அன்று எதிர்ப்பு, இன்று ஆதரவா? முதல்வரைக் கேள்வி கேட்கும் தலைமைச்செயலக சங்கம்!

அன்று எதிர்ப்பு, இன்று ஆதரவா? முதல்வரைக் கேள்வி கேட்கும் தலைமைச்செயலக சங்கம்!

தமிழ்நாட்டு சட்டப்பேரவையின் செயலாளராக இருந்துவந்த சீனிவாசனுக்கு பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டு, முதலமைச்சரிடம் வாழ்த்துப் பெற்ற செய்திகள் வெளிவந்தன.

இந்த நீட்டிப்பு சர்ச்சை ஆகியிருக்கிறது.

குறிப்பாக, தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலக ஊழியர்களுக்கான ஒரே பொது சங்கமான தலைமைச்செயலக சங்கம் பகிரங்கமாக எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

அவர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்படும் ஒரு முக்கிய அம்சம், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்தபோது, இதே சீனிவாசன் இந்தப் பணியில் முதல் முறையாக நியமிக்கப்பட்டபோது கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார் என்பதுதான்.

கடந்த 2018 மார்ச் 11ஆம் தேதியன்று அவர் வெளியிட்டிருந்த கண்டன அறிக்கையில், அப்போதைய பேரவைத்தலைவர் தனபால் மீது கடுமையாகச் சாடியிருந்தார்.

“பேரவைத் தலைவர் விரும்புகிறார் என்பதற்காக விதிகளின் முதுகெலும்பை உடைக்க முடியாது. இதுவரை எந்த ஆட்சியிலும் நடந்திராத வகையில், பணி மூப்பு, கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகிய அனைத்து நெறிமுறைகளையும் மீறி, சீனிவாசன் பேரவைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.” என்பது ஸ்டாலினின் அப்போதைய அறிக்கையின் சாரம்.

அந்த முழு அறிக்கை:

‘‘இதுவரை எந்த ஆட்சியிலும் நடந்திராத வகையில் பணிமூப்பு, கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகிய அனைத்து நெறிமுறைகளையும் மீறி, தமிழக சட்டப்பேரவைச் செயலாளராக சீனிவாசன் என்பவரை நியமித்திருப்பதற்கு, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். விதிமீறல்களின் மொத்த நேர்வாக இருக்கும் இந்த நியமனத்தை தமிழக ஆளுநர் அவர்கள் எவ்வாறு அனுமதித்து ஒப்புதல் அளித்தார் என்பது வியப்பாக இருக்கிறது.

சட்டப்பேரவைச் செயலாளர் பணி என்பது ஜனநாயகத்தின் குறிப்பாக, மக்களாட்சி மாண்பின் சின்னமாகக் கருதப்படும் தமிழக சட்டமன்றத்தில் மிக முக்கியமானது மட்டுமல்ல, முதன்மையான பணியும் கூட. இந்தப் பணியில் சட்டப்பேரவை விதிகளுக்கு எதிராகவும், பேரவைப் பணியாளர்களில் பணி உயர்வு பெற வேண்டியவர்களைப் புறக்கணித்தும், ஒரு செயலாளர் நியமனத்தை செய்திருப்பது, ஒட்டுமொத்த தமிழக சட்டப்பேரவை ஊழியர்களையும் அதிகாரிகளையும் கடுமையான மன உளைச்சலுக்கும், அழுத்தத்திற்கும் உள்ளாக்கி, சட்டப்பேரவை செயலகப் பணிகளில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

ஏற்கனவே, ஓய்வுபெற்ற சட்டப்பேரவைச் செயலாளர் ஏ.பி.ஜமாலுதீனுக்கு ஐந்து ஆண்டுகள் பணி நீட்டிப்பு அளித்து, பணிமூப்பு அடிப்படையில் செயலாளர் பணிக்கு வர வேண்டியவர்களின் வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்பட்டன. இப்போது, அவசர அவசரமான ஒரு பணி உருவாக்கப்பட்டு, அந்தப் பணியிலிருந்து 4 மாதங்களுக்குள் சிறப்பு செயலாளராக பணி உயர்வு அளிக்கப்பட்டு, சட்டப்பேரவைக்கு இப்போது செயலாளர் நியமிக்கப்பட்டு விட்டார் என்பது, சட்டப்படியான ஆட்சி (Rule of Law) நடைபெறவில்லை என்பதை உணர்த்துகிறது. இப்போது செயலாளராக நியமிக்கப்பட்டு இருப்பவருக்காக, பூபதி என்பவரை செயலாளர் பணியில் உடனே நியமிக்காமல், கூடுதல் பொறுப்பு மட்டுமே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சட்டப்பேரவைச் செயலகத்தில் உள்ள பொது நிர்வாகப்பிரிவில் சீனிவாசன் பணியாற்றி இருந்தால், துணைச் செயலாளராக மட்டுமே பணி உயர்வு பெற்றிருக்க முடியும் என்றநிலையில், அவருக்கு பேரவைத் தலைவரின் சிறப்புச் செயலாளர் பணியளித்து, தற்போது சட்டப்பேரவையின் செயலாளர் பணியே கொடுத்து ஒருதலைப்பட்சமாக, பல படிநிலை உயர்வு, பணி உயர்வு வழங்கியிருப்பது அலுவலக நடைமுறைக்கும், இயற்கை நீதிக்கும் முற்றிலும் மாறானது.

சட்டப்பேரவைத் தலைவருக்கு மிகவும் வேண்டியவர் என்பதால் அவர் விரும்புகிறார் என்பதற்காக, விதிகளின் முதுகெலும்பை நிச்சயம் உடைக்க முடியாது. சட்டப்பேரவை அலுவலகம் ஒன்றும் தனியாருக்குச் சொந்தமான அலுவலகம் கிடையாது. பொது அலுவலகம் ( Public Office). பேரவைத் தலைவரிடம் பணியாற்றுகிறார் என்பதற்காக, பேரவைச் செயலகத்தில் செயலாளர் பணிக்கு, தகுதி உள்ளவர்களையெல்லாம் புறக்கணித்து, ஒரு நியமனத்தை செய்துவிட முடியாது. இதுபோன்ற விதிகளை அப்பட்டமாக மீறிய சட்டத்திற்குப் புறம்பான நியமனம் சட்டப்பேரவைச் செயலகத்தின் நிர்வாகத்தை முடக்கி, அதன்மீது கறைபடியச் செய்துவிடும்.

ஆகவே, மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் தாமாக முன்வந்து, தமிழக சட்டப்பேரவைக்கு விதிகளை மீறி தனியொருவருக்குச் சலுகை காட்டும் வகையில், பாரபட்சமாக நியமிக்கப்பட்டுள்ள செயலாளர் சீனிவாசனின் நியமனத்தை ரத்துசெய்து, சட்டப்பேரவைச் செயலகத்தில் பணியாற்றும் பணிமூப்பு அடிப்படையில், தகுதியான ஒருவரை பேரவைச் செயலாளராக நியமித்து நிர்வாக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

அதே சீனிவாசனுக்குதான் இப்போது பணி நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சீனிவாசனை சட்டப்பேரவை சிறப்புச் செயலாளராகவும் பின்னர் செயலராகவும் நியமித்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. அதையடுத்து ஆட்சி மாறியும் அவரே பேரவைச் செயலராகத் தொடர்ந்து பணியாற்றினார். நவம்பர் 30ஆம் தேதியுடன் அவர் ஓய்வுபெற்றிருக்க வேண்டிய நிலையில், மேலும் மூன்று ஆண்டுகள் பணி வகிக்கலாம் என்று நீட்டிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் தங்கள் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தியதாகவும் ஆனால் இப்போதைய அவரின் நடவடிக்கை குமுறல்களை அதிகப்படுத்தியுள்ளது என்றும் தலைமைச்செயலக சங்கம் கூறியுள்ளது.

சீனிவாசனுக்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை ரத்துசெய்து முதலமைச்சர் தமிழக சட்டமன்றப் பேரவையின் மாண்பைக் காத்திடவேண்டும் என்று அச்சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசனிடம் பேசினோம்.

கு.வெங்கடேசன், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர்
கு.வெங்கடேசன், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர்

“ சீனிவாசன் மீது எங்கள் சங்கத்தினருக்கு தனிப்பட்டு எந்த பிரச்னையும் இல்லை. அவரும் எங்கள் சங்கத்தின் உறுப்பினர் தான். பல பேர் பணி மூப்பு அடிப்படையில் சட்டமன்றப் பேரவை செயலகத்தின் செயலாளர் என்ற உயரிய பொறுப்பிற்குக் காத்திருக்கும் நிலையில், அப்பட்டமாக விதிகளை மீறி பணி நீட்டிப்பு தரப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. இவ்வளவுக்கும் அவருக்கு சிறப்புச் செயலாளர், செயலாளர் பணி உயர்வு அளிக்கப்பட்டதை எதிர்த்து வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையிலும் ஆளுநர் இதற்கு எப்படி ஒப்புதல் அளித்தார் என்றே தெரியவில்லை. தனிப்பட்ட யார் ஒருவரை நம்பியும் அரசு இயந்திரம் இல்லை; அப்படி இருந்தால் அதுஜனநாயக முறையாக இருக்காது. டெல்லியில் இப்படி ஓய்வுபெற்றவர்கள், வெளி ஆட்களை செயலாளர் அந்தஸ்தில் நியமித்தபோது திமுக சார்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இங்கு மட்டும் என்ன சிறப்பு விதிவிலக்கு? இறையன்பு ஐ.ஏ.எஸ்., சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். ஆகியோர் உட்பட யாருக்கும் இந்த ஆட்சியில் நீட்டிப்பு தரவில்லை. அரசு தன் முடிவைத் திரும்பப் பெறவேண்டும் என்பதே எங்கள் சங்கத்தின் நிலை” என்றார் வெங்கடேசன்.

இந்த நீட்டிப்பால் ஏழு பேருக்கு பணி உயர்வு பாதிக்கப்படும் என்கிறார்கள், தலைமைச் செயலக பணியாளர்கள் தரப்பில்.

இத்துடன், இந்த விவகாரத்தில் வட தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த அமைச்சர்கள் இருவரின் விருப்ப ஆர்வமும் முக்கிய பங்கு வகித்திருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

சட்டப்பேரவைச் செயலாளர் பணி நீட்டிப்பு ஏற்கெனவே கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக் காலங்களிலும் நடந்திருக்கிறது. ஆனால், இதைப் போல சர்ச்சை ஆனதில்லை என்பதைக் குறிப்பிட்டுச் சொல்கின்றனர், கோட்டை வட்டாரத்தில்!

logo
Andhimazhai
www.andhimazhai.com