பூமர்களும் தற்குறிகளும் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்களும்

பூமர்களும் தற்குறிகளும் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்களும்
Published on

நடிகர் விஜயின் கரூர் பரப்புரை விபத்து நிகழ்ந்தவுடன் பொது மனநிலை ‘ஐயோ பாவம்…’ என்பதாக இருந்தது. ஊடகங்களின் பேரிரைச்சலில், இந்த விபத்துக்கான பல்வேறு காரணங்கள் உருவாக்கப்பட்டு ஏதாவதொரு  நிலைப்பாட்டிற்கு ஒவ்வொருவரும் வந்தாகவேண்டும் என்ற நிர்பந்தம் உருவாகியது. அது ஒரு விபத்து. அரசியல் அனுபவமற்ற நடிகர் விஜயின் விளம்பர வெறியால் அவர் செயற்கையாக உருவாக்கிய தாமதமே இந்த பெருந்துயருக்கான முழுமுதற்காரணம் என்பதோடு முடிந்திருக்கவேண்டிய இவ்விசயம் திட்டமிட்டு திசைமாற்றப்பட்டது.

மறுநாள் காலை விடிந்தபோது விபத்திற்குக் காரணம் காவல்துறையின் தோல்வி = திமுக அரசின் தோல்வி என்பதாக மாற்று கதையாடல் உருவாக்கப்பட்டது. அடுத்த அரைநாளுக்குள்  இந்த சம்பவம் அடுத்துவரும் தேர்தல் கணக்குகளுக்கான ஒரு கச்சாப் பொருள் என்பதை கண்டுகொண்ட உள்ளூர் மற்றும் வெளியூர் காவிச் சிந்தனையாளர்கள்   ‘திமுக அரசின் கவனக்குறைவே விபத்துக்குக்  காரணம்’ என்பதை மாற்றி ‘ இது விபத்தல்ல. திமுகவின் திட்டமிட்ட சதி’ என்பதான திரைக்கதையை வெளியிட்டார்கள். இப்போது ஒரு விபத்தைப் பற்றிய நான்கு கதையாடல்கள் உருவாக்கப்பட்டுவிட்டன.

இதில் எதை  தன் நிலைப்பாடாகக் கொள்வது என்பதே ஒரு எளிய தமிழ்க்குடிமகனின்  தலையாய பிரச்சனையாக மாறிவிட்டது. 1. இந்த விபத்துக்கு விஜய்தான் முழுப்பொறுப்பேற்க வேண்டும். 2. திமுக அரசின் காவல் துறையே காரணம். 3. விஜய் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். கூடவே திமுக அரசின் காவல்துறை பாதிப் பொறுப்பை வாங்கிக் கொள்ளவேண்டும். 4. இது விபத்தல்ல. திமுக அரசின் சதி. இதில் எது உண்மை. நடந்தது பல்லாயிரம்பேர் பங்குகொண்ட ஒரு நிகழ்வு. பலநூறு செல்பேசிகளும் ஒளிப்படக்கருவிகளும் பதிவுசெய்த  சம்பவம். நடந்தது ஒரு சம்பவம். அதை இத்தனைவிதமாகப் பேச முடியுமா? என்று மக்களின் குரலாக பெலிக்ஸ் இன்பஒளி எனும் ஊடகவியலாளர் கேட்டபோது ‘ உண்மை ஒன்றாக இருக்கவேண்டிய கட்டாயமில்லை. பல உண்மைகள் இருக்கலாம்’ என்று கரூர் விபத்தை ஒரு பின்நவீன தத்துவப்பிரச்சனையாக உளவியலாளர் ஷாலினி மாற்றியபோது வினா தொடுத்த பெலிக்ஸ் இன்பஒளியின் முகத்தில் இருள் படர்ந்ததைக் காணமுடிந்தது. 

