ஹாலிவுட்டின் பெண் கதாபாத்திரங்கள்

ஹாலிவுட்டின் பெண் கதாபாத்திரங்கள்

ஹாலிவுட் படங்களில் மிகப்பெரும்பாலும் ஆண்களே பிர-மாண்ட-மான ஹீரோக்களாகக் காட்டப்படுவார்கள். உள்ளூரிலிருந்து உலகைக் காப்பாற்றும் மிக முக்கியமான வேலை கொடுக்கப்பட்டு எல்லா ஹீரோக்களும் அதில் வெற்றி பெற்று, அமெரிக்காவைப் பற்றிக் கண்ணீர் மல்கப் பேசி, மயிர்க்கூச்சை வரவழைத்துப் புளகாங்கிதம் அடைவார்கள். ஆனால் இவை மட்டுமே ஹாலிவுட் படங்கள் அல்ல.

இப்போதுதான் அவர்களுக்கு லேசாக சுரணை வந்து, Inclusivity என்று சொல்லக்கூடிய, அனைத்து தரப்பினரையும் சமமாக மதிக்கும் போக்கைப் படங்களில் காட்டத் தொடங்கியுள்ளனர். உதா ரணமாக, தொண்ணூறுகள் - ஏன் கடந்த பத்து வருடங்கள் முன்னர்வரைகூட, ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களில் ஒரு கறுப்பின கதாபாத்திரம் வந்தால் கட்டாயமாகப் பாதிப் படத்தில் பொடுக் என்று உயிரைத் தியாகம் செய்யப்போகிறது என்று பொருள். அப்படித்தான் கறுப்பினத்தை ஹாலிவுட் மதித்தது. ஆனால் இப்போது போனால் போகிறது என்று முக்கியமான கதாபாத்திரங்கள் கொடுக்கின்றனர் (இந்தப் பின்னணியில்தான் ஐம்பதுகள் மற்றும் அறுபதுகளில் ஹாலிவுட்டின் முக்கியமான ஹீரோவாக விளங்கிய

சிட்னி பாய்ட்டியரை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். 1964ல் ஆஸ்கர் வாங்கிய முதல் கறுப்பின நடிகர் அவர்). இதுபோலத்தான் பெண்களும். கறுப்பின நடிகர்கள் அளவுக்குப் பாரபட்சம் காட்டப்படாமல், ஆனால் ஊறுகாய் போலத்தான் பெண் கதாபாத்திரங்களும் ஹாலிவுட்டில் கருதப்பட்டன. முக்கியமான பெண் கதாபாத்திரமாக இருந்தாலும் கூட, ஹீரோவின் மீட்டர் என்னவோ அதைத் தாண்டாமலேயேதான் வடிவமைக்கப்பட்டுவந்தன. இப்போதுமே அப்படித்தான். ஆனால் ஆங்காங்கே ஹாலிவுட்டில் சில அதிசயங்கள் நிகழும். அப்படி, பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சில படங்களையே இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

Gone with the Wind

சந்தேகமில்லாமல் இப்போதுவரை பேசப்படும் ஒரு பெண் கதாபாத்திரம் இடம்பெற்ற படம். அமெரிக்காவின் மிகப் புகழ்பெற்ற நாவல். எழுதியவர் ஒரு பெண் - மார்கரெட் மிட்செல். இதனாலேயே அதில் இடம்பெற்ற ஸ்கார்லெட் ஓ ஹாரா என்ற கதாநாயகியின் பாத்திரமும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.  ஸ்கார்லெட் ஓ ஹாரா என்ற பெண்ணில் மிட்செலின் பல கூறுகளை நாம் கவனிக்க முடியும். மிட்சலைப் போலவே ஸ்கார்லெட்டும் பல ஆண்களிடம் பழகுவாள். பலரும் இவள் பின்னால் பைத்தியமாகத் திரிவார்கள். ஆனால் ஸ்கார்லெட்டுக்குத் தேவையானது காமம் அல்ல. காதலும், அன்பும்தான் அவளது தேவைகள். பல ஆண்களைக் கடந்தபின்னர், நாவல் முடியும் காலத்தில்கூட ஸ்கார்லெட், துணிவு நிரம்பிய மனதோடு இன்னொரு புதிய நாளை எதிர்நோக்கி வாழ்வதாக நாவலும் படமும் முடியும். மிட்செலும் அப்படி இருந்தவர்தான்.

