என்னை உங்க ஸ்டூடண்ட்ஸ் ராக் பண்றாங்க சார்!- பேராசிரியரிடம் புகார் சொன்ன பெண்!

45ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!
45 ஆண்டுகளுக்கு முன் ஏ.வி. வி.எம்  ஸ்ரீ புஷ்பம் கலைக் கல்லூரியில் படித்த மாணவர்கள் சந்திப்பின் குழு புகைப்படம்
45 ஆண்டுகளுக்கு முன் ஏ.வி. வி.எம் ஸ்ரீ புஷ்பம் கலைக் கல்லூரியில் படித்த மாணவர்கள் சந்திப்பின் குழு புகைப்படம்
Published on

நாட்டில் எங்கெங்கோ முன்னாள் மாணவர்கள் சந்திப்புகள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அவை தொடர்ந்து நடைபெறுவதில்லை. ஒரு கட்டத்தில் நின்று போய் விடுகின்றன. முன்னாள் மாணவர்கள் சந்திக்கிறார்கள், அதுவும் 45 ஆவது ஆண்டு மாணவர்களின் சந்திப்பு என்ற போது ஆச்சரியமாக இருந்தது. என்னதான் நடக்கிறது அங்கே ? ஒரு விசிட் அடித்தோம்.

சென்னை பாம்குரோவ் ஹோட்டலில் சந்திப்போமா... என்கிற பெயரில் 1977 - 1980 காலக்கட்டத்தில் ஏ.வி. வி.எம் ஸ்ரீ புஷ்பம் கலைக் கல்லூரி, பூண்டியில் படித்த வணிகவியல் மாணவர்கள் ஒரு சந்திப்பு நடத்தினார்கள். இன்று அவர்கள் மாணவர்கள் அல்ல. வாழ்வில் நிறைவு பெற்று விட்ட பெரிய மனிதர்கள் .இந்த சந்திப்பில் பேராசிரியர்கள் ஏ. எம். கிருஷ்ணமூர்த்தி , டாக்டர் ஆர். ராஜேந்திரன், வி. ராஜகோபால், கோவிந்த ராமன், விஜயராமலிங்கம் ஆகிய ஐந்து பேர் வருகை புரிந்திருந்தது கூடுதல் சிறப்பு.

முன்னாள் மாணவர்களாக வந்திருந்தவர்கள் வாழ்க்கையில் பட்டங்கள் பெற்று உயர் அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் வீடு, தொழில்,பொருளாதார பலம், பிள்ளைகள் திருமணம் என்று நிறைவடைந்தவர்கள் . அவர்கள் அனைவரது முகங்களிலும் ஒரு நிறைவு தெரிந்தது.

தங்கள் இணையர், குடும்பத்தினர் என்று வந்து இருந்தார்கள். வயது அறுபதைக் கடந்தாலும் அவர்கள் இன்னும் அந்தக் கல்லூரிக்கால நினைவிலேயே இருக்கிறார்கள்.

சந்தித்த சக மாணவர்களைப் பட்டப் பெயர் வைத்து அழைத்துக் கலாட்டா செய்தார்கள். இப்படி ஆளாளுக்குத் தங்கள் நண்பர்களை உரிமையோடு வாடா போடா எனக் கலாய்த்தார்கள். காலப் பயணம் செய்து அனைவரது மனமும் 45 ஆண்டுகள் கடந்து பின்னே சென்று வந்த காட்சி ரசிக்கும் படி இருந்தது. அந்த அரங்கம் ஒரு கல்லூரி வகுப்பறையாக, அதுவும் பேராசிரியர் இல்லாத வகுப்பாக களை கட்டி இருந்தது.

ஒருவர் ஒருவர் முகம் பார்த்துப் பேசுவதற்குப் பதிலாக பெரும்பாலும் வாயெல்லாம் பல்லாக மனம் கொள்ளாமல் சிரித்தார்கள். அந்த அளவு மகிழ்ச்சி அலையடித்தது.

அந்தக் காலக் கல்லூரி நினைவுகளை அந்த முகங்கள் கிளறிவிட்டதுதான் அவர்களது பூரிப்புக்குக் காரணம்.

