ஹாய் ப்ரோ!

ஹாய் ப்ரோ!

அறுபது வயதைக் கடந்த மருத்துவர் தன் மருத்துவ நிலையத்தின் போனை எடுத்தார்.

எதிர்முனையில் பேசியது ஓர் இளம் குரல். இருபது வயதுக்குள்ளிருக்கலாம்.

‘டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்குமா ப்ரோ?'

‘தம்பி நான் டாக்டர் பேசுறேன். எப்போ வேணும்?'

‘ப்ரோ, நாளைக்கு மாலை அஞ்சு மணிக்கு'

மருத்துவர் ‘ப்ரோ' (Bro) என்ற வார்த்தையில் களேபரமாகி இருந்தார்.

‘சான்ஸே இல்லை' என்று சொல்லி நங்கென்று வைத்துவிட்டார்.

ஓடிவந்த மூத்த நர்ஸ்.. ‘டாக்டர் உங்களை யாரு போனை எடுக்கச் சொன்னாங்க.. நீங்க ஆணியே பிடுங்க-வேண்டாம்‘ என செல்லமாகக் கோபித்துக்கொண்டார்.

டாக்டருக்கு வந்த கோபம் வேறு லெவலில் இருந்ததால், அவர் மாஸாக இருக்கட்டும் என்று அணிந்திருந்த டீ

சர்ட் வியர்வையில் நனைந்துபோயிருந்தது. ‘ப்ரோவாம்... சின்னப் பையனுங்க என்ன பேசுறானுக.. தக்காளி.. கெடைச்சான்னா.. செஞ்சிருவேன்' என்று முனகியவாறே சென்றார்.

இந்த ஒரு சம்பவத்துக்குள்தான் எத்தனை தேய்ந்துபோன சொல்லாடல்கள்? வயது வித்தியாசம் இன்றி ப்ரோ   என அழைப்பது முதல் பல கெட்ட வார்த்தைகளை தட்டி சரிசெய்து உருவாக்கிய சொற்கள் வரை பல  சொற்களைப் பேசிக்கொண்டே இருக்கிறோம். எழுதிக்கொண்டே இருக்கிறோம். என்ன சொல்வது என தெரியாதபோது வேற லெவல் என தப்பித்துக்கொள்கிறோம். தவறும்போது அண்ணன் வடிவேலு வழங்கிய வடபோச்சே என்கிறோம்.

லட்சக்கணக்கான சொற்களைக் கொண்ட அன்னைத் தமிழில் இவ்வளவு அருவருப்பூட்டும் தேய்வழக்கு

சொல்லாடல்களைப் பயன்படுத்தியும் கட்டற்ற இணையப் பக்கங்களில் எழுதி எழுதி தேய்ந்தும் போய்க்கொண்டிருப்பதைப் பார்த்தால் மொழி அறிஞர்கள் முகம் சுளிப்பார்கள்.

ஆனால் இதுதான் உலகம்.  இந்த கொரோனா வந்ததுதான்வந்தது, எல்லோரும் பாண்டமிக், வைரஸ், முகக்கவசம், வரலாறு காணாத,  போன்ற சொற்களைப் பேச ஆரம்பித்துவிட்டோம். கடந்த இரண்டாண்டுகளில் இது  தொடர்பான சொற்களே அதிகம் இடம் பிடித்துள்ளன. இதில் சமூக இடைவெளி என்ற  சொல் வாந்தி வரும் அளவுக்கு அதிகப் பயன்பாட்டில் இருந்து, இப்போது பேச்சிலும் செயலிலும் காணாமலே போய்விட்டது!

இங்கு மட்டுமில்லை. மிச்சிகனின் உள்ள ஒரு பல்கலைக்கழகம் 1976-இல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அதிகம் பயன்படுத்தப்பட்ட வெட்டியான சொல்லாடல்களைத் தேர்ந்தெடுத்து, ஒழிக்கவேண்டிய சொற்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

2021- -க்கான பட்டியலில் கோவிட், சோஷியல் டிஸ்டன்சிங் உள்ளிட்ட  ஆங்கிலச் சொற்கள் இடம் பெற்றுள்ளனவாம்!

அந்திமழை சார்பில் இதுபோல் அதிகம் பயன்படுத்தி தேய்ந்துபோன சில  சொற்களை தலைப்பாக அளித்து  கட்டுரை கேட்கும் விஷப் பரீட்சையில் இறங்கினோம். எழுத்தாளர்கள் முணுமுணுத்துக் கொண்டே எழுதிய ஐந்து கட்டுரைகள் இங்கே இடம் பெறுகின்றன. இவற்றின் தலைப்புதான் பழசு. உள்ளடக்கம் புதுசுதான்! இந்த தலைப்புகளையெல்லாம்  பேச்சில் அடிக்கடி பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு(?) அன்புடன் கேட்டுக்கொண்டு விடை பெறுகிறோம்!

டிசம்பர், 2021.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com