ஒரே நிறுவனத்தில் எவ்வளவு காலம் வேலை பார்க்கவேண்டும்?

ஒரே நிறுவனத்தில் எவ்வளவு காலம் வேலை பார்க்கவேண்டும்?

படிப்பு முடித்து வேலைக்குப் போகிறவர்களுக்கு ஒரு குழப்பம் இருக்கும். புதிதாக நாம் சேரும்நிறுவனத்தில் எவ்வளவு காலம் வேலை செய்யவேண்டும்? ஒரே நிறுவனத்திலேயே குப்பை கொட்டுவது நல்லதா? வெவ்வேறு நிறுவனங்களுக்குச் செல்லவேண்டுமா? என்றெல்லாம் கேள்விகள் எழும். பத்து ஆண்டுகளில் பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தாவுகிறவர்களும் உண்டு. ஒரே இடத்தில் இருப்பவர்களும் உண்டு. ஒரு நிறுவனத்தில் எவ்வளவு நாட்கள் வேலை செய்யவேண்டும் என்ற ஆதாரமான கேள்வியை முன்வைத்து சில மூத்த அனுபவம் வாய்ந்த நிபுணர்களுடன் உரையாடினோம். அவர்கள் சொன்ன கருத்துகள் இங்கே:

அடுத்தகட்ட உயர்வுக்கு வழி!

இளநகை, தொழிலதிபர்

 ஆரம்ப கட்ட நிலையில் பணிக்குச் சேர்கிறவர்கள் தாங்கள் சேர்கிற இடத்தில் குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது இருந்தால்தான் அவர்களுக்கு நல்லது. அவர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ள முடியும். கற்றுக்கொள்ள முடியும். பட்டப்படிப்பு என ஐந்தாண்டுகள் கல்லூரியில் கற்பதுடன் அதற்கு அடுத்தபடியாக வேலைக்கு சேர்ந்த இடத்தில் கற்றுக்கொள்ளுதல் என ஐந்தாண்டுகள் தேவை. இந்த ஐந்தாண்டு காலகட்டத்தில் அவர்களுக்கு நிறுவனத்துக்குப் பங்களிப்பதைவிட நிறுவனம் இவர்களின் திறன்களை மேம்படுத்த பங்களிப்பு செய்வதே அதிகமாக இருக்கும். அதே சமயம் மேலாளர் போன்ற உயர்பதவிகளில் ஒரு நிறுவனத்தில்

சேர்கிறவர்கள் அங்கே குறைந்தது பத்து ஆண்டுகளாவது பணிபுரிந்தால்தான் அவர்களின் அடுத்தகட்ட உயர்வுக்கு வழி பிறக்கும். அவர்கள் பொதுமேலாளர், சி இ ஓ போன்ற பதவிகளுக்கு வர முடியும். அத்துடன் இவர்கள் இந்த பத்தாண்டுகளில் தங்கள் அனுபவத்தால் நிறுவனத்

துக்கு அதிக பங்களிப்பு செய்வார்கள். எந்த ஒரு வேலைத்திட்டத்தை எடுத்துக்கொண்டாலும் அதை முடிக்க குறைந்தது மூன்று ஆண்டுகளாவது ஆகும். எந்த மேலாளரும் தங்கள் நிறுவனத்தில் சாதனைகள் செய்ய பத்தாண்டுகள் தேவைப்படும் என்பதை உணர்ந்து அவ்வளவு ஆண்டுகள் பணிபுரிந்தால்தான் நல்லது.

சுயமாகக் கற்றுக்கொள்ளுங்கள்!

அலோசியஸ் ஜோசப், துணைப் பொதுமேலாளர், ஐடி துறை 

அலோசியஸ் ஜோசப், துணைப் பொதுமேலாளர், ஐடி துறை
அலோசியஸ் ஜோசப், துணைப் பொதுமேலாளர், ஐடி துறை

அரசு வேலையில் சேர்ந்து ஓய்வுபெறும்வரையில் அங்கேயே இருந்தது ஒரு காலம். அதுமட்டுமல்ல இரண்டாயிரமாவது ஆண்டுக்கு முன்பாக தனியார் துறையிலும் வேலைக்குச் சேர்பவர்கள் ஒரே நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிவர். ஏனெனில் அப்போது வாய்ப்புகள் குறைவு. அனால் இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பின்னால்  கடந்த இருபது ஆண்டுகளில் ஐடி துறை வந்தபிறகு இச்சூழல் மாறிவிட்டது. இங்கு எவ்வளவு ஆண்டு வேலை செய்கிறார் ஒருவர் என்பதைவிட பணிக்காலத்தில் எவ்வளவு கற்றுக்கொள்கிறார் என்பது முக்கியமாகக் கவனிக்கப்படும்.  எந்த ஒரு திட்டமும் (Project) தொடக்க நிலை, வளரும் நிலை, செயல்படும் நிலை என மூன்று நிலைகளைக் கொண்டது. ஒரே நேரத்தில் மூவர் இம்மூன்று நிலைகளில் பணிக்குச் சேர்கிறார்கள் என வைத்துக் கொள்வோம்.

தொடக்க நிலையில் சேர்ந்தவர் கற்றுக்கொண்டிருக்கும் விஷயங்கள் அபாரமாக இருக்கும். திட்டத்தின் வளர்நிலையில் சேர்பவர் நிறைய கற்றிருப்பார். அதே சமயம் திட்டத்தின் செயல்படும் நிலையில் அதில் சேர்பவருக்கு அதிகம் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் இருக்காது. இதெல்லாம் ஐடி துறையில் புதிதாக பணியில் சேர்பவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய அம்சங்கள். அதே சமயம் ஒரு வேலையில் கற்றுக்கொள்வதுஒரு புறம் இருந்தாலும் சுயமாகக் கற்றுக்கொள்ளவேண்டியதும் அவசியமாகும்.

இரண்டு ஆண்டுகளாவது இருக்கவேண்டும்!

பாஸ்கரசேதுபதி, இயக்குநர் ( பால்கொள்முதல்), லாக்டாலிஸ்

இந்தியா நல்ல தனியார் நிறுவனமாக இருப்பின் அங்கே வேலைக்குச் சேர்பவர்கள், வேலையின் அழுத்தத்தைத் தாக்குப் பிடித்து பணிசெய்கிறவர்களாக இருக்கும் பட்சத்தில் அங்கேயே பணிபுரிந்து ஓய்வுபெறலாம். அரசு நிறுவனங்களை விட தனியார் துறையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் வேகமாக இருக்கும். ஒரே நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரியும்போது அங்கே நமக்கு முக்கியத்துவமும் நம் பார்வைக்கு மதிப்பும் கிடைக்கும். ஆரம்ப நிலையில் சேர்பவர்கள் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது ஒரே நிறுவனத்தில் பணிபுரியவேண்டும். இப்போது இளைஞர்கள் சம்பள உயர்வைக் கருத்தில் கொண்டு பல நிறுவனங்கள் மாறுவது என இருக்கிறார்கள். இதுபோல் குறுகிய காலத்தில் பல நிறுவனங்களை மாற்றிக்கொண்டிருப்பவர்களை வேலைக்கு எடுப்பதை நிறுவனங்கள் விரும்புவதில்லை.  ஏனெனில் நிறுவனத்தின் சார்பில்  அவர் மீது செலுத்தும் நம்பிக்கை, கால முதலீடு, பயிற்சி முதலீடு போன்றவை அவர் மாறிச் சென்றுவிட்டால் வீணாகிப் போய்விடுமே என்ற அச்சம் இருக்கும்.

நம்பிக்கையைச் சம்பாதியுங்கள்!

புவனேந்திரபாபு, மூத்த துணைத் தலைவர், கிருஷி நியூட்ரிஷன் பிரைவேட் லிமிடட்

அடிக்கடி நிறுவனங்கள் மாறுவதெல்லாம் ஐடி கம்பெனிகளுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். உற்பத்தி சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிகிறவர்கள் குறைந்தது 10 ஆண்டுகளாவது அங்கே இருந்தாகவேண்டும். அப்போதுதான் தானும் வளர்ந்து நிறுவனத்துக்கும் பங்களிக்கமுடியும். நானும் பல பயோடேட்டாக்களை இப்போது பார்க்கிறேன். அதில் மூன்று பக்கங்களுக்கு வேலை பார்த்த நிறுவனங்கள் பெயர்களே வருகின்றன. மாறிக்கொண்டே இருக்கிறார்கள். மார்க்கெட்டிங் துறையில் உற்பத்தி செய்கிறவர்கள் பெயர் மார்க்கெட்டில் தெரியாது. அதைக் கொண்டுவந்து விற்கிறவர்தான் அதன் முகமாக இருப்பார். அப்படி இருக்கையில் அவர் சில காலம் தொடர்ந்து பணிபுரியவேண்டும். அதன் மூலம் சந்தையில் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை.

கவனமாக இருக்கவேண்டிய காலம்!

முனைவர் பி.மோகனா, தலைவர், மனிதவள நிர்வாகத்துறை, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் ஒர்க், சென்னை

எந்த நிறுவனமாக இருந்தாலும் ஆறு மாதம் முதல் ஓர் ஆண்டுவரை பயிற்சிக்காலமாக வைத்திருப்பார்கள். அதன் பின்னர்தான் பணி நிரந்தரம் செய்வார்கள். இந்த காலம் புதிதாக வேலைக்குச் சேர்பவர்களுக்கு அந்த நிறுவனம் பற்றி அறிந்துகொள்ளவும், அங்கிருக்கும் வேலை கலாச்சாரம் நிறுவனக் கலாச்சாரம், யார் நமது வாடிக்கையாளர்கள், நிறுவனத்துக்காக நாம் எப்படித் தயார் செய்துகொள்வது போன்றவற்றைப் புரிந்துகொள்ளவும் அவசியம் தேவை. இதற்கே சிலருக்கு ஓராண்டு தேவைப்படும். புதிதாக வேலைக்குச் சேர்பவர்கள் ஓரிடத்தில் இரு ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாவது இருந்தால்தான் அவர்களுக்கு வேறு இடத்தில் அதிக சம்பளத்துக்குச் செல்ல வசதியாக இருக்கும்.

கொரோனா முடிந்த சமயத்தில் நிறையபேர் கம்பெனி மாறினார்கள். ஐடி போன்ற துறைகளில் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று கம்பெனிகளுக்கு வேலை பார்த்த சம்பவங்களும் உண்டு. தற்போதைய செயற்கை நுண்ணறிவுத் துறை வளர்ச்சியால் பல துறைகளில் ஆட்கள் எடுப்பதே தற்காலிகமாகத் தேக்க நிலையில் உள்ளது. ஆகவே வேலையில் சேர்பவர்கள் தங்களை மேலும் தயார்ப்படுத்துவதில் கவனம் செலுத்தவேண்டும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com