இருபதாம் நூற்றாண்டின் இருபதுகளில், ஒரு பெண் எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று சட்டதிட்டங்கள் தடுத்தனவோ அப்படியெல்லாமே இருந்து, வாழ்ந்துகொண்டிருக்கும் ஸ்கார்லெட் ஓ ஹாராதான் நாவலின் மிகப்பெரிய விசேடம். நாவலைப் படிக்கத் தொடங்கும் யாருக்குமே ஸ்கார்லெட்டை அவ்வளவு எளிதில் மறந்துவிட இயலாது என்பது புரியும். மெல்லமெல்ல ஸ்கார்லெட்டின் மீது காதலும் நமக்கு எழும். எத்தனையோ தருணங்களில் எடுத்தெறிந்து பேசி, குடித்து ஆர்பாட்டம் செய்து, அசிங்கமாக நடந்துகொண்டு, ஒரு வில்லி போல்தான் நடந்துகொள்வாள் ஸ்கார்லெட். ஆனால் அது எல்லாமே, இளம்பருவத்தைப் பிறரைப் போல அனுபவிக்க முடியாமல் போய்விட்டதே என்று அவளுக்கு இருக்கும் கழிவிரக்கத்தாலும் கோபத்தாலும்தான் என்பதும் நமக்குப் புரியும். இதனால் ஸ்கார்லெட்டோடு நன்றாகவே நம்மை Relate செய்துகொள்ளமுடியும். ஸ்கார்லெட்டின் அத்தனை தருணங்களிலும் நாம் அவளுடன் கூடவே இருப்பதால் நம்மால் ஸ்கார்லெட்டை உள்ளும் புறமுமாகக் கச்சிதமாகப் புரிந்துகொள்ளவும் முடியும்.

இந்த நாவல், 1939ல் திரைப்படமாக வெளிவந்தது. மிகப்பெரிய ஹிட்டாக மாறியது. அமெரிக்கர்கள் இன்றும் நினைவு வைத்திருக்கும் க்ளாஸிக்காக இப்போதுவரை திகழ்கிறது. மொத்தம் மூன்று இயக்குநர்கள் இயக்க, ஸ்கார்லெட்டாக விவியன் லேய், ரெட் பட்லராக அக்காலத்தின் சூப்பர்ஸ்டார் க்ளார்க் கேபிள் ஆகியோர் நடித்து வெளிவந்த படம். மொத்தம் 1400 நடிகைகள் பரிசீலிக்கப்பட்டு, அதில் ஒருவரான விவியன் லேய் இறுதியில் தேர்ந்தெடுக்கப் பட்டார். பத்து ஆஸ்கர் விருதுகள் இப்படத்துக்குக் கிடைத்தன.

The Miracle Worker

ஹெலன் கெல்லரைப் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். சமுதாய மாற்றத்துக்காக உலகெங்கும் பாடுபட்டவர். மிகப்பெரிய போராளி. பிறந்து பத்தொன்பது மாதங்களிலேயே கேட்கும் சக்தியையும் பார்வையையும் இழந்தவர். மாற்றுத் திறனாளிகளுக்காகத் தனது வாழ்க்கையையே கொடுத்தவர். பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார். எத்தனை உடல்ரீதியான பிரச்னைகள் இருந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழ்க்கையில் பெரிதாக சாதிக்கமுடியும் என்ற நம்பிக்கையை பல்லாயிரம் மக்களின் மனதில் விதைத்தவர்.

ஆனால், இதெல்லாம் செய்வதற்கு முன்னால், இளம்வயதில், தனக்கு இப்படிப்பட்ட குறைபாடுகள் இருக்கின்றன என்பதால் பிறரிடம் இயல்பாகப் பழக முடியாமல் தாழ்வு மனப்பான்மையில் கோபம், கழிவிரக்கம் ஆகியவற்றால் ஹெலன் கெல்லர் பாதிக்கப்பட்டார். இதனால் பிறர் மேல் எரிந்து விழுவது, வெறித்தனமாக நடந்துகொள்வது என்பவை அவரது இயல்புகளாக இருந்தன. இதனால், தங்களது மகள் மேல் கரிசனம் கொண்ட அவரது பெற்றோர், பார்வையில்லாதவர்களுக்கான ஒரு அமைப்பை அணுக, அங்கிருந்து ஹெலன் கெல்லருடன் வீட்டிலேயே இருந்து அவரை எல்லா விதங்களிலும் பயிற்றுவிக்க ஆன் சல்லிவன் என்ற ஒரு ஆசிரியை வருகிறார். ஆனால் ஹெலன் கெல்லருக்கு அவரைப் பிடிக்கவில்லை. தனது முழு வன்முறையையும் ஆன் மீது காட்டுகிறார். ஆனால் பொறுமை இழக்காத ஆன், கண்டிப்புடன் ஹெலன் கெல்லரின் பிடிவாத குணத்தையும் அவரது ஈகோவையும் படிப்படியாக மாற்றுகிறார்.

நிஜத்தில் நடந்த சம்பவங்களை இந்தத் திரைப்படம் உணர்ச்சிகரமாகக் காட்டுகிறது. ஆன் சல்லிவனாக நடித்த ஆன் பேங்க்ராஃப்ட்,, ஹெலன் கெல்லராக நடித்த பாட்டி (Patty) ட்யூக் ஆகிய இருவருமே மிகவும் அற்புதமாக நடித்திருப்பார்கள். இந்தப் படத்தில் ஹெலன் கெல்லரைப் பார்த்தால் உங்களுக்குக் கோபம், பரிதாபம், சோகம், எரிச்சல் என்று எல்லா உணர்ச்சிகளும் வரும். தங்கள் மகளுக்கு இப்படி ஆகிவிட்டதே என்ற கழிவிரக்கத்தில் அவள் விரும்பியதெல்லாம் செய்யும் பெற்றோரின் பிரச்னையை ஒரு காட்சியில் ஆன் சல்லிவன் கோபத்துடன் அவர்களுக்குச் சொல்லிப் புரியவைப்பார். அவர்களோ தங்களது மகளை ஆன் சல்லிவன் கொடுமைப்படுத்துகிறார் என்று நினைத்து அலறுவார்கள். ஆனால் அது கொடுமை இல்லை- இத்தனை கண்டிப்பு இருந்தால்தான் ஹெலன் கெல்லரின் பிடிவாதம் போகும் என்று செயலில் காட்டுவார் ஆன் சல்லிவன். ஒவ்வொன்றாக எல்லாவற்றையும் ஹெலன் கெல்லருக்குக் கற்றுக்கொடுப்பார்.

1962இல் வெளியான இந்தப் படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. இதில் ஆன் சல்லிவனாக நடித்த ஆன் பேங்க்ராஃப்ட்டுக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கரும், ஹெலன் கெல்லராக நடித்த பாட்டி ட்யூக்குக்கு சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கரும் கிடைத்தன. ஹாலிவுட்டின் மிக உறுதியான பெண் கதாபாத்திரத்துக்கு இந்தப் படம் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

Silkwood

கேரன் சில்க்வுட் என்பவர் 1972இல் ஆக்லஹோமாவில் ஒரு மிகப்பெரிய எரிபொருள் நிறுவனத்தில் பணிக்கு

சேர்கிறார்.  ஆனால் சிறுகச்சிறுக அந்த நிறுவனத்தில் தொழிலாளிகளின் பாதுகாப்புக்குப் பல பிரச்னைகள் இருக்கின்றன என்று அவருக்குப் புரிகிறது. உள்ளேயே சோதனைகள் செய்யத் துவங்குகிறார். அந்த நிறுவனம் தனது தயாரிப்புகளில் பல திருகுவேலைகள் செய்திருப்பதைக் கண்டுபிடிக்கிறார். சில நாட்களில் கேரனின் உடலிலேயே அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் 400 மடங்கு அதிகமான ப்ளூட்டோனியம் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். உடனடியாக அந்த நிறுவனத்தின் கோல்மால்கள் பற்றித் தகவல்கள் சேகரிக்க ஆரம்பிக்கிறார். 1974ல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் நிருபரான டேவிட் பம்ஹாமைத் தொடர்புகொண்டு இவற்றையெல்லாம் விளக்குகிறார். அவரை நேரில் சந்தித்து ஆதாரங்களைக் கொடுப்பதற்காக முப்பது மைல்கள் கார் பயணம் மேற்கொள்கிறார். ஆனால் வழியிலேயே அவரது கார் விபத்துக்குள் ளாகி, அங்கேயே இறக்கிறார்.

அவரது இறப்பில் பல மர்மங்கள். அவரது காரை பின்னால் இருந்து வேறொரு பெரிய வண்டி இடித்துத் தள்ளியதற்கான ஆதாரங்கள் கண்டு

பிடிக்கப்படுகின்றன. கூடவே, நிருபருக்குக்  கொடுக்க வேண்டிய ஆதாரங்கள் எவையுமே அவரது காரில் இல்லை.

இதனால் பின்னாட்களில் கேரன் சில்க்வுட்டின் தந்தை அந்த எரிபொருள் நிறுவனத்தின் மீது வழக்குப் போட்டு, அது ஒரு மிகப்பெரிய செய்தியாக விவாதிக்கப்பட்டது. இறுதியில் அந்த நிறுவனம் பத்து லட்சம் டாலர்கள் சில்க்வுட்டின் குடும்பத்துக்குக் கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு, தனிப்பட்ட முறையில் அந்த நிறுவனம் கிட்டத்தட்ட ஒன்றேகால் மில்லியன் வழங்கி, கேஸை மூடியது.

இந்த உண்மைச் சம்பவம்தான் 1983ல் மெரில் ஸ்ட்ரீப் நடிக்க, Silkwood என்ற பெயரில் திரைப்படமாக வெளியானது. 2000இல் வெளியான, ஜூலியா ராபர்ட்ஸ் நடித்த எரின் ப்ரோகோவிச் படம்தான் பலருக்கும் தெரியும். ஆனால் அதற்கெல்லாம் பதினேழு வருடங்கள் முன்னரே கிட்டத்தட்ட அதேபோன்ற கதையமைப்புடன் சில்க்வுட் வெளியாகியாயிற்று. சில்க்வுட்டுக்குத் திருமணம் ஆகி, குழந்தைகள் பிறந்தபின்னர் விவாகரத்து நடந்து, பின்னர்தான் அந்த எரிபொருள் நிறுவனத்தில் சேர்கிறார். அவரது வாழ்க்கையின் பிரச்னைகள், பின்னர் அந்த நிறுவனத்தில் அவர்  சந்தித்த பிரச்னைகள் என்று எல்லாமே சேர்ந்து, சில்க்வுட் படத்தை ஒரு சுவாரஸ்யமான படமாக ஆக்கியிருக்கும். மெரில் ஸ்ட்ரீப் ஒரு மிகச்சிறந்த நடிகையும் கூட. எனவே, துணிந்து நின்று, தொழிலாளர்களின் நலனுக்காகக் குரல் கொடுத்த பெண் கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருப்பார். அந்த வருடத்துக்கான ஆஸ்கர்களில் பரிந்துரைக்கப்பட்டாலும் மெரில் ஸ்ட்ரீப்புக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை என்பது பெட்டிச் செய்தி.

இந்தப் படங்கள் தவிர, அனைவருக்கும் தெரிந்த Silence of the Lambs படத்தில் ஜூடி ஃபாஸ்டர் நடித்த க்ளாரீஸ் ஸ்டார்லிங், Alien படங்களில் சிகோனி வீவர் நடித்த ரிப்ளி கதாபாத்திரம், ஸ்பீல்பெர்க் இயக்கிய The Color purple படத்தில் வூப்பி கோல்ட்பெர்க் மற்றும் ஆப்ரா வின்ஃப்ரே நடித்த செலீ ஹேரிஸ் ஜான்சன் மற்றும் சோஃபியா கதாபாத்திரங்கள், கில் பில் படத்தில் உமா தர்மேன் நடித்த பியாட்ரிக்ஸ் கிட்டோ கதாபாத்திரம், ரிட்லி ஸ்காட் இயக்கிய Terms & Louise படத்தில் ஜீனா டேவிஸ் மற்றும் சூஸன் சரண்டன் நடித்த தெல்மா மற்றும் லூயிஸ் கதாபாத்திரங்கள், The African Queen படத்தில் கேதரின் ஹெப்பர்ன் நடித்த ரோஸ் சாயர் கதாபாத்திரம், Terms of Endearment படத்தில் ஷிர்லி மெக்லேன் மற்றும் டெப்ரா விங்கர் அம்மா மற்றும் மகளாக நடித்த அரோரா மற்றும் எம்மா கதாபாத்திரங்கள் (ஷிர்லி மெக்லேனுக்கு ஆஸ்கர் கிடைத்தது), The Accused படத்தில் ஜூடி ஃபாஸ்டர் நடித்த சாரா டோபியாஸ் கதாபாத்திரம் (ஜூடிக்கு ஆஸ்கர் கிடைத்தது. மிக உணர்வுபூர்வமான கதை. ஒரு பாரில் பலருக்கும் முன்னால் தன்னை ரேப் செய்த நபர் மேலும், அதைப் பார்த்துக் கைதட்டி மகிழ்ந்த கூட்டத்தினர் மேலும் சாரா என்பவர் போட்ட வழக்கு பற்றிய படம். பிங்க், நேர்கொண்ட பார்வை நினைவிருக்கும். இவற்றைவிட நேர்மையான படம்) உட்படப் பல படங்கள் உண்டு. அவை அனைத்துமே வலிமையான பெண்களைத் திரையில் காட்டிய படங்கள்.

இப்போது பல ஹாலிவுட் படங்களில் பெண்களே உறுதியான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆனால் இந்தக் கட்டுரையில் நான் குறிப்பிட்டிருக்கும் படங்கள், ஹாலிவுட், ஆண் நடிகர்களை ஹீரோ வொர்ஷிப் செய்துகொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட பெண்கள் சார்ந்த படங்கள்.

மார்ச், 2023

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com