சென்னை, வேளச்சேரியில் மீட்புப் பணியில் திருவொற்றியூர் மீனவர்கள்
சென்னை, வேளச்சேரியில் மீட்புப் பணியில் திருவொற்றியூர் மீனவர்கள்

Exclusive | கழுத்தளவு நீர் சூழ தனியாகத் தத்தளித்த கர்ப்பிணி: 3 மணி இருட்டில் சென்று மீட்ட கடலாளிகள்!

“நைட்டு நேரம்னு இல்லாம ஒவ்வொரு வீடா ஏறியெறங்கி ஜனங்களக் காப்பத்தியிருக்கோம். தோ... எங்க கைகால் எல்லாம் பாருங்க... எவ்ளோ காயம்!” என நெகிழ்ச்சியோடும் பரவசத்தோடும் முகத்தில் பளிச்செனத் தெரிந்த சோர்வையும் மீறி பேசினார், லோகநாதன். சென்னை, திருவொற்றியூரை அடுத்த திருச்சினாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர். இவருடன் சேர்த்து மொத்தம் இருபது பேர், வேளச்சேரி- ராம்நகர் பகுதியில் ஆறு படகுகள் மூலமாக கடந்த மூன்று நாள்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளனர்.

மீன்வளத் துறை சார்பில் அழைத்துவரப்பட்ட இவர்கள், இடைவிடாமல் கனமழை கொட்டிய நாள் முதல் (டிசம்பர் 7) வியாழன் காலைவரை வெள்ளநீரில் சிக்கிக்கொண்ட மக்களை மீட்கும் வேலையில் கர்ம சிரத்தையாக ஈடுபடத் தொடங்கினர். பள்ளிக்கரணையில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தங்கி மீட்புப் பணிகளைச் செய்தவர்களைச் சந்தித்துப் பேசினோம்.

“செவ்வாய்க்கெழம காலையில இங்க வந்தப்போ ஆறு அடி ஒசரத்துக்கு தண்ணீ இருந்துச்சு. உள்ள போகப்போக சொல்ல முடியலபா... முப்பது அடிவரைகூட இருந்திருக்கும். எந்தெந்தத் தெருவுல எம்மா ஆளுங்கள காப்பத்தினு வந்தம்னே தெர்ல...” என்றவர்கள், கொஞ்சம் உணர்ச்சிவயப்பட்டுத்தான் போனார்கள்.

“கொயந்தைங்க, பெரியவங்க..னு ஒத்த ஆளைக்கூட உடலியே... எல்லாரியும் இட்னுவண்டோமே... பகல்ல போட்டு... நைட்டுல இஞ்ஜின்போட்டுனு போய்வந்தோம்... கொயந்தப் பசங்கதாம்பா இதுல அதிகம்... நெறீய அப்பாட்மெண்ட்டு வீடுங்கள்ல கதவ ஒடைச்சிதான் புள்ளைங்கள வெளியே இட்டுனு வந்தோம். நெறீயா பேரைக் காப்பத்திட்டோம்னு மனுசு நெறவா..க்குது... இன்னா ஒண்ணு... எங்களுக்குதான் குளிக்கக்கொள்ள ஒன்னுக்குரெண்டுக்கு எடமே இல்லாம ரொம்போ கஷ்டமாப் போச்சு. ..தோ... கைகாலப் பாருங்க, எவ்ளோ காயம்” என, மீட்புப் பணியில் சந்தித்த நெஞ்சை உருக்கும் சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துகொண்டார்கள்.

“ஆறாம் தேதி விடிகாலை சுமார் மூணு மணி இருக்கும்னு வச்சுக்க. ஒருத்தரு வந்து, இப்பிடி... என் ஒய்ஃப் நாலு மாசம் கர்ப்பம்... அவங்களை மீட்டு வெளீல இட்டுனு வரணும்னார். தூக்கக் கலக்கம்... அஸ்பண்டு ஒய்ஃபு ரெண்டு பேருமே ஐ.டி.ல வேல பாக்குறாங்க. அந்தம்மா ராம் நகர்ல கீறாங்க... வெளியூர்ல இருக்கிற இவுரு அந்தம்மாவுக்கு செவ்வாய்க்கெழம காலையிலயிருந்தே கால் பண்ணிக்கிறாரு... காலே அவுங்களுக்குப் போகாததால, அவுரு அஞ்சாம் தேதி நைட்டே ராம்நகர் வந்துட்டிருக்காரு. அந்தம்மா இருந்த ஆஸ்ட்டலச் சுத்தி கழுத்துக்குமேல தண்ணீ... இன்னா பண்றது... அவரால ஒண்ணியும் பண்ண முடியல...

பத்து மணியிலிருந்து அவுரும் யார்யாரையோ கூப்பிட்டுக்கிறாரு.. ஒருத்தருமே வரக் காணோம். அப்புறமாத்தான் எங்களாண்ட வந்தாரு. கரண்ட்டும் இல்ல. எங்க கைல டார்ச்சு லைட்டும் இல்லாம ஒம்பது பேரு மாரளவுக்குத் தண்ணீ... அரை கிலோமீட்ரு போனோம். அந்தம்மா இருந்த ஆஸ்ட்டல லாக் பண்ணிட்டிருந்தாங்க. அதை ஒடைக்கவே ரொம்ப நேரம் எடுத்துகிச்சி.

மத்தவங்கெல்லாம் போயிட்டாங்கோ... ஒத்த ஆளா அவுங்க மட்டும் இருந்திருக்கிறாங்கோ... அவங்க ரொம்ப குள்ளம் வேற... தண்ணீல நடந்துவந்து போட்டுல ஏறக்கூட முடியல.. அவங்க வூட்டுக்கார்ரே உள்ள போயி அந்தம்மாவத் தூக்கினுவந்து போட்டுல ஏத்துனாரு. எப்டியோ பத்திரமா வெளியே வந்துட்டம்..பா.” எனச் சொல்லிமுடித்தவர்களின் முகங்களில் அப்படியொரு ஆனந்தப் பெருமிதம்.

கைவேலி பேருந்துநிலையம் அருகே தாங்கள் நிறுத்திவைத்திருந்த படகின் மீது அமர்ந்திருந்தவர்கள், ஊருக்கு (அதாவது வசிப்பது சென்னைதான் என்றாலும், அவர்களுக்கு திருவொற்றியூர் ஊர்தான்) திரும்பிச் செல்வதற்கு முறைப்படியான உத்தரவுக்காகக் காத்திருந்தார்கள்!

நன்றிசொல்லி விடைபெற்றுக்கொண்டோம்!

“மனுசாளுக்கு மனுசாள்...தான சார்...!”

- இன்னும் ரீங்காரித்தபடியே இருக்கின்றன, வார்த்தைகள்!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com