ஒரு காலத்தில் ஒன்றாகப் படித்த இந்த மாணவர்கள் 117 பேர் குழுவாக இணைந்து இதை நடத்துகிறார்கள். இந்த சந்திப்புக்கு சுமார் 100 பேர் வந்திருப்பார்கள். அந்த மாணவர்களில் சிலர் இறந்துவிட்டனர்.

கலந்துரையாடல் போல் ஒவ்வொருவரும் உரையாற்றினார்கள்.

முன்னதாக கல்லூரியின் தாளாளர் கே. டி.வி என்கிற கே. துளசி ஐயா வாண்டையாரின் புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

ரவிசங்கர் வரவேற்புரையாற்றினார். முதலில் பேச வந்த பார்த்தசாரதி ஒரு கவிதை வாசித்தார். 'பசுமை நிறைந்த நினைவுகளே ' விளைவு கவிதையில் தென்பட்டது.

அடுத்து சிதம்பரம் பேசும் போது, மேடையில் அமர்ந்திருந்த பேராசிரியர்களைச் சுட்டிக்காட்டி, "அப்போது உங்கள் மூலம் கிடைத்த அறிவு இப்போது எங்களுக்கு வாழ்க்கையில் உதவுகிறது" என்றார் நன்றியுடன்.

பிறகு வரிசையாகப் பேச ஆரம்பித்தார்கள்.

ராஜேந்திரன் பேசும்போது, "அப்போது படிப்பு மகிழ்ச்சிகரமானதாக இருந்தது .இப்போதெல்லாம் படிப்பு அப்படி இல்லை" என்றார்.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ரங்கராஜன் பேசும்போது,

"எங்களுக்கு நல்ல நல்ல பேராசிரியர்கள் கிடைத்தார்கள். இனம்,மொழி, மதம் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் நமக்குக் கல்வி கிடைத்தது. மாணவர்கள் நட்போடு இருந்தோம்.இந்த ஒற்றுமை என்றும் தொடர வேண்டும். ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள வேண்டும் "என்றார்.

வழக்கறிஞர் முருகையன் பேசும்போது, "இந்த இணைப்புக்கு ஏற்பாடு செய்த கடவுளுக்கு நன்றி" என்றவர்," பிரபஞ்சம் நமக்கு நல்லது செய்யட்டும் "என்று வாழ்த்தினார்.

இந்தியன் வங்கியில் துணைப் பொது மேலாளராகப் பணியாற்றிய ஸ்ரீராம் பேசும் போது,

"நாம் வணிகவியல் படித்த போது உள்ள பாடத்திட்டம் இன்று இல்லை. இப்போது இன்சூரன்ஸ் ,இன்கம் டாக்ஸ் என்று விரிவடைந்துள்ளது. கோல்டன் ரூல்ஸ் ஆஃப் அக்கவுண்டன்சி என்று அன்று பேராசிரியர்கள் பாடம் நடத்தியது இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது" என்றார்.

இந்தியன் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற தஞ்சாவூர் ரகுராமன்

பேசும்போது, " இன்றைய எங்கள் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்த தெய்வங்கள் இங்கே வந்து இருக்கிறார்கள்"

என்று பேராசிரியர்களைக் காட்டி வணங்கினார்.

முதுகலை ஆசிரியராகப் பணியாற்றிய ராமமூர்த்தி பேசும்போது.

"இங்குள்ள ஆசிரியர்கள் என்னை வாழ வைத்த தெய்வங்கள்'' என்றார்.

ரயில்வேயில் பணியாற்றிய இளங்கோவன், "முதலில் எனக்கு காமர்ஸ் பாடம் புரியவே இல்லை. நான் தமிழ் மீடியத்தில் இருந்து இங்கிலீஷ் மீடியத்துக்கு வந்ததால் சிரமமாக இருந்தது.வகுப்பில் தூக்கம் தூக்கமாக வரும். ஒவ்வொரு பீரியடும் எப்போது முடியும் என்று இருப்பேன். எங்களைப் போன்றவர்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற மாதிரி சொல்லிக் கொடுத்தார்கள்." என்றார்.

ராமசாமி பேச வந்தபோது, கூட்டத்தில் பலரும் "தயிர்சாதம் ராமசாமி" என்று கலாட்டா செய்தார்கள் .

அவர்," நாம் படித்த 1977-1980 ஒரு பொன்னான காலம். அந்தக்காலத்தில் நடந்த கல்லூரித் தேர்தலை மறக்க முடியாது. நமது காமர்ஸ் மாணவர் கபார் தேர்தலில் நின்றார். அவர் தோற்று விட்டார் என்றாலும் நாம் மகிழ்ச்சியாகக் கொண்டாடினோம். ஜெயித்தவர்களை விட மகிழ்ச்சியாக இருந்தோம்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் புதிய புத்துணர்ச்சி பெறுகிறோம்"என்றார்.

சென்னை துறைமுகத்தில் பணியாற்றிய அருணாச்சலம் பேசும்போது, "நான் வகுப்புக்கே வரமாட்டேன். ஏனென்றால் விளையாட்டில் ஆர்வம் உள்ளவன் .ஸ்போர்ட்ஸ் கிளாஸ் என்று அடிக்கடி வெளியே போய் விடுவேன். என்றாவது ஒருநாள் வகுப்புக்கு வரும் என்னை யார் இந்தப் பையன் ? புதுப் பையனா? என்று ஆசிரியர்கள் கேட்பார்கள்.இப்படிப்பட்ட எனக்கும் அவர்கள் படிப்பில் ஊக்கம் கொடுத்தார்கள்.எனக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை கிடைத்து சென்னை துறைமுகத்தில் பணியாற்றினேன்." என்றார்.

முகமது கஃபார் பேசியபோது பேசவிடாத அளவுக்கு ஆரவார சிரிப்பலை . தேர்தலில் தோற்றாலும் நண்பர்களை அன்பால் வென்றவர் போலும்.யார் பேசினாலும் அவரும் கமெண்ட் அடித்துக் கொண்டே இருந்தார்.வகுப்பில் வால் தனம் கொண்டவராக இருந்திருக்க வேண்டும்.

தியாகராஜன் பேசும் போது, "எங்கெங்கோ இருந்த நம்மை எல்லாம் கண்டுபிடித்து ஒருங்கிணைத்து ஒன்றாகச் சேர்த்த ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றி" என்று நெகிழ்ந்தவர்,

"சந்திப்போமாவுக்குப் பிறகு மூன்று புள்ளிகள் வைத்திருக்கிறார்கள் அந்தப் புள்ளிகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? சந்தித்தோம், சந்திக்கிறோம், சந்திப்போம் என்பதைத்தான் அது குறிக்கிறது .

கல்லூரி வளாகத்தில் அப்போதெல்லாம் வேட்டியை மடித்துக் கட்டக்கூடாது. அது நாகரிகமல்ல ,மரியாதையும் இல்லை என்று எங்களுக்கு கற்றுத் தந்தார்கள்.

இன்று நாம் இங்கே நிற்பதற்கு அடித்தளம் இட்டவர்கள் இவர்கள்தான். நாம் எல்லாம் 60 கிட்ஸ் என்பதைப் பெருமையாகச் சொல்வோம்.

பெல்பாட்டம் பேண்ட் போட்டுக் கொண்டு நீளமாகத் தலை முடி வைத்துக் கொண்டு நாம் கல்லூரி சென்ற நினைவுகள் இப்போது வருகின்றன.

இப்போது பலருக்கும் நரைமுடி தான் உள்ளது. சிலருக்கு அதுவும் இல்லை.அந்தக் கல்லூரி காலங்கள் இனி வராது. ஆனால் நம் நினைவுகளில் அதைக் கொண்டு வரலாம்.நினைவுகள் மூலம் அந்தக் காலத்தை மீட்டுக் கொண்டு வரலாம் "என்றார்.

