அவருக்குப் பிரார்த்தனை பிடிக்கும்!

எஸ் ஏ பி
எஸ் ஏ பி
Published on

அந்த இளைஞருக்கு வயது 23. தன் மூன்று வயதிலேயே தந்தையை இழந்தவர். பெரும்பணக்காரக் குடும்பம். அவரின் சித்தப்பா, ஜேஆர்டி டாட்டாவுக்கு முன்னாலேயே விமானம் ஓட்ட லைசன்ஸ் வாங்கி, விமானமும் வாங்கி புதுக்கோட்டை அருகே திருமயத்தில் சொந்தமாக விமான ஓடுதளம் வைத்திருந்தார்.

செட்டிநாட்டில் போய் கேட்டால் அவரை கானாடுகாத்தான் ஏரோபிளேன் செட்டியார் என்றுதான் சொல்வார்கள்.

அந்த இளைஞரின் பெரியப்பா, அதாவது பெரியம்மா கணவரைப் பற்றியும் சொல்லவேண்டும். தென்னிந்தியாவில் முதல்முதலாக ஜுபிடர் ஏர்வேஸ் என்ற பெயரில் விமான சர்வீஸ் நடத்தியவர். சொந்தமாக எட்டு விமானங்கள் வைத்திருந்தார். நாட்டு விடுதலையின்போது நடந்த பிரிவினையின் போது பாகிஸ்தானில் சிக்கியவர்களை டெல்லிக்குக் கொண்டுவர தங்கள் விமானங்களை நேருவிடம் இலவசமாக அளித்தவர். ஏராளமான தொழில்களை நடத்தியவர். அவர் தொடங்கிய கல்வி நிறுவனம் அழகப்பா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி. இன்னொன்று காரைக்குடியில் மிகப்பெரிய கல்வி நிறுவனமாகி நிற்கிறது. அவருடைய பெயர் டாக்டர் அழகப்ப செட்டியார்.

அச்சமயம் நடந்த ஒரு சம்பவம். இந்த இளைஞர் கணக்கு வைத்திருந்த வங்கியில் பணம் எடுக்க இவர் சார்பாக மஞ்சண்ணன் என்பவர் போனார். திரும்பி வரும்போது அவர் முகம் வாடி இருந்தது. எஸ்.ஏ.பி என்ன நடந்தது என கேட்டார். அவர் தயக்கத்துடன்,’ இல்ல…. வங்கி மேலாளர், எல்லோரும் வங்கிக்கு பணம் போடத்தான் வருவாங்க… உங்க முதலாளி எப்பவும் பணம் எடுக்கத்தான் வருவாரா?’ என்று கேலியாகக் கேட்டுவிட்டார்” என்று சொன்னார்.

அந்த இளைஞருக்கு அது சுரீர் என மனதில் தைத்தது. இந்த உலகம் நம்மை என்னவென்று நினைக்கிறது? அப்பன் பாட்டன் தேடி வைத்த சொத்தை அழிப்பவன் என்றோ நாலு காசு சம்பாதிக்க வக்கில்லாதவன் என்றும் நினைக்கிறதா என சிந்தித்தார். நிறைய கேள்விகள். எதாவது செய்யவேண்டுமே என யோசித்தார்.

பத்திரிகை தொடங்க முடிவு செய்தார்.

அவர் ஆரம்பித்த பத்திரிகை குமுதம். அவர் பெயர் எஸ்.ஏ.பி அண்ணாமலை. சாந்தோம் பள்ளியில் படித்து, லயோலாவில் பி.ஏ. முடித்தவர் சட்டமும் படித்து வழக்குரைஞர் ஆனவர். சின்ன வயதில் இருந்து புத்தகம் படிப்பது, எழுதுவதில் மிக ஆர்வம். பணக்கார பின்னணி பற்றி எந்த அடையாளமும் இல்லாமல் அரைக்கை சட்டையும் வேட்டியும் அணிந்து எளிமையே உருவாக இருப்பார். கொஞ்சம்கூட அகங்காரம் இல்லாதவர்.

ஆரம்பித்த முதல் இதழ் சுமார் 2000 பிரதிகள் மட்டுமே விற்றது. அந்த பத்திரிகையை எழுபதுகளில் ஐந்து லட்சம் பிரதிகள் வரை விற்பனையை உயர்த்தி, இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த இதழ், ஆசியாவிலேயே மிகப்பெரிய தமிழ் வார இதழ் என்று மாற்றிக்காட்டிய சாதனையாளருக்கு இது நூற்றாண்டு.

