உடைபடும் பிம்பச்சிறை


உடைபடும் பிம்பச்சிறை
Published on

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நடவடிக்கைகள் விஜய்யை ஜல்லிக்கட்டுக் காளையைப் போல முன்னிறுத்து கின்றன என்ற என் அவதானம் ஏராளமான விவாதங்களைத் தோற்றுவித்திருக்கிறது. அரசியல்ரீதியான கணிப்பு, விவாதங்களை எழுப்புவதில் ஆச்சரியமில்லை. ஆனால், தமிழ்ச் சூழலில் அந்த விவாதம் முன்முடிவு களாலும், காழ்ப்புகளாலும் நிறைக்கப்படும்பொழுது, நான் மேலும் சில தகவல்களை வழங்கவேண்டியதிருக்கிறது.

விஜய்யின் அரசியல் பிரவேசத்தை ஒரு ‘நிகழ்வாக’ அங்கீகரிக்க மறுத்தவர்களிடம் அவதூறுகள் மட்டுமே இருந்தன. அவர்கள் தவெகவின் அரசியலை தமிழகத்தின் சாபக்கேடு என்று பொத்தாம்பொதுவாக சொல்ல ஆரம்பித்தார்கள். சாபக்கேடு என்றால் காலங்காலமாகத் தொடர்ந்து வரும் கொடூரம் என்று அர்த்தம்.

1970களில் எம். ஜி. ராமச்சந்திரனும் அவரைத் தொடர்ந்து ஜெ. ஜெயலலிதாவும் தமிழக அரசியலில் நிகழ்த்திய சீரழிவையே நாம் எதிர்கொள்ளவிருக்கிறோம் என்பது அவர்களின் முன்முடிவு. இதைத் தொடர்ந்து, விஜய்யை எம். ஜி. ராமச்சந்திரனின் நகலாக அவர்கள் விளக்க ஆரம்பித்தார்கள். அதற்காக ஏற்கனவே சொல்லப்பட்டிருந்த ‘பிம்பச்சிறை’ என்ற கருத்தாக்கத்தின் மூலம் விஜய்யின் வருகைக்கு உரையெழுத ஆரம்பித்தார்கள்.

பிம்பச்சிறை என்ற கருத்தாக்கத்தை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாளராக விளங்கிய எம்.எஸ்.எஸ். பாண்டியன் 1992ல் ஆங்கிலத்தில் புத்தகமாக எழுதினார். அன்றிலிருந்து இன்று வரை, திமுக ஆதரவாளர்களுக்கு அந்தக் கருத்தாக்கம் மனநிறைவையும், உளப்பெருமிதத்தையும் தந்து கொண்டிருக்கிறது. அவர்கள் தங்களைக் கருத்தியல் சார்பாளர்களாகவும், சமூக விடுதலைப் போராளிகளாகவும் கற்பனை செய்து கொள்ளும் வாய்ப்பை பிம்பச்சிறை உருவாக்கித் தருகிறது.

பிம்பச்சிறை என்ற கருத்தாக்கம் அடிப்படையில் மிக வறட்சியான ஒரு கற்பனை. மேட்டிமைவாதம் மிகுந்தது. சதிக்கோட்பாட்டு வகைமையைச் சார்ந்தது. மிகத் துல்லியமாக வடிவமைக்கப்பட்ட தந்திரங்களின் மூலம், பெரும் மக்கள் திரளை முட்டாள்களாக மாற்றி விட முடியும் என்று அக்கருத்தாக்கம் நிரூபிக்க முனைந்தது. பிரச்சாரத்திற்காக திரைப்படங்களில் கற்பனை செய்யப்பட்ட ‘புரட்சித் தலைவன்’ என்ற பிம்பத்தை எம்.ஜி.ராமச்சந்திரன் மிகத் தந்திரமாக பொதுவாழ்விலும் கட்டமைத்து, அதன் மூலம் அரசியல் செல்வாக்கை உருவாக்கிக் கொண்டார் என்ற விளக்கம் இரண்டு வழிகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு உதவி செய்தது. ஒன்று, நிஜமான புரட்சித் தலைவர் கருணாநிதி மட்டுமே என்று மறைமுகமாக சொல்வது; இரண்டு, திமுக தொண்டர்கள் அரசியல் ஞானம் மிக்கவர்கள் என்று போகிற போக்கில் நிரூபிப்பது.