தொழிலதிபர் GOD ரங்கராஜ் பேசும் போது, "நான் கல்லூரியில் படிக்கும்போது ஒரு கிரிக்கெட் பிளேயர். நான் இப்போது, ஒரு தொழிற்சாலை வைத்திருக்கிறேன். மக்களைப் புரிந்து கொள்வதற்கும், மரியாதை கொடுப்பதற்கும், எடை போடுவதற்கும் சந்தர்ப்பங்களை முறையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கும் கல்லூரியில் கற்ற பாடங்கள்தான் உதவின."என்றவர்,தன் மனைவி கவிதை எல்லாம் எழுதுவார் என்றார். உடனே கூட்டத்தினர் அவரைப் பேச அழைத்தார்கள்

மருத்துவத் துறையில் பணியாற்றிய அவரது மனைவி திருமதி ரங்கராஜன் பேசும் போது, "அந்தக் காலத்தை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது அப்போது எந்த மன அழுத்தமும் இல்லாத காலமாக இருந்திருக்கிறது. அதை நினைத்தால் ஏக்கமாக இருக்கிறது. அந்தக் காலத்தில் நம்மை யாரும் ஓட ஓட விரட்டவில்லை. ட்ரிபிள் R என்றதும் எனக்கு Reunion Relief Regenerate என்கிற மூன்றும் நினைவுக்கு வருகிறது .இப்போது நாம் எல்லா கமிட்மெண்டுகளையும் முடித்து விட்டோம்." என்றார்.

ஞானி என்ற பட்டப்பெயர் கொண்ட ஞானசுந்தரம் பேச ஆரம்பித்ததுமே, 'வானாகி மண்ணாகி' பாடலுடன் தொடங்கினார்.

"நான் பி.யூ.சி, பி.காம், எம்.காம் என்று இங்கே படித்தேன். அன்று BOM அதாவது பிஸினஸ் ஆர்கனைசேஷன் ஆஃப் மேனேஜ்மென்ட் என்று படித்தது இன்றும் நினைவில் உள்ளது. எப்போதும் சுதந்திரப் பறவையாக இருந்தோம்.அன்று நாம் 117 பேரும் தேர்தலில் மூலம் இணைந்தோம். நாம் கல்லூரியை விட்டுச் சென்ற போது அங்கே ஒரு விடைபெறும் விழா கூட நடத்தவில்லை.வெளியே தான் நடத்தினோம்.

கல்லூரி தேர்தலுக்குப் பிறகு இந்தச் சந்திப்பின் மூலம்தான் அனைவரும் இணைந்து இருக்கிறோம்" என்றார்.

வடுவூர் திருவேங்கடம் பேசும் போது, "நமது சந்திப்பின் 50வது ஆண்டு விழாவை நமது கல்லூரியில் பெரிய அளவில் நடத்துவோம். கல்லூரியில் நமது நினைவாக மரம் நடும் விழா ஏற்பாடு செய்வோம். எத்தனை மரங்கள் என்றாலும் கூறுங்கள். நான் தருவதற்குத் தயாராக இருக்கிறேன்.கல்லூரி வளாகத்தில் நாம் நடும் ஒவ்வொரு மரமும் நமது கதைகளைப் பேசிக் கொண்டிருக்கும்" என்றார்.கூட்டம் கைதட்டி ஆரவாரித்து ஆமோதித்தது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பணியாற்றிய ஜான் சகாயராஜ் பேசும்போது, "கல்லூரிக் காலத்தில் நான் கால்பந்து ஆட்டக்காரன். அன்று மட்டும்தானா? இப்போதும் கூடத் தொடர்கிறேன். இன்று கூட விளையாடிவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறேன்" என்றார்.

அடுத்து வந்த ஜான் மனோகரன் இன்னொரு விளையாட்டு வீரர்.தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றியவர்.

அவர் பேசும்போது,

" நான் ஒரு பேட்மிண்ட்டன் விளையாட்டு வீரர்.நான் அதே கல்லூரியில் ஆறாண்டுகள் படித்தேன். அது மட்டுமல்ல அங்கேயே பேராசிரியர் ஆகவும் பணியாற்றினேன். பிறகு மின்வாரியத்திற்கு வந்த நான், நிதி நிர்வாகப் பொறுப்புக்கு வந்து 16 யூனியன்களுக்கு நிதி நிர்வாகத்தைக் கவனிக்கும் அளவிற்கு உயர்ந்தேன்" என்றார்.

