பொள்ளாச்சி கொடூரங்கள்: நடக்காமல் தடுப்பது எப்படி?

பொள்ளாச்சி கொடூரங்கள்: நடக்காமல் தடுப்பது எப்படி?
freepik.com
Published on

தமிழ்நாடே மிக பரபரப்பாக எதிர்பார்த்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை சிறை தண்டனை, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூபாய் 85 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது கோவை மகளிர் நீதிமன்றம்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இளம் பெண்கள் மீதான திட்டமிட்ட பாலியல் வன்கொடுமை, வீடியோ எடுத்து பெண்களை மிரட்டுதல்,பணம் பறித்தல் போன்ற குற்றங்கள் நிகழ்ந்தன. இதில் பாதிக்கப்பட்ட ஓர் இளம்பெண்ணின் சகோதரர் 2019 பிப்ரவரி 24 அன்று பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் அளித்தார்.

இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் கைதானபின் பெண்கள் அமைப்பினர், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வழக்கு விசாரணை 2019 மார்ச் மாதம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு மூன்று மாதம் கழித்து 2019 ஏப்ரல் 25ஆம் தேதி சிபிஐக்கு வழக்கு மீண்டும் மாற்றம் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார், ஆகிய மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். சிபிஐ வழக்கு விசாரணையின் போது 2016- -2019 வரையில் 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருந்ததாக தெரிய வந்தது. குற்றவாளிகள் பயன்படுத்திய உயர்ரக செல்போன், மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அதில் டிஎன் 41 அட்டாக் பாய்ஸ் என்ற வாட்ஸப் குழுவில் இந்த வீடியோக்கள் பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சிபிஐ அரசு தரப்பில் 40 சாட்சிகளை விசாரித்து , மூன்று குற்ற பத்திரிகைகள், 26 ஆவணங்கள் ,40 மின்னணு தரவுகள் ஆகியவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த வழக்கு பெரிய அளவில் கவனிக்கப்பட்டு வந்தது. இதில் அரசியல் குறுக்கீடுகள் இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்த வழக்கில் நீதி பெற்றுத் தருவோம் என்பதை தங்கள் தேர்தல் வாக்குறுதியாகவே திமுக முன் வைத்திருந்தது.

கோவை மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை முடிந்து, நீதிபதி நந்தினி தேவி மே 13 அன்று தன் தீர்ப்பை வழங்கினார்.

சாகும் வரை சிறைத் தண்டனை என்பது பொதுவாக இம்மாதிரிக் குற்றங்களில் அரிதாகவே வழங்கப்படும். பாலியல் குற்றங்களுக்கு எதிராக தண்டனைகள் கடுமையாகி வருவதையே இத்தீர்ப்பு காட்டுவதாகக் கருதப்படுகிறது.

ஆனால் சமூகத்தில் இம்மாதிரிக் குற்றங்கள் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளன. இவற்றைத் தடுப்பது எப்படி என்ற கேள்வி தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த கேள்வியை பல சமூக ஆர்வலர்களிடம் முன்வைத்தோம்.

உமா சக்தி
உமா சக்தி

”பெண்களுக்கு முன் இருந்ததைவிட கல்வி, வேலை வாய்ப்பு , பொருளாதாரம், பாலின சமத்துவம் ஆகியவை உயர்ந்துள்ளது. ஆண்கள் பெண்களை காப்பாற்ற வேண்டாம் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும். பாலியல் சார்ந்த சமத்துவத்தை பள்ளிகளிலும், வீட்டில் உள்ள பெற்றோர்களும் சொல்லிக் கொடுக்க வேண்டும்”என்று அந்திமழையிடம் கூறுகிறார் எழுத்தாளர் உமா சக்தி.

ந.முருகேசபாண்டியன்
ந.முருகேசபாண்டியன்

“ஒப்பீட்டு நிலையில் பெண்கள் எப்பொழுதும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படக்கூடியவர்கள்தான். அண்மைக்காலத்தில் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பெண்கள் பிரமாண்டமான வளர்ச்சியடைந்துள்ளனர். ஒருவிதமான சுதந்திரமான மனநிலையுடன் செயல்படும் பெண்கள், ஏற்கனவே நிலவும் சமூகக் கட்டுப்பாடுகளைத் தூக்கியெறிந்திட முயலுகின்றனர்.” என்று கூறும் எழுத்தாளரும் இலக்கியவிமர்சகருமான ந. முருகேச பாண்டியன், “”சமூகத்தில் புறத்தில் பெண் பற்றிய பார்வை மாறியுள்ளது; அதேவேளையில் அகரீதியில் பெண்ணுக்கான தனித்துவம் அங்கீகரிக்கப்படவில்லை. பெண்ணுக்கான சுயத்தை நம்புகிற பெண்கள் பொருளாதாரரீயில் ஒடுக்குமுறையுடன் பாலியல்ரீதியிலான ஒடுக்குமுறையையும்எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எனக்குத் தெரிந்த அளவில் பெண்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலகட்டமிது.” என்று கூறுகிறார்.

கவிஞரும் நாவலாசிரியரும் முன்னாள் சமூக நல வாரியத் தலைவருமான சல்மா, “குற்றம் எப்பொழுதும் நிகழும். ஆனால் தெரிந்தே திட்டம் தீட்டி செய்த இந்த குற்றம் மிகவும் மோசமானது” என்கிறார். “ இந்த குற்றம் பற்றிய தகவல்கள் வெளியான பின்னர் திமுக இளைஞரணி, மாதர் சங்கத்தினர் மட்டுமல்லாமல் தன்னிச்சையான பல போராட்டங்களுக்குப் பின்னர் தான் இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. இது வரவேற்கத்தக்க தீர்ப்பு; பல போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி. பெண்கள் யாருக்கும் பயப்படாமல் துன்புறுதலுக்கு ஆட்பட்டால் வெளியில் வந்து தயங்காமல் நீதி கேட்க இது நம்பிக்கை கொடுக்கும். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தான் இதை எப்பொழுதும் அணுக வேண்டும். முதன் முதலில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் துணிச்சலாக வெளியில் வந்து போராடியது பாராட்டத்தக்கது. தனிப்பட்ட முறையில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நீதிமன்றத்தில் இழப்பீடு தொகையைத் தாண்டி உளவியல் ரீதியாக அவர்களுக்கு உதவ அரசும், தன்னார்வலர்கள் அமைப்புகளும் முன் வர வேண்டும்” எனவும் அவர் கூறுகிறார்.

சல்மா
சல்மா

”ஆண்களுக்கு பாலின சமத்துவத்தை உணர்த்தும் வகையில் பள்ளி ,குடும்பங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எதையும் தெளிவாக ஆராய்ந்து, அதன் பின்னரே யாரையும் நம்ப வேண்டும் எல்லோரையும் அப்படியே நம்பி விடாமல் இருபாலரும் விழிப்புடன் இருத்தல் வேண்டும்” என்றும் அவர் வழிகாட்டுகிறார்.

திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளரும் சமூக சேவகருமான பத்மபிரியா. ” இந்த மாதிரியான பாலியல் குற்றங்கள் இனிவரும் காலங்களில் நடக்காமல் இருக்க இரண்டு விஷயங்கள் அவசியமாக உள்ளது. ஒன்று சமூகத்தில் மக்களிடையே மாற்றம் வேண்டும். இரண்டாவதாக ஆண்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். குற்றம் இழைத்தால் இந்த சமூகம் அமைதியாக இருக்காது என்ற எண்ணம் வந்துவிட்டால் குற்றம் இல்லாத சமூகத்தை உருவாக்க முடியாவிட்டாலும் குற்றங்கள் குறையும் சமூகமாக மாறும்.” என்று கூறுகிறார்.

பத்மப்ரியா
பத்மப்ரியா

இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பது எப்படி என்று அந்திமழையிடம் விரிவாகப் பேசிய ஓய்வுபெற்ற ஏடிஜிபி வனிதா ஐபிஎஸ், “அன்பைக் காட்டித்தான் ஆண்கள் பெண்களை அதிகமாக அவர்களின் வலையில் வீழ்த்துகிறார்கள். ஆண்கள் அதிகம் பயன்படுத்தும் ஆயுதம் அன்பு, காதல் என்பதே ஆகும். அந்தப் பெண்களைப் பயன்படுத்திவிட்டு அடுத்து அவர் நண்பர்களையும் இழுத்து விடுவதால் அடுத்தடுத்த விபரீதங்கள் நிகழ்கின்றன. இதெல்லாம் எத்தனையோ திரைப்படங்களில் வந்துவிட்டன. இருந்தும் இவ்வளவு கல்வி அறிவு பெற்ற பின்னரும் ஏமாற்றும் ஆண்களிடம் இரை போல் விழுவது பற்றி பெண்கள் யோசிக்கவேண்டும்.

வனிதா ஐபிஎஸ்
வனிதா ஐபிஎஸ்

இந்த காலகட்டத்தில் நமக்குத் தொடர்பே இல்லாத நபர்கள் நம்மிடம் பேசும் போது, வீட்டில் கிடைக்காத அன்பு அவர்கள் சொற்களில் கிடைக்கும்போது ஏன் இப்படிப் பேசுகிறார்கள், அவர்கள் நோக்கம் என்ன எனச் சிந்திக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் வீட்டில் பகிர்ந்துகொள்ளவேண்டும். கல்லூரி செல்லும் வரைக்கும் எல்லா நட்புகளைப் பற்றியும் வீட்டில் பகிர்ந்துகொள்ளும் பெண்கள், காதல் என்று முதிர்ச்சி அடையும்போது வீட்டில் சொல்வது இல்லை. பெற்றோர்களும் குழந்தைகளைக் கவனிக்கவேண்டும். சிறப்பு வகுப்பு, நண்பர் வீட்டுக்குச் செல்கிறேன் என்று சொல்கையில் சம்பந்தப் பட்ட இடங்களில் விசாரிக்க வேண்டும் இல்லையா? இந்த கண்காணிப்பு இருந்தாலே இதுபோன்ற விஷயங்களைத் தவிர்க்கமுடியும்.

பெண்களும் ஆண்களுமே ஒரு எல்லைக்குள் பழகுவதை யாரும் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் எல்லை மீறிப் பழகுவதை அவர்களுமே தவிர்க்கவேண்டும். இன்று கல்வியறிவு அதிகமாக இருக்கும் சூழலில் இதை பெண்கள் உணரவேண்டும். நம்மிடம் அத்துமீற முயலுகிறார்கள்.. அதற்கு காதல் என்ற வார்த்தையைக் காட்டுகிறார்கள்.. என்று வரும்போதே பெண்கள் உஷாராகிவிட வேண்டும்” என்று கூறுகிறார்.

”பெண்களுக்கு எதிரான குற்றங்கள், அத்துமீறல்கள் நடந்தால் இது ஒரு விபத்து எனக் கருதி உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும். இல்லையெனில் தன் அடையாளங்களை வெளியிடாமல் விசாரணை நடத்த ஐஜி, டிஐஜி போன்ற உயரதிகாரிகளிடம், இணைய வழியிலும் கோரிக்கை விடுத்து புகாரை பதிவு செய்யலாம். எக்காரணத்தை கொண்டும் புகார் செய்ய தயங்க கூடாது. போனால் தங்கள் பெயர் கெட்டுவிடுமோ என்றெல்லாம் இக்காலத்தில் தயங்கவே கூடாது” என்றும் அழுத்தமாகக் கூறுகிறார் அவர்.

’அண்ணா விட்டுடுங்கண்ணா...’ என்று பாதிக்கப்பட்ட ஒரு பெண் அலறிய குரல் இச்சமூகத்தின் கூட்டு மனச்சாட்சியை உலுக்கியதே இந்த வழக்கு முறையாக நடத்தப்பட்டதற்கு ஆதாரமாக அமைந்தது எனக் கொள்ளலாம். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் சமூக அழுத்தத்துக்கு அஞ்சி வெளியே வந்து புகார் அளிக்கவில்லை. இந்த அழுத்தங்களைத் தாண்டி புகார் அளித்த பெண்கள் பாராட்டுக் குரியவர்கள். இனிவருங்காலத்தில் பாதிக்கப்படும் பெண்கள் அஞ்சாமல் வெளியே வர இது ஊக்கம் அளிக்கும்.

கட்டுரை: ம.தினோவிகா, தா. கீர்த்தி

logo
Andhimazhai
www.andhimazhai.com