திரைப்பட நடிகரை அரசியல் தலைவராக நினைத்து ஏமாந்து போகும் பாமரர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ளும் தன் முனைப்பைத் தவிர பிம்பச்சிறையில் வேறொன்றும் இருக்கவில்லை. இதன் மூலம், மேடைப்பேச்சில் மயங்கிக் கிடந்த திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களை அரசியல் கூர்மை வாய்ந்தவர்களாக பாண்டியனால் சித்தரிக்க முடிந்தது. மந்தை குணம் கொண்ட பெருவாரியான மக்களும் அரசியல் கூருணர்வு கொண்ட சிறுபான்மையினரும் என்ற கற்பனை காலங்காலமாக வழங்கி வரும் சிந்தனை ஊழல் என்றால் தவறில்லை.

இதன் தோற்றுவாயை, பெளத்த நெறிகளில் பார்க்க முடியும். மக்கள் நல்வழிப்படுத்த வேண்டியவர்கள் என்றும், அந்தக் கடமை பெளத்த பிக்குகளுக்கு உண்டு என்பதுமே பெளத்த கட்டுமானங்களின் உள்ளார்ந்த வேட்கை. எல்லாவகையான நீதி நூற்களும் இக்கருத்தையே வலியுறுத்துகின்றன. இருபதாம் நூற்றாண்டில், திராவிட சிந்தனையை வடிவமைத்த அயோத்திதாசர் இதே நோக்கில் சமூகத்தை, பூர்வ பெளத்தர் என்ற அரசியல் நோக்கர்களாகவும், கல்லாக்குடி என்ற பெருந்திரளாகவும் வகைப்படுத்துகிறார். அவரைப் பின்பற்றி வந்த ஈ. வெ. ரா. பூர்வ பெளத்தர்களை திராவிட இயக்கத்தவராகவும், கல்லாக்குடிகளை சூத்திரர்கள் என்றும் நிரூபித்தார். இதில் வெளிப்படும் மேட்டிமைவாதம், காலனிய மனப்பாங்கின் இன்னொரு வடிவமாகவே அமைந்திருந்தது.

இத்தகைய மேட்டிமைவாத, காலனிய மனோபாவத்திலிருந்து உருவான பிம்பச்சிறை என்ற கருத்தாக்கம் சமூகத்தை இயங்காப் பொருளாகவும், சிந்தனையை அரியச் செயல்பாடாகவும், பண்பாட்டை கண்மூடித்தனமான நம்பிக்கையாகவும் மாற்றியமைத்தது. பிற எல்லாவகையான நவீனத்துவ முன்னெடுப்புகளையும் போல, அது மாற்றுக் கருத்துக்களுக்கான வாய்ப்புகளை சிதைத்ததோடு, ஆய்வு முடிவுகளை தீர்ப்புகளாகவும் வெளிப்படுத்தியது.

இத்தருணத்தில், நான் முன்மொழியும், ஜல்லிக்கட்டு என்ற உருவகம், தலைவர்கள் உருவாகும் வழிமுறைகளையும், அவர்களை நோக்கி மக்கள் ஈர்க்கப்படும் விதங்கள் பற்றிய வரைபடத்தையும், இவற்றுள் செயல்படும் காரணியத்தையும் சுட்டிக் காட்டுகிறது. இந்த உருவகம், தமிழ்ச்சூழலிலிருந்து திகைந்து வந்தது என்றாலும், அதன் புராதனம், பண்பாட்டு எல்லையைக் கடந்து மானுடப் பொதுவான சித்திரமாகவும் மாறி நிற்கிறது.

ஜல்லிக்கட்டு என்ற சொல்லைக் கேட்டதும், தமிழில் பலரும், அது குறித்து கட்டப்பட்ட பொதுப்புத்தி சார்ந்து, ‘காளையும் அதை அடக்குதலும்’ என்ற நோக்கில் குழம்பிப் போக ஆரம்பிக்கிறார்கள். ஜல்லிக்கட்டில் காளை அடக்கப்படுவதில்லை என்பது நாட்டாருக்குத் தெரியும். அதுவொரு காட்சி அனுபவம் மட்டுமே என்பதில் மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.

அக்காளைகள், வரையறுக்கப்படாத இடைவெளிகளில் பேணப்படுகின்றன. அவை, விலங்கினத்தில் ஒன்று அல்ல; அதற்காக மனிதத்தன்மை கொண்டவை அல்ல. புனிதமானவை அல்ல, அதனால் சாதாரண வகையும் அல்ல. அவை அன்றாட வாழ்க்கையில் காண முடியாதவை; அதனால், அபூர்வமானவை என்று அர்த்தமில்லை. அவை ரகசியமானவை; ஆனால், எல்லோருக்கும் தெரிந்தவை. அவை, ஜல்லிக்கட்டுக் காளையாக பிறந்தவையோ, வளர்க்கப்பட்டவையோ அல்ல; அவை, அவ்வாறு பேணப்படுபவை. அது கருத்து அல்ல; அதே நேரம், பொருளும் அல்ல. அது, காட்சி.

இந்தக் காட்சியை வடிவமைக்க பல்வேறு காரணியங்கள் தேவைப்படுகின்றன. ஒரு திடல். சூழ்ந்து நிற்கும் மக்கள் திரள். எல்லா பார்வைகளும் துளைத்துக் கொண்டிருக்கும் வாடிவாசல். அவ்வாசலின் பின்னால் மறைக்கப்பட்டிருக்கும் ரகசியம். அவ்வாசல் திறக்கப்படும் தருணம். அந்நேரம், நிகழும் பாய்ச்சல். அதன் ஆக்ரோஷ அளவை நமக்குக் காட்டித்தரும், மாடுபிடி வீரர்கள். அச்சமயம் எழும் பெருங்கூச்சல். அக்கூச்சலில் வெளிப்படும் கிளர்ச்சி. இவ்வளவு தான் ஒரு ஜல்லிக்கட்டு. இந்த காட்சி அனுபவம், அந்த நாளில் பல முறை நிகழ்த்தப்படுகிறது. ஒரு காளை முடிந்து இன்னொரு காளை என்று, தொடர்ச்சியான கிளர்ந்தெழுதலை அன்றைய தினம் மக்கள் உணர்கிறார்கள்.

ஜல்லிகட்டு நிகழ்வில் உருவாக்கப்படும் இத்தகைய தொடர் கிளர்ச்சியின் புனித வடிவமே, இந்துக் கோவில்களில் நிகழும் தெய்வ தரிசனம். அங்கே எழுப்பப்படும் அரோகராவுக்கும், கோவிந்தாவிற்கும் இணையானது தமிழகப் பண்பாட்டு நிகழ்வுகளில் எழுப்பப்படும் குலவை ஒலி. ஒரு கேளிக்கை, ஒரு திருவிழா, ஒரு தரிசனம் உருவாக்கும் மனவுணர்வுகளையே ஜல்லிக்கட்டும் உருவாக்குகிறது. இதே மாதிரியான கொந்தளிப்பையே, ஜனநாயகத் தேர்தல் முறையும் கொண்டிருக்கிறது என்பதே இங்கு ஆச்சரியம்.

ஜனநாயக அமைப்பில் கொண்டாடப்படும் ‘பெரும்பான்மை’ என்ற கருத்தாக்கம் ஒரு கற்பிதம் என்பதை எல்லோருமே அறிவர். அது, இடுகுறித்தன்மை வாய்ந்தது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் வரைக்கும் கூட அது எத்தன்மையது என்பதை யாருமே அறியமாட்டார்கள். முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், அப்பெரும்பான்மை கண்களுக்குப் புலனாகத் தொடங்குகிறது. இந்தப் பெரும்பான்மை எண்ணிக்கையால் உருவாக்கப்பட்டது என்றாலும், ஒரு முறை தீர்மானிக்கப்பட்டு விட்டது என்றால், அதன் பின் அடுத்த தேர்தல் வரை அதுவே நிரந்தரம் என்று எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இப்பொழுது அதன் சாராம்சம் எண்ணிக்கையாக மதிப்பிடப்படுவதில்லை. அப்பெரும்பான்மைக்குள் இப்பொழுது எல்லோரும் இடம்பெறத் தொடங்குகிறார்கள்.

முப்பது சொச்சம் சதவீத மக்களே ஒரு கட்சியைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றாலும், முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன என்றால், அந்த முப்பது சொச்சம் முழுமையாகக் கற்பனை செய்யப்பட்டு விடுகிறது. இதுவே திருவிழாவின், கொண்டாட்டத்தின் தன்மை. அங்கே, நம்பிக்கையாளர்கள், அவநம்பிக்கையாளர்கள் என்ற வேறுபாடுகளுக்கு இடமில்லை. அனைவரும் ஒரே அனுபவத்தை ஏற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.

மொழியிலும் இந்த விதியே செயல்படுகிறது. வானம் என்பதை விசும்பு என்று ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்பது தனிநபர் சார்ந்த முடிவு இல்லை. அப்படியொரு ஏற்பாட்டை பெரும்பான்மையோர் ஏற்றுக் கொண்டார்கள் என்றால், வானமே விசும்பு. இன்னொரு தளத்தில், பண்பாடும் இதே விதிமுறைகளைக் கொண்டிருக்கிறது. திருமணத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் பிரச்சினை இல்லை. திருமணம் என்றாலே இது தான் முறைமை என்பதையே பண்பாடு போதிக்கிறது. திருமணம் செய்தவருக்கும், செய்யாதவருக்கும் கூட அதுவே விதி.

ஜனநாயக அரசியலின் வெகுஜனத் தன்மை அதைப் பண்பாட்டு நிகழ்வாக மாற்றியமைத்திருக்கிறது என்பதே உண்மை. பெரும்பான்மை என்ற கற்பிதத்தின் மீதே அது கட்டப்பட்டிருக்கிறது. அந்தக் கற்பிதம், எண்களால் தீர்மானிக்கப்படுவதால், அறிவியல்பூர்வமானது என்ற பிரம்மையை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரம்மை, மரம் என்ற உச்சரிப்பிற்கும் மரத்திற்கும் நேரடித் தொடர்புள்ளது என்று நம்புவதைப் போன்றது. ஆனால், அதுவொரு பொய் என்பதே மொழியியலின் கண்டுபிடிப்பு. எல்லோரும் நம்பும் பொய்.

ஜனநாயக அரசியலை முதலீட்டியம் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடிகிறது என்றால், அதற்கான நுழைவாயில் பெரும்பான்மை என்ற கற்பிதம். கூட்டம், வெகுஜனம், பெருந்திரள் என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இத்தொகுதி, மக்களாட்சி முறை வருவதற்கு முன்னிருந்தே, பண்பாடு என்ற பெயரிலும் மொழி என்ற பெயரிலும் இங்கே தொழிற்பட்டு வந்திருக்கிறது. இன்னும் கூடுதலாகச் சொல்லப்போனால், பண்பாட்டாலும் மொழியாலும் வளர்க்கப்பட்டதே பெரும்பான்மை என்ற மாயச்சித்திரம்.

அப்பெரும்பான்மை, உணர்ச்சிகளால் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, காட்சி மூலம் உருவாக்கப்படும் உணர்ச்சிகளால். அந்த காட்சி உணர்வை அது இன்பம் என்றும் பெயரிட்டு அழைக்கிறது. அக்காட்சி இன்பத்தின் முழுமையான தமிழ் உருவகமே, ஜல்லிக்கட்டு.

இந்த இன்பத்தை தயங்காமல் வழங்குபவர்களால் பெரும்பான்மையை வெற்றி கொள்ள முடிகிறது. திராவிடக் கட்சிகளின் மேடைகளில் தமிழ் வீரம் என்றும், தமிழன்னை என்றும் பேசப்பட்ட பேச்சுகள் உருவாக்கியது ஒரு வகைக் காட்சியின்பம் என்றால், திரைப்படங்களில் உருவாக்கப்பட்ட வீரஞ்செறிந்த காட்சிகளின் இன்பம் இன்னொரு வகை. இவ்வகைக் கிளர்ச்சி தரும் இன்பத்தையே, இன்றைக்கு சமூக ஊடகங்களின் வழியே ‘பெரும்பான்மை’ அள்ளி அள்ளிப் பருகுகிறது, வழங்குகிறது.

இந்த வகைக் காட்சி இன்பங்களை உருவாக்கும் பல்வேறு வகை இயந்திரங்களின் மாதிரி வடிவமே, ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு மீதான தடை என்பது, பெரும்பான்மைக்கு எதிரான தடை; பண்பாட்டிற்கு எதிரானத் தடை; மொழிக்கு எதிரானத் தடை; ஜனநாயகத்திற்கு எதிரானத் தடை. அந்த வஞ்சகத்திற்கு எதிராகவே 2017ல் தமிழகம் கொதித்து எழுந்தது. அப்படியொரு வஞ்சிக்கப்பட்ட காளையாகவே விஜய் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார் என்பதே 2026 தேர்தலின் கதை. அந்தக் காளை வாடிவாசலைக் கிழித்துக் கொண்டு வெளிவருவதே பண்பாட்டின் நியாயம் என்று தமிழர்கள் உணர்ந்தார்கள் என்பதே இத்தேர்தல் முடிவுகளின் உள்ளர்த்தம்.

logo
Andhimazhai
www.andhimazhai.com