திருமதி வேதா சீனிவாச ராகவன் பேசும்போது, " சக நண்பர்களின் மனைவிகளின் குழு என்று நாங்கள் வைத்திருக்கிறோம்.

இந்த சந்திப்போமா? குழுவின் சார்பாக நாம் ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு முன்பாக முன்னாள் மாணவர்கள் ஆகிய உங்களின் திருமதிகள் அனைவரும் சேர்ந்து முதலில் நாங்கள் ஒரு சுற்றுலா செல்ல வேண்டும்" என்றார்.

திருமதி விஜயதாரா ராஜசேகர் பேசும்போது, "என் கணவருக்கு நண்பர்கள் அதிகம். எனக்கு அப்படி நண்பர்கள் கிடையாது.எப்போதும் நண்பர்களிடம் இந்தச் சந்திப்பு நிகழ்ச்சி பற்றிப் பேசிக் கொண்டே இருப்பார். எனக்கு ஒன்று இப்போது தோன்றுகிறது, நாம் படித்த காலத்தில் நம்மை யாரும் கட்டுப்படுத்தவில்லை எனவே மகிழ்ச்சியாக இருந்தோம். அந்த மகிழ்ச்சியை நமக்குள் இப்போதும் பார்க்கிறோம் " என்றார்.

ஸ்ரீவித்யா பேசும் போது, "அந்தக் கால வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது.அதனால் தான் எல்லோரும் நன்றாக இருக்கிறோம்.

படிக்கும் போது அப்போது ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை கோவிலுக்குச் செல்வோம்; தேவாரம் பாடுவோம். அப்போது கல்வி உயர்ந்ததாக இருந்தது. இப்போது அது இல்லை.

என் கணவரிடம் நீங்கள் ஏன் பேங்க் வேலைக்குப் போகவில்லை?என்று கேட்பேன். ஆனால் அவர் வழக்கறிஞராகி விட்டார். அதுதான் ரிட்டயர்மென்ட் என்பதே இல்லாத வேலை என்று இப்போது தெரிகிறது" என்றார்.

திருமதி முகமது கஃபார் பேசும்போது, "நல்ல நண்பர்கள் நல்ல சந்திப்பு " என்றார்.

ஹேமலதா ஞானசுந்தரம் பேசும்போது, "நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்பது போல் அந்தக் காலத்தில் படித்த உங்கள் இந்தச் சந்திப்பின் மூலம் எங்களுக்கும் இங்கே ஒரு இடம் கிடைத்திருக்கிறது மகிழ்ச்சி .அந்தக் காலத்தில் எட்டாம் வகுப்பு படித்தாலே ஒரு டிகிரி படித்தது போல் மதிப்பு இருந்தது. மாணவர்கள் அப்போது பண்போடு இருந்தார்கள். இப்போது சிறிது திட்டினால் கூட புகார் பெட்டியில் எழுதி விடுவேன் என்கிறார்கள்.அந்த அளவிற்கு இந்தக் கால நிலைமை உள்ளது. நாம் ஒற்றுமையாக இருந்து ஒருவருக்கொருவர் உதவவேண்டும்" என்றார்.

ஆவின் பொது மேலாளர் வெங்கட்ராமன் பேசும் போது, நண்பர்கள்

"இப்போது பால் தண்ணியா இருக்கிறது.

இப்போது பால் தண்ணியா இருக்கிறது" என்று கூச்சல் போட்டார்கள். கலாய்க்கிறார்களாம்.

"தண்ணீராக இருந்தால் தான் பால். இல்லையேல் அது பால் பவுடர் "என்று அவர்களைச் சமாளித்தவர்,

"அப்போதெல்லாம் வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் என்று பல திசைகளில் இருந்து மாணவர்கள் வருவார்கள்.ஆசிரியர்கள் அவர்களை சரியாகப் பிரித்து அடையாளம் காண்பார்கள்.இன்று நாம் அனைவரும் ஒன்று கூடி இருக்கிறோம்" என்றார்.

