
நீங்கள் இறந்துவிட்டீர்களா? என்ற பெயரில் ஒரு புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டு புயலைக் கிளப்பியுள்ளது. இங்கல்ல சீனாவில்.
சீனமொழியில் Sile me (நீங்கள் இறந்துவிட்டீர்களா? என்று அர்த்தம்) என்ற பெயரிடப்பட்ட இந்த செயலியின் சாராம்சம் மிகவும் எளிமையானது. நீங்கள் உயிருடன் இருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்த, ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அந்த செயலியில் காண்பிக்கப்படும் நான் நலமாக இருக்கிறேன் என்ற பெயரிடப்பட்ட ஒரு பெரிய பொத்தானைக் அழுத்தி உங்கள் இருப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், அது உங்களால் நியமிக்கப்பட்ட அவசர தொடர்பு நபரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, நீங்கள் சிக்கலில் இருக்கக்கூடும் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்கும்.
இந்த செயலி கடந்த ஆண்டு மே மாதம் அதிக ஆரவாரமின்றி அறிமுகப்படுத்தப்பட்டது, ஆரம்பத்தில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த இந்த செயலி சமீபத்தில் பிரபலமாகிவிட்டது. சீன நகரங்களில் தனியாக வசிக்கும் பல இளைஞர்கள் இதை அதிக அளவில் பதிவிறக்கம் செய்தனர். அதனால் அந்நாட்டில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட கட்டண செயலியாக மாறியுள்ளது.
ஆராய்ச்சி நிறுவனங்களின் கூற்றுப்படி, 2030 ஆம் ஆண்டுக்குள் சீனாவில் 200 மில்லியன் ஒற்றை நபர் குடும்பங்கள் வரை உருவாகலாம் என்று சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த செயலி தன்னை தனிமையில் இருப்பவர்களுக்கான சிறந்த பாதுகாப்பு துணை என்று அறிமுகம் செய்து கொள்கிறது.... நீங்கள் ஒரு தனி அலுவலக ஊழியராக இருந்தாலும் சரி, வீட்டை விட்டு வெளியே வசிக்கும் மாணவராக இருந்தாலும் சரி, அல்லது தனிமையான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்கும் எவராக இருந்தாலும் சரி" என்று தன் பயனாளர்களை விவரிக்கும் இந்த செயலி, அத்தகையவர்களை குறிவைக்க முயற்சிக்கிறது.
""தனியாக வாழும் மக்கள் கவனிக்கப்படாமல் இறந்துவிடுவார்கள், உதவிக்கு அழைக்க யாரும் இல்லாமல் இறந்துவிடுவார்கள் என்ற அச்சம் உள்ளது. சில நேரங்களில் நான் தனியாக இறந்துவிட்டால், என் உடலை யார் பெற்றுக்கொண்டு அதன் கடைசி கடமைகளை நிறைவேற்றுவார்கள் என்று எனக்கு அச்சம் தோன்றுகிறது?” என்ற அச்சம் கொண்டவகளுக்கு இச்செயலி அவசியமானதாகத்தோன்றும்.
தனது குடும்பத்திலிருந்து சுமார் 100 கி.மீ (62 மைல்) தொலைவில் வசிக்கும் 38 வயதான வில்சன் ஹூ, இந்த காரணத்தினாலே இந்த செயலியை பதிவிறக்கம் செய்ததாகக் கூறுகிறார்.
அவர் தலைநகர் பெய்ஜிங்கில் பணிபுரிகிறார். வாரத்திற்கு இரண்டு முறை தனது மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள ஊருக்கு திரும்புகிறார், மற்ற நேரம் பெரும்பாலும் பணிக்கு செல்லும் அந்த இடத்திலேயே அவர் தூங்குவதாகவும் கூறுகிறார்.
"எனக்கு ஏதாவது நடந்தால், நான் வாடகைக்கு எடுத்த இடத்தில் தனியாக இறந்து விடுவேன், என்னை பற்றி யாருக்கும் தெரியாமல் போய்விடும் என்று நான் கவலைப்படுகிறேன்," என்று அவர் கூறினார். "அதனால்தான் நான் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, என் அம்மாவை எனது அவசர தொடர்பு நபராக அமைத்துள்ளேன்" என்கிறார்.
சிலர் செயலியின் பெயரை குறை கூறியுள்ளனர் - அதில் பதிவு செய்வது துரதிர்ஷ்டத்தைத் தரக்கூடும் என்று நினைக்கின்றனர். மற்றும் சிலர் செயலியின் பெயரை "நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?" அல்லது "நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?" போன்ற நேர்மறையான பெயராக மாற்றுமாறு பரிந்துரைக்கின்றனர். இந்த செயலியின் வெற்றி, அதன் எதிர்மறையாக ஒலிக்கும் பெயர் உருவாக்கும் பயம் காரணமாக இருக்க வேண்டும் என்றாலும், செயலியின் நிறுவனமான மூன்ஸ்கேப் டெக்னாலஜிஸ், தற்போதைய தலைப்பு குறித்த விமர்சனத்தை ஏற்றுக்கொண்டு, சாத்தியமான பெயர் மாற்றத்தை குறித்து ஆலோசிப்பதாக கூறுகிறது.
சீனாவில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் டெமுமு என்ற பெயரில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த செயலி கட்டணம் செலுத்தப்பட்டு உபயோகிக்கப்படும் செயலிகள் பட்டியலில், அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் முதல் இரண்டு இடங்களிலும், ஆஸ்திரேலியா மற்றும் ஸ்பெயினில் முதல் நான்கு இடங்களிலும் உள்ளது - இது வெளிநாடுகளில் வசிக்கும் சீன பயனர்களால் இயக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
முதலில் இலவச செயலியாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, பயன்பாட்டின் காரணமாக கட்டண வகைக்குள் நுழைந்துள்ளது - இருப்பினும் 8 யுவான் ($1.15; £0.85) என்ற குறைந்த விலையில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செயலியின் நிறுவனர்களைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை, ஆனால் அவர்கள் 1995 க்குப் பிறகு பிறந்த மூன்று பேர் கொண்ட குழு என்று கூறப்படுகிறது, அவர்கள் ஹெனானில் உள்ள ஜெங்சோவிலிருந்து ஒரு சிறிய குழுவுடன் செயலியை உருவாக்கி இருப்பதாக அறியப்படுகிறது.
இப்போது அந்த செயலியின் மதிப்பு அசுர வளர்ச்சியடைந்துள்ளது. திரு. குவோ என்ற பெயரில் அழைக்கப்படும் இதன் நிறுவன குழுவில் ஒருவர், சீன ஊடகங்களில், நிறுவனத்தின் 10% ஐ ஒரு மில்லியன் யுவானுக்கு விற்று பணம் திரட்ட திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த செயலியை உருவாக்க அவர்கள் செலவழித்த 1,000 யுவானை ($140) விட இது பலமடங்கு அதிகம்.
சீனாவின் 2020 மக்கள்தொகை கணக்கெடுப்பில், ஒரு நபர் குடும்பங்கள் 25.4% ஆக இருப்பதாக தரவுகள் காட்டியது, இது ஒரு தசாப்தத்திற்கு முன்னர் 14.5% ஆக இருந்தது என்று அறியப்படுகிறது. இத்தகைய சமுதாய மாற்றம் இது போன்ற செயலிகள் உருவாக காரணமாக இருப்பதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
இதே பதட்டம் பிற நாடுகளிலும் உள்ளது என்று அறிக்கை அறிவிக்கிறது, உலகளவில் சுமார் ஆறு பேரில் ஒருவர் தனிமையால் பாதிக்கப்பட்டுள்ளார், 15-24 வயதுடையவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற 2025 உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். 2024 ஆம் ஆண்டில் தனியாக வாழ்ந்த 76,000 பேர் வீட்டிலேயே இறந்ததாகவும், இதில் இறந்து எட்டு நாட்களுக்குப் பிறகு 21,000 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர், அதில் 40 வயதுக்குட்பட்ட 1,000 க்கும் மேற்பட்டோர் அடங்குவர் என்றும் ஜப்பானின் அரசாங்க தரவுகள் நிறுவுகின்றன. இந்த சமுதாய பதட்டமும், எதிர்மறை பயத்தின் விளைவுகளும் இந்த வகை செயலிகள் விற்பனைக்கு வழிவகுக்கின்றன. தனியாக வாழ்வதை தேர்ந்தெடுக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்தியா போன்ற நாடுகளிலும் இதன் தேவை இன்னும் சில ஆண்டுகளில் வெளிப்படையாக தெரியத் தொடங்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
தினமும் நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்பதற்கு மனிதர்கள் அருகே இல்லாதபோது, இறந்துவிட்டீர்களா ? என்று விசாரிக்கும் செயலியில் மக்கள் நாட்டம் கொள்வதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது?