மனநலப் பிரச்னை உள்ள பெண்களில் 77 சதவீதம் பேருக்கு குடும்பத்தினர், உறவினர்களின் ஆதரவு இல்லை என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மனநலச் சிக்கல்கள், மனநோய்கள், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிர்மீண்டவர்கள் எனப் பல்வேறு தரப்பினர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். குறிப்பாக, மிகவும் குறைந்த வருவாய்ப் பிரினரே அரசு மருத்துவமனைகளில் இந்த சிகிச்சையைப் பெறுவதில் அதிக அளவில் இருக்கின்றனர் என புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
கணவனின் குடிநோயால் ஏற்படும் பிரச்னைகள், குடும்ப வன்முறை, வாழ்வாதார நெருக்கடி ஆகியவற்றால் அண்மைக் காலமாக இவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனால் பலர் தற்கொலைக்கு முயல்கிறார்கள். கணிசமானவர்கள் குழந்தைகளுடனும் தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர்.
இந்தப் பின்னணியில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மனநலச் சிகிச்சை பெறும் பெண்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தினார்கள். கதைகளில் வரும் பாத்திரங்கள் மனநோயாளிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனவா, ஆம் எனில் அது எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது இந்த ஆய்வு.
உள்நோயாளிகளாகச் சிகிச்சைபெற்ற பெண்களிடம் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதிவரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
சூடாமணி எழுதிய ஒரு கதையை அந்த நோயாளிகளிடம் படித்துக் காட்டப்பட்டது. (மனநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிடம் அவரின் குடும்பத்தினர் எப்படி அணுகுகிறார்கள் என்பது அந்தக் கதையின் மையம்.)
முன்னர், மருத்துவப் பணியாளர்களிடம் பேசவே முன்வராதவர்கள் அந்தக் கதையைக் கேட்டதும் மனம்திறந்து பேசத் தொடங்கியுள்ளனர்; அதாவது, மனச் சிக்கலோடு இருப்பவர்களிடம் கதை போன்ற இலக்கியங்கள் மனதை இலேசாக ஆக்குகின்றன என்பது தெரிந்தது.
மேலும், அந்தக் கதையில் வரும் பாத்திரங்களைப் போல, தங்கள் குடும்பத்தினர் எந்த அளவுக்குத் தங்களுக்கு ஆதரவாக, மனதுக்குப் பிடிமானமாக நடந்துகொள்கிறார்கள் என்பதையும் ஒப்பிட்டு அவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதில், 77 சதவீதம் பெண்கள் மனச்சோர்வுடன், மனக்கவலையுடன், துயரத்துடன் இருந்துவரும் தங்களுக்கு அப்பா, கணவன், பிள்ளைகள், உறவினர்கள் பற்றிக்கொள்ள ஆதரவாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
23 சதவீதம் பேரே குடும்பத்திலும் உறவுகளிலும் தங்களுக்கு முழுமையாகவும் பகுதியாகவும் ஆதரவாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
மனநலச் சிகிச்சை உதவிப் பணியாளர் பயிற்சிப் படிப்பு மாணவர்கள் கோகிலா, காயத்ரி இருவரும் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
சென்னை, தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் திரள்- மக்கள் மனநல இணையம் நடத்திய பேராசிரியர் ஒட்டிலிங்கம் சோமசுந்தரம் நினைவுக் கருத்தரங்கில் இந்த ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டது.
மாணவர் கோகிலா ஆய்வின் விவரங்களை எடுத்துவைத்துப் பேசினார். அப்போது, “ பொதுவாக நோயாளிகள் எங்களிடம் நன்றாக இருப்பதாகவே வெளிப்படுத்துவார்கள். இந்தக் கதையைப் படித்துக்காட்டிய பிறகு உணர்வுபூர்வமாகப் பேசத் தொடங்கினார்கள்.” என்று அவர் கூறினார்.