காணத்தொடங்கிய பருவமாக என்னுடைய பதின்வயது இருந்தது. முழுமையாக உணர்வுவயப்பட்ட நிலையில் படைப்புகளை அணுகிய காலம் அது. அந்த வாசிப்பின் வழியாக நான் கண்டடைந்த கதாபாத்திரங்களை அதன்பின் வாழ்வின் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு பெயர்களில் கண்டிருக்கிறேன். அவர்கள் இப்போதும் புதிய திறப்புகளை எனக்குள் நிகழ்த்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com