ஹாதியாவின் கதை

ஓவியம்
ஓவியம்ஜீவா
Published on: 

தமிழ்நாட்டில் அரசியல் குறளி வித்தைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கும் இந்நாளில் கேரளத்தில் வேறொரு விஷயம் சமூகத்தையும் ஊடகங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. திலீப்பின் வழக்கு மங்கத்தொடங்கிவிட்டதால் ஊடகங்கள் இதைக் கையில் எடுத்துக்கொண்டிருக்கின்றன என்று சிலர் சொன்னாலும் விஷயம் மதம், தனிமனித உரிமைகள்,பெண்ணுடல், தீவிரவாதம் என்று பல்வேறு விஷயங்களைத் தொட்டுச் செல்வதால் பிரச்சினையின் மையம் தீவிரமாக விவாதிக்கப்படத்தக்க ஒன்றுதான்.

அது ஹாதியா என்றழைக்கப்படும்  அகிலாவின் ‘லவ் ஜிஹாத் ’வழக்கு. இவ்வழக்கு இந்நேரம் கேரளத்தையும் மீறி உச்ச நீதிமன்றமும் இந்திய அரசின் உள்நாட்டு விவகாரங்கள் அமைச்சரகமும்  கவனம் கொள்ளுகிற ஒரு வழக்காக இன்று இருக்கிறது. இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக்கொண்டிருக்கிற நாளில் ஹாதியா விமானத்தில் உச்ச நீதிமன்றத்தின் முன்பு தோற்றமளிப்பதற்காக  விமானத்தில் பறந்துகொண்டிருக்கிறார். அவரை ரயிலில் அழைத்துச் செல்லக்ககூடாது அது அவருக்குப் பாதுகாப்பில்லை என்று ஒரு கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டபிறகு அவர் விமானத்தில் அழைத்துச் செல்லப்படுகிறார். ஒருபக்கம் உள்துறை அமைச்சகம் எனில் மறுபுறம் கபில் சிபல் போன்ற பெரிய வழக்கறிஞர்கள் ஹாதியாவுக்காக வாதாடுகிறார்கள் என்பதிலிருந்து இந்த வழக்கின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.

முதலில் இந்த வழக்குதான் என்ன ?

வைக்கத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் ராணுவ வீரருக்குப் பிறந்த அகிலா என்பவர் சேலத்தில் அவரது இஸ்லாமியத் தோழிகளுடன் ஒரு அறையில் தங்கி ஹோமியோபதி மருத்துவம் படித்து வந்தார்.இந்த ஆண்டு தொடக்கம் ஜனவரி ஆறாம் தேதி முதல் அவரை அவரது தந்தையால் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் போலீசில் ஒரு ஆள் கொணர்வு மனு அளிக்கிறார். அதன்பிறகுதான் அகிலா அவரது தோழிகளின் தந்தையான அபுபக்கர் இல்லத்தில் மலப்புரத்தில்  இருப்பதாகத் தெரியவருகிறது.அகிலா தான் இப்போது இஸ்லாமுக்கு மதம் மாறி ஹாதியாவாக மாறிவிட்டதாகவும் தனது தந்தையுடன் செல்ல விருப்பமில்லை என்றும் கோர்ட்டில் சொல்கிறார். அபுபக்கர் முதலில் அகிலாவை சில இஸ்லாமிய மத அமைப்புகளிடம் அழைத்துச் செல்கிறார். மலப்புரத்தில் இதுபோன்று மதம் மாற விரும்புகிறவர்களுக்கான இஸ்லாமிய மத அமைப்புகள் உள்ளன. முதல் இரண்டு அமைப்புகளுடனும் சில பிரச்சினைகள் எழவே அபுபக்கர் சத்யசாரணி என்ற அமைப்பைத் தொடர்பு கொள்கிறார். சைனபா  என்ற பெண்ணை அனுப்பி வைக்கிறார்கள். ஹாதியா சைனபாவுடன்  தங்க ஆரம்பிக்கிறார்.

