ஷேரிங் ஆப் இல்லாத உலகு: இடப்பிரச்னையும் மனப்பிரச்னையும்

ஷேரிங் ஆப் இல்லாத உலகு:
இடப்பிரச்னையும் மனப்பிரச்னையும்
Published on

சிறுவயதில் ‘ஷேரிங் ஈஸ் கேரிங்' என்று சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால், அதைப் பெரும்பாலானோர் மதிக்கவில்லை, எதையும் யாருடனும் பகிர்ந்துகொள்ளவில்லை. யாராவது கை நீட்டிக் கேட்டாலும்கூட, ‘அஸ்கு புஸ்கு, இது என்னோடது' என்று மறுப்பதுதான் வழக்கமாக இருக்கிறது.

ஆனால், செல்ஃபோன், இன்டர்நெட் புரட்சியால் இந்த ஷேரிங் இப்போது நம்முடைய அன்றாடப் பணியாகிவிட்டது. அதுவும் ஒருமுறை, இரண்டுமுறை அல்ல, நாள்முழுக்கப் பலமுறை பலவற்றையும் ஷேர் செய்துகொண்டே இருக்கிறோம், புகைப்படங்கள், வீடியோக்கள், ஒலிப்பதிவுகள், இணையத் தளங்களின் முகவரிகள், திருட்டு பிடிஎஃப்கள், நல்ல பிடிஎஃப்கள் என்று அனைத்தையும் ஒற்றைக் கிளிக்கில் ஊர்முழுக்க அனுப்பிக்கொண்டிருக்கிறோம். நேரடிச் செய்திகள், மின்னஞ்சல்கள், ஃபேஸ்புக், வாட்ஸாப், டெலகிராம் குழுக்களுக்கு அனுப்பும் செய்திகள் என்று பல வழிகளில் நமக்குப் பிடித்த எதுவும் சில விநாடிகளில், மிஞ்சிப்போனால் சில நிமிடங்களில் பிறருக்குக் கொடுத்துவிடுகிற சாத்தியத்தைத் தொழில்நுட்பம் அளித்திருக்கிறது.

தொண்ணூறுகளில் இணையம் நம் ஊருக்கு அறிமுகமானபோது இதுபோன்ற ஷேரிங் மனநிலையோ பழக்கமோ இல்லை. அதற்குக் காரணம் இணையவாசிகளுடைய குறுகிய மனம் இல்லை, இணையமே குறுகிக் கிடந்தது, இதற்கெல்லாம் போதுமான இடம் (Space) இல்லை.

இங்கு நான் இடம் என்று சொல்வது, நாம் பகிர்ந்துகொள்கிற கோப்புகளைச் சேமித்துவைக்கிற டிஜிட்டல் இடத்தைத்தான். ஒரு வீட்டில் இத்தனைப் பொருட்கள் அல்லது பெட்டிகளைத்தான் அடுக்கமுடியும் என்று ஒரு வரம்பு இருக்குமில்லையா? ஒருவேளை பெரிய வீடாக இருந்தாலும்கூட, அதன் வாசற்கதவு குறுகலாக அமைந்துவிட்டால் ஒரு நிமிடத்தில் இத்தனைப் பெட்டிகளைத்தான் உள்ளே கொண்டுவந்து வெளியில் கொண்டுசெல்ல இயலும் என்கிற வரம்பும் வந்துவிடுமில்லையா? இவை இரண்டும் சேர்ந்து அன்றைய இணையத்தில் ஷேரிங்கைக் கட்டுப்படுத்தியிருந்தன.

எடுத்துக்காட்டாக, ஒருகாலத்தில் மின்னஞ்சல் பெட்டியின் ஒட்டுமொத்த அளவே 2MB(மெகாபைட்)தான் இருந்தது. இன்றைக்கு நாம் பார்க்கிற ஓர் உயர்தர வீடியோவின் முதல் சில விநாடிகளே அந்த 2MB நிரப்பிவிடும். அத்தனூண்டு இடத்துக்குள் புகைப்படம், வீடியோ, ஆடியோவையெல்லாம்  சேர்த்துவைக்கவும் பிறருக்கு அனுப்பவும் ஏது வழி?

