மாநிலக் கல்விக் கொள்கை- ஜவகர்நேசன் சொன்னது இடம்பெறுமா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மாநிலக் கல்விக்கொள்கை தயாரிப்புக் குழுவினர் அறிக்கை அளித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மாநிலக் கல்விக்கொள்கை தயாரிப்புக் குழுவினர் அறிக்கை அளித்தனர்.
Published on

மாநிலக் கல்வி கொள்கை தயாரிப்புக் குழு தன் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று சமர்ப்பித்துள்ளது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழ்நாட்டிற்கென தனியாக மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என தி.மு.க. தன் தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்திருந்தது. அதன்படி தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஒரு குழுவை கடந்த 2022ஆம் ஆண்டில் மாநில அரசு அமைத்தது.

14 பேர் கொண்ட அந்த உயர்மட்டக் குழுவில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், நிபுணர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளும் கேட்கப்பட்டன.

இதற்கிடையே, இந்தக் குழுவில் இருந்து விலகுவதாக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜவகர்நேசன் அறிவித்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் உள்ள அம்சங்களையே புதிய கொள்கையிலும் புகுத்துவதாக அவர் குற்றம்சாட்டினார்.

இந்தக் கல்விக் கொள்கைக் குழுவானது கடந்த ஆண்டு மே மாதம் தன் அறிக்கையை அளித்திருக்க வேண்டும். ஆனால் கூடுதலாக 4 மாதங்கள் அவகாசம் பெற்றுக்கொண்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே மாநில கல்விக் கொள்கைக்கான இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. முதலமைச்சரிடம் நேரம் கேட்ட நிலையில், இன்று நீதிபதி முருகேசன் தலைமையிலான அக்குழுவினரை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தார். அவரிடம் மாநில கல்விக் கொள்கை அறிக்கையை அக்குழுவினர் வழங்கினர்.

600 பக்கங்கள் தமிழிலும், 500 பக்கங்கள் ஆங்கிலத்திலும் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில்,“10ஆம் வகுப்புக்கு முன்வரை பொதுத்தேர்வுகளே இருக்கக்கூடாது. உயர்கல்வி சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படக்கூடாது. இரு பெற்றோர்களையும் இழந்த மாணவர்களுக்கு உயர் கல்வியில் ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். இருமொழிக் கொள்கையையே பின்பற்ற வேண்டும்.” என்பன உட்பட்ட பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் ஏற்கெனவே உறுப்பினராக இருந்த பேரா. ஜவகர்நேசனின் கருத்துகள் இடம்பெற்றுள்ளனவா என்பதை அறிய அவரைத் தொடர்புகொண்டோம்.

“கல்விக் கொள்கை முதலில் வெளிவரட்டும். படித்துவிட்டுதான் விரிவாகப் பேச முடியும்.

நான் மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கக் குழுவிலிருந்து வெளியே வந்தபோது 258 பக்கத்தில் ’கல்விக் கொள்கை பரிமாண உள்ளீடு’ என்பதைக் கொடுத்துவிட்டு வந்தேன். இதை அவர்கள் வழிகாட்டு ஆவணமாக வைத்துக்கொள்ள வேண்டும் என அக்டோபர் 2022 இல் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதில் 13 பகுதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் கல்வி குறித்த பல விஷயங்களை விரிவாகப் பேசியிருக்கிறேன்.

பலரிடம் கருத்துக் கேட்டு எழுதுவது இல்லை, கல்விக் கொள்கை; கல்வி கொள்கை என்பது நாட்டின் நிலைமை, எதிர்கொள்ளும் பிரச்னைகள், சவால்கள், தீர்வு போன்றவை தொலைநோக்குப் பார்வையுடனும் நிபுணத்துவத்துடனும் தத்துவார்த்த நோக்குடனும் உருவாக்கப்பட வேண்டும்.

நான் கொடுத்துவிட்டு வந்த கல்வி கொள்கை பரிமாண உள்ளீட்டில், இதுவரை உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கையில் இல்லாத பல்வேறு பரிமாணங்களை, சவால்களை, கேள்விகளை அதில் வைத்துள்ளேன். கல்வி என்பது சமூக ஏற்றத்தாழ்வுகளை புதுப்பிக்கிறது, மேன்மேலும் புதுப்பிக்கிறது என கொடுத்திருக்கிறேன். அதற்கான தீர்வு என்னவென்று எனக்குத் தெரியும். நான் இப்போது அந்தக் குழுவில் இருந்திருந்தால் இதைச் சேர்த்திருப்பேன்.

தனித்துவம் வாய்ந்த ஒரு கல்விக் கொள்கை தமிழ்நாட்டிற்கு உருவாக்க வேண்டும். இருமொழி கொள்கைதான் இங்கு நீண்டகாலமாக பின்பற்றுப்பட்டு வருகிறதே? கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் நீட் தேர்வு வந்தது, அதை வேண்டாம் என்று சொல்கிறோம். முன்னரே, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளை வேண்டாம் என்றுதானே சொல்கிறோம். இதைச் சொல்ல எதற்கு புதிய கல்விக் கொள்கை? தமிழ்நாடு கல்விக் கொள்கை தொடர்பாக வந்த செய்திகளின் அடிப்படையில் இதைச் சொல்கிறேன்.

இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து தொழில்நுட்பம், மனிதனின் உற்பத்தி, நுகர்வு எப்படி இருக்கப் போகிறது, எந்த மாதிரியான மாற்றம் எதிர்காலத்தில் நிகழும், மனித சமூகம் எதை நோக்கி நகரும், இதற்கு இன்றைய தலைமுறையை எப்படி தயார்ப்படுத்தப்போகிறோம் என்பதற்கான கொள்கையாக தற்போது வழங்கப்பட்டுள்ள கல்விக் கொள்கை இருந்தால் வரவேற்கலாம்.

கல்வி என்பது பொதுநலன் சார்ந்தது. அதற்கேற்ற மாதிரி இந்தக் கல்விக் கொள்கை இருக்க வேண்டும். நானும் ஒரு கல்விக் கொள்கையை எழுதிக் கொண்டிருக்கிறேன். இதை வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட உள்ளேன்.

உண்மையான அறிவையும் அறிவியலையும் உள்வாங்குவதுதான் இந்திய மாணவர்களுக்கு சவால் நிறைந்ததாக உள்ளது. இதற்கான தீர்வு இந்த கல்விக் கொள்கையில் உண்டா?” என கேள்வி எழுப்புகிறார் பேரா. ஜவகர்நேசன்.

logo
Andhimazhai
www.andhimazhai.com