1980ஆம் ஆண்டு பாரதிய சனதா கட்சி தொடங்கப்பட்டது முதலே அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமருக்குக் கோயில் கட்டுவது, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்புத் தகுதியை அளிக்கும் அரசமைப்புச் சட்டக் கூறு 370ஐ நீக்குவது, பொதுசிவில் சட்டம் கொண்டு வருவது ஆகிய மூன்றும் கட்சியின் முதன்மையான குறிக்கோள்களாகக் கூறப்பட்டு வந்தன. பா.ச.க. 2014இல் ஆட்சிக்கு வந்த பின் அயோத்தியில் இராமருக்குக் கோயில் கட்டப்பட்டுவிட்டது. 370 நீக்கப்பட்டுவிட்டது. பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான முதல் நடவடிக்கையாகக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பா.ச.க.வின் பாசிசக் கொள்கையின் தொடர்ச்சியாக இப்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை நவம்பர் 25 அன்று தொடங்கும் நாடாளுமன்றத்தின் குளிர்க்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றிட முனைந்துள்ளது.
இந்தியா முழுமைக்கும் ஒரே சமயத்தில் மக்களவைக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்துவதற்காக அரசமைப்புச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ஆகியவற்றில் என்ன என்ன திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக 2.9.2023 அன்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் தலைமையில் பத்து பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. அமித்ஷாவும் இதில் ஒரு உறுப்பினர்.
சுதந்தர இந்தியாவில் ஆளும் வகுப்பாக உள்ள பார்ப்பன- பனியா கும்பல் தங்கள் நலன்களையும் ஆதிக்கத்தையும் மேலும் வளர்த்தெடுப்பதற்காக ஒன்றிய அரசில் மென்மேலும் அதிகாரங்களைக் குவிப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் 1983இல் தேர்தல் ஆணையமே ஒரே தேர்தல் முறையைப் பரிந்துரைத்தது. நீதிபதி பி.பி. ஜீவன் ரெட்டி தலைமையிலான சட்ட ஆணையம் 1999இல் ஒரே தேர்தல் முறையை வலியுறுத்தியது. 2015இல் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு தேர்தல் செலவுகளைக் குறைப்பதற்கும், வளர்ச்சிப் பணிகள் தடைபடுவதைத் தவிர்ப்பதற்கும் ஒரே தேர்தல் முறை வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின் பேரில் 2018இல் நீதிபதி பி.எஸ். சவுகான் தலைமையிலான சட்ட ஆணையமும் இத்திட்டத்தை வலியுறுத்தியது. இவ்வாறாக ஒன்றியத்தில் ஆளும் அதிகார வர்க்கம் ஒரே தேர்தல் திட்டத்திற்கு மக்களிடையே ஆதரவான கருத்து நிலையை உருவாக்கிட முயன்று வந்தது. இத்தன்மையில் சங் பரிவாரங்கள் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே மொழி போன்ற முழக்கங்கள் மூலம் இந்தியாவின் பன்மைத் துவத்தை - பல்வேறு தேசிய இனங்களின் இருப்பை அவற்றின் உரிமைகளை அழிக்கின்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன.
ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் 18,625 பக்கங்கள் கொண்ட அறிக்கை 14.3.2024 அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அளிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் இந்தியா முழுமைக்கும் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும். இரண்டாவது கட்டத்தில் நூறு நாள்கள் கழித்து அனைத்து நிலை உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்படும்.
2024இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் மூன்றாவது தடவையாக இந்தியாவின் தலைமையமைச்சராக நரேந்திர மோடி முடிசூட்டிக் கொண்ட பின், உயர்மட்டக் குழுவின் பரிந்துரையை ஒன்றிய அமைச்சரவை 18.9.2024 அன்று ஏற்றுக்கொண்டது. 'நம்முடைய சனநாயகத்தை மேலும் உயிர்ப்பானதாகவும் மக்களின் பங்கேற்பு மிக்கதாகவும் இப்பரிந்துரைகள் ஆக்கும்' என்று நரேந்திர மோடி கூறுகிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் ஒரே நாடு. ஒரே தேர்தல் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கின்றன.
ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக்குழு தங்கள் பரிந்துரைக்கு வலுசேர்க்கும் வகையில் ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, பெல்ஜியம், சுவீடன் போன்ற சில நாடுகளில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் நடப்பில் இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நாடுகள் எதுவும் பத்து கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்டவை அல்ல. இந்நாடுகளை இந்தியாவுடன் ஒப்பிடுவது அடிப்படையிலேயே தவறானதாகும். கோடிக்கணக்கான மக்கள் மொழி பேசும் பல தேசிய இனங்கள் இந்தியாவில் உள்ளன. இம்மக்கள் மொழியால், பண்பாட்டால். பழக்கவழக்கங்களால். உணவு முறையால் வேறுபட்டவர்கள். எனவே இந்தியாவை ஒற்றைத் தன்மை கொண்டதாகக் கருதி ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது மொழித் தேசிய இனங்களின் உரிமையைப் பறிப்பதாகும்.
ஒரே நாடு. ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவாக முன்வைக்கப்படும் முதன்மையான காரணங்களில் ஒன்று அடிக்கடி தேர்தல் நடப்பதால் செலவாகும் பணம் மிச்சமாகும் என்பதாகும். இந்த வாதம் உண்மைபோல தோற்றமளிக்கும் ஒரு பொய் என்பதே மெய். 2024இல் நாடாளுமன்றத் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி முடிப்பதற்குச் செலவிட்ட தொகை ரூ.1086 கோடி ஆகும். ஒன்றிய அரசின் ஓராண்டு பட்ஜெட் 48.20 இலட்சம் கோடி. 5 ஆண்டுகளுக்கான பட்ஜெட் தொகை 240 இலட்சம் கோடி. இத்தொகை யுடன் ஒப்பிடும் போது நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிகபட்சமாக ரூ.2000 கோடி செலவிடுவது என்பது ஒரு பொருட்டே அல்ல.
இந்தியா முழுவதும் 4126 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு கோடி உருபாய் தேர்தல் ஆணையத்திற்குச் செலவாகும் என்று கணக்கிடப் பட்டுள்ளது. இதன்படி. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தலை நடத்திட 234 கோடி செலவாகும். தமிழ்நாட்டின் ஓராண்டு பட்ஜெட் தொகை 3.5 இலட்சம் கோடி. 5 ஆண்டுகளுக்கு 17.5 இலட்சம் கோடி. இத்தொகையுடன் ஒப்புநோக்கினால் 234 கோடி என்பது எள்ளளவே ஆகும். ஆகவே, தேர்தல்களால் அரசுக்கு அதிக அளவில் செலவாகிறது என்று சொல்வது ஒரு ஏமாற்று!
இதைவிட பெரிய மோசடி - ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் மிச்சமாகும் தொகை மக்கள் நலனுக்கான கட்டமைப்புகளை உருவாக்குவதில் செலவிடப்படும் என்பதாகும். இவ்வாறு சொல்பவர்கள், அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தேர்தலில் கோடிக்கணக்கில் செலவிடும் பணத்தைக் கருத்தில் கொண்டு கூறுகிறார்கள் போலும்! இப்பணம் மிச்சமாவதாகவே வைத்துக் கொண்டாலும் மக்கள் நலனுக்கான சாலைகள், பாலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் முதலானவற்றை அமைத்திட இத்தொகை பயன்படப் போவதில்லை.
ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரிப்பவர்களின் மற்றொரு கூற்று 1952 முதல் 1967 வரை நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தான் தேர்தல் நடத்தப்பட்டது. எனவே இப்போது அத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதில் என்ன தவறு? என்பதாகும். சுதந்தரம் பெற்ற பின் மக்கள் காங்கிரசுக் கட்சியின் மீதும் நேருவின் தலைமை மீதும் பெரும் நம்பிக்கை வைத்து வாக்களித்தனர். மேலும் 1967 வரை இந்தியா முழுவதும் பார்ப்பன-சத்திரிய- பனியா மேல் சாதியினரே அரசியலில் முற்றதிகாரம் பெற்றிருந்தனர். காங்கிரசு மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படாததால் 1967இல் தமிழ்நாடு, மேற்குவங்கம். உ.பி. உள்ளிட்ட சில மாநிலங்களில் காங்கிரசு அல்லாத கட்சிகள் ஆட்சியில் அமர்ந்தன.
1967க்கும் 1977க்கும் இடையில் இந்திய அளவில் குறிப்பாக உத்தரப்பிரதேசம், பீகாரில் அரசியலில் பிற்படுத்தப்பட்டோர் பெரும் ஆற்றலாக வளர்ந்தனர், இம்மாநிலங்களில் ஆட்சியில் அமர்ந்தனர். காஷ்மீர், பஞ்சாப் முதல் தமிழ்நாடு வரையில் மாநிலக் கட்சிகள் வலிமையுடன் வளர்ந்தன. 1952-1967 காலத்தில் காங்கிரசின் ஆட்சியில் தேசியத்தின் பெயரால் மாநிலங்களின் தேவைகளும் உரிமைகளும் ஒடுக்கப்பட்டன. சூலை 1977க்குப் பின் மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தேசியக் கட்சிகள் ஒன்றிய அரசில் ஆட்சியில் அமர முடியாது என்கிற நிலை ஏற்பட்டது. ஒன்றிய அரசில் தங்கள் வல்லாதிக்க ஆட்சிக்கு மாநிலக் கட்சிகளும் அவற்றின் ஆட்சியும் தடையாக இருப்பதாக தேசியக் கட்சிகளான காங்கிரசும் பாரதிய சனதாவும் கருதுகின்றன. எனவேதான் ஒரே தேர்தல் திட்டத்தைச் செயல்படுத்திட பாசிச பா.ச.க. தீவிரமாக முயல்கிறது.
இப்போது காங்கிரசுக் கட்சி இதை எதிர்ப்பதாகக் கூறுகிறது. ஆனால் அதன் கடந்த கால வரலாறு அதை நம்பி ஏற்க மறுக்கிறது. இந்திரா காந்தி தலைமையமைச்சரான பின் அதிகார வெறியில், மாநிலங்களில் மக்கள் செல்வாக்குப் பெற்றிருந்த காங்கிரசுக் கட்சியின் முதலமைச்சர்களையும் மூத்த தலைவர்களையும் விரட்டிவிட்டு, தனக்கு ஏவல் செய்யும் எடுபிடிகளைத் தலைவர்களாக்கினார். இதனால் காங்கிரசில் உட்கட்சி சனநாயகம் அழிந்தது. இது இந்திய சனநாயக முறைக்கே கேடானதாக அமைந்தது. மாநிலங்களின் உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டன. இப்போது நரேந்திர மோடி இத்திட்டத்தை இன்னும் பல மடங்கு வீரியத்துடன் செயல்படுத்தி வருகிறார்.
இரண்டு மாதங்களுக்கு முன் ஜம்மு-காஷ்மீருக்கும். அரியானா மாநிலத்திற்கும் தேர்தல் நடந்தது. நவம்பர் மாதம் மகாராட்டிரம். ஜார்கண்ட் ஆகிய இரு மாநிலங்களின் சட்ட மன்றங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. இந்த நான்கு மாநிலங் களுக்கும் ஒரே மாதத்தில் தேர்தல் நடத்த முடியாத போது, இந்தியா முழுமைக்கும் ஒரே நேரத்தில் மக்களவைக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறுவது நகைமுரணாகும்.
இந்தியாவில் எப்போதும் ஏதாவது ஒன்றிரண்டு மாநிலங் களில் தேர்தல் நடந்து கொண்டே இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் பெரும் பகுதி நேரத்தைத் தேர்தல் களத்திலேயே செலவிட வேண்டியிருக்கிறது. மக்களுக்குத் தொண்டு செய்வதில் சுணக்கம் ஏற்படுகிறது என்று ஒரே தேர்தல் வேண்டும் என்போர் கூறுகின்றனர். ஒரு மாநிலத்தில் தேர்தல் நடந்தால் அந்த மாநிலத்தில் உள்ள கட்சிகள் மட்டுமே அரசியல் களத்தில் செயல்படும் நிலை இந்திராகாந்தி காலம் வரை இருந்தது. ஆனால் நரேந்திர மோடி தலைமை அமைச்சரான பின்பு, மாநிலத் தேர்தல்களில் மோடியே கதாநாயகனாகிவிட்டார். கடவுளர் சிலைகள் திருவீதிஉலா வருவதுபோல் மோடி வீதிஉலா வருகிறார். மேலும் அமித்ஷா தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் படைத்தளபதியாகி விடுகிறார். இதனால் மாநிலத் தேர்தல்களில் மாநில மக்களின் தேவைகள், சிக்கல்கள், உரிமைகள் பேசுபொருளாகாமல், தேசிய அளவிலான செய்திகளே முதன்மை பெறுகின்றன. இப்போக்கு தற்போது குறைந்த அளவில் உள்ள கூட்டாட்சி முறையையும் சிதைப்பதாக உள்ளது. ஆனால் கூட்டாட்சிக் கோட்பாட்டை ஒரேயடியாகக் குழிதோண்டிப் புதைத்திட பா.ச.க. நாட்டில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் தேர்தல் கூத்திற்கு முடிவு கட்டி, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தேர்தல் நடத்தப்படுவதே இந்தியாவை வல்லர சாக்கும்: உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக உயர்த்தும் என்று கூப்பாடு போடுகிறது.
அடிக்கடி தேர்தல்கள் நடப்பதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக வளர்ச்சிப் பணிகள் தடைபடு கின்றன என்கிற வாதம் முன்வைக்கப்படுகிறது. 1967க்குப்பின் அடிக்கடி தேர்தல்கள் நடந்துள்ளன. இவற்றால் மக்களுக்கான திட்டப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
ராம்நாத் கோவிந் தலைமையிலான உயர்மட்டக்குழு பரிந்துரைத்துள்ள ஒரே நாடு. ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்திட அரசமைப்புச் சட்டக் கூறுகள் 83.85. 172. 174. 356 ஆகியவற்றில் திருத்தங்கள் செய்ய வேண்டும். அரசமைப்புச் சட்டத்தில் 18 திருத்தங்களைச் செய்ய வேண்டியிருக்கும் என்று ராம்நாத் கோவிந் குழுவின் அறிக்கை கூறுகிறது. அதேசமயம் இவற்றில் பெரும்பாலான திருத்தங்களுக்கு மாநில சட்டமன்றங்களின் ஒப்புதல் தேவை இல்லை என்று பா.ச.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அரசமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேறிட மக்களவையிலும் மாநிலங்கள் அவையிலும் உள்ள மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஒப்புதல் அளிக்க வேண்டும். மக்களவையில் மொத்த உறுப்பினர்கள் 543. இதில் 3இல் 2 பங்கு (2/3) 362 ஆகும். ஆட்சியிலி ருக்கும் தேசிய சனநாயகக் கூட்டணிக்கு மொத்தம் 293 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு பெற இன்னும் 69 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும்.
இதேபோல் மாநிலங்கள் அவையில் மூன்றில் இரண்டு பங்கு என்பது 156 உறுப்பினர்கள். பா.ச.க. கூட்டணிக்கு 126 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். எனவே நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் இப்போதுள்ள எண்ணிக்கை அடிப்படையில் ஒரே தேர்தல் திட்டத்தை நிறைவேற்ற முடியாது. ஆயினும் நவம்பர் 25 அன்று கூடும் குளிர்காலக் கூட்டத் தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தைக் கொண்டுவரப் போவதாகக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது அல்லது அவை யிலிருந்து இடைக்கால நீக்கம் செய்வது போன்ற சூழ்ச்சித் திட்டத்தை பா.ச.க. வகுத்திருக்கக்கூடும். ஒரே தேர்தல் முறையைக் கொண்டுவர வேண்டும் என்பது பா.ச.க.வின் நீண்டகாலத் திட்டம்.
பா.ச.க. 2014 தேர்தல் அறிக்கையில், மற்ற அரசியல் கட்சிகளுடன் கலந்து பேசி, மாநிலங்களுக்கும் மக்களவைக் கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான வழிவகுக்கப் படும் என்று கூறியிருந்தது.
2019, 2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கைகளிலும் பா.ச.க. ஒரே தேர்தல் திட்டத்தை வலியுறுத்தியிருந்தது. பா.ச.க. ஒரே தேர்தல் திட்டத்திற்கு இந்த அளவுக்கு முதன்மை தருவதற்கான காரணம் ஆர்.எஸ்.எஸ்.இன் உயிர்க்கொள்கை யான இந்துராஷ்டிரம் அமைப்பதற்கான திறவுகோல் இது என்று கருதுவதாலாகும். 1956இல் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டதை ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர். இது தேச ஒற்றுமைக்கு எதிரானது என்று கூறி கடுமையாக எதிர்த்தார். சமற்கிருதமே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்ற கருத்துடையவர் கோல்வால்கர். அதனால் மொழிவழி மாநிலங்கள் அமைவது இந்தி, சமற்கிருத ஆதிக்கத்திற்குத் தடையாக இருக்கும் என்று கோல்வால்கர் மட்டுமின்றி இப்போதுள்ள சங்கிகளும் கருதுகின்றனர்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்த பிறகு, மேலும் மாநில உரிமைகளைப் பறிப்பதன் மூலம் படிப் படியாக இந்துத்துவம், இந்தி, சமற்கிருதம் ஆகியவற்றைத் திணிப்பதே ஒரே தேர்தல் திட்டத்தின் நோக்கமாகும். தற்போதுள்ள நாடாளுமன்ற சனநாயக முறைக்கு மாற்றாக இந்தியா முழுமைக்கும் முற்றதிகாரம் படைத்த குடியரசுத் தலைவர் ஆட்சிமுறை கொண்டு வரப்படும். அந்நிலையில் தேசியக் கட்சிகள் ஒன்றிரண்டு மட்டுமே வலிமையுடன் இருக்கும். மாநிலக் கட்சிகள் நலிவுற்று அழியும். அப்போது நலிவடைந்த நிலையில் இருக்கும் மொழிவழி மாநிலங்களைக் கலைத்துவிட்டு இந்தியாவை நூறு ஜன பதங்களாகப் பிரிக்கும் திட்டம் ஆர்.எஸ்.எஸ்.-இடம் இருக்கிறது. எனவே மொழிவழித் தேசிய இனவிடுதலை. கூட்டாட்சிக் கோட்பாடு ஆகியவற்றில் பற்றுடையோரும். இயக்கங்களும் ஒரே தேர்தல் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்க வேண்டும்.
ஏதோவொரு சூழ்ச்சி வழியில் ஒரே தேர்தல் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டால், 2029 மக்களவை தேர்தல் (appointed date) நடக்கும் போது எல்லா மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்த வேண்டியிருக்கும். அப்போது இருக்கின்ற சட்டமன்றங்கள் கலைக்கப்படுமா? எடுத்துக்காட்டாக 2026இல் தமிழ்நாட்டு சட்டமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அரசு கலைக்கப்பட்டு 2029இல் மீண்டும் சட்டமன்றத்துக்குத் தேர்தல் நடக்குமா? என்பதற்குத் தெளிவான விடையில்லை.
ராம்நாத் கோவிந் குழு, ஒரே தேர்தல் திட்டம் நடப்புக்கு வந்த பின், எந்த மாநிலத்திலாவது ஆட்சி கவிழுமானால். அந்த மாநிலத்துக்கு மீண்டும் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும். ஆனால் அச்சட்டமன்றத்தின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக இருக்காது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரையில் மட்டுமே அதன் பதவிக்காலம் இருக்கும் என்று பரிந்துரை செய்துள்ளது. இதுபோல் பல மாநிலங்களில் ஆட்சி கவிழ்ந்து இடைத் தேர்தல்கள் நடந்தால் ஒரே தேர்தல் திட்டத்தின் மூலக் கருத்துக்கு முற்றிலும் எதிரானதாக இருக்குமல்லவா!
அரசமைப்புச் சட்டக் கூறு 172 மாநில சட்டமன்றங்களின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் என்று வரையறுத்துள்ளது. மாநிலங்கள் தங்களுக்கென்று தனியாக சட்டங்களை இயற்றிக் கொள்ளும் இறையாண்மை கொண்டவை. சட்டமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. இந்த அதிகாரங்கள் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளாகும். இந்த அதிகாரங்களைக் குறுக்குவதோ. மாற்றுவதோ அரசமைப்பின் அடிப்படையாக விளங்கும் கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு எதிரானதாகும். சட்டமன்றங்களின் 5 ஆண்டுகள் பதவிக் காலம் என்பதை நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்துடன் முடிச்சு போடக் கூடாது. அந்த அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இல்லை. 24.4.1973 அன்று கேசவானந்த பாரதி வழக்கில், "அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்றும் எந்தச் சட்டத் திருத்தத்தையும் நாடாளுமன்றம் செய்யக் கூடாது'' என்று உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளித் துள்ளது. ஒரே தேர்தல் திட்டம் இத்தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானது.
ஒரே தேர்தல் திட்டத்தின்படி நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும் போது, அடுத்த தலைமை அமைச்சர் யார்? என்றும் மற்றும் இந்திய அளவிலான பிரச்சினைகள் மட்டுமே செய்தி ஏடுகளிலும் சமூக ஊடகங்களிலும் பேசப்படும். மாநிலங்களுக்கே உரித்தான தேவைகள், சிக்கல்கள் பின்னுக்குத் தள்ளப்படும்.மாநிலக் கட்சிகள் படிப்படியாக தங்கள் செல்வாக்கை இழக்கும்.
நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்பு கள் ஆகியவற்றின் பொறுப்பும் கடமையும் செயல்பாடும் வெவ்வேறானவை. எனவே இந்த மூன்று அடுக்குகளுக் கும் தனித்தனியே தேர்தல் நடத்துவதே அவ்வமைப்பு கள் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவு செய்யும். அப்போதுதான் அவை மக்களுக்குப் பொறுப்பு கூற வேண்டிய தன்மையினவாகச் செயல்படும்.
பா.ச.க. கொண்டுவரும் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இந்தியாவின் பன்மைத்துவத்துக்கும், மொழிவழித் தேசிய இனங்களின் தன்னுரிமைக்கும், மக்களாட்சியில் சனநாயகப் பரவலாக்கத்துக்கும், கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கும் முற்றிலும் எதிரானது. இந்தியாவில் பாசிச இந்துராஷ்டி ரத்தை அமைப்பதே இத்திட்டத்தின் உள்நோக்கமாகும். மக்களாட்சி முறையிலும் கூட்டாட்சிக் கோட்பாட்டிலும் நம்பிக்கை கொண்டுள்ள அரசியல் கட்சிகளும், குடிமை அமைப்புகளும், பொது மக்களும் இத்திட்டத்தைத் தீவிரமாக எதிர்த்து முறியடிக்க வேண்டும்.
(நன்றி: புதிய சிந்தனையாளன். கட்டுரையாளர் க.முகிலன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர். கட்டுரையில் இடம்பெற்றுள்ளவை ஆசிரியரின் சொந்த கருத்துகள். அந்திமழையின் கருத்துகளைப் பிரதிபலிப்பவை அல்ல. )