வாட்ஸப் இல்லாத உலகு: சோம்பேறிகள், முட்டாள்களுக்கு உகந்தது!

வாட்ஸப் இல்லாத உலகு: சோம்பேறிகள், முட்டாள்களுக்கு உகந்தது!

மெக்கனஸ் கோல்ட் திரைப்படம் உலக அளவில் ஹிட் ஆனதை விட இந்தியாவில்தான் சூப்பர் ஹிட். நம் ஆட்கள் விசித்திரமானவர்கள். வாட்ஸ் அப் கம்பனி அமெரிக்காவில் இருந்தாலும் வாட்ஸ் அப் அமெரிக்காவை விட இந்தியாவில்தான் பிரபலம் என அமெரிக்க நண்பர்கள் சொல்கிறார்கள்.

இந்தியாவில் உயிருள்ளவர்கள் எல்லோரும் ஆதார் கார்ட் வைத்திருப்பது போல மொபைல் உள்ள எல்லோரும் வாட்ஸப் வைத்திருக்கிறார்கள். நம்மிடம் தொலைபேசியில் பேசும் புது நபர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறாரா இல்லையா? அப்படியே வைத்திருந்தாலும் வாட்ஸப் இன்ஸ்டால் செய்திருக்கிறாரா என்பதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் ‘வாட்ஸப் பண்ணிடுங்க‘ என்று சொல்லும் அளவில் இருக்கிறோம்.

வாட்ஸப், இமெயில் போல அவ்வளவு ப்ரொஃபஷனலான செயலி அல்ல. நிச்சயம் உபயோகமான செயலிதான். ஆனால் இந்தியர்கள் வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கும் அளவுக்கு தகுதியுள்ள செயலி அல்ல. இப்போதும் பலர் சொல்லக் கேட்டிருக்கலாம். ‘அந்த ஃபைல் மிஸ் ஆயிடிச்சி, திரும்ப அனுப்பு'. ‘மொபைல் மாத்திட்டேன், சாட் ஹிஸ்டிரி எல்லாம் போயிடிச்சி'. இது மாதிரி இன்னும் நிறைய குறைகள் உண்டு.

ஈ மெயிலில் இந்தக் குறைகள் ஏதும் இல்லை. வாட்ஸப் செய்யும் அனைத்து வேலைகளையும் ஈ மெயில் செய்யும். ஆனாலும் ஏன் இந்தியர்களால் வாட்ஸப் கொண்டாடப் படுகிறது ? வாட்ஸப் ஒரு பர்ஸனல் ஃபீல் கொடுக்கிறது. வாட்ஸப் எந்த அளவு பர்ஸனல் என்றால், உடையை அவிழ்த்துப்போட்டு நிர்வாணமாக நிற்பதைத் தாண்டிய பர்ஸனல். நிர்வாணத்திலாவது    உடையைத்தான் அவிழ்த்துப்போட்டு நிற்கிறோம். வாட்ஸப்பில் மனதையும் திறந்து காட்டிக்கொண்டு நிற்கிறோம். நாம் சிந்திப்பது, நம் வக்கிரம் அனைத்தும் வாட்ஸப்பில் சிதறிக்கிடக்கிறது. அதனால்தான் வாட்ஸப் சாட்டை அனைவரும் பொத்திப் பொத்திப் பாதுகாக்கிறார்கள்.

இந்த பர்ஸனல் ஃபீல் கொடுப்பதால்தான்    மெசெஞ்சரில் பேசிக்கொண்டு இருந்தாலும், வாட்ஸப் நம்பர் கொடுங்கள் தோழி என பிச்சைக்காரர்கள் போல இந்திய சமூகம் கெஞ்சிக்கொண்டு கிடக்கிறது. மெசஞ்சரில் புடுங்கிக் கிழிச்சது பத்தாதா என பெண்கள் மைண்ட் வாய்ஸ் எவ்வளவு சத்தமாக வெளியே கேட்டாலும் ஆண்களின் செவிட்டுக் காதுக்கு விழுவதேயில்லை.

ஈ மெயிலில் ஒரு பெண் ஹாய் அனுப்புவதற்கும், மெசஞ்சரில் ஹாய் அனுப்புவதற்கும், வாட்ஸப்பில் அதே பெண் ஹாய் அனுப்புவதற்கும் பெரிய வித்தியாசம் இங்கே உள்ளது. வாட்ஸப்பில் ஒரு ‘ஹாய்' பார்த்ததும் ஆண்களுக்கு ஜிவ் என்று இருக்கிறது. பெண்களுக்கும் வாட்ஸப் நம்பர் கொடுப்பது என்பது தங்கள் அந்தரங்கப் பகுதியின் ஒரு சிறு இடத்தை காண்பிப்பது போல நினைத்துக்கொள்கிறார்கள். சில பெண்கள் வாட்ஸப் நம்பர் கொடுத்து விட்டு, வெட்க ஸ்மைலி போடுவார்கள். இதற்கு என்ன கண்றாவி அர்த்தம் என்று இன்று வரை புரிந்ததில்லை.