அகிலாவின் தந்தை சத்யசாரணி கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடும் ஒரு அமைப்பு எனவும் சைனபாவின் மீது வழக்குகள் உள்ளன என்றும் ஒரு புகார் அளிக்கிறார். கேரள உயர் நீதிமன்றம் இதை நிராகரிக்கிறது. ’ஹாதியா  வயது வந்த ஒரு பெண் என்பதால் அவர் எந்த மதத்தைப் பின்பற்றுவது என்பதையும் எவருடன் தங்குவது என்பதையும் அவருக்குத் தீர்மானிக்க உரிமை உள்ளது,’ என்றும் அது சொல்கிறது.

ஆறு மாதங்களுக்குப் பிறகு அகிலாவின் தந்தை மீண்டும் ஒரு வழக்கு தொடர்கிறார் அதில் தனது மகளைக் கல்யாணம் பண்ணி ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS)  அமைப்பில் சேர்ப்பதற்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல சதி நடப்பதாகக் கவலை தெரிவிக்கிறார். இம்முறை கோர்ட் சற்று கவலை கொள்கிறது. ஏனெனில் அதே  வருடம் இதே போல நிமிஷா என்ற பெண்ணின் வழக்கு சென்ற திசை. அதிலும் மத மாற்றம், ஆட்கொணர்வு வழக்கு போன்ற விஷயங்கள் நடைபெற்றன. அதிலும் நிமிஷாவுக்கு தனது வாழ்க்கையை முடிவு செய்யும் உரிமை உள்ளதாக கோர்ட் கூறியது. அதில் அந்த பெண்ணின் தாய் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் அந்த வழக்கில் தாய் அஞ்சியபடியே பாத்திமா என்று பெயரும் மதமும் மாறி திருமணம் செய்துகொண்ட நிமிஷா தனது கணவருடன் இலங்கைக்குச் சென்றவர் திரும்பவே இல்லை. அவர் எங்கிருக்கிறார் என்றும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அந்த நேரத்தில்தான் காசர்கோட்டைச் சேர்ந்த பதினாறு குடும்பங்கள் நாட்டை விட்டு வெளியேறி  ISIS அமைப்பில் சேர்ந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகின.

எனவே ஒருமுறை சூடுபட்ட கோர்ட் ஹாதியாவைக் கண்காணிப்பின் கீழ் வைத்திருக்கும்படியும் சைனபாவிடம் இருந்து பிரித்து ஒரு விடுதியில் தங்கும்படியும் ஹாதியா பாதியில் விட்ட படிப்பை முடிக்கும்படியும் அவளது சான்றிதழ்களை அவளது தந்தை ஒப்படைக்கவேண்டும் என்றும உத்தரவிட்டது.

அடுத்து நடந்ததுதான் கோர்ட்டை மிகுந்த ஆத்திரமூட்டியது. டிசம்பரில் ஹாதியா திடீரென்று

சாபின் ஜகான் என்ற மனிதருடன் தோன்றினார். அவரை தனது கணவர் என்று சொன்னார். அவர் கேரளத்தில் முக்கிய இஸ்லாமிய கட்சி ஒன்றின் உறுப்பினர் எனவும் அவர் மீது வழக்குகள் உள்ளன என்றும் ஊடகங்களில் சொல்லப்படுகிறது.

சைனபாவின் முயற்சியின் பேரில் அவர்களுக்குள் திருமணம் நிகழ்ந்தது என்று சொன்னார். கோர்ட் கடும் சினம் கொண்டு அந்த திருமணத்தை  ரத்து செய்து ஹாதியாவை அவளது தந்தையுடன் வீட்டுக்கு அனுப்பியது.

எதிர்பார்த்ததுபோலவே இந்தத் தீர்ப்பு கடும் அதிர்வுகளைக் கேரளத்தில் எழுப்பியது. தனிமனித உரிமைகள் பாதிக்கப்படுகின்றன என்று பெண்ணிய அமைப்புகளும் மத உரிமைகள் பாதிக்கப்படுகின்றன என்று இஸ்லாமிய அமைப்புகளும் போர்க்குரல் எழுப்பின.

இந்த இடத்தில் சில விசயங்களை மனதில் நிறுத்துவது அவசியம். கேரளத்தில் 25 சதத்துக்கும்  மேலான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். மலபார், கோழிக்கோடு, காசர்கோடு போன்ற மாவட்டங்களில் பெரும்பான்மை அவர்கள்தான்.பொருளாதார ரீதியாகவும் அவர்களது மத்தியக் கிழக்கு தொடர்புகள் மூலமாகவும் பாரம்பரியத் தொழில்கள் மூலமாகவும் மிக முன்னேறிய சமூகமாக  கேரளத்தில் அவர்கள் விளங்குகிறார்கள். கல்வியிலும் அரசு அதிகாரத்திலும் அவர்களது ஆளுமை குறிப்பிடத்தக்கது.கேரளத்தின் புகழ்பெற்ற இலக்கியவாதிகளும் கலை நட்சத் திரங்களும் சிந்தனையாளர்களும் முஸ்லிம்கள்தான். அவர்கள் அங்கே விளிம்புநிலைச் சமூகம் அல்ல. சமீபகாலம் வரை  ஒரு வெளிப்படையான சமூகமாகவும் தாராள மனப்போக்கு கொண்டவர்களாகவும்தான் அவர்கள் இருந்து வந்திருக்கிறார்கள்.

ஆனால் இந்தியாவிலும் வெளியிலும் நடக்கிற சம்பவங்கள் காரணமாகவும் அரபு வஹாபிய தாக்கம் காரணமாகவும் அடிப்படைவாதம் கேரளத்திலும் பெருகிவருகிறது என்பது உண்மைதான்.

ஷாகீர் நாயக் போன்றவர்களின் பேச்சுகளுக்கு கேரளத்தில் இருக்கும் செல்வாக்கு இதை உறுதிப்படுத்துகிறது. முகமது நபி பற்றி கேள்வித் தாள் தயாரித்த பேராசிரியரின் கை வெட்டப்பட்டது போன்ற விஷயங்கள் இதன் அறிகுறிகள்.

மறுபக்கம் இந்துத்துவர்களின்  வெறுப்பு எழுப்பும் பேச்சுகள் இந்நிலை மாற உதவுகிறவையாக இல்லை என்பதும் உண்மையே. பாஜக இனி வெல்ல வேண்டிய இடங்களாக கேரளமும் தமிழ் நாடும்தான் இருக்கிறது என்பதை உற்றுநோக்கும்போது இதன் இன்னொரு கோணமும் பிடிப்படலாம். அங்கே சசிகலா டீச்சர் போன்றவர்களின் ஆவேசமான பேச்சுகள் இதைநோக்கி எய்யப்படுகிறவையே.

ஹாதியா  வழக்கில் முதலில் காதல் என்று ஒன்றும் இல்லை. மதமாற்றம்தான் முக்கிய விஷயமாக இருக்கிறது. அதைக்  காப்பாற்றிக்கொள்ள அவசர அவசரமாக ஒரு கல்யாணம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுவதுதான் நீதிமன்றத்தைக் கோபப்படுத்தியது. அந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போதே கோர்ட்டுக்குத் தெரிவிக்காமல் திருமணம் நடத்தப்பட்டிருப்பது நிச்சயம் சந்தேகத்தை எழுப்பக் கூடியதே. நிமிஷா வழக்கு போன்ற முன் உதாரணங்கள் இருக்கையில் கோர்ட் அதைக் கடுமையாகத்தான் அணுகும் என்கிறார்கள்.

தனிமனித உரிமைகள், மத உரிமைகள் போன்றவை  கலந்து எது சரி தவறு என்று வாதிட முடியாத ஓர் வெளியில் நிற்கும் வழக்கு இது. ஹாதியா தனது படிப்பைக் கூட முடிக்காமல் உடனடியாக மதம் மாற வேண்டிய அவசரம் என்ன ? அதற்கான தெளிவு அவருக்கு இருந்ததா? கோர்ட் அவர் சார்பாக இருக்கும்போதே கல்யாணம் செய்துகொள்ள வேண்டிய தேவை என்ன ? அவருக்கு இந்துத் தீவிரவாதிகளிடமிருந்து அச்சுறுத்தல் இருந்தன என்று அதற்கு அவர் தரப்பில் சொல்கிறார்கள்.

இன்னொரு விஷயமும் கவனிக்கப்பட வேண்டும்.கேரளத்தில் முஸ்லிம்களை விட குறைவாக இருக்கும் கிறிஸ்துவர்களுக்கும்  இந்துக்களுக்கும் திருமண உறவுகளும் மதமாற்றங்களும் ஒப்பீட்டு அளவில் மிக அதிகம். அவை பெரும்பாலும் ஹிந்துத்துவர்களின் கூக்குரல்கள் தவிர வேறு பெரிய பிரச்சினைகளைக் கிளப்புவதில்லை.

ஹிந்து கிறிஸ்துவ திருமணங்களில் சிவில்  திருமணங்களுக்கான வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு  சட்ட நிபுணர் சொல்கிறார். அதாவது அரசு அங்கீகரிக்கும் திருமணங்கள். அதாவது மதம் மாறாமலே அல்லது பெயருக்கு மட்டும் மாறிக்கொண்டு ஒருவர் திருமணம் செய்துகொள்ளமுடியும். தவிர இந்த இரண்டு சமூகங்களிடையே திருமணம் நடப்பதால் அவர்களது குடும்ப உறவுகள் துண்டிக்கப்படுவதில்லை. ஆனால் இஸ்லாமியர்கள் சிவில் திருமணங்களையும் திருமணச்  சட்டங்களையும் ஒத்துக்கொள்வதில்லை. முத்தலாக், ஜீவனாம்சம் இல்லாதது போன்ற பிரச்சினைகள் வேறு இருக்கின்றன. நடுவில்  ஐகுஐகு  போன்ற பீதிகள் வேறு இந்தப் பிரச்சினையை மிகச் சிக்கலாக்கி விடுகின்றன என்கிறார்.

ஆனால் இவை எல்லாவற்றின் பின்னும் பெண் உடல் ஒரு கைப்பற்றவேண்டிய, இழக்கக் கூடாத சொத்து என்ற கருத்தே கிடக்கிறது. இருதரப்பும் அதை நோக்கியே தங்களைச் செலுத்துகின்றன.

ஆனால் உண்மையில் இதில் விவாதிக்கப்படும் பெண்ணுக்கு அவள் உடல் மீது எந்த அளவு

சுதந்திரம் இருக்கிறது என்பது கேள்விக்குறிதான். எங்கு போனாலும் அவளுக்கு ஒரு சிறைதான் இருக்கிறது.

கடைசிச் செய்தி: உச்சநீதிமன்றத்தில் ஹாதியாவின் வழக்கு நவம்பர் 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. ஹாதியா சேலம் கல்லூரியில் தன் கல்வியைத் தொடர்வதற்கு ஏற்பாடுகளைச் செய்து உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு மீண்டும் ஜனவரியில் விசா ரணைக்கு வரும் என்று கூறி உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளிடம் ஹாதியாவின் முக்கியக் கோரிக்கை இதுதான்: ‘எனது சுதந்திரத்தை எனக்குக் கொடுங்கள்!’

டிசம்பர், 2017.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram