தட்டுப்பாட்டிலிருந்து தாராளம்... பாடமாகும் மனித உடல்களின் கதைகள்!

தட்டுப்பாட்டிலிருந்து தாராளம்... பாடமாகும் மனித உடல்களின் கதைகள்!

பாவம், புண்ணியம், மறுபிறவி, மோட்சம், நரகம் என மனிதர்களின் வாழ்க்கையிலும் வாழ்ந்த பின்னருமான நம்பிக்கைகளுக்குப் பஞ்சமில்லை. ஆனாலும் அண்மைக் காலமாக அறிவியல் மூலமாக மோட்சத்தை அடைய விரும்புவோரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. இதனால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பாடமாக்கப்படுவதற்காக சடலங்கள் காத்திருக்கின்றன.

ஆம், நாடு முழுவதும் 15- 20 ஆண்டுகளுக்கு முன்னரெல்லாம் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக இருக்கக்கூடிய சடலங்கள் கிடைப்பது மிகவும் குறைவாக இருந்தது. காரணம், மரணம் அடைந்தபிறகு உடலைப் புதைக்கவோ எரிக்கவோ மட்டுமே எல்லா மதத்தவரும் அதற்கான சடங்குகளோடு தயாராக இருக்கின்றனர். இதைத் தாண்டி, மருத்துவம் படிக்கும் மாணவர்கள் மனிதர்களின் உடல் உறுப்புகளை நேரடியாகப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, உடல் தானம் செய்பவர்கள் கணிசமாக இருந்தார்கள். ஆனால் அப்படி பெறப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை மாணவர்களுக்கு போதுமானதாக இல்லாமல் இருந்தது. இப்போது நிலைமை தலைகீழ் என்கிறார்கள், மருத்துவக் கல்வித் துறையில்!

இதில் துல்லியமான தகவல்கள் இல்லை என்றாலும், குஜராத்தும் மகாராஷ்டிரமும் நாடளவில் முழு உடலையும் தானம் செய்வதில் முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தலைநகர் புதுதில்லியிலும் இந்த முன்னேற்றம் இருக்கிறது. மௌலானா ஆசாத் மருத்துவக்கல்லூரியில் 2008ஆம் ஆண்டு முதல் 2019வரை ஆண்டுக்கு ஓரிரு உடல்கள்தான் தானமாகக் கிடைத்துவந்தன. 2022ஆம் ஆண்டிலோ 22 உடல்கள் மருத்துவக்கல்லூரி மாணவர்களின் பாடத்துக்காக தானமாக வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை எட்டு பேரின் உடல்கள் பெறப்பட்டுள்ளன.

லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் 2014ஆம் ஆண்டுக்கு முன்னர்வரை ஆண்டுகளுக்கு ஒன்றோ ஓராண்டுக்கு ஒன்றோ என்கிறபடிதான் பாடத்துக்கு உடல் தானம் கிடைத்தது. 2019ஆம் ஆண்டில் இந்தக் கல்லூரிக்கு 11 பேரின் உடல்கள் தானமாகக் கிடைத்தன.

புதுதில்லி எய்ம்ஸைப் பொறுத்தவரை அதன் உயரிய மதிப்பினால் அதிக அளவிலான உடல்கள் தானமாக அளிக்கப்படுகின்றன. ஆண்டுக்கு 30- 35 உடல்கள் அங்கு தானமாகப் பெறப்படுகின்றன.

பொதுவாக ஒரு பாடம்செய்யப்பட்ட உடல் பதினொரு மாதங்கள்வரை பயன்பாட்டில் இருக்கிறது. இந்த காலகட்டத்துக்குள் அது முழுவதுமாக தனித்தனியாகப் பிரிக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் அதன் பயன் இல்லை எனும் கட்டத்தில் எரித்து சாம்பலாக்கப்படுகிறது.

தில்லி எய்ம்ஸைப் பொறுத்தவரை, உடலங்களை வைப்பதற்கான தொட்டிகள் உள்ளன. இப்போதைக்கு அவை எல்லாமே நிறைந்துள்ளன. மேலும், ஐம்பது சடலங்கள் பாடம் ஆக்கப்படுவதற்காக வரிசையில் உள்ளன.

எப்போதும் எங்களுக்கு பாடத்துக்கான உடல்கள் தட்டுப்பாடே இருந்ததில்லை என்கிறார், தில்லி எய்ம்ஸ் செய்தித்தொடர்பாளரும் உடலமைப்பியல் துறையின் பேராசிரியருமான ரிமா டாடா.

பாடமாக்கப்படும் உடல்களின் தேவை அதிகமாகவே இருக்கிறது. மருத்துவக் கல்லூரிகளில் இவற்றின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. உடலமைப்பியல் பற்றிய வகுப்புகளுக்கு மட்டுமன்றி, மருத்துவ ஆய்வு, சிக்கலான அறுவைச்சிகிச்சைகள் தொடர்பான செய்முறைப் பயிற்சிக்கும் இவை இன்றியமையாதவை. வருங்கால மருத்துவர்களுக்கு இவை மிகமிக அவசியமானவை. அவர்களுக்கு இவை முதல் - அமைதியான ஆசிரியர் என்றும் மருத்துவக் கல்வித் துறையில் குறிப்பிடுகின்றனர்.

“எங்களின் ஆராய்ச்சிக்கு இந்தப் பாட உடலங்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன. உடலமைப்பியல், உள் உடலமைப்பியல் கற்பித்தலில் இவற்றின் பங்கு முக்கியம். இந்தப் பாடங்களை வைத்து மருத்துவர்களும், முதுநிலை மருத்துவ மாணவர்களும் பயிற்சி பெறுகையில், உயிரோட்டமான படத்தைப் போல அவர்களுக்கு இருக்கிறது.” என்கிறார் மருத்துவர் டாடா.

ஒரு காலத்தில் பாடத்துக்கான உடல்களைப் பெறுவது பெரும் பாடாக இருந்தது. பெரும்பாலும் அடையாளம் தெரியாதவர்களின் சடலங்களையே கல்லூரிகள் சார்ந்திருந்தன. அதில் உள்ள சவால் என்னவென்றால், அந்த நபர்களின் நோய்விவரம் தெரியாது; அவற்றின் மூலம் தொற்றுக்கான வாய்ப்புகள் குறித்தும் தெரிந்துகொள்ள முடியாது என்பதுதான்!

”இப்போது எல்லா உடல்களுமே தானமாகத் தரப்பட்டவைதான். அந்தந்த நபர்களின் சிகிச்சை விவரத்தையும் அவர்களின் குடும்பங்களைப் பற்றியுமே தெரியும். இது நல்லது எனச் சொல்லவில்லை; போதுமானது.” என்கிறார் மருத்துவர் மிஸ்ரா.

வழக்குகள் தொடர்புடைய சடலங்களைப் பெறுவதற்கு ரொம்பவே நேரத்தைக் கழித்திருக்கிறோம் என்கிறார், லேடி ஹார்டிங் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் சீத்தல் ஜோஷி.

குஜராத் மாநிலம் தனியாகப் பிரிக்கப்படாமல் இருந்தபோது, ஒன்றுபட்ட மகாராஷ்டிர மாநிலத்தில் 1949இல் பம்பாய் உடலமைப்பியல் சட்டம் என நாட்டிலேயே முதல் முறையாக ஒரு சட்டமே கொண்டுவரப்பட்டது. அப்போதிருந்து இன்றுவரை இரு மாநிலங்களும் பாடமாக்கத்தில் முன்னிலையில் இருக்கின்றன.

மும்பை ஜேஜே மருத்துவமனை சார்ந்த கிராண்ட் மருத்துவக் கல்லூரியில் போதுமான அளவுக்கு பாடமாக்கப்பட்ட உடல்கள் இருக்கின்றன என்கிறார், உடலமைப்பியல் துறையின் பேரா. பிராத்னியா குருடே.

செஞ்சிலுவைச் சங்கம், ’உடல் தானம் பெறல்- அளித்தல் விழிப்புணர்வுக்கான அமைப்பு’- ஆர்கன் போன்றவை மூலமாக இதில் உள்ள சிரமங்களை கவனம்செலுத்தி கையாள்கிறார்கள். ஆனாலும் உலக அளவில், இந்தியாவின் இடம் குறிப்பிடும்படியாக பின்னால் இருக்கிறது.

அதாவது, ஒரு கோடிக்கு அமெரிக்காவில் 2600 பேர், குரேசியாவில் 3650 பேர் என இருக்கையில், இந்தியாவோ 8 பேர் என்கிற அளவில்தான் இருக்கிறது. மதவழிப்பட்ட நம்பிக்கைகள், விழிப்புணர்வுக் குறைவு, போக்குவரத்துத் தடங்கல்கள் ஆகியவற்றை முக்கியமான காரணங்களாக உள்ளன. இவற்றை முறியடித்தால் இந்தியாவும் முன்னிலை பெறும் என்பது உறுதி!

logo
Andhimazhai
www.andhimazhai.com