'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' - வாசித்த வரை...

வள்ளுவர் மறை வைரமுத்து உரை நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பெற்றுக் கொண்டார்
வள்ளுவர் மறை வைரமுத்து உரை நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பெற்றுக் கொண்டார்
Published on

அண்மையில் பங்கேற்ற விழாக்களில் ஒன்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' நூல் வெளியீட்டு விழா. மாண்புமிகு முதலமைச்சர் , மேனாள் மத்திய நிதியமைச்சர், அமைச்சர் பெருமக்கள் நீதி அரசர்கள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் , கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், வாசகர்கள் , தமிழாசிரியர்கள், பொதுமக்கள் என்று இப்படி ஒரு அரங்கேற்றம் வள்ளுவருக்கு கூட கிட்டாத வாய்ப்பு.

'வள்ளுவர் மறை வைரமுத்து உரை வாழ்த்துரை இறை' என்று அடுக்கு மொழியில் அருமையாகத் தொடங்கி மேனாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அவர்கள் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்த பொழுது, நிறைவாக ஒன்று சொன்னார்.. "குறள் நெறிப்படி வாழ்வதே குறளுக்கான மிகச் சிறந்த உரையாக இருக்க முடியும்" என்று... அதே கருத்தை கவிஞரும் நூலுக்கான தனது முன்னுரையில் அவருக்கே உரிய நடையில், "அதன் தேவை என்றும் தீரவில்லை என்பது எழுதிய குறளுக்குப் பெருமையாக இருக்கலாம். ஆனால் எழுதப்பட்ட சமுதாயத்துக்கு பெருமையாக இருக்க முடியாது"என்று சொல்கிறார். மூத்த குடிமைப் பணி அலுவலர் ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் ஒரு முறை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு அவர் செய்த ஓர் உதவிக்காக நன்றி சொல்ல சென்ற போது, கலைஞர் அவர்கள் ' எனக்கு நினைவில்லை; உங்களுக்கு நினைவு இருக்கிறதே மகிழ்ச்சி " என்று சொல்ல- பதிலுக்கு ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள், தான் நன்றி மறக்க மாட்டேன் என்ற பொருளில் "நான் திருக்குறள் படித்தவன்" என்று சொல்ல - அதற்கு கலைஞர் அவர்கள் மெலிதாக சிரித்தபடி, " எல்லோரும் தான் திருக்குறள் படிக்கிறார்கள்" என்று குறிப்பிட்ட நிகழ்வு நினைவுக்கு வருகிறது.

ஆம்.. வள்ளுவம் ஓர் இலட்சியவாத நூல்.. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் இலக்கியலும் இயல்பியலும் கலந்து இலங்கும் நூல்.. கவிஞரின் வார்த்தைகளில் சொல்வதெனில் " இன்றும் இந்த மணித்துளிக்கும் அது இயங்கு பொருளாக விளங்குகிறது நாளையும் விளங்கப் போகிறது". குறள் வழி இலட்சிய சமூகமாக மாற- உலகத்தையும் அப்படி மாற்றத் தமிழ்ச் சமூகம் தொடர்ந்து முனைந்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கான பாதையில் நமக்கு தேவைப்படுபவைதான் குறளுக்கான புதிய புதிய உரைகள்.

விழாவில், குறளுக்கு ஏற்கனவே 850 உரையாசிரியர்கள் உரை கண்டு இருப்பதாகவும் , தான் 851 வது ஆளாக வந்திருப்பதாகவும் கவிஞர் குறிப்பிட்டார்.. அந்த எண்ணிக்கையை அவர் புள்ளி விவரமாக சொல்லி ஒலித்தாரா? அல்லது கிண்டலாக அள்ளித் தெளித்தாரா? என்று கேட்டார் நண்பர் ஒருவர். திருக்குறள் மோகனராசுவிடம் கேட்டு தகவல் சரியானதே என்று உறுதிப்படுத்திக் கொண்டோம்.

தாங்கள் மட்டுமே ஏதோ 1330% வள்ளுவ வழியில் வாழ்வதாக எண்ணிக்கொண்டு,"குறள் நெறிப்படி வாழ வேண்டும்; குறளுக்கு உரை எழுதுவதா முக்கியம்? " என்று தொடர்ந்து முணுமுணுத்துக் கொண்டிருக்கும் மூத்தவர்களின் செவிகளில், கொஞ்சம் நீட்டி முழக்கி மன்ற மாசற்ற பல சொற்களைச் சொல்ல விழைகிறேன். மனத்துக்கண் மாசு இல்லாதவராய், எஞ்ஞான்றும் தன்னை வியவாதவராய், இன்னா செய்தார்க்கும் இனியவை செய்பவராய், பயனில் சொல் பாராட்டாதவராய், மறந்தும் பிறன் கேடு சூழாதவராய், கள்ளென்னும் நஞ்சுண்ணாதவராய், பொள்ளென புறம் வேராமல் நேரம் பார்த்து உள்வேர்ப்பவராய்,எல்லா உயிரும் கைகூப்பி தொழத் தக்கவராய், மெலியாரிடத்து மேல் செல்லாதவராய், யான் எனது என்னும் செருக்கு அறுத்து விட்டவராய், வாழ்வின் ஒரு தருணத்தில் கூட வினை வேறு - சொல் வேறுபடாதவராய் உங்கள் வாழ்வு உள்ளதா? என்பதை உங்கள் உள்ளத்திடம் உசாவி விட்டு வாருங்கள்... அதுவரை நான் வைரமுத்து உரையின் நூல் நயம் நவில்கிறேன்.

"காலத்தைத் துலக்கி வைக்கும் திருக்குறளைக் காலமும் துலக்கி வைக்கும் தேவை இருப்பதால் காலந்தோறும் அறிவு திருக்கூட்டத்தால் அது உரை காணப்பட்டே வந்திருக்கிறது. இதோ இப்போது எமது பங்கு " என்று குறிப்பிடும் கவிஞர் உரையாசிரியர்களின் தகுதி என்னென்ன என்பதையும் குறளுக்கு உரை செய்த பெரியோர்களின் பட்டியலையும் சுட்டிச் சென்ற பின்னர் தன் உரையில் புதுமை கண்ட குறள்களை நமக்கு எடுத்துக்காட்டுகிறார்.

ஆ பயன் குன்றும் (560), மயிர் நீப்பின் வாழாக் (969), உடுக்கை இழந்தவன் (788), அருவினை என்ப (483), எண்ணென்ப (392), அவி சொரிந்தாயிரம் (259) உள்ளிட்ட பல குறள்களுக்கு உரை வேறுபாட்டு விளக்கம், கொள்கை விளக்கம், இலக்கண விளக்கம், அறிவியல் விளக்கம், பண்பாட்டு விளக்கம் இன்னும் பல பொருள் என்னும் பொய்யா விளக்கங்களைத் தந்து, எண்ணிய தேயத்தெல்லாம் சென்று இருள் அறுக்கிறார்.

இன்பத்துப்பாலில் இடம் பெற்ற துறைவன் துறந்தவை (1157) , விளக்கற்றம்பார்க்கும் (1186) ஆகிய குறட்பாக்களை நயம் பாராட்டி கொண்டாடும் பொழுது, இணரூழ்த்தும் நறுமலர் ஆகிறார்.

கவிஞர் வைரமுத்துவுடன்   டாக்டர் சங்கர சரவணன்
கவிஞர் வைரமுத்துவுடன் டாக்டர் சங்கர சரவணன்

சதாசிவ பண்டாரத்தார், மறைமலை அடிகள் ஆகியோரைச் சுட்டிச் செல்லும் போதும் கிரேக்க அறிஞர் கெஸியட், இலத்தின் கவிஞர் லுக்கிரஷஸ், சீன ஞானி கன்பூசியஸ், வடமொழிக் கவி பர்த்ரு ஹரி ஆகியோரோடு ஒப்பிட்டு சில குறிப்பிட்ட குறள்கள் பொன் போல் ஒளிர்வதை எடுத்துக்காட்டும் போது ஒளியார்முன் ஒள்ளியராகிறார்.

தன்னுரையான முன்னுரையில் கவிஞரின் தனித்துவமான நடையை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. சில சான்றுகள்..

" ஒரு மூத்த முன்னோடி ஒரு குறளை பிறழ உணர்ந்தால் வழி வழியாய் வருகிறவர்களும் அதில் வழுக்கி விழுவதற்கான இழுக்கு நேர்ந்தே விடுகிறது. அவர்தம் ஞானப்பெருக்கில் குறையில்லை. ஆயினும் யானைக்கும் அடி சறுக்கும் என்ற பழமொழியிலும் பழுதில்லை"

" 'வரைவின் மகளிர்' என்ற அதிகாரத்தில்.... 'அந்த 'மகளிர் ' அவ்' வினையாற்ற ப் படைக்கப்பட்டவர்கள் அல்லர். பாவம் பணிக்கப்பட்டவர்கள் என்றே என் உரை அவர்கள் பொருட்டு உரையாடுகிறது "

" பெண்வழிச் சேறல் அதிகாரத்திலும் ஆணாதிக்க சிறைவழியே இல்லத்தரசிகளைக் காணாமல் ஆண்களின் கழி பெரும் காமமே கண்டிக்கப்பெறுகிறது. இப்படிப் பொருள் காண்பது உரையாசிரியரின் குறுக்குமதி என்று குற்றஞ் சாட்டுவதை விட இன்னொரு பொருள் காணுமாறு வள்ளுவனார் விட்ட வழி என்று கொள்வதே அறிவு விடுதலையாகும்".

கவிஞருக்கு செருக்கு அதிகம் என அவரை அதிகம் அறியாத சிலர் பிதற்றித் திரிவார்கள். அது வாய்மை அன்று என்பதற்கு முன்னுரையில் வரும் பின்வரும் வாசகங்கள் சான்று.

" நுண்மாண் நுழைபுலம் மிக்க உரையாசிரியர்களைப் பிழை படச் சொல்லும் பேரறிவு எமக்கில்லை. ஆனாலும், அறிவியல் தளத்தில் திருவள்ளுவரைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையின் விளைவே ஆகும் இது."

" வள்ளுவர் என்று பெருங்கடலில் துளியாய் வீழ்கிறேன்; நானும் கடலாகிறேன்"

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com