அலாதியான துணிச்சல்!

அலாதியான துணிச்சல்!
Published on: 

கவிஞர் வைதீஸ்வரனின் 80வது வயது கொண்டாட்டத்திற்கு அசோகமித்திரன் தன்னை அழைத்துக் கொண்டு போகும்படி சொன்னார்.

 நான், அசோகமித்திரன், அவர் மனைவி மூவரும் காரில் சென்றோம்.  அசோகமித்திரனின் துணிச்சல் எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.  அவருக்கு வயது 85.  இந்த வயதிலும் இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்வதிலும், சில முக்கியமான திருமணங்களில் கலந்து கொள்வதிலும் ஆர்வம் உள்ளவராக இருப்பவர்.  அவர் உடல்நிலை ஒத்துழைக்காவிட்டாலும், அவர் கலந்து கொள்ள விரும்புவார்.  அவரால் தொடர்ந்து ஒரு இடத்தில் அமர்ந்திருக்க முடியாது.  ஒரு கூட்டத்திற்கோ ஒரு திருமணத்திற்கோ வருவது என்றால், முன் எச்சரிக்கையாக மாத்திரைகளை விழுங்கிவிட்டுத்தான் அவரால் வர முடியும்.  அதேபோல் இடுப்பில் பெல்ட் கட்டிக் கொள்ள வேண்டும்.

 மேலும் அசோகமித்திரன் எதையும் நகைச்சுவை உணர்வுடன் எடுத்துக்கொள்பவர்.  ஒரு இடத்திற்குக் கிளம்பவேண்டுமென்றால் எளிதாக உடை தரித்துக்கொண்டு ஒரு கைத்தடியை வைத்துக்கொண்டு கிளம்பி விடுவார்.  கையில் ஒரு பை வைத்திருப்பார்.  பின் செல்போன் வைத்திருப்பார். 

கல்யாண மண்டபத்தை நாங்கள் நெருங்கிய போது அவர் சிரமப்பட்டு இறங்கினார்.  மெதுவாக நாங்கள் கல்யாண மண்டபத்தை நோக்கிச் சென்றோம். தள்ளாடித் தள்ளாடி அசோகமித்திரன் நடந்து வந்தார்.  அப்போது அவரைப் பிடித்துக்கொண்டு அழைத்து வரலாமாவென்று நினைத்தேன்.  அதை அவர் விரும்ப மாட்டார்.  எனக்கோ எங்காவது அவர் தடுமாறி விழுந்து விடுவாரென்ற பயம் இருக்கும்.  அசோகமித்திரனின் மனைவிக்குக் கூட முட்டியில் தேய்மானம்.  அவர்களாலும் வேகமாக நடக்க முடியாது.   அசோகமித்திரன் வைதீஸ்வரனை விட ஐந்து வயது பெரியவர்.  இருவரும் ஒரே நாளில்  ஒரே மாதத்தில் பிறந்தவர்கள்.  ஆனால் ஐந்து வயது மூத்தவர் அசோகமித்திரன். 

நாங்கள் எல்லோரும் திருமண மேடைக்குச் சென்றோம். அசோகமித்திரனைப் பார்த்தவுடன், பரபரப்பாகிவிட்டார் வைதீஸ்வரன்.  அவருக்கு மகிழ்ச்சி. மேடையில் இருந்து இறங்கிக் கூட அசோகமித்திரனைப் பார்க்க வந்து விட்டார்.  ஆசீர்வாதம் பண்ணிவிட்டு அசோகமித்திரன் உடனடியாக அங்கிருந்து கிளம்பி விட்டார்.

சாப்பிட்டுவிட்டு நாங்கள் கார் இருந்த இடத்திற்கு வந்து விட்டோம்.  தட்டுத் தடுமாறி அசோகமித்திரன் காரில் அமரந்தார்.  நானும்,  அவர் மனைவியும்,  அப்போதுதான் ஒன்றை கவனித்தோம்.  அவருக்கு மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது.  ஒருவர் ஓடிவிட்டு நின்றால் எப்படி மூச்சு வாங்குவாரோ...  அப்படி மூச்சு வாங்கிக்கொண்டிருந்தார் அசோகமித்திரன்.  எனக்குப் பயம் கவ்விக்கொண்டது. அவரைப் பரிதாபமாகப் பார்த்தேன்.  அவர் மெதுவாக என்னிடம் கையைக் காட்டி காரில் அமரச் சொன்னார்.  ‘அப்படித்தான் மூச்சு வாங்கும்..பின்னால் சரியாகப் போய்விடும்,’ என்றார் அவர் மனைவி.

ஒவ்வொரு முறையும் அவர் எதாவது கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்றால் எனக்கு பதட்டமாக இருக்கும்.  சமீபத்தில் விளக்குப் பரிசு வழங்கும் விழாவில் அவர் கலந்து கொண்டார்.  உண்மையில் இந்த விளக்குப் பரிசு அவருக்கும், இந்திரா பார்த்தசாரதிக்கும் யாரும் இதுவரை கொடுக்கவில்லை.  பரிசு பெறாத இருவரும் கல்யாணராமன் என்ற மொழிபெயர்ப்பாளருக்குக் கொடுக்கும் பரிசு விழாவில் கலந்து கொண்டார்கள்.  அன்று அசோகமித்திரன் பேசவே இல்லை.  அவரால் மேடையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் உட்காரக்கூட முடியவில்லை.  எனக்குத் தெரியும் வீட்டிற்குப் போனவுடன் அவர் எந்த அளவிற்கு சிரமப்படுவார் என்று.

(அழகிய சிங்கர். விருட்சம் இதழின் ஆசிரியர்)

ஏப்ரல், 2017.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram