கர்நாடகத்தில் சாதி சர்வே : பின்னணி, என்ன ஆகும்?

லிங்காயத்து அமைப்புகள் நடத்திய பேரணி
லிங்காயத்து அமைப்புகள் நடத்திய பேரணி
Published on

கர்நாடகத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பு கிடப்பில் போடப்பட்டது தெரிந்ததே! இன்று மீண்டும் அங்கு சாதிவாரி சர்வே தொடங்கியுள்ளது.

முன்னதாக, கர்நாடக மாநிலத்தில் கடந்த 2015ஆம் ஆண்டில் மாநில அரசால் சாதிவாரி சர்வே முடிவு வெளியிடப்பட்டது. பட்டியல் சமூகத்தினரில் உள் ஒதுக்கீடு அளிப்பதற்காக, மாநிலத்தில் எத்தனை பட்டியல் சாதி குடும்பங்கள் இருக்கின்றன? அவர்களில் உட்பிரிவுவாரியாக மக்கள் தொகை எவ்வளவு என ஆராய்ந்து அறிக்கை அளிக்கும்படி ஓய்வுபெற்ற நீதிபதி எச்.என்.நாகமோகன் தாஸ் தலைமையிலான ஆணைக்குழு அமைக்கப்பட்டது. அதன்படி அங்கு 18.2 சதவீதம் பேர் அதாவது 1.09 கோடி பேர் பட்டியல் சாதியினர் எனக் கணக்கிடப்பட்டது.

ஏற்கெனவே கர்நாடகத்தைப் பொறுத்தவரை பட்டியல் சாதியினருக்கு 17 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மொத்தம் 101 சாதிகள் இதன்படி அரசுப் பணிகள், கல்வியில் இடப்பங்கீட்டைப் பெறுகின்றனர். ஆனாலும் இதில் குறிப்பிட்ட சாதியினரே இடப்பங்கீட்டை அனுபவக்கின்றனர் என பல பத்தாண்டுகளாக அங்கு பிரச்சினை நீடித்துவருகிறது.

அதாவது, மாதிகா எனப்படும் இடது தலித் சாதியினர், ஹொலேயா எனப்படும் வலது தலித் சாதியினரே அதிகமான இடங்களை அபகரித்துக்கொள்வதாக அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

கர்நாடகத்தைப் பொறுத்தவரை, 1922இல் பழைய மெட்றாஸ் மாகாணத்தில் இருந்த தமிழ்ப் பட்டியல் சாதியினர் ஆதி திராவிடர்கள் என்றும், தெலுங்கு பேசுவோர் ஆதி ஆந்திரர் என்றும் குறிக்கப்பட்டனர். அப்போது மைசூர் சமஸ்தானமாக இருந்த பகுதியைச் சேர்ந்த பட்டியல் சாதியினரை ஆதி கர்நாடகத்தவர் எனப் பதியுமாறு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் கூறப்பட்டனர். அப்படித்தான் பட்டியல் சாதியினரின் பதிவு மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், இப்போது தொடங்கப்பட்டிருக்கும் இந்த சர்வேயின் முடிவுகள் இன்னும் திருத்தமாக, உரிய பிரிவினருக்குத் தேவையான இடப்பங்கீட்டை வழங்க முடியும் என பொதுவான பட்டியல் சாதி நீதிக்கான சக்திகள் எதிர்பார்க்கின்றன.

இது ஒருபுறம் இருக்க, முந்தைய சாதிவாரி சர்வே கிடப்பில் போடப்பட்டதற்கு இன்னொரு முக்கிய காரணம், அந்த மாநிலத்தில் செல்வாக்கான ஆதிக்க சாதிகளாக இருக்கும் ஒக்கலிகா, லிங்காயத்து சாதிகளைச் சேர்ந்த அமைப்புகளே! அவை பழைய சர்வே முடிவை ஒப்புக்கொள்ளவே இல்லை.

சாதிவாரியான அல்லது இதுவரை போதுமான இடப் பங்கீடு கிடைக்காத சாதியினர் பயனடையும்படி இட ஒதுக்கீடு அளவு மாறும் வாய்ப்பு உண்டு. இதனால் மாநில அரசியலில் செல்வாக்கான இரண்டு பெரும் பிரிவினராக இருக்கும் இந்த சாதிய அமைப்புகள் அந்த சர்வேயைப் புறக்கணித்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

அந்த சாதிகளுடன் மற்ற பல சாதிய அமைப்புகளும் தங்களுக்கான இப்போதைய இடம் போய்விடும் என எதிர்ப்புத் தெரிவித்தன.

கணிசமான எதிர்ப்பு சாதிய அமைப்புகளில் மட்டுமல்ல, கடந்த ஆட்சிக்காலங்களில் அமைச்சரவையிலும் எதிரொலித்தது. அதுவும் 2015 சர்வே முடிவு தூசிதட்டப்படாததற்குக் காரணமாக அமைந்தது.

அதற்கு முன்னர், நீதிபதி ஏ.ஜே. சதாசிவா ஆணைக்குழு அளித்த பரிந்துரைப்படி, உள் ஒதுக்கீடு வழங்க 2023இல் அப்போதைய பா.ஜ.க. அரசாங்கம் வேலையில் இறங்கியது. தலித் மக்களில் கணிசமான வாக்குவங்கியை உறுதிசெய்யலாம் என்பது அக்கட்சியின் நோக்கமாக இருந்தது. ஆனால், வலது தலித் சாதிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதுவும் அப்படியே அமுங்கிப்போனது.

இந்த நிலையில், அரசாங்கத் தரப்பில் நாகமோகன் தாஸ் குழுவின் புதிய பரிந்துரை வரும்வரை, நியமனங்களையே நிறுத்திவைத்திருக்கிறது.

இதனிடையே, பட்டியல் சாதியினர் அவரவர் சாதியை அல்லாமல் மாற்றிமாற்றிப் பதிவு செய்திருப்பதும் பிரச்சினையாக மாறியுள்ளது. இதனால், பட்டியல் சாதி அமைப்புகள் சுதந்திரத்துக்கு முன்னர் என்ன பெயரில் சாதியைப் பதிந்தார்களோ, அதே பெயரை இந்த சர்வேயிலும் சரியாகப் பதியும்படி பிரச்சாரம் செய்துவருகின்றன.

இன்று தொடங்கியுள்ள சாதிவாரி சர்வே வரும் 17ஆம் தேதிவரை 13 நாள்களுக்கு நடத்தப்படுகிறது. இதற்காக தனி செயலியே உருவாக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரைதான் இது செயல்படும்; மற்ற நேரத்தில் தானாகவே ஆஃப் ஆகிவிடும் என்பதால், பெரிய முறைகேடு செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்கிறார்கள்.

சுமார் 60 ஆயிரம் பேர் இதற்கான களப் பணியாளர்களாக இறக்கிவிடப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் 13 நாள்களில் 130 குடும்பங்களைப் பதிவுசெய்துவிட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக வீடுவீடாகச் சென்று இந்தப் பணியாளர்கள் சர்வே எடுத்தபிறகு, மே 19 முதல் 21ஆம் தேதிவரை பள்ளிகள் உட்பட்ட பொது இடங்களில் முகாம்களும் நடத்தப்படவுள்ளன.

இதையும் தாண்டி இணையதளத்தின் மூலமாகவே 19- 23 வரை பதிவுசெய்துகொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com