மணலூர் மணியம்மையும் வேலூர் மணியம்மையும்... ஆ.இரா. வேங்கடாசலபதி பேச்சு

மணலூர் மணியம்மையும் வேலூர் மணியம்மையும்... ஆ.இரா. வேங்கடாசலபதி பேச்சு
kind courtesy: The Hindu lit for life
Published on

கடந்த ஞாயிறு அன்று இந்து பத்திரிகையின் இலக்கியத் திருவிழாவில் மாலை நேரத்தில் அந்த குறிப்பிட்ட அரங்கில் கூட்டம் ததும்பியது. யாரேனும் திரைப்பட எழுத்தாளர்கள் பேசுகிறார்களோ என்று நினைத்தால் அங்கே வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதியுடன் பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் உரையாடும் நிகழ்ச்சி. கூட்டத்துக்குக் காரணம் பெரியார்: பிம்பமா? பிம்பங்களை உடைப்பவரா( Icon or iconoclast?) என்ற தலைப்புதான். ஆ.இரா வேங்கடாசலபதி, கார்த்திக் ராம் மனோகரன் தொகுப்பில் உருவான The Cambridge Companion to Periyar  என்ற புத்தகத்தை யொட்டி அந்த உரையாடல் அமைந்திருந்தது. கவிதாவின் கேள்விகளுக்கு ஆழமான விரிவான பதில்களை உரைத்தார் சலபதி. அவர் பேச்சில் பெரியார் பற்றிக் குறிப்பிட்ட தகவல்களில் சில.

1949-ல் தி.க.விலிருந்து எல்லா தலைவர்களும் வெளியேறி விட்டனர். குத்தூசி குருசாமியை விட்டால் யாரும் இல்லை என்றே சொல்லலாம். வேறும் யாராவது இருந்தால் நொறுங்கி இருப்பார்கள். ஆனால் பெரியார் சென்னையில் இருந்து தலைமையகத்தை திருச்சிக்கு மாற்றி, அங்கிருந்து ஊர் ஊராக பயணம் செய்து சாமானிய மக்களிடம் சமூக சீர்திருத்தம் பற்றிய தயங்காமல் பேசிக்கொண்டே இருந்தார்.

இந்த நூலில் 13 கட்டுரைகள் உள்ளன. 13 வேண்டுமானால் ராசியில்லாத எண் என்ற எண்ணம் வெளிநாடுகளில் இருக்கலாம். ஒரு வெள்ளையர் பெரியாரிடம் போய்,’ நீங்கள் மூடநம்பிக்கை இந்தியாவில் மட்டும்தான் இருப்பதாகச் சொல்கிறீர்கள்… வெளிநாடுகளிலும் இருக்கிறதே?’ என சுட்டிக் காட்டினார். ‘முட்டாள்கள் இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறார்கள் என்று எப்போது நான் சொன்னேன்?’ எனத் திருப்பிக் கேட்டார் பெரியார்.

இன்றைக்கு வாட்சப்களில் வரும் அவதூறுகள் எதுவும் 1949-இல் மணியம்மையாரை பெரியார் திருமணம் செய்தபோது கூறப்பட்ட அவதூறுகளுடன் ஒப்பிடக்கூட முடியாதவை. அவ்வளவு வசைகள். மணியம்மை வேலூரில் ஒரு திராவிடர் கழகக் குடும்பத்தில் பிறந்தவர். 1944-இலேயே அவர் பெயரில் விடுதலையில் கட்டுரைகள் வெளியாயின. 1945-இல் மணியம்மைக்குப் பெரியார் அளித்த பரிசு அபிதான சிந்தாமணி நூல்தான்.  அவர் பெரியாரை மணந்தபோது அவருக்கு வயது 29. ருக்மணி தேவி தன் 15 வயதில் 42 வயதான ஜார்ஜ் அருண்டேலை மணந்துகொண்டார்… பெர்ட்ரண்ட் ரசல்  ஆறு திருமணங்கள் செய்துகொண்டார். இதையெல்லாம் கேள்விக்குள்ளாக்காத சமூக பெரியாரின் திருமணத்தை இன்றும் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டே  இருக்கிறது. திருமணத்துக்குப் பின்னர் பெரியாரை மணியம்மைதான் பேணிக்காத்தார். அவரை மேடை ஏற்றி பேச வைத்தப்பின் இயக்க வெளியீடுகளை அவர் கடை விரித்து விற்றார். இவர்களின் திருமணத்தின் போது மிகக்கடுமையாக விமர்சித்து கவிதை எழுதினார் பாரதிதாசன். அவரே சில ஆண்டுகள் கழித்து மணியம்மையாரின் சேவையை ஏற்றுப் பாராட்டினார். பெரியார் இறந்தபோது பல வழக்குகள் இயக்கத்துக்கு எதிராகக் குவிந்திருந்தன. எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது. அச்சமயத்தில் ஆசிரியர் வீரமணியுடன் இணைந்து இயக்கத்தைக் கட்டிக்காத்தவர் மணியம்மையார்தான். மணலூர் மணியம்மையார் (பொதுவுடமைப் போராளி) பற்றி ஒரு புத்தகம் எழுதப்படுகிறது என்கிறபோது இந்த வேலூர் மணியம்மை பற்றியும் புத்தகங்கள் எழுதப்படவேண்டும்.

இன்னும் ஐம்பது ஆண்டுகளில் ராமசாமி என்று ஒரு மிகவும் பிற்போக்கு வாதி வாழ்ந்தான்.. என்று சொல்லி என் கருத்துகள் நிராகரிக்கப்படும் அளவுக்கு சமூகம் முன்னேற வேண்டும் என்றவர் பெரியார்.

1938-இல் பெரியார் என்று அவருக்குப் பட்டம் வழங்கப்படும் முன்பே அவரை பெரியார் என அழைப்பது வழக்கமாக இருந்தது. புதிய நந்தன் சிறுகதையில்(1934) புதுமைப் பித்தன் அவரை ராமசாமிப் பெரியார் என்றார்.

1933-இல் பெண் ஏன் அடிமையானாள் என்ற நூல் வெளியிடப்பட்டது. Marriage and morals என்ற நூலை பெர்டண்ட் ரசல் 1942-இல் எழுதினார். இந்நூலுக்காக ஓர் அமெரிக்க பல்கலைக்கழகம் ரசலுக்கு பேராசிரியர் பதவி மறுத்தது. ஆனால் இவ்விரண்டு நூல்களையும் ஒப்பிட்டுப்பார்த்தால்பெரியாரின் நூல் பெண்விடுதலைக் கருத்துக்களில் மிகவும் முன்னோடியாக இருப்பது தெரியும். பெரியார்தான் முதன் முதலாக 1972-இல் திருமணத்துக்கு வெளியிலான உறவை குற்றம் என்கிற சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டவர். வள்ளலார் போன்றவர்கள் மென்மையான முறையில் சமூக சீர்திருத்தங்கள் பேசிய வரலாற்றுப் பின்னணியில் பெரியார்  அதிர்ச்சி வைத்தியம் மூலமே சமூகத்தை சீர்திருத்த முடியும் என நம்பியவர்.’

இதுபோன்ற கருத்துகளை அள்ளித் தெளித்த சலபதியின் பேச்சு ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டது. உரையாடல் முடிந்ததும் சில கேள்விகள் பார்வையாளர்களிடம் இருந்து கேட்கப்பட்டன. தன்னை ஆந்திராவைச் சேர்ந்தவர் என அறிமுகப் படுத்திக்கொண்ட இளைஞர் ஒருவர்,’ பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் அதே போன்ற கொள்கைகளைக் கொண்ட வைத்தியநாத ஐயரை ஏற்றுக்கொள்ளவில்லையே அவர், திராவிட இயக்கத்தைச் சேராதவர், பிராமணர் என்பதாலா?’ எனக் ஒரு கேள்வியைக் கேட்டார்.

சலபதியார் இந்த கேள்விக்கா அசருவார்? ‘ நீங்கள் கோவில் நுழைவுப் போராட்டம் பற்றி கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். காங்கிரசால் 1930களில் முன்னெடுக்கப்பட்ட அப்போராட்டம் 1920களில் திராவிட இயக்கம் முன்னெடுத்தவற்றுக்கான எதிர்வினை. வைத்திய நாத ஐயர், பலரை ஆற்றுப்படுத்திய பேச்சாளரோ சுயசிந்தனையாளரோ இல்லையே…. இங்கே நாம் மாபெரும் மனிதர்களைப் பற்றி அல்லவா பேசுகிறோம். அவர்களுடன் நிறுத்திக் கொள்வது நல்லது அல்லவா?’ என்றார்.

நிகழ்வு முடிந்ததும் வெளியே சலபதியை வாசகர்கள் சூழ்ந்துகோண்டனர்.வரிசையில் நின்று அவரது நூல்களில் கையெழுத்து வாங்கிச் சென்றனர்.



 

logo
Andhimazhai
www.andhimazhai.com