ஜப்பானிய திரைமேதை குரசோவாவின் ‘ரோஷமான்’ படத்தில் ஒரு சம்பவம் பல உண்மைகளாக கூறப்பட்ட தலைசிறந்த திரைப் படமே நம் நினைவுக்கு வந்தது.  ஊடக விவாதக் களங்களில் மயிர்பிளக்க விவாதித்தவர்களையும் சமூக ஊடகங்களில் எழுதித்தீர்த்தவர்களையும் பார்த்தபோது நம் சமூகம் இத்தனை வன்மமும்  கயமையும் கொண்டதாகவா இருக்கிறது? இத்தனை அறுருவருப்பான சமூக அரசியல் சூழலில்தான் நாம் அன்றாடம் கண்விழிக்கிறோமா? என்ற வினா எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

கரூர் சம்பவத்தில் மேற்படி விதண்டாவாதங்களைவிடவும் முக்கியமாக பேசப்படவேண்டிய விசயங்கள் உண்டு. அவை நம் பதின்பருவத்தினர் மற்றும் ரசிகர்கள், அவர்தம் செயல்பாடுகள் மற்றும் நடத்தை முறைகள் பற்றியவை. விஜயின் பரப்புரைகளில் குவிபவர்கள் யார்? விஜயின் அரசியல் ஆதரவாளர்களா? அவரின் திரைப்பட ரசிகர்களா? இரண்டும் கலந்தவர்களா? எதிர் முகாமினர் போகிறபோக்கில் சொல்வதைப் போன்று உலகம் தெரியாத ‘தற்குறிகளா?’ ஆயிரக்கணக்கில் கூடும் இந்த இளையோரை மிக எளிமையாக ‘தற்குறிகள்’ என்று முத்திரை குத்தி ஒதுங்கிவிட முடியுமா?

இளையோரைப் புரிந்துகொள்ளல்

2000த்திற்குப் பின்பான பதின்பருவத்தினர் மற்றும் இளையோரை புரிந்துகொள்ள நாம் முயன்றிருக்கிறோமா? அவர்கள் பற்றிய தீவிரமான ஆய்வுகள், உரையாடல்கள் எதையாவது நாம் முன்னெடுத்திருக்கிறோமா? கல்வி மற்றும் கலாச்சாரத் தளங்களில் இந்த புதிய நூற்றாண்டுக் குழந்தைகளின் விருப்பங்கள், கனவுகள், உளவியல் நெருக்கடிகள், நடத்தை முறைகளை கவனித்துப் பார்த்து விவாதித்திருக்கிறோமா?

1950க்குப் பின் அமெரிக்காவில்தான் முதன்முறையாக இளையோர் பண்பாடு (youth culture) என்பது பிரச்சனைக்குரியதாக மாறியது. அதைத் தொடர்ந்து அங்குள்ள ஆய்வாளர்கள் இதுபற்றிய ஆய்வுகளைத் தீவிரப்படுத்தினர். இரண்டு உலகப் போர்களைத் தொடர்ந்து அமெரிக்கப் பொருளாதாரம் எழுச்சி பெற்ற காலத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாயின. முதன்முறையாக இளைஞர்களுக்கான பகுதிநேர வேலைவாய்ப்புகளும் அதன் மூலமான பணப்புழக்கமும் அவர்களை தனிமனிதர்களாக்கியது. பெற்றோர்களைச் சாராமல் தாங்கள் விரும்பியவற்றை வாங்கவும் நுகரவுமான சூழல் உருவானது. அது வெறும் நுகர்வாக மட்டுமல்லாமல் அவர்களுடைய பொழுதுபோக்கு, வாழ்க்கை பற்றிய பார்வை, நடத்தை முறைகளையும் தீர்மானிப்பதாக மாறியது. பெற்றோரின் கண்டிப்பு, கிறித்தவ ஒழுக்க நெறிமுறைகள், பாரம்பரிய குடும்ப அமைப்பின் எதிர்பார்ப்புகளை புறக்கணிக்கும் எதிர்கலாச்சாரம் இளையோரிடம் தோன்றியது.  இந்த மனோபாவத்திற்கு தண்ணீர் ஊற்றி உரமிட்டு வளர்க்கவென்றே தோன்றியதுபோல் அப்போதைய 1950களின் ராக் அண்ட் ரோல் (rock ’n’ roll) மற்றும் ராக் இசைக்குழுக்கள் முளைத்தன. இந்த இசைக்குழுக்களின் பாடல்களும் நிறுவன எதிர்ப்பு, மரபு மீறல் என்பதாக இருந்தமையால் இளைஞர்கள் ஒன்று கூடும் மையங்களாக இந்த இசை நிகழ்வுகள் அமைந்தன. இவற்றோடு கட்டற்ற பாலியல், போதை நுகர்வு என்பவைகளும் இணைந்துகொள்ள ஒரு கட்டத்தில் அமெரிக்க குடும்ப அமைப்பிற்கும் அரசுக்கும் பெரும் தலைவலியாய் இந்த இளையோர் பண்பாடு உருவெடுத்தது. இதில் பெரும்பான்மையோர் கேளிக்கை, போதை, கட்டற்ற சுதந்திரம் என்பதாக இருந்தபோது சிறுபான்மை இளையோர் தீவிர அரசியல்மயப் படவும் ஏதுவாகியது. போர் எதிர்ப்பு, இனவேற்றுமைக்கு எதிரான போக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதாக உப கலாச்சாரங்கள்(sub cultures) தோன்றின. இளையோர் பண்பாடு தற்குறித்தனமானது எனும் குரல்கள் பெருவாரியாக எழுந்தபோது, அது உண்மைக்கு மாறானது, ‘செயலூக்கமற்ற பெரும்பான்மைக்கு எதிரான  செயலூக்கமுள்ள சிறுபான்மையினராக’(passive majority against active minority) இளையோர் குழுக்கள் இருப்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர். இளையோர் என்பவர்கள் முற்றிலும் ஒருபடித்தானவர்கள் அல்ல. அவர்களுக்குள் சமூக அரசியல் தெளிவுள்ள பல்வேறு மாற்றுக் கலாச்சாரக் குழுக்களும் உண்டு என்பது தெளிவானது. அத்தகைய சிறுபான்மையோர் சில பொதுநோக்கங்களுக்காக பெரும் திரளாகக் கூடத் தொடங்கினர்.

இப்போது தமிழ்ச்சூழலைக் கொஞ்சம் அவதானிப்போம். முதலில் இன்று விஜய்பின்னால் திரளும் ரசிகக் குஞ்சுகள் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் அல்ல. தமிழக ரசிகக் குஞ்சுகளுக்கு அரைநூற்றாண்டுக்கும் மேற்பட்ட தொடர்ச்சி இருக்கிறது. இவர்கள் ஏறத்தாழ எம்.ஜி.ஆரின் ரசிகக் குஞ்சுகளுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. இவர்கள்தான் விஜய்காந்தை அரசியல்தலைவராக மாற்றியவர்கள். ரஜினிகாந்தை முதல்வராக்கத் துடித்தவர்கள். இப்போது விஜயின் பரப்புரைகளில் தவித்த வாய்க்குத் தண்ணீர் இல்லாமல் தவிப்பவர்கள். அதனால் தமிழகத்தில் ரசிகக்குஞ்சுகளுக்கு எப்போதும் பஞ்சம் இருந்ததில்லை என்றே கொள்ளவேண்டும்.

நிற்க,  முதலாளிய நுகர்விய வலதுசாரி சக்திகள் உலகெங்கும் செல்வாக்குப் பெற்ற அதே நேரத்தில் இந்துத்துவ வலதுசாரிகள் இந்தியாவை ஆளத்தொடங்கிய புதிய 21ஆம் நூற்றாண்டு பிறந்தது.  

50களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இளைஞர்களுக்கு கிடைத்த பகுதிநேரவேலைகள் போன்று இந்திய நகரங்களிலும் 2000த்திற்குப் பின் பகுதிநேர வேலைகள் இளையோருக்குக் கிடைக்கத் தொடங்குகின்றன. இப்போது இவர்கள் மத்தியான சினிமா பார்ப்பதற்காக அம்மாக்களின் உண்டியல்களில் ஹேர்பின் வைத்து நோண்டிக்கொண்டிருந்த  70, 80களின் பூமர்கள் அல்ல. ஸ்மார்ட் போன்களையும், உறுமுகின்ற இருசக்கர வாகனங்களையும் சொந்தமாகத் தவணையில் வாங்கத் தெம்புள்ளவர்கள். சதா ரீல்ஸ்களை உருவாக்கவும் பார்க்கவுமாக இருப்பவர்கள். கீழ்நடுத்தரவர்க்க தமிழ் இளைஞனை ஒத்திருக்கும் விஜயின் திரைப்பட சாகசங்களில், நடன அசைவுகளில் தன் சாயலைக் கண்டு மனதைப் பறிகொடுப்பவர்கள். இவர்களுக்கு மாற்றாக மேல் நடுத்தர, நடுத்தர வர்க்க இளையோர் என்றொரு வகைமை உண்டு. அவர்கள் ஆங்கில தனியார் பள்ளிகளில் படித்து தொழிநுட்பக் கல்விபெற்றவர்கள். பெற்றோர் செலவிலேயே அமெரிக்காவில் உயர்கல்வி கற்ற அம்மா பிள்ளைகள். டிரம்ப் அதிபராகவேண்டுமென்று பூஜை செய்தவர்கள். லாஸ் ஏஞ்சல்சில் ரஜினி படம் முதல்காட்சி பார்த்து நினைவுகளில் தமிழகத்தில் வாழ்பவர்கள். இப்போது நம்மிடமிருக்கும் இரண்டு வகையானவர்களில்  எவரும் அரசியல் மயப்பட்டவர்களில்லை என்பதே முக்கியமாகக் கவனிக்கவேண்டியது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உருவான 'செயலூக்கமுள்ள சிறுபான்மை’ (active minority) என்று ஒரு இனம் இங்கு உருவாகவேயில்லை. தமிழகத்தில் +2 அறிமுகமானதை ஒட்டி 80களில் கல்லூரிகளில் திட்டமிட்ட அரசியல் நீக்கம் நிகழ்ந்தது. மாணவர் தேர்தல்கள் தடைசெய்யப்பட்டன. தனியார் கல்வி முதலாளிகள் உயர்கல்வி வளாகங்களில் கொள்ளை லாபத்தையும் கொத்தடிமை முறையையும் அறிமுகப் படுத்தினார்கள். கட்டுப்பெட்டியான உயர்கல்வி வளாகங்கள், செல்பேசிகள் மற்றும் புதிய ஊடகங்களின் வருகை, பகுதிநேர வேலை வாய்ப்புகள், ஆடம்பர நுகர்விய மோகம் ஆகியவைகளே அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பிராய்லர் கோழிகளான இளையோர் உருவாக்கத்தை தீவிரப்படுத்தியது. கொழுப்பு நீக்கப்பட்ட, புரோட்டின் செழுமையுள்ள இந்தக் கோழிகளை பெற்றோர்களும், நுகர்விய பொருளாதாரமும், அரசுகளும் பெரிதும் விரும்பின. ஆகவே இந்த அரசியலற்ற, லட்சியங்களற்ற, விழுமியங்கள் என்றால் என்னவிலை என்று கேட்கும் இந்த இரண்டு தலைமுறை இளையோரை (தற்குறிகள் என்றும் அழைக்கலாம்) உருவாக்கியவர்கள் யார்?

 ஒருவகையில் இந்தத் தற்குறிகளை உருவாக்கியதில் பெரும்பங்கு  நம் அரசுகளையே சாரும். இந்திய விடுதலைப் போராட்டத்திலும், இந்தி எதிர்ப்பெனும் மொழிப் போராட்டத்திலும், தமிழீழப் பிரச்சனை காலத்திலும் எழுச்சிபெற்று போராட்டங்களை நடத்திய அந்த மாணவர்கள் எங்கே போனார்கள்? மாணவர் போராட்டங்களைக் கையாள்வதில் உள்ள சிரமங்களைத் தவிர்ப்பதற்காக, கல்வி வளாகங்களை அமைதிப் படுத்த திட்டமிட்டு செயல்பட்ட அரசு, அதை ஊக்குவித்த பெற்றோர்கள், துணை நின்ற ஆசிரியப் பெருமக்கள், வேடிக்கை பார்த்த பொதுச்சமூகம் எல்லோரும் இணைந்துதான் இந்த மனப்பாட மகாராஜாக்களை உருவாக்கினோம்.  இன்று  நாம்தான் அவர்களை ‘தற்குறிகள்’ என்று கூசாமல் விளிக்கிறோம். அரை நூற்றாண்டாக இந்த தற்குறிகளை அரசியல்மயப் படுத்துவதற்கான என்ன முயற்சிகள் நடந்திருக்கின்றன. அரசியல்மயப்படுத்துதல் என்பதுகூட கொஞ்சம் கூடுதலான எதிர்பார்ப்பாக இருக்கலாம். குறைந்தபட்சம் ஒரு நவீன சமூகத்தில் புழங்குவதற்கான அடிப்படையான குடிமைப் பண்புகள் () என்று எதையாவது சொல்லிக் கொடுத்திருக்கிறோமா? இன்று கொள்கை என எதுவுமில்லாத உள்ளீடற்ற ஒரு நடிகரின் பின்னால் மந்தைகளாய் குவியும் இளையோரைக் கண்டு முதன்முறையாய்  அச்சப்படத் தொடங்குகிறோம். இதுவரை அரசியலற்ற மந்தைத்தனத்தை, திட்டமிட்டு வளர்த்த நாம், இந்த மந்தைகள் வாக்காளர்களாக மாறிவிடக்கூடுமோ என்ற அச்சத்தில் அவர்களைத் ‘தற்குறிகளாய்’ முத்திரைகுத்தத் தலைப்படுகிறோம்.

அரசியல் பழகு

25ஆண்டுகளுக்கு முன் பெரும்பாலான வீடுகளில் அரசியல் பேசக்கூடிய ஒரு தந்தையோ, தமையனோ, மாமனோ இருந்தார்கள். அப்படி இல்லாதபட்சத்தில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உலகவிசயங்களைப் பேசக்கூடிய அக்கறையுள்ள ஆசிரியர்கள் இருந்தார்கள். கேளிக்கைகளுக்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தன. இல்லங்களுக்குள்ளும் கல்வி வளாகங்களுக்குள்ளும் பணியிடங்களுக்குள்ளும் மனிதர்கள் பேசிக்கொள்வதற்கான,  உரையாடல்களுக்கான வாய்ப்புகள் இருந்தன. இவற்றையெல்லாம் நாம் இழந்துவிட்ட பொற்காலங்களாகக் கொள்ளவேண்டிய்தில்லை. அன்று சூழல் அப்படியிருந்தது. இன்றைய சூழல் அப்படியில்லை என்பதுதான் நாம் மனதில்கொள்ளவேண்டிய விசயம். இன்றைய பதின் வயதினர் மற்றும் இளையோரிடம் பணப்புழக்கம் இருக்கிறது. உலகத்தரத்தினாலான மால்கள் எனும் பேரங்காடிகளும் மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகளும் காத்திருக்கின்றன. இதுவரை பார்த்தறியாத உணவு வகைகள் கொட்டிக் கிடக்கின்றன. நுகர்வியம் தன் ஆக்டோபஸ் கரங்களால் அழைத்தபடி இருக்கிறது. இளம் மனதின் நல்விருப்பங்களை, லட்சியங்களை நோக்கிய காத்திரமான உரையாடல்களுக்கு வாய்ப்புகளே இல்லை. திரை நாயகர்களின் போலியான முழக்கங்கள், சவால்கள், துரித வெற்றிகள், கொண்டாட்டங்களைப் பின்பற்றுவது எளிமையாக இருக்கிறது. விஜயோ, விஜய் போன்றவர்களோ அவர்களின் தற்காலிக கடவுள்களாக மாறிவிடுகிறார்கள்.

தற்காலிக அரசியல் வெற்றிகளை உத்தேசிக்கும் அரசியல் கட்சிகளுக்கு இது ஒரு விசயமே அல்லதான். இந்த சூழலை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வதற்கான கதையாடல்கள் அல்லது எதிர்க் கதையாடல்களை உருவாக்குவது என்பதே அவர்களின் இப்போதைய இலக்காக இருக்கக்கூடும். ஆனால் சமூகநீதி எனும் பெரும் நோக்கத்தைக் கொண்டிருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் திராவிட அரசு அப்படியான எளிமையான கணக்குகளை போட்டுவிடமுடியாது. ஒரு வகையில் நடிகர் விஜய்க்கு நாம் நன்றி சொல்லவேண்டும். அவரின் அரசியல் பிரவேசமும் கரூர் சம்பவங்களும் தமிழகத்தின் எதிர்கால வாக்காளர்களைப்பற்றிய ஒரு முன்னோட்டத்தை அளித்திருக்கிறது. இன்றைக்கு இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இன்னும் கூடுதலான சாமர்த்தியமுள்ள ஒரு நடிகருக்கு இந்த ரசிகக்குஞ்சுகள்/ தற்குறிகள் வாக்காளர்களாக மாறமாட்டார்கள் என்பதற்கு என்ன உறுதிமொழியை யார் வழங்கமுடியும்?

இப்போது நாம் செய்ய வேண்டிதெல்லாம், இந்த டிஜிட்டல் தலைமுறையினரின் மொழியை, கதைகளை, கனவுகளை அக்கறையோடு புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். கரூர் உயிர்ப்பலிகளுக்கு நடிகர் விஜய் தார்மீகப் பொறுப்பேற்கவேண்டியது போலவே, இந்த இளையோரை தற்குறிகளாக்கியதற்கான தார்மீகப் பொறுப்பை கல்வி நிறுவனங்களும், அரசுகளுமே ஏற்றாகவேண்டும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com