பெகல்காம் படுகொலைகள்: உலாவரும் பொய்ப் பட்டியல்!

காஷ்மீர், பெகல்காம் பள்ளத்தாக்கு துப்பாக்கிச் சூடு
காஷ்மீர், பெகல்காம் பள்ளத்தாக்கு துப்பாக்கிச் சூடு
Published on

காஷ்மீரில் கடந்த வாரம் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைப் பற்றி நினைத்தாலே, இன்னும் அச்சம் அகலாதபடி மனம் பதைபதைக்கிறது.

அந்தக் கொடூர சம்பவம் பற்றிய தகவல்கள் இணையத்தில் கண்டபடி, தப்பும் தவறுமாகப் பரப்பப்பட்டு மக்களின் மனக்கொதிப்பை அதிகரிப்பது நின்றபாடில்லை.

இந்நிலையில் அங்கு நிகழ்ந்தவை பற்றிய சம்பந்தப்பட்டவர்களின் நேரடித் தகவல்கள், அரசுத் தரப்பு விவரங்கள், பகுதி மக்களின் சாட்சியங்கள் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் தொகுப்பு சரியான பார்வையையும் அளிக்கும் என்பது உறுதி.

இறந்தது 28 பேரா, 26 பேரா?

குட்டி சுவிட்சர்லாந்து எனப்படுகின்ற- காஷ்மீருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் தவிர்க்கமுடியாத தலமான- அனந்த்நாக் மாவட்டத்தின் பைசரன் பள்ளத்தாக்கில், வழக்கம்போல ஏப்ரல் 22ஆம் தேதி காலையிலிருந்தே மக்கள் குவிந்தவண்ணம் இருந்தனர். நாள்தோறும் ஆயிரம் பேர் சராசரியாக வந்துசெல்லும் அந்த சுற்றுலாத் தலத்தில் அன்றைக்கும் அதே அளவுக்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிறைந்திருந்தது.

அவரவர் விருப்பத்துக்கும் வயதுக்கும் ஏற்ப ஜிப் ரைடிங் உட்பட பலவித சாகச விளையாட்டுகளிலும் கேளிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர். பிற்பகல் 2.40 மணி வாக்கில், மதிய உணவை முடித்தும் அப்போதுதான் எடுத்துக்கொண்டும் தங்கள் குழுவினருடன் எல்லாரும் மகிழ்ந்திருந்த வேளையில், நெஞ்சைக் கவ்வியது அந்த வெடிப்புச் சத்தம்.

எங்கிருந்தோ வந்ததாகச் சொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் மிக அருகிலேயே, கண் எதிரிலேயே நடக்க, எதிர்கொண்டவர்கள் குலைநடுங்கிப் போனார்கள்.

பொதுவாக, பைசரன் பள்ளத்தாக்குப் பயணிகள் ஆயிரம் பேர்தான் என்றாலும், அவர்களுக்கு சேவை செய்வதற்காக, உள்ளூர் வியாபாரிகள் உட்பட 2 ஆயிரம் பேரும் கூடுதலாக அங்கே குழுமி இருந்தார்கள்.

திடீரென நேரடித் துப்பாக்கித் தாக்குதலில் சிக்கி, என்ன செய்வதெனத் தெரியாமல், எல்லாருமே உயிரைக் கையில் பிடித்தபடி அங்குமிங்குமாகத் தப்ப ஓடினார்கள்.

சிறிது நேரத்தில் ஆங்காங்கே உயிருக்குப் போராடிய மனிதர்களும் உயிர்போன மனிதர்களின் உடல்களுமாக... அந்த இடத்தின் கோலமே அலங்கோலமானது.

முந்தைய நாள்வரை தரைபாவிக் கிடக்கும் பசும் புல்வெளியும் சுற்றிலும் பைன் மரக் காடுகளும் அதைத்தாண்டி உயர்ந்துநிற்கும் பனிபடர் மலைகளுமாக இரம்மியமாகக் காட்சிதந்த பைசரன் பள்ளத்தாக்கு, சிறிது நேரத்தில் எங்கும் மக்களின் ஓலம் மட்டுமே கேட்டபடி ஒரு கொடூரக் காட்சியைத் தந்தது.

வெளிநாட்டவர் எத்தனை பேர்?

அப்பாவி மக்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட மொத்தம் 28 பேர் உயிரிழந்தனர் என்று முதலில் தகவல்கள் வெளியாகின. உள்ளூர் ஊடகங்களும் முதலில் அப்படித்தான் தகவல்களை வெளியிட்டன. ஆனால், அடுத்த நாள்தான் இறந்துபோனது 26 பேர் மட்டுமே என மாநில அரசால் உறுதிப்படுத்தப்பட்டது.

அதே சமயம், இஸ்ரேலியர் ஒருவர், இத்தாலிக்காரர் ஒருவர் என அயல்நாட்டவர் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக வந்த தகவல் தவறு என்பதும் பின்னர் தெரியவந்தது.

தாக்குதலுக்கு மறுநாளோ, நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்திருந்ததாகக் கூறப்பட்டது.

உத்தராகண்டைச் சேர்ந்த ஒருவரைத் தவறுதலாக ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர் எனக் கூறிவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இடையில் சொல்லப்பட்ட இஸ்ரேல், இத்தாலி பற்றி யாரும் மூச்சு விடவில்லை.

ஒருவழியாக, புதனன்று மாநில அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்ட பட்டியலில், உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் பெயர்கள் சரியாகப் பதியப்பட்டிருந்தன.

முன்னதாக, அது தொடர்பாகவும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரியாகக் கூறப்படும் நபரும், கொல்லப்பட்ட உள்ளூர்க் குதிரையோட்டியின் பெயரையும் கொண்டவர். இதன் காரணமாக பல சமூக ஊடகங்களில் ஆளாளுக்கு மாறிமாறி தகவலை வெளியிட்டதால், பெருங்குழப்பம் ஏற்பட்டது.

எந்த ஆதில்?

சுற்றுலாப் பயணிகளின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியாக, பயங்கரவாதிகளிடமிருந்து துப்பாக்கியைப் பறிக்க முயன்றதால், கொல்லப்பட்டு தியாகியாக ஆனவர், சையது ஆதில் உசைன் ஷா. அப்பாவி மக்களைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்படுபவன் பெயர், ஆதில் உசைன் தோக்கர். அவன் உட்பட பைசரன் பயங்கரத்தில் ஈடுபட்டவர்களின் ஓவியங்கள் வெளியிடப்பட்டதில், இரண்டு பேரும் வேறு வேறு என்பது தெளிவானது.

இறந்தவர்கள் - அதிகாரபூர்வ பட்டியல்

உயிரிழந்தவர்கள் தொடர்பான எண்ணிக்கை தவிர, அவர்களின் மதப் பின்னணி குறித்தும் தவறான தகவல்கள் பரவின. குறிப்பிட்ட மதத்தவரா எனக் கேட்டுக்கேட்டுச் சுட்டதாக சில தகவல்கள் வெளியாகின. இதே சமயம், அப்பட்டமாக தோற்றமே காட்டிக்கொடுக்கும்படியாக இருந்த சையது ஆதில் உசைன் ஷா உள்ளூர்க் குதிரைக்காரர் எனத் தெரிந்தும், அவரையும் அந்த பயங்கரவாதக் கும்பல் விட்டுவைக்கவில்லை என்பதும் கவனத்துக்குரியது. பயங்கரவாதத்துக்கு எந்த மதத்துக்காரன் என்பது முக்கியமில்லை என்பதை அந்தக் கொடூரர்கள் காட்டிவிட்டார்கள்.

இந்த சூழலில், இறந்துபோனவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்து அல்லாத வேறு மதத்தினர் என சமூக ஊடகங்களில் இன்றைக்கும் தகவல் பதிவுகள் பரவிவருகின்றன. ஆனால், சம்பவத்துக்கு அடுத்து மூன்றாவது நாளன்றே ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் உயிரிழந்தோரின் அதிகாரபூர்வ பட்டியலை வெளியிட்டிருந்தது.

அதன் விவரம்:

நேபாளம்

1. சுதீப் நேபானே

மகாராஷ்டிரா

2. ஹேமந்த் சுகாஸ் ஜோஷி, மும்பை

3. அதுல் சிரிகாந்த் மோனி

4. சஞ்சய் லட்சுமண் லாலி

5. சந்தோஷ் ஜக்டா, புனே

6. கஸ்துபா கன்வொதாய், புனே

7. திலீப் தசாலி, மும்பை

குஜராத்

8. சுமித் பர்மர்

9. யதேஷ் பர்மர்

10. சைலேஷ்பாய் ஹிம்மத்பாய் கலாத்தியா

கர்நாடகம்

11. மதுசூதன் சோமிசெட்டி

12. மஞ்சுநாத் ராவ்

13. பாரத் பூசண்

மேற்குவங்கம்

14. பைடன் அதிகாரி, கொல்கத்தா

15. சமீர் குகர், கொல்கத்தா

காஷ்மீர்

16. சையது ஆதில் உசைன் ஷா, பெகல்காம்

அரியானா

17. வினய் நர்வால்

சண்டிகர்

18. தினேஷ் அகர்வால், சண்டிகர்

உத்தராகண்ட்

19. நீரஜ் உதாவணி

உத்தரப்பிரதேசம்

20. சுபம் திவிவேதி, கான்பூர்

மத்தியப்பிரதேசம்

21. சுசில் நத்யால், இந்தூர்,

பீகார்

22. மணிஷ் ரஞ்சன்

ஒடிசா

23. பிரசாந்த்குமார் சத்பதி, மலாஸ்வர்

அருணாச்சலப் பிரதேசம்

24. தேகே ஹேலிங்

கேரளா

25. என். இராமச்சந்திரன்

ஆந்திரா

26. ஜே. சச்சந்திர மோலி, விசாகப்பட்டினம்

(...)

logo
Andhimazhai
www.andhimazhai.com