இப்படி ஒரு மாமியாரா? -'நீயா நானா’ வைரல் மாமியார்-மருமகளின் உருக்கமான கதை

அங்காளேஸ்வரி- சண்முகம்மாள்
அங்காளேஸ்வரி- சண்முகம்மாள்
Published on

சமூகவலைதளங்களில் திடீரென சிலர் பிரபலமாவது உண்டு. அது நல்ல விஷயமாகவும் இருக்கலாம் அல்லது நெகட்டிவ் பப்ளிசிட்டியாகவும் இருக்கலாம். அப்படி தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள சண்முகம்மாள், பலரும் கைவிட்ட நிலையில் கணவனை இழந்த தன் மருமகளுக்கு பக்கபலமாக நின்ற விஷயம் வைரலாகி பலரது பாராட்டுகளைப் பெற்று தந்திருக்கிறது. கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் பெண்கள் மீதான் ஒடுக்குமுறைகள் இந்த நவீன காலத்திலும் நடந்தேறிக் கொண்டிருக்க, அதை எல்லாம் உடைத்து பலருக்கும் பெருமிதமான முன்னுதாரணமாக இருக்கிறார் சண்முகம்மாள்.

கடந்த வாரம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் ‘ஆதரவற்றோர் இல்லங்கள் வளர்ந்தவர்கள் vs அவர்களிம் முதல் உறவாய் வந்த வாழ்க்கைத் துணை’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசியவர்தான் திண்டுக்கல், நிலக்கோட்டையைச் சேர்ந்தவர்தான் அங்காளேஸ்வரி. சிறுவயதிலேயே தன் அம்மாவை இழந்தவர். பின்பு, ஆசிரமத்தில் வளர்ந்து நல் உள்ளங்களின் உதவியோடு பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார். பின்பு டீச்சர் டிரெயினிங் படித்தபோது அவருடைய தோழியின் குடும்பம் இவருக்கும் அறிமுகமாகியிருக்கிறது. தோழி குடும்பம் இவர் மீதும் அன்பு செலுத்த அந்த குடும்பத்தினரோடு பழகியிருக்கிறார். அங்குதான் அவரது முன்னாள் கணவரை சந்தித்திருக்கிறார். அவரும் அங்காளேஸ்வரிக்கு தன் ஆதரவை கொடுத்ததோடு “நம் திருமணம் கலப்பு திருமணம். அதனால், கண்டிப்பாக நீ அரசு உத்தியோகம் வாங்கி உன்னை படிக்க வைத்தவர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும். மேலும், உன்னைப் போல உள்ள பிள்ளைகளையும் படிக்க வைக்க வேண்டும்” என்று ஊக்கம் கொடுத்திருக்கிறார். அவர்தான் கல்லூரியில் தன்னை பி.ஏ. ஆங்கிலம் படிக்க ஊக்கம் கொடுத்தார் என்கிறார்.

திருமணத்திற்கு பிறகு நன்றாக போய்க்கொண்டிருந்த அங்காளேஸ்வரி வாழ்வில் பேரிடி விழுந்தது. திருமணமான ஒன்றரை மாதத்திலேயே எதிர்பாராத விதமாக அவர் கணவர் விபத்து ஒன்றில் உயிரிழந்தார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை அவரே சொல்கிறார், “கணவர் மறைவுக்கு பின் எனக்கு பைத்தியம் பிடித்தது போல ஆகிவிட்டது. யாரிடமும் பேசாமல் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொள்வேன். திடீர் திடீரென சுவரில் முட்டிக்கொள்வேன். அவரது உடலை எரித்த இடத்திற்கே சென்று எலும்புகளை எடுத்து வைத்துக் கொண்டேன். சாம்பலை என் மேல் பூசிக் கொள்வேன், சாப்பிடுவேன். நான் என்ன செய்கிறேன் என்று தெரியாமல் இருந்தேன். நான் பிறந்ததுமே தம்பி இறந்துவிட்டான். அடுத்து அம்மா, அப்பா, பாட்டி, கணவர் என என்னுடைய உறவுகளை அனைத்தையும் இழந்தேன். இதை வைத்தே பலர் என்னை ஏசினார்கள். அதைக்கேட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகி விஷம் எல்லாம் குடித்திருக்கிறேன்.

”உனக்கு 23 வயதுதான் ஆகிறது. வாழ்க்கை இதோடு முடிந்துவிடவில்லை” என என் நாத்தனாரும், என் மாமியாரும்தான் என்னை மீட்டெடுத்தார்கள். அதன் பிறகு, இறந்த என் கணவரின் தம்பியை என் குடும்பத்தார் பேசி இரண்டாவது திருமணம் செய்து வைத்தார்கள். எங்கள் இருவருக்கும் திருமணம் ஆகி 9 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும், குழந்தை இல்லையா என்று அடுத்து ஆரம்பித்தார்கள். அப்போது என் மாமியார் என்னிடம் வந்து, “ஜெயலலிதா அம்மா திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்கு குழந்தை இல்லை. இருந்தாலும் அவர் நாட்டையே ஆண்டார். சந்தோஷமாக இருந்தார். அதனால், நீ மற்றவர்கள் பேசுவதைப்பற்றி கவலைப்படாதே. நான் இருக்கிறேன்” என்றார்.

அங்காளேஸ்வரி மாமியார் சண்முகம்மாள் பேசும்போது, “நான் பிறக்கும்போதே என் அம்மா இறந்துவிட்டார். நானும் கஷ்டப்பட்டுதான் வளர்ந்தேன். அப்படித்தானே இந்தப் பொண்ணும் கஷ்டப்பட்டிருக்கும். அதே கஷ்டம் வாழ்க்கையில் தொடரக்கூடாது என்பதற்காகதான் நான் இருக்கும் வரை சந்தோஷமாக பத்திரமாக பார்த்துக் கொள்வேன் என்று சொன்னேன். அதுவும் இல்லாமல் என் மகன் விருப்பப்பட்ட பொண்ணு அவ. என் மகனை நம்பி வந்தவள் அவன் இல்லைன்னா எங்க போவா? அவளும் எனக்கு பொண்ணு மாதிரிதான். நிச்சயமா அவளுக்கு குழந்தை பிறக்கும். இல்லை என்றாலும் அவளை நான் பத்திரமாகப் பார்த்துக் கொள்வேன்” என்கிறார்.

இப்படி ஒரு மாமியாரா என்று பார்க்கிறவர்கள் எல்லாம் நெகிழ்ந்து போகிறார்கள்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com