அண்ணாமலை விவகாரம் - பா.ஜ.க. தலைமை புதிய முடிவு?

அண்ணாமலை விவகாரம் - பா.ஜ.க. தலைமை புதிய முடிவு?

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நீக்கப்படுவாரா என பரபரப்பு தொற்றியநிலையில், அந்தக் கட்சியின் தேசியத் தலைமை புதிய முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பா.ஜ.க.வின் மாநிலத் தலைவராக அண்ணாமலை வந்ததுமுதலே, அவர் ஒரு கவன ஈர்ப்பாகவும் சர்ச்சையின் மையமாகவும் இருந்துவருகிறார். எதிர்க்கட்சியினர் எதிரணியினரை மட்டும்தான் பொதுவாக அரசியல் தலைவர்கள் வம்புக்கு இழுப்பார்கள். வாய்வீச்சுக்கு அழைப்பார்கள். ஆனால், தமிழக பா.ஜ.க. அண்ணாமலையோ அண்மைக் காலமாகவே கூட்டணியின் முதன்மைக் கட்சியான அ.தி.மு.க.வை பொதுவெளியில் சங்கடத்துக்கு உள்ளாக்கும்படி நடந்துகொண்டார்.

கடந்த ஏப்ரல் முதல் இரு கட்சிகளுக்கும் இடையிலான உரசல் போக்கு தொடர்ந்தநிலையில், கடந்த மாதம் 25ஆம் தேதி கூடிய அ.தி.மு.க. மா.செ. கூட்டத்தில், அதிகாரபூர்வமாக பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணியை நெருக்கடிக்கு உள்ளாக்கியது அண்ணாமலைதான் என பா.ஜ.க.வுக்கு உள்ளேயே அதிருப்தி ஏற்பட்டது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணி இல்லாமல் தேர்தலைச் சந்திப்பது தேவையில்லாத சவால் என ஒரு தரப்பினர் கட்சி மேலிடத்துக்கு தெரிவித்தனர்.

பா.ஜ.க. தலைமையோ தமிழக நிலவரம் குறித்து விசாரித்து அறிக்கை தருமாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைப் பணித்தது என்று கூறப்படுகிறது. இன்று அண்ணாமலை தலைமையில் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், அவரை டெல்லிக்கு வருமாறு தலைமை அழைத்தது. அதன்படி டெல்லிக்குச் சென்ற அன்ணாமலை, நேற்று வரிசையாக, கட்சியின் அகில இந்திய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ், கட்சித் தலைவர் நட்டா, நிர்மலா ஆகியோரைச் சந்தித்தார். அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலிடத் தலைவர்களுடனான உரையாடல்களில் அண்ணாமலைக்கு கட்சித் தலைமை புதிய உத்தரவுகளை வழங்கியிருக்கிறது என்றும் அதன்படி, தமிழக பா.ஜ.க. குறிப்பாக கூட்டணி விவகாரங்களை கவனிப்பதில் மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் கேசவவிநாயகம், அமைச்சர் நிர்மலா ஆகியோரையும் இணைத்து மூவரின் முடிவாக இருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த தலைவர் நியமிக்கப்படுவது உடனடியாக இல்லை எனக் கூறப்பட்டாலும், அடுத்த தலைவர் நியமிக்கப்படும்வரை இந்த முறையைத் தொடருமாறு பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைமை அறிவுறுத்தியுள்ளது என்கிறார்கள், கமலாலய வட்டாரத்தில்!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com