சந்திரயான் -3 வெற்றி: அந்த 3 பயன்கள்

சந்திரயான் -3 வெற்றி: அந்த 3 பயன்கள்

ஜப்பான் நாடு ஸ்லிம் எனும் விண்வெளித் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. எரிபொருள் நீங்கலாக, அந்த விண்கலத்தின் எடை 200 கி.கி.தான். அதாவது, அதில் எந்த ஆய்வுக் கருவியும் இல்லை. அது ஏன் என்பதைப் புரிந்துகொண்டால் சந்திரயானின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.

அந்தத் திட்டத்தின் இலக்கு என்ன? குறைந்த காலத்தில் நிலவில் திட்டமிட்ட புள்ளியில் தரையிறங்கும் முறைமையை உருவாக்குவது; அதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிப்பது, வடிவமைப்பதுதான்!

நிலவில் காற்று இல்லாத நிலையில், அங்கு தரையிறங்குவது கடினமாக சவாலாக உள்ளது. ஒருவேளை அங்கு காற்று இருந்தால் பாராசூட், இறக்கை அமைப்பைப் பயன்படுத்தி, மெதுவாக இறங்கமுடியும்.

அதன் தரைப்பரப்பில் கிண்ண வடிவிலான குழிகளும் சிறிய, பெரிய பாறாங்கற்களும் இருக்கின்றன. இந்த இடர்களை கவனித்து தவிர்த்தால்தான் பத்திரமாகத் தரையிறங்க முடியும். பூமியிலிருந்து இந்தச் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த முடியாது. இங்கிருந்து ஒரு சிக்னலை நிலவுக்கு அனுப்பினால் அது போய்வர இரண்டே கால் நொடிகள் எடுத்துக் கொள்ளும். இந்த நேரத்துக்குள் எது வேண்டுமானாலும் நடந்துவிடலாம்.

செயற்கை நுண்ணறிவையும் விண்கலத்தில் பல சிறு ராக்கெட்டுகளையும் வைத்து, பல சவால்களையும் எதிர்கொண்டு விண்கலத்தை மென்மையாகத் தரை இறக்குகிறோம்.

எடுத்துக்காட்டாக, ராக்கெட்டில் இருக்கும் எரிபொருள் தளும்பவும் வாய்ப்பு உண்டு. விண்வெளியில் இந்தத் தளும்பல் இருக்காது. நிலவின் ஈர்ப்பு விசையால் எரிபொருள் தளும்பும். அதனால் ராக்கெட்டுக்கான எரிபொருளின் அளவு மாறுபடலாம். அதையும் தாண்டி விண்கலத்தின் நகர்வில்கூட திருப்பம் ஏற்பட்டுவிடலாம். இதனால்தான் குட்டிக்குட்டியான ராக்கெட்டுகளை பல திசைகளில் வைத்து, தளும்பல் ஏற்படும் திசையை கவனித்து, மற்ற திசைகளில்  அது ஏற்படாமல் செயற்கை நுண்ணறிவு மூலம் பேலன்ஸ் செய்யப்படுகிறது.

கயிற்றில் நடக்கும்போது கையில் ஒரு பெரிய கோலை வைத்து சமநிலையைப் பேணுவதைப் போலத்தான் இது!

எல்லாவற்றையும் சமாளித்து, விண்கலம் தானாகவே நிலவில் தரையிறங்கும்படி, தொழில்நுட்பத்தை வடிவமைப்பதும் செயல்படுத்துவதும்தான், தற்காலத்தின் மிகப்பெரிய சவால்.

1960 - களில் நிலவில் போய் இறங்கினால் போதும் என்கிற அளவில்தான், தொழில்நுட்பம் இருந்தது. இப்போது அப்படி அல்ல; இலக்கு வேறு. எதிர்காலத்தில் நிலவில் குடியிருப்பு அமையலாம்; அப்படி அமைந்தால் உணவுப்பொருட்களை எடுத்துச்செல்ல வேண்டும். ஆட்களையோ ரோபோக்களையோ கூட்டிச்சென்று, திரும்பக் கூட்டிவர வேண்டும். உரிய தளவாடங்களை எடுத்துச்செல்ல வேண்டும். இதற்கான தொழில்நுட்பம் இப்போது வேண்டும். 

இந்த நுட்பத்தை வடிவமைப்பதில்தான் இப்போதைக்கு சர்வதேச அளவில் போட்டி! நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தான், பல நாடுகளும் நிலவில் மென்மையாகத் தரையிறங்குவதில் முனைப்பு காட்டிவருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ஏழு முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு சீன முயற்சிகளும் வெற்றி; இரண்டு இந்திய முயற்சிகளில் ஒன்று வெற்றி; இஸ்ரேல், ஜப்பான், ரஷ்யா மூன்று நாடுகளின் முயற்சிகளும் தோல்வி.

புதிய தொழில்நுட்பத்தில் வெற்றி அடைந்துள்ள இரண்டு நாடுகளும் ஆசிய நாடுகள். 60-70களில் பின்தங்கிய நாடுகள் என்ற பெயரைக் கொண்டிருந்தவை, இவை.

இது, புதிய சர்வதேச சூழலை உருவாக்கியுள்ளது.

1967ஆம் ஆண்டில் ஐநாவின் மூலமாக விண்வெளி ஆய்வு தொடர்பாக, சோவியத் ரஷ்யா முன்வைத்த ஓர் உடன்படிக்கை கொண்டுவரப்பட்டது. அதில் அமெரிக்கா உட்பட 111 நாடுகள் கையெழுத்திட்டு இருக்கின்றன.

சோவியத் வடிவமைத்த சட்டம் என்பதால், விண்வெளி, நிலவு எல்லாம் மனித குலத்தின் பொதுச் சொத்து; அதில் யாரும் தனி உரிமை கொண்டாடக்கூடாது; யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம்; ஆனால் அதன் பலன் மனித குலம் முழுமைக்கும் பயனுடையதாக இருக்க வேண்டும் என விதிகள் உருவாக்கப்பட்டன.

அப்போது ஏற்றுக்கொண்ட அமெரிக்காவில், பின்னர் மனிதர்களையே அனுப்பியதை அடுத்து, அவசரப்பட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டோமோ என்று நினைக்கத் தொடங்கினார்கள். ஆனாலும், நிலா மீதான அமெரிக்காவின் மோகம் போய்விட்டது. இராணுவ ரீதியாக கவனம் செலுத்தியதைவிட, விண்வெளி ஆய்வில் முதலீட்டைக் குறைத்தது. 

அண்மையில், நிலவில் அரியவகை தனிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டதும் நிலைமை மாறியது. ஒரு டன் அரியவகைத் தனிமங்கள் இருந்தால், ஆண்டு முழுவதற்கும் நம் நாட்டுக்குத் தேவையான எரிசக்தியை உற்பத்தி செய்துவிடலாம். பூமியில் தோண்டி எடுப்பதால், சூழல், அரசியல் என பல பிரச்னைகளைத் தவிர்க்கமுடியும். நிலவில் தரையிறங்க முடிந்தால், அங்கு இருக்கிற பொருட்களை வைத்து அங்கேயே ஒரு கட்டமைப்பை உருவாக்கி அரிய தனிமங்களை எடுத்து வந்துவிடலாம் என்கிற கருத்து இருக்கிறது.

இதையொட்டி, அமெரிக்காவில் உள்ள துணிகர முதலீட்டாளர்கள் அந்த நாட்டு அரசை, புதியதாக விண்வெளி வர்த்தக சட்டம் ஒன்றை உருவாக்கும்படி வற்புறுத்தி வருகின்றனர். அப்படி உருவாக்குவது நடப்பில் உள்ள சர்வதேச சட்டத்துக்கு விரோதம் என பல நாடுகளும் குரல்கொடுத்தாலும், அமெரிக்காவைப் பார்த்து அச்சமும் இருக்கிறது.

அதாவது, அணு ஆயுத உலக சட்டப்படி, பிரான்ஸ் உட்பட 5 நாடுகள் மட்டும் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளலாம். மற்ற நாடுகள் வைத்துக்கொள்ள தடை. காரணம்,  அந்த சட்டம் கொண்டுவரப்பட்ட போது, அணு ஆயுதம் வைத்திருந்த நாடுகள் இவை மட்டும்தான். தமிழ்நாட்டைவிட சற்றே பெரிய பரப்பு கொண்ட பிரான்சும் அணு ஆயுத நாடுதான்!

அந்த முறைப்படி, ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து விட்டால் நிலவில் இறங்கிய நாடுகளுக்கு மட்டும்தான், நிலவில் இட உரிமை உண்டு என்று ஆகிவிடும்.ஜப்பான் போன்ற நாடுகள் தீவிர முனைப்பு காட்டுவதற்கான உந்துதல் இதுதான்!

சரி, சந்திரயான் போன்ற சாதனையால் இந்த நாட்டுக்கு என்னென்ன பயன்கள்?

நாளைக்கே நிலாவை கேக் போல வெட்டிப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்றால், நமக்கும் கொடுத்தாக வேண்டும். நாம் நிலவில் இறங்கிவிட்டோம் அல்லவா?

எதிர்காலத்தில் அங்குள்ள அரியவகை தனிமங்களை எடுக்கத் தொடங்கினால், நமக்கு ஒரு பங்கு உறுதி. நாட்டின் பொருளாதாரத்தில் இது ஒரு பங்கைச் செலுத்தும்.

அறிவியல் துறை இன்னும் ஆழமாக வளரும். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் நம் நாட்டிலேயே அதைக் கற்று,  அறிவியல் ஆய்வில் ஈடுபட்ட மனிதவளம் இந்தியாவில் உருவாகும். அப்படியான மனித வளத்தை உற்பத்தி செய்யும் முறைமை, நிறுவனங்கள் உருவாகும். இல்லையென்றால், இதற்காக வெளிநாடுகளுக்குதான் போகவேண்டியிருக்கும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com