இதேபோல், நாம் அனுப்பும் மின்னஞ்சல்களின் அளவிலும் கட்டுப்பாடுகள் இருந்தன. இந்த அளவுக்குமேல் கோப்புகளை இணைத்து (File Attachments) அனுப்ப இயலாது என்று மின்னஞ்சல் மென்பொருளே தடை போட்டுவிடும். பல நேரங்களில் அந்த அளவுக்குள் உள்ள கோப்புகள்கூட இணையத்தின் வேகக்குறைவு காரணமாக நெடுநேரத்துக்குச் சுற்றிக்கொண்டிருக்கும்.

சரி, எனக்கு மின்னஞ்சலே வேண்டாம், ஏதாவது இணையத் தளத்தில் இந்தக் கோப்புகளை ஏற்றி அனுப்புகிறேன் என்றால், அதிலும் சிக்கல். அந்த இணையத் தளங்களுக்கும் இட நெருக்கடி இருக்கும், அவற்றிலும் பெரிய கோப்புகளை அனுப்ப முயன்றால் ‘சான்ஸே இல்லை' என்று முகத்தில் அறையும், அல்லது,, ‘ரொம்ப நேரமாகும், பரவாயில்லையா?' என்று பொறுமையைச் சோதிக்கும்.

இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நம் மக்கள் சில தந்திரமான வழிகளைக் கண்டுபிடித்தார்கள். முதல் வழி, பெரிய கோப்பை Zip செய்து, அதாவது, சுருக்கிச் சிறிதாக மாற்றி அனுப்புவது, மறுமுனையில் உள்ளவர் அதை Unzip செய்து, அதாவது, விரித்துப் பெரிதாக்கிப் பார்த்துக்கொள்வது. பெரிய குடையை மடித்துச்

சிறிதாக்கிக் கையில் வசதியாக எடுத்துச்செல்கிறோம், மழை வரும்போது விரித்துப் பயன்படுத்துகிறோம், அதேபோல்தான் இதுவும்.

ஆனால், சில பெரிய கோப்புகள் Zip செய்தபிறகும் அவ்வளவாகச் சுருங்காது. 5Mஆ அளவுள்ள கோப்பு 4.3Mஆ என்று சுருங்கி நிற்கும், அதை அனுப்புவது சாத்தியமில்லை.

அப்போது, இரண்டாவது வழி கை கொடுக்கும்: அந்தக் கோப்பைப் பல துண்டுகளாக உடைத்துத் தனித்தனியாக அனுப்புவது, மறுமுனையில் உள்ளவர் அவற்றைச் சேர்த்துப் பார்த்துக்கொள்வது.

எடுத்துக்காட்டாக, உங்களிடம் abcd.mp3 என்ற பெரிய இசைப் பாடல் உள்ளது என்று வைத்துக்கொள்வோம். அதை Split and join வகை மென்பொருள்களிடம் கொடுத்தால் 5MB அளவுள்ள அந்தக் கோப்பை abcd.mp3.part1, abcd.mp3.part2 என்று தலா 1Mஆ அளவுள்ள ஐந்து கோப்புகளாகப் பிரித்துவிடும். இவை ஒவ்வொன்றும் சிறிய கோப்புகள்தான் என்பதால், இவற்றை நாம் ஐந்து தனித்தனி மின்னஞ்சல்களில் அனுப்பலாம். அதன்பிறகு, மறுமுனையில் உள்ள நம் நண்பர் இந்த ஐந்தையும் தனித்தனியாகத் தரவிறக்குவார் (டவுன்லோட் செய்வார்), அதே Split and join வகை மென்பொருளிடம் இவற்றைத் தருவார், அது இவற்றை இணைத்து 5Mஆ பாடலாக மாற்றித் தரும்.

இது என்ன தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வழியாக இருக்கிறதே என்று நீங்கள் இப்போது திகைக்கலாம். ஆனால், அன்றைக்கு எங்களுக்கு வேறு வழியில்லை. இதையெல்லாம் செய்தால்தான் விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளமுடியும்.

இந்தத் தொல்லைகள் அனைத்தையும் ஒரு நன்னாளில் கூகுள் முடித்துவைத்தது. ஏகப்பட்ட இட வசதி, பெரிய, மிகப் பெரிய கோப்புகளை அனுப்பும் வசதி ஆகியவற்றுடன் அவர்களுடைய ஜிமெயில் மின்னஞ்சல் சேவை அறிமுகமானபோது 99% பேர் அதை நம்பக்கூட இல்லை. ‘இதெல்லாம் கட்டுப்படியாகாது, ஒரு வாரத்துல இழுத்து மூடிடுவாங்க, இல்லாட்டி, ஏகப்பட்ட காசு கேட்பாங்க' என்றார்கள்.

ஆனால், கூகுள் அதற்குள் இணையத்தின் இடப் பிரச்னையைத் தீர்க்கும் வழியைக் கண்டுபிடித்திருந்தது, முன்பு எந்த விஷயத்திலெல்லாம் கஞ்சத்தனம் பார்த்தார்களோ அவை அனைத்திலும் தாராள மனப்பான்மையுடன் நடந்துகொண்டது. மக்களும் ஈமெயில் என்ற சொல்லை ஜிமெயில் என்று மாற்றும் அளவுக்குப் பெரும் ஆதரவை அளித்து அதை வெற்றிபெறவைத்தார்கள்.

கிட்டத்தட்ட இதே நேரத்தில் இணையத்தின் வேகமும் வீச்சும் பெருகியது, கோப்புகளைப் பகிர்ந்துகொள்வதற்கு மின்னஞ்சலுக்கு வெளியிலும் பல வழிகள் வந்தன. எடுத்துக்காட்டாக, நாம் எடுக்கிற வீடியோக்களை அவை எந்த அளவாக இருந்தாலும் ஒரே கிளிக்கில் உலகம்முழுமைக்கும் பகிர உதவுகிற யூட்யூப் போன்ற சேவைகள், தனிப்பட்ட கோப்புகளைத் தொகுத்துக் கையாள உதவுகிற டிராப்பாக்ஸ் போன்ற சேவைகள் என்று இணையத்தில் இடப் பிரச்னை படிப்படியாக முழுக்கத்தீர்ந்துவிட்டது. அதனால்தான் இன்றைய இணைய உலகம் பகிர்ந்துகொள்ளலை நம்பிக் கட்டமைக்கப்படுகிற சூழ்நிலை உண்டாகியிருக்கிறது.

எனினும், இதில் ஓர் எதிர்மறை விளைவும் இருக்கிறது. எதையும் எளிதில் பகிரலாம் என்ற நிலைமை வந்துவிட்டதால், மக்கள் தங்களுடைய சொந்தக் கோப்புகளைமட்டுமின்றி, காப்புரிமை பெற்ற மற்ற கோப்புகளையும் சிறிதும் சிந்திக்காமல் பகிர்ந்துகொள்கிறார்கள். அதனால் அறிவுசார்

சொத்துரிமை மதிக்கப்படுவதில்லை, படைப்பாளிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது என்ற புரிதலைப் பெருவாரியான மக்களுக்குக் கொண்டுசெல்வது எளிதல்ல. எதையும் பகிர்தல் மிக எளிதாகிவிட்டது. அதனால், டிஜிட்டல் கோப்புகள் அனைத்தும் அனைவருக்கும் இலவசம் என்கிற சிந்தனையுடன் ஒரு தலைமுறை வளர்ந்துவிட்டது. இடப் பிரச்னையை எளிதில் தீர்த்துவிட்டோம். இந்த மனப் பிரச்னையை என்ன செய்வது?

ஏப்ரல், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com