ஏன் இன்று நம்மால் வாட்ஸப் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என மொத்தமாகப் பார்த்தால் 1) லவ் மற்றும் செக்ஸ் 2) மெசேஜ் ஃபார்வேர்ட் 3) குரூப் சாட்

1) நேரில் பொதுவாக நம் ஆட்களுக்கு ரொமான்ஸ் செய்யத் தெரியாது. அடிப்படையிலேயே நம் ஆண்கள் முசுடுகள். மேட்டர் நடக்கும் போது மட்டும் போனால் போகிறது என ஓரிரு காதல் வசனம் பேசுவார்கள். லவ் யூ சொல்வது கூட அப்போது மட்டுமே! பெண்களுக்கு காமத்தை விட அதிகம் காதல் மொழிகள் பிடிக்கும். அதற்கு வழிவகை செய்தது வாட்ஸப். நேரில் முசுடாகவும் கூச்ச சுபாவியாகவும், ரொமான்ஸ் செய்யத் தெரியாத இந்திய ஆண், வாட்ஸப்பில் விஸ்வரூபம் எடுத்து ஜிபி கணக்கில் காதல் வசனம் பேச ஆரம்பித்தான். பெண்களுக்கு ஏகக் கொண்டாட்டம் ஆகிப்போனது.

வாட்ஸப்பில் ஆடியோ மெசேஜ் மற்றும் வீடியோ சாட் அறிமுகப்படுத்தப்பட்ட பின் ‘விர்ச்சுவல் சாஃப்ட்    போர்ன்' ஆக அதுவரை இருந்தது, ‘விர்ச்சுவல் ஹார்ட் கோர் செக்ஸ்' ஆக மாறிப்போனது. என்னதான் காதலனாக இருந்தாலும் நேரில் உடை களைந்து காட்டு என்று சொன்னால் எந்தப் பெண்ணால் காட்ட முடியும் ? ஆனால் வாட்ஸப்பில் இந்தச் சிக்கல் இல்லை. கேட்கவும் முடிந்தது, காட்டவும் முடிந்தது, எந்தத் தயக்கமும் இல்லாமல்.

2) செய்தித்தாளே படிக்காத பெரும் கூட்டம் நம் நாட்டில் உள்ளது. அவர்களுக்கு ஆன்லைன் செய்தி பக்கங்களும் தெரியாது, விருப்பமும் இல்லை. அது மட்டுமல்லாமல் உண்மைச் செய்திகளை விட பொய், புரட்டு, வதந்திகளுக்குத்தான் நம் மக்களிடையே ஆர்வம் அதிகம். வாட்ஸப் ஃபார்வேர்ட் மெசேஜ்கள் அந்தச் சேவையை செவ்வனே செய்தன. இதற்கு என்று ஒரு எழுத்து வடிவம் இருக்கிறது. இந்த வடிவத்திற்கு படிக்காத பாமரன் முதல் கல்லூரி ப்ரொஃபசர் வரை அடிமை. அது மட்டுமல்லாமல் நடுநிலைமைச் செய்திகளை விட தங்களுக்கு பிடித்த கட்சி, கொள்கை, மதம், சார்ந்திருக்கும் இயக்கம் சம்மந்தமாக பெருமைக்குரிய செய்திகளை மட்டுமே படிக்கும் ஆர்வமுள்ளவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் சமூகம் நம்முடையது. சில வருடங்களுக்கு முன் ரஜினி ரசிகன், ஹலோ கமல் போன்ற பத்திரிகைகள் ரசிகர்களுக்காக வந்துகொண்டிருந்தன. அந்த வேலையை இப்போது வாட்ஸப் குழுக்கள் மற்றும் ஃபார்வேர்ட் மெசேஜ்கள் பார்த்துக்கொள்கின்றன. நியூ லைஃப் ,மருதம் போன்ற பாலியல் பத்திரிகைகளும் வந்துகொண்டிருந்தன அல்லவா ? அந்த பொறுப்பையும் வாட்ஸப் மெசேஜ்கள் எடுத்துக்கொண்டன. இந்த வாட்ஸப் ஃபார்வேர்ட் மெசேஜின் பவர் நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்று. பொதுமக்களிடையே இவற்றுக்கு அவ்வளவு நம்பகத்தன்மை.

3) குரூப் சாட் பர்ஸனல் மற்றும் அலுவல் ரீதியாக முக்கியப் பங்காற்றுகிறது. என் நண்பர் வருடம் 100 கோடிக்கு மேல் டர்ன் ஓவர் செய்யும் பெரிய நிறுவனத்தில் எம் டி. எல்லா மேனேஜ்மெண்ட் வேலையும் வாட்ஸப்பிலேயே முடிச்சிடறோம். வாட்ஸப்புலதான் மொத்த ஆஃபீஸும் ஓடிட்டு இருக்கு என்று சொன்னார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இப்படி வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட இந்த செயலி இல்லாமல் நம்மால் இருக்க முடியுமா ? நிச்சயம் முடியும். குடி, சிகரட், பஜ்ஜி போல இதுவும் நமக்குப் பழக்கமாகி விட்டது, அவ்வளவுதான். இது இல்லாமல் போனால் குடி முழுகி விடாது.

அலுவல் ரீதியாக வாட்ஸப்பை முழுமையாக பயன்படுத்துவதும் சரியல்ல என்பது என் தனிப்பட்ட கருத்து. அடிப்படை கம்யூனிகேஷனுக்கு பயன்படுத்தலாம். பர்ஸனல் விஷயத்திலும் அளவாக வாட்ஸப்பை பயன்படுத்த வேண்டும்.

வாட்ஸப் ஒரு நல்ல கம்யூனிகேஷன் ஆப். அது எளிமையானது. பயன்படுத்த சுலபமானது. இதையே இன்னொரு விதமாகச் சொன்னால், சோம்பேறிகள், முட்டாள்கள் அனைவருக்கும் இது உகந்தது.

ஏப்ரல், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com