குமுதம் ஆரம்பிப்பதற்கு முன் அவருக்கு பத்திரிகை அனுபவம் ஏதும் இல்லை. சில கதைகள் மட்டுமே எழுதி இருக்கிறார். தன் நண்பர் பார்த்தசாரதியுடன் இணைந்து இவர் பத்திரிகை தொடங்கியபோது, ஏஜெண்டுகள் யாரும் நம்பி ஏஜென்சி எடுக்க முன்வரவில்லை. நம்பகத்தன்மை உடைய ஒரு பெயர் தேவைப்பட்டது. தன் பெரியப்பாவும் மிகப்பெரிய தொழிலதிபருமான டாக்டர் அழகப்ப செட்டியாரை அணுகி அவரது பெயரை கௌரவ ஆசிரியர் என்று போட்டுக்கொள்ள அனுமதி பெற்றார்.

பத்திரிகை தொடங்கியபோது அச்சகம் வேண்டும் என்பதற்காக நண்பர் பெரிய கருப்பனிடம் இருந்த தேவி பிரஸை வாங்கிக் கொண்டார். வெகுகாலம் குமுதம் அலுவலகத்தில் குமுதம், தேவி பிரஸ் என இரு பெயர்ப்பலகைகள் இருக்கும். எழுபதுகளில் ஓர் அரசியல் கட்சியினரால் அலுவலகம் தாக்கப்பட்டபோது, அந்த பலகைகள் உடைந்தன. மீண்டும் பெயர்ப்பலகை எதுவும் வேண்டாம் என முடிவு செய்துவிட்டார் எஸ்.ஏ.பி.

நீண்டகாலத்துக்குப் பின் குமுதம் அலுவலகத்தில் ஒருபெயர்ப்பலகை வைக்கப்பட்டது. அதில் ‘நீங்கள் ஒருவருக்குப் பணம் கொடுத்தால் அந்த பணம் அவர்களுக்குப் பலமடங்கு பெருகவேண்டும் என நினைத்துக்கொண்டு கொடுங்கள்!’ என்று இருந்தது.

விற்பனையில் இவ்வளவு பெரிய உயரத்தை குமுதம் எப்படி எட்டியது? பத்திரிகைகள் மூன்று விதம். 1) ஆசிரியர் என்ன நினைக்கிறாரோ அவர் சாய்வு என்னவோ அதையொட்டிதான் அதில் வரும் படைப்புகள் இருக்கும். 2) இன்னொரு விதம் வாசகர்கள் இதழ். அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அந்த விதத்தில் வரவேண்டும். குமுதம் வாசகர்கள் இதழாக வெளிவந்தது. வாசகர்கள் என்ன விரும்புகிறார்கள் என ஆசிரியருக்கு எப்படித் தெரியும்? ஆசிரியர் எஸ்.ஏ.பி தன்னை யாரென்று வெளியில் காட்டிக்கொள்ளவே மாட்டார். தன் எளிமையான தோற்றத்தின் மூலமாக அவர் வாசகர்களை அவர்கள் அறியாமல் கண்காணித்தார் என்று சொல்லலாம். 3) மேல் சொன்ன இரண்டும் கலந்தவகையில் வெளியானவை மூன்றாவது வகை.

எஸ்ஏபிக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஒன்று பிரார்த்தனை. அதுதான் கூட்டுப்பிரார்த்தனையாக இதழில் வடிவம் பெற்றது. ஒரு முறை ஏவிஎம் செட்டியார் எஸ்.ஏ.பியை வீட்டுக்கு வந்து சந்தித்தார். அவருடைய புகழ்பெற்ற ‘காதலெனும் தீவினிலே’ நாவலைப் படமாக்க அனுமதி கேட்டார். ஓர் இளம் எழுத்தாளருக்கு இதைவிட சந்தோஷம் என்ன இருக்கிறது? அனுமதி கொடுத்துவிட்டார். அந்நிலையில் தன்னுடைய நண்பரான தேவி பிரஸ் நடத்தியவருமான பெரியகருப்பனுக்கு உடல்நