12 ஆண்டு எடுத்த சினிமா

நடிகர் லியார்னோ டா டீகாப்ரியோ நிம்மதியாக இருந்த ஆஸ்கர் விழா இந்த 2015 ஆஸ்கர் விழாவாகத் தான் இருக்கும். அவர் நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை.

இல்லையென்றால், இந்த வருடமும் பரிந்துரைக்கப்பட்டு அகாடமியால் நிராகரிக்கப்படும் நீண்ட அவல வரலாறு அவருக்கு தொடர்ந்திருக்கக் கூடும்.  சிறந்த படைப்புகளைக் கண்டு கொள்ளாமல்,மொக்கைகளுக்கு விருது வழக்கும் தவறு எந்த விருதுக் குழுவும் சினிமா, இலக்கியம் போன்றவைகளில் அடிக்கடி செய்யக் கூடியது தான். ஆஸ்கரும் இந்தத் தவறுகளை அநேகம் முறை செய்திருக்கிறது. ஆயினும்,இந்த முறை ஆஸ்கர் கமிட்டி,செய்திருப்பது அபத்தத்தின் உச்சம் என்பது தான் ஊடகங்கள் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டு.

நியாயமான குற்றச்சாட்டு என்று சினிமா ஆர்வலர்களும், ரசிகர்களும் அணி திரண்டிருப்பது தான் விஷயத்தை மேலும் சூடாக்குகிறது.

அலெக்ஸாண்டரோ இனாரிட்டு என்கிற மாபெரும் மெக்ஸிகன் இயக்குநரின் பேர்ட் மேன் படத்திற்கு சிறந்த இயக்குநர், இசை என்கிற இரண்டு விருதுகள் வழங்கப்பட்ட போது, அவை வரவேற்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. குறை சொல்ல முடியாத தேர்வுதான்.ஆனால், சிறந்த படமும் பேர்ட் மேனுக்கே போனதும் சலசலப்புகள் எழுந்தன. அப்புறம் அது அதிருப்தியாகி,விருது வழங்கப்படாத படம் ஒன்று,விமர்சகர்கள்,ரசிகர்கள் ஆகியோரின் அனுதாபங்களையும்,மறுநாள் நாளிதழ் தலைப்புகளையும் பிடித்துக் கொண்டது.

அந்தப் படம் பாய்ஹுட். இயக்குநர் ரிச்சர்ட் லிங்க் லேட்டர்.

ரிச்சர்ட் லிங்க்லேட்டர் இயக்கிய Before sunset (2004) என்கிற படம் இன்றைக்கும் சினிமா ரசிகர்களின், இயக்குநர்களின் கனவு.

பாய் ஹூட் படமும் அப்படி ஒரு கனவுதான். 2002 ல் ஆரம்பிக்கப்பட்டு, 2013 வரைக்கும் படமாக்கப் பட்ட வினோத வரலாறு அதற்கு உண்டு. அதன் முக்கிய கதாபாத்திரங்களான சிறுமியும்,அவளது சகோதரனும் அவர்களது பால்யம் முடிந்து,பருவமடைகிற வரைக்கும் அவர்களாகவே நடித்த நீண்ட கனவு.

சினிமாவுக்கும், யதார்த்தத்துக்கும் ஆன மிக மெல்லிய இடைவெளிக் கோட்டையுமே இப் படத்தில் ரிச்சர்ட் லிங்க்லேட்டர் அழித்திருப்பார்.

அமெரிக்காவின் குடும்ப அமைப்புகளை, குழந்தைகள் மீது அந்த வளர்ப்பு முறை முளை விடும் முன்னமே சுமத்துகிற கோட்பாடுகள் அடிப்படையிலான சுமையை ஒரு சிறுவனின் பால்யத்தையும், அவனது பெற்றோரின் தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்களையும் பின் தொடரும் பாய் ஹூட், அமெரிக்கா அதிகம் விவாதிக்க விரும்பாத பல விஷயங்களை,ஒரு ஜென் நிலையில் இருந்து அதிகம் சொல்லாது சொல்லிய படைப்பு. அதன் கடைசிக் காட்சிகள், அந்தத்தாயின் மனக்குமுறல்கள், இங்கே அதைக் காண நேர்கிற எந்த ஒரு மகனைப் பெற்ற தாய்க்கும் கண்களில் ஆற்றாமையையும், அழுகையையும் உண்டு பண்ணி விடக் கூடியது.

வியாபார சாமர்த்தியங்களை, அறுபது நாள் சிங்கிள் கால்ஷீட் போன்ற எந்த அம்சங்களையும் அண்ட விடாமல் பண்ணப்பட்ட பாய்ஹூட் தான் ஆஸ்கரின் முன்னோட்டமாகக் கருதப்படும் கோல்டன் க்ளோப் விருதுகளை இந்த வருடம் சிறந்த இயக்குநர்,சிறந்த படம் ஆகிய வரிசையில் அள்ளிய படம்.

இப்படத்துக்கு ஒரு சப்போர்ட்டிங் நடிப்புக்கான விருதை மட்டும், அம்மாவாக, தோற்றுப்போன ஒரு மனைவியாக மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்த patricia arquetteக்கு வழங்கி ஒதுங்கிக் கொண்டது ஆஸ்கர் விருதுக் குழு. எனினும்  இந்த வருடத்தின் மிகச் சிறந்த ஆஸ்கர் உரையை patricia arquetteஅளித்த  போது, ஆஸ்கர் அரங்கமே தனது ஒப்பனையைக் கொஞ்சம் கலைத்துக் கொண்டு உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தியது. அப்படி ஒரு பெண்ணியப் பேச்சு அவர் அளித்தது. பாய் ஹூட் டில் அவர் அளித்தது நிற்கப் போகும் நடிப்பு வரலாறு.

பேர்ட்மேன் மிகச்சிறந்த படம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால்,பாய்ஹூட் மாஸ்டர்பீஸ் என்கின்றன அமெரிக்க,ஐரோப்பிய ஊடகங்கள். பல்ப் பிக்ஷனை  கண்டு கொள்ளாமல், ஃபாரஸ்ட் கம்ப் படத்தைக் கொண்டாடிய ஆஸ்கர் அபத்தத்துக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல இந்த வருட அபத்தம்!

மார்ச், 2015.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com