தி.மு.க. அரசு ‘முத்தமிழ் முருகன் மாநாடு’ நடத்துகிறது என்ற செய்தி வெளியானபோது, சற்று ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஏற்கெனவே வேல் யாத்திரைகளை நா.த.க.வும் பா.ஜ.க.வும் நடத்திமுடித்த நிலையில் தன் பங்குக்கு முருகனை தி.மு.க.வும் தூக்கிப்பிடிக்கிறது என்றுதான் இதைப் பார்க்கமுடிகிறது. இதை மென் இந்துத்துவா என எடுத்துக்கொள்வதா, வைதீகத்துக்கு எதிரான தமிழ்ச் சமய நெறி நடவடிக்கை என எடுத்துக்கொள்வதா என பலரும் குழம்பிப் போயிருக்கிறார்கள்.
ஆனால் ”பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கும் தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என நிகழ்வின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் மு.வெ.சத்தியவேல் முருகனார் அந்திமழைக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார்.
தமிழ்க் கடவுள் என்று அழைக்கப்படும் முருகனின் பெருமையை உலகெங்கும் உள்ள முருக பக்தர்கள் அறிந்துகொள்ளும் வகையில், பழநியில் வரும் ஆகஸ்ட் 24, 25ஆம் தேதிகளில் ’அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள சமயப் பெரியோர்கள், தெய்வீக அன்பர்கள், முருக பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொள்கின்றனர்.
இதையொட்டி விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல், விளம்பரப் பணிகள் மேற்கொள்ளுதல், ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தல், முக்கிய பிரமுகர்களை வரவேற்று வசதிகளை செய்து தருதல் போன்ற பணிகளுக்காக ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். அங்கிருந்து மாநாட்டில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் வரும் ஜூலை 15ஆம் தேதிக்குள் தங்களைப் பதிவுசெய்வதற்கும், முருகனைக் கருப்பொருளாகக் கொண்ட ஆய்வுக் கட்டுரைகளை ஜூன் 20ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் https://muthamizhmuruganmaanadu2024.com/ என்ற தனி இணையதளம் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாடு குறித்து நிகழ்வின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் முதுமுனைவர் மு.வெ.சத்தியவேல் முருகனாரிடம் பேசினோம்:
“உலகம் முழுவதும் முருக பக்தர்கள் உள்ளனர். அவர்கள் மத்தியில் முருக பக்தி மேலும் வளர வேண்டும் என்பதற்காக அவ்வப்போது தனித்தனியாக மாநாடுகள் நடத்தப்பட்டுவந்தன. தற்போது இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை இந்து சமய அறநிலையத் துறை செய்துள்ளது. பல கோயில்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்து சமய அறநிலையத்துறை இந்த நிகழ்வை நடத்துவது பொருத்தமாகவும் பொறுப்பாகவும் இருக்கும்.
இந்த மாநாட்டின் நோக்கம், முருக வழிபாட்டின் உள்ளுறை நெறிகளை உலகெங்கிலும் பரப்புதல். முருகனை அடைவிக்கும் தத்துவக் கோட்பாடுகளை யாவரும் எளிமையாக அறிந்து அருளேற்றம் பெற உதவுதல். மேன்மை பொழியும் முருகனடியார்களை உலகளாவிய அளவில் ஒருங்கிணைத்தல். முருக வழிபாட்டு நெறியை புராணங்கள், இலக்கியங்கள், திருமுறைகள், திருப்புகழ், சைவ சித்தாந்த சாத்திரங்கள் ஆகியவற்றிலிருந்து ஆழ்ந்தெடுத்து அதன் முத்துகளை உலகறியப் பரப்புதல். அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருகக் கோட்பாடுகளை இளைஞர்கள் மனத்தில் பதித்துவைத்து உலகை உயர்த்த வழிவகுத்தல் ஆகியவையே ஆகும்.” என்றவரிடம் இந்து சமய அறநிலையத்துறை இந்த மாநாட்டை திடீரென நடத்துவதின் நோக்கம் என்னவென்று கேட்டோம்.
“தமிழக அரசாங்கம் கோயில்களை நிர்வாகம் செய்கிறது. அதிலொரு பணியாக இந்த மாநாட்டை அரசு நடத்துகிறது. கட்சிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. அரசாங்கம் வேறு; கட்சி வேறு.
அனைத்து மத நம்பிக்கைகளையும் அரசாங்கம் மதிக்க வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. கட்சிக்கு கொள்கை இருக்கலாம்; ஆனால் அரசாங்கம் மக்களுக்காத்தானே? முருக பக்தர்களை விலக்கி வைத்துவிட்டா அரசாங்கத்தை நடத்த முடியும்? தி.மு.க.வுக்கென கொள்கை இருப்பதால் கோயில்களை இழுத்து மூடிவிடவா முடியும்? அனைவரையும் உள்ளடக்கி, நல்லிணக்கத்தோடு இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
முருக பக்தியால் எந்த வகையிலும் மேம்பாடு அடையலாம் என்பதை இந்த மாநாடு உணர்த்தும். இது உலக மாநாடுகள் என்பதால் அதற்குரிய தன்மையில் மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் தொடக்க நிலையில் உள்ளன.” என்கிறார் மு.வெ.சத்தியவேல் முருகனார்.
மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ், ”இந்து சமய அறநிலையத்துறை சார்பாக இந்த நிகழ்வை நடத்துவதில் தவறில்லை. தி.மு.க. திராவிட பாரம்பரியத்தில் வந்த கட்சி என்று சொன்னாலும், அது கடவுள் மறுப்பைப் பேசவில்லை. தி.மு.க. இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், இனி அப்படி சொல்ல முடியாதல்லவா?” என்று கேட்பதுடன் முருக சுற்றுலா என்கிற விஷயத்தை முன் வைக்கிறார்.
”தமிழ்நாட்டில் அறுபடை வீடுகள் என்பது சுற்றுலாவிற்கான முக்கியமான இடம். இந்த மாநாடு மூலம், தெற்காசியாவில் உள்ளவர்கள் இங்கு வர நினைப்பார்கள். அதனால், மாநாட்டில் ‘ஒம் முருகா… ஓம் முருகா’ என்று சொல்லிவிட்டுச் செல்வதன் மூலம் எந்த பயனும் இல்லை. இதையொட்டி ஆறுபடை வீடு சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும்.
இந்து சமய அறநிலையத் துறை, கலை-பண்பாடுத் துறை, சுற்றுலாத் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, தொல்லியல் துறை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்து, சுற்றுலாத் திட்டங்கள் உருவாக்க வேண்டும். இது பில்லியன் டாலர் தொழில்.
இந்த மாநாட்டின் நோக்கம் தமிழ்நாட்டை உலக சுற்றுலா மேப்பில் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். அப்படி சேர்த்தால்தான் இந்த மாநாட்டுக்கு வெற்றி!” என்று அழுத்தமாகச் சொல்கிறார், ரங்கராஜ்.
“தமிழ்நாட்டில் அதிகப்படியான குடமுழுக்குகளை நடத்தியவர் தலைவர் கலைஞர். முழுக்க முழுக்க பகுத்தறிவுவாதியான தமிழ் குடிமகன் இந்து அறநிலையத்துறையின் அமைச்சராக இருந்தபோது அதிகப்படியான குடமுழுக்குகளை திமுக நடத்தியுள்ளது. அதனுடைய தொடர்ச்சியாக, அமைச்சர் சேகர்பாபு இந்து சமய அறநிலையத்துறையின் சொத்துகளைப் பெருமளவில் மீட்கப்பட்டுள்ளார்.
பக்தர்களின் தேவைகளை மேம்படுத்தும் வகையில், அதற்கான எல்லா தேவைகளையும் செய்துகொடுக்கிறோம். இப்போது, முருக வழிபாட்டை முன்னெடுக்கிறோம். திராவிட கொள்கைக்கு இது முரண் இல்லை. இதில் தனிப்பட்ட எந்த உள்நோக்கமும் இல்லை.
ஒரு பொய்யான வேல் யாத்திரையை பா.ஜ.க. நடத்தியது. அது தோல்வியைத்தான் தழுவியது. இந்துக்களை உண்மையாக நேசிக்கும் அரசு இந்த அரசு. பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கத்தான் இந்த மாநாட்டை நடத்துகிறோம். பா.ஜ.க.வுக்குப் போட்டியாக இதை நடத்தவில்லை.
தி.மு.க. ஆட்சி எப்போது நடந்தாலும் இந்து மக்களைக் காக்கின்ற, அவர்களின் வேண்டுகோளை ஏற்று நிறைவேற்றுகிற அரசாகத்தான் இது இருந்திருக்கிறது. அது பகுத்தறிவுவாதியான தமிழ்க்குடிமகனை வைத்தும் நடத்தியிருக்கிறது; இன்று தெய்வீகவாதியான சேகர்பாபுவை வைத்து நடத்துகிறது. இது மக்களுக்கான அரசு.” என்கிறார் தி.மு.க. சுற்றுச்சூழல் அணியின் மாநில துணைச்செயலாளர் செல்வக்குமார்.