திருமதிபத்மா ரமேஷ் பேசும் போது அனைவரும் சிரித்தார்கள். நாற்புறமிருந்தும் கமெண்ட்ஸ் பறந்தன.

"சார் இப்போதே என்னை கிண்டல் செய்கிறார்கள். உங்கள் ஸ்டூடண்ட்ஸ் என்னை ராக் செய்கிறார்கள். இதைக் கண்டிக்க மாட்டீர்களா?" என்றார்.

மேலும் அவர் பேசும் போது, "இப்படிப்பட்ட நண்பர்கள் சந்திப்புக்குப் பிறகு தான் எங்களையே எங்கள் நண்பர்களுடன் வெளியில் செல்ல குடும்பத்தில் அனுமதிக்கிறார்கள்.நமது குழுவில் மறைந்த உறுப்பினர்கள் குடும்பத்தினரையும் அழைத்து இங்கே அவர்களை இணைத்துக் கொண்டால்அவர்களுக்கு ஒரு மன ஆறுதலாக இருக்கும் "என்றார்.

ஓசூரைச் சேர்ந்த சிவ கணேஷ் பேசும் போது, "எனக்கு இங்கே என்ன பேசுவது என்றே தெரியவில்லை "என்ற போது,உடனே பேராசிரியர்கள் "நடிக்காதடா ,பேசுடா" என்றார்கள் .

"நான் வகுப்பில்அடங்காத மாணவன். நான் வகுப்பில் இருந்ததோடு வெளியில் இருந்ததுதான் அதிகம்.என்னை வெளியே கெட் அவுட் சொல்லி வகுப்பை விட்டுத் துரத்தி விடுவார்கள்.அதனால் நான் அதிகமாக உட்கார்ந்திருந்தது மரத்தடியில் தான்"என்றதும் எல்லாரும் சிரித்தார்கள்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரவீந்திரன் பேசும்போது,

" இங்கே சொல்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. அப்போது நன்றாகப் படித்தோம். விளையாட்டுத் தனமும் இருந்தது. மகிழ்ச்சியாக கல்லூரி வாழ்க்கையை அனுபவித்தோம். இந்த கஃபார் கல்லூரி தேர்தலில் தோற்றபோது கூட வெற்றி பெற்றது போல் கொண்டாட்டமாக இருந்தோம் .அதெல்லாம் ஒரு காலம்" என்றார்.

பேராசிரியர் விஜயராமலிங்கம்
பேராசிரியர் விஜயராமலிங்கம்

இந்த சந்திப்போமா நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ராஜசேகர் பேசும்போது,கல்லூரியின் தாளாளரைப் பற்றிப் பேசத் தொடங்கியதும் சற்று தழுதழுத்தார்.

"நமது பூண்டி புஷ்பம் கல்லூரியின் தாளாளர் ஐயா அவர்கள் இறுதியாக 23.02.2020 ல் நடந்த நமது நாற்பதாவது ஆண்டு விழா சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பித்தார். விழாவுக்கு வந்து விட்டு சென்ற அவர் வீட்டில் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டாராம். விழாவில் நாம் அணிவித்த சந்தன மாலையை வீட்டில் அவர் துணைவியாருக்கு அணிவித்து மகிழ்ந்திருக்கிறார். இப்படி அவர் செய்ததே கிடையாதாம்.

அன்று முழுக்க அவர் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததாகத் தெரிவித்த அம்மா அவர்கள், அப்படி நீங்கள் என்னதான் செய்தீர்கள்? என்று எங்களிடம் கேட்டார். நாங்கள் ஐயாவுக்கு எங்கள் அன்பையும் நன்றியையும் மட்டும்தான் தெரிவித்தோம் என்று நான் கூறினேன். அந்த அளவிற்கு நமது நிகழ்ச்சி அவரை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இங்கே உள்ள பேராசிரியர்களைப் பார்க்கும்போது EDI எனப்படும் எக்கனாமிக் டெவலப்மெண்ட் ஆப் இந்தியா வகுப்பு எடுத்தது நினைவுக்கு வருகிறது. இன்னொருவரைப் பார்க்கும் போது 'எஸ்டர்டே வி ஹேவ் சீன் 'என்று ஆரம்பிப்பார் அது நினைவில் வருகிறது. மற்றொருவரைப் பார்க்கும் போது

BOM வகுப்பை எடுத்தது எல்லாம் நினைவுக்கு வருகிறது.

இங்கே நமது குழுவின் சுற்றுலா பற்றி திருமதி சீனிவாச ராகவன் கேட்டார் . நிச்சயமாகச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்வோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஐம்பதாவது ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு இப்போது முதல் மனதில் வைத்துக் கொண்டு செயல்படுவோம்" என்றார்.

மாணவர்கள் பேசி முடித்த பிறகு பேராசிரியர்கள் பேச ஆரம்பித்தார்கள்.

பேராசிரியர் ஏ .எம். கிருஷ்ணமூர்த்தி
பேராசிரியர் ஏ .எம். கிருஷ்ணமூர்த்தி

ஏ. எம். கே எனப்படும் ஏ .எம் . கிருஷ்ணமூர்த்தி பேசும் போது, " எனக்கு இப்போது 89 வயதாகிறது 50-வது ஆண்டு விழா வரை நான் இருக்க மாட்டேன் என்று தோன்றுகிறது.நீங்கள் நன்றாக நடத்துங்கள்" என்ற போது, அனைவரும் நீங்கள் வருகிறீர்கள், இருப்பீர்கள் என்று உரக்கக் கூறினார்கள்.

பேராசிரியர் ராஜகோபால் பேசும்போது, தன்னிடம் படித்த "மாணவர்களை சகோதர மாணவர் நண்பர்களே" என்று அழைத்தவர்,'உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களும்.உங்கள் குடும்பம் நீடு வாழ்க" என்றார்.

மற்றொரு பேராசிரியர் கோவிந்த ராமன் பேசும் போது, நகைச்சுவைக் கதைகளைக் கூறினார்.

பேராசிரியர் கோவிந்த ராமன்
பேராசிரியர் கோவிந்த ராமன்

" அப்போதெல்லாம் ஆண்டுதோறும் டிசம்பர் வந்தால் ஏதாவது காரணம் சொல்லி ஸ்டிரைக் செய்து விடுவார்கள். என்ன ஏது என்று காரணம் கேட்டால் திடீரென்று தஞ்சாவூர் என்று ஹிந்தியில் எழுதி இருக்கிறது என்பார்கள்.அப்படி அவர்கள் ஸ்டிரைக் செய்யும் போது ஒரு மாணவன் மட்டும் கலந்து கொள்ளாமல் என்னிடம் வந்து வகுப்பு எடுங்கள் சார் என்றான்.

அவனிடம் ஒரு புதிர் கூறி விடை சொல் என்றேன் மறுநாள் முதல் அவன் வரவில்லை"என்றார் கேலியாகச் சிரித்துக் கொண்டே.

பேராசிரியர் விஜயராமலிங்கம் பேசும் போது , "நான் பியூசி ஃபெயில் ஆனவன். நான் இதை எங்கு பார்த்தாலும் மறைக்காமல் மறுக்காமல் மாணவர்களிடம் கூறுவேன்.அதை ஏன் அவர்களிடம் கூற வேண்டும்? என்று சிலர் என்னிடம் கேட்பார்கள் அப்போது நான் கூறுவேன் நானே இப்படி பெயிலாகி படித்து முன்னேறி இங்கே பேராசிரியராக இருக்கிறேன் என்றால் நீங்களும் உழைத்து முன்னேறலாம்,தோல்விகளைக் கண்டு நம்பிக்கை இழக்க வேண்டாம் என்பதைப் புரிய வைப்பதற்காகவே இதைச் சொல்கிறேன் என்பேன்.அப்போது என்னிடம் படித்த மாணவர்கள் அனைவரும் முதல் தலைமுறைப் பட்டதாரிகள்.கல்வியின் மதிப்பை அறிந்ததால் நீங்கள் அனைவரும் படித்து உயர்ந்த நிலைக்குச் சென்று இருக்கிறீர்கள்.இப்போது நாம் கல்வியில் எவ்வளவோ முன்னேறி இருக்கிறோம்" என்றார்.

கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் டாக்டர் ஆர். ராஜேந்திரன் பேசும் போது, "நான் டி.ஆர்.பாலு அவர்களின் கல்வி நிறுவனத்தில் இப்போது செயலாளராக இருக்கிறேன்.

பேராசிரியர் டாக்டர் ஆர்.ராஜேந்திரன்
பேராசிரியர் டாக்டர் ஆர்.ராஜேந்திரன்

இந்த நிகழ்ச்சிக்கு நான் வர முடியுமா முடியாதா என்கிற குழப்பத்திலும் தயக்கத்திலும் இருந்தேன். ஏன் என்றால் அவர் பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு டெல்லியில் இருந்து வந்திருந்தால் என்னால் வந்திருக்க முடியாது. அவர் வரவில்லை.அதனால் அவசர அவசரமாகப் பயண ஏற்பாடு செய்து இங்கே வந்திருக்கிறேன்.

இன்று நான் கிங்ஸ் கல்வி நிறுவனத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருக்கிறேன்.

இதெல்லாம் பூண்டி புஷ்பம் கல்லூரியில் பணியாற்றிய அனுபவத்தின் மூலம் கிடைத்த வாய்ப்பு என்று சொல்வேன்.

அந்தக் கல்லூரியில் நான் பணியாற்றிய அனுபவம் மூலம் கற்றுக் கொண்டவை ஏராளம். நாம் பணியாற்றுகிற நிர்வாகத்துக்கு நம்பிக்கையாகவும், நாம் ஆற்றுகிற பணியில் அர்ப்பணிப்புடனும் நேர்மையாகவும் இருந்தால் நமக்கு உயர்வு கிடைக்கும்.வேறு பதவிகள் நம்மைத் தேடி வரும். இதற்கு நானே உதாரணம்"என்றவர், "பூண்டி கல்லூரி, ஐயா அவர்களை நினைவில் வைத்து எந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்தாலும் நான் எப்போதும் வருவேன் அதைவிட எனக்கு வேறு வேலை என்ன இருக்கிறது?" என்றார்.

அவரது உரைக்குப் பின் கூட்டம் இனிதே நிறைவுற்று மதிய உணவுக்குச் சென்றது.

நாஸ்டால்ஜிக் அனுபவம் பெற்ற உணர்வுடன் நடந்தேறிய ஒரு மகிழ்ச்சியான நெகிழ்ச்சியான சந்திப்புக்குப் பின் முன்னாள் மாணவர்கள் பிரிய மனம் இல்லாமல் பிரிந்து சென்றார்கள்.

சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட பேராசிரியர்கள், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து முன்நின்று நடத்திய ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பேராசிரியர் வி.ராஜகோபால்
பேராசிரியர் வி.ராஜகோபால்

இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் குழுவில் உள்ள அனைவரது தொடர்பு விவரங்கள் ஒரு சிறு டைரி வடிவில் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களாகப் பொறுப்பேற்று ரமேஷ் , ராஜசேகர், ஸ்ரீனிவாச ராகவன், ரவீந்திரன், முருகையன், ரங்கராஜன், ரகுராமன், அப்துல் கஃபார் ஆகியோர் இந்த நிகழ்வை முன்னெடுத்தனர்.

நிகழ்ச்சியைத் தொகுத்துரைத்த ராஜசேகர்,நேரம் வீணாகிக் கரைந்து விடாமல் கவனமாகப்பார்த்துக் கொண்டார். எனவே நிகழ்ச்சி குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் முடிவடைந்தது. இது அந்த முன்னாள் மாணவர்களின் நேர மேலாண்மைக்கு ஒரு சான்றாகவும் இருந்தது.

logo
Andhimazhai
www.andhimazhai.com