'யாரழைத்து  எங்கிருந்து நீ வந்தனையோ?' - கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் ஆவணப்படம்!

'யாரழைத்து  எங்கிருந்து நீ வந்தனையோ?' - கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் ஆவணப்படம்!
Published on

மகாத்மா காந்தியைப் பற்றி ஐன்ஸ்டீன் கூறும் போது, 'இப்படி ஒரு மனிதர் ரத்தமும் சதையுமாக இந்த உலகத்தில் வாழ்ந்தார் என்பதை எதிர்காலத்தலைமுறையினர் யாரும் நம்ப மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு மனிதர் காந்தி' என்று குறிப்பிடுவார். அப்படி ஒரு நம்ப முடியாத மனுஷிதான், காந்தியர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்.

வினோபாவேயின் பூமிதான இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, 'லாஃப்ட்டி' என்கிற 'உழுபவருக்கே நிலம் சொந்தம் 'என்கிற இயக்கத்தைத் தொடங்கியவர். (Land for the Tillers Freedom). இந்த இரு இயக்கங்கள் மூலம் தனது நீண்ட நெடிய போராட்டங்களின் மூலம் ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு விளைநிலங்களைப் பெற்றுக் கொடுத்தவர். காந்தியின் கொள்கையால் தாக்கமுற்றுத் தன் வாழ்க்கையையே மாற்றிக் கொண்ட இவர், அனைவராலும் அறியப்பட வேண்டியவர். நில உரிமை மீட்புப் போராளியாக சமரசமற்ற செயல்பாடுகளால் , வாழ்க்கையையே போராட்டமாக வாழ்ந்து நூறாம் அகவையைத் தொட்டிருப்பவர் அவர்.

கிருஷ்ணம்மாள் ஜெகநாதனின் சமூகப் பணியில் அவரது கணவர் ஜெகநாதன் வாழ்க்கைத் துணையாக இருந்தது ஒரு பெருமை என்றால்  பிள்ளைகள் மருத்துவர் ஜெ.பூமி குமார், மருத்துவர் ஜெ. சத்யா ஆகியோரும் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருப்பது இன்னொரு பெருமைக்குரிய சான்றாகும்.

அந்த நில மீட்புப் போராளி கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்  வாழ்க்கையை, சுயநலம் ஒன்றைத் தவிர அறியாத எதிர்காலத் தலைமுறை பார்க்கும்போது இப்படி ஒருவர் வாழ்ந்தார் என்று நம்ப மாட்டார்கள். எனவே தான் அதை வரலாற்றுப் பதிவாக்கும் முயற்சியில் இறங்கிய கவிஞர் ரவி சுப்பிரமணியன்

'நிலம் + நீதி = கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் 'என்கிற ஓர் ஆவணப்படமாக எடுத்திருக்கிறார்.

இதனை அவரது வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் என்று கூற முடியாது. ஆனால் அவரது வாழ்க்கையின் முக்கியமான கட்டங்கள் செயல்பாடுகள் நிலமற்ற ஏழைகளுக்காக தொடர்ச்சியாக அவர் போராடியது அதில் வெற்றி பெற்றது போன்றவை அத்தியாயங்கள் போல காட்சிகளாக வருகின்றன.இது ஒரு தனிமனிதரின் வாழ்க்கை போல் அல்லாமல் அவர் வாழ்ந்த காலத்தின் சமூகநிலை, மக்கள் வாழ்க்கை,அவரது போராட்டம் போன்றவற்றைக் காட்டும் வரலாற்றுச் சாட்சியாகவும் அமைந்துள்ளது.

உதாரணத்திற்கு ஒன்று கீழ்வெண்மணி. அம் மக்களுக்கான இவரது தொடர் போராட்டங்களும் அது வெற்றி பெற்ற வரலாறும் பதிவாகியுள்ளதைக் கூறலாம்.

கிருஷ்ணம்மாள் ஜெகநாதனிடம் அவரது  அனுபவங்களை சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி நேர்காணல் செய்வதுபோல் சில  காட்சிகளும்,  அவருடன் தொடர்பில் இருந்த பல்வேறு மனிதர்கள் தங்கள் அனுபவங்களைக் கூறுவது போலவும் இந்த ஆவணப்படம் உருவாகியுள்ளது .

ஒரு திரைப்படத்தில் சொல்லும் காட்சிகளுடன் சொல்லாமல் உணர வைக்கும் காட்சிகள் அவசியம் என்பார்கள். அது ஆவணப்படத்துக்கும் பொருந்தும் .உதாரணமாக கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் ஒரு பெரிய ஆலமரத்தடியில் தன்னந்தனியே அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது  நிழலாகவும் பல்வேறு உயிரினங்களுக்குப் புகலிடமாகவும் இருக்கக்கூடிய ஆலமரம் ஊருக்கு நடுவில் இருக்காது. ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் தான் இருக்கும். அது போலத் தான் மக்களுக்காக இவ்வளவு சமூக செயற்பாடுகளும் சாதனைகளும் செய்த அவர் அந்தக் காட்சியில் தனியாக அமர்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

அவரைப் பார்த்தவர்கள் அறிந்தவர்கள் பழகியவர்கள் பணியாற்றியவர்கள் என பலரும் படத்தில் பேசுகிறார்கள். பின்புலக் காட்சிகளும் பல செய்திகளைச் சொல்லாமல் சொல்லுகின்றன - இறுதியில் ஒரு வறண்ட கிணத்தை அவர் எட்டிப் பார்த்து வருந்துவது போல் ஒரு காட்சி வரும். அதனை ஒரு குறியீட்டுக் காட்சியாக எடுத்துக் கொள்ளலாம். நமது நாட்டில் மக்களுக்கான நீதி சமதர்மம் சமத்துவம் போன்றவை வறண்டு கிடக்கின்றன. எங்காவது ஊற்றுக்கண் சுரக்காதா என்கிற ஏக்கத்தில் இந்த நாடு இருக்கிறது. ஒரு கனமழை பெய்தால் ஒரு பெரிய மாற்றம் வந்தால் அனைத்து கிணறுகளும் நிரம்பும்; சுற்றுப்புறமும் செழிக்கும் என்கிற எதிர்பார்ப்பை விதைப்பதாக  எடுத்துக் கொள்ள முடிகிறது.

இப்படிப்பட்ட ஒரு பெரிய சமநீதி ,சமூக நீதி கனவு நிறைவேறும் என்ற ஏக்கத்தை சுமந்து கொண்டுதான் மக்கள் இன்றும் இருக்கிறார்கள் என்று அறிய முடிகிறது.

வழக்கமான ஆவணப் படங்களில் உள்ள உலர் தன்மை இல்லாமல் சுவாரஸ்யமாகவும் தொட்டுத் தொட்டுச் செல்லும் காட்சிகளை ஒரு சங்கிலித் தொடர் அனுபவமாக மாற்றி உருவாக்கி இருக்கிறார் ரவி சுப்பிரமணியன்.

இந்தப் படத்தினை திரைக்கதை எழுதி இயக்கியதுடன் படத்தில் அவர் தோன்றவும் செய்கிறார், பாடவும் செய்கிறார் ,இணைப்புக் குரலும் கொடுக்கிறார்,படப்பிடிப்புக் காலங்களில் ஒருங்கிணைப்பாளராகவும் இயங்கி இருக்கிறார். ஆனால் அவர் தன்னை முன்னிலைப் படுத்தாமல் படைப்போடு கரைந்து இந்த ஆவணப்படத்தினை மட்டும் உயர்த்திப் பிடித்து இருக்கிறார்.  இதில் ட்ரோன் கோணத்திலும் , கிம்பல் கோணத்திலும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.அவை தனியே வெளித்தள்ளிக்கொண்டு தெரியாத அளவிற்கு அழகாக அமைந்துள்ளன. பொதுவாக ஆவணப் படங்களில் தென்படும் தொழில்நுட்ப போதாமைகள் இல்லாமல் நிறைவாக உருவாகியுள்ளது சிறப்பு.

இதில் 'குக்கூ' சிவராஜ்,பேராசிரியர் பழனிதுரை,  உயர் நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சாமிநாதன்,  கிருஷ்ணம்மாளின் பிள்ளைகள் மருத்துவர்கள் பூமிகுமார், சத்யா என்று தொடர்ந்து சமையல்காரர் வரை முகம் காட்டுகிறார்கள்.அகம் திறக்கிறார்கள்.

நூறு வயதைத் தொட்டிருக்கும் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் தோன்றும் சில இடங்களில் உடல் தள்ளாமையால் குரலில் தடுமாற்றம் இருக்கிறது. அதுவே பார்ப்பதற்கு  இயல்பாகவும் அழகாகவும் இருக்கிறது . முதுமை அணிந்த அவரது முகச் சுருக்கங்கள் கூட வரி ஓவியங்களாக மிளிர்கின்றன.

அவரது நூற்றாண்டு  தருணத்தில் இந்தப் படம் உருவாகி இருப்பது, ஒரு மன நிறைவு உணர்வைத் தருகிறது. பலரும் அவரைப் பற்றிய ஆவணப்பட முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும் இது முழுமையும் நிறைவும் தரக்கூடிய முயற்சியாகத் தோன்றுகிறது. இந்த நல் முயற்சிக்கு தி சென்னை சில்க்ஸ் அதிபர் டி.கே.சந்திரன் பொருள் உதவி செய்து  இருக்கிறார். இந்தப் புண்ணிய காரியத்தில் அவரது பங்களிப்பு மரியாதைக்குரியதாக மாறி இருக்கிறது.

 ஓர் ஆளுமையின் கதையில் வரலாற்றுக்குத் தேவையான செய்திகளைத் தொகுத்து முப்பத்தெட்டே நிமிடங்களில் முழுமையாக உணரும் வகையில் இந்தப் படைப்பு உருவாகி உள்ளது.

நல்லன யாவும் சொல்லப்பட வேண்டும். அப்படிச் சொல்லப்பட வேண்டியவற்றைச் சொல்லாவிட்டால்,'சொல்லாப் பிழை' வந்து சேரும் என்பார்கள். அப் பிழை இச்சமூகத்தில் நேர்ந்து விடக்கூடாது என்று இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார் ரவி சுப்பிரமணியன்.

இந்த ஆவணப்பட பணியில் அவருடன்,டாக்டர் கி. வனஜா இயக்குநர், காந்திகிராமம் கிராம சுகாதாரம் மற்றும் குடும்பநல அறக்கட்டளை அம்பாதுறை திண்டுக்கல் மாவட்டம்,லாஃப்ட்டி. ப. காந்தி, கோட்டைராஜ், எர்னெஸ்டோ , காந்தி கிராமம் மலர்ச்செல்வி, சுமதி, காந்திய நிர்மாண ஊழியரக ஊழியர்கள், காந்திகிராமம் கிராம சுகாதாரம் மற்றும் குடும்பநல அறக்கட்டளை நிறுவன ஆசிரியர்கள், அலுவலர்கள் , மாணவ மாணவிகள்,காந்தி கிராம பல்கலைக்கழக பேராசிரியர்கள் , அலுவலர்கள், நாகப்பட்டினம் மாவட்ட விவசாய பெருமக்கள் மற்றும் 'லாப்டி' இயக்கத்தினர் போன்ற பலரும் கரம் கொடுத்து, தேர் இழுத்துள்ளார்கள்.

இப்படத்தில் ரவிசுப்பிரமணியனின் வரிகளாக  ஒலிக்கும் பாடல்,

'யாரழைத்து  எங்கிருந்து நீ வந்தனையோ  
யாரழைத்து  எங்கிருந்து நீ வந்தனையோ
எங்கள் பசியின் குரல்கள் உன் செவிகளைச் தொட்டதோ
காற்றில் கலந்த கண்ணீர் கரங்களைத் தொட்டதோ?' என்று தொடங்குகிற பாடல்

 'உன் பாதம் முள்தடத்தில் பதிந்ததாலே
வரள் மண்ணும் செழித்ததிங்கு தன்னாலே
உழவர்களின் துயரமெல்லாம் நீக்க வந்த ஆறுதலே
எங்கள் வாழ்வின் இருட்டைப் போக்க வந்த ஓளிச்சுடரே' என்று செல்கிறது. பொருத்தமான அமைவிடத்தில் பாடல் ஒலிப்பது சிறப்பு.

எழுதி இயக்கி இருக்கும் ரவிசுப்பிரமணியன், ஒளிப்பதிவுக்கு பி. எல். சஞ்சய், படத்தொகுப்புக்கு பா. பரணி பாபு, இசைக்கு திவாகர் சுப்பிரமணியம் என்று தொழில்நுட்பர்களின் துணையுடன் இதை உருவாக்கியுள்ளார். கே.கே.வி.மீடியா வென்ச்சர்ஸ் தயாரித்துள்ளது.

இணை இயக்கம் மற்றும் தயாரிப்பு நா. சக்திகுமார். இவர்கள் தவிர கண்ணுக்குத் தெரியாத பலரது கரங்களும் இணைந்து பணிபுரிந்துள்ளன. ஒரு சமூகப் போராளியும் பத்ம பூஷன் விருது பெற்றவருமான நூறாண்டு காணும் கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு இந்தக் காலத்தில் இப்படி ஓர் ஆவணப்படம்  உருவாகி இருப்பது அவருக்கான இன்னொரு மரியாதைக்குரிய  பரிசாகத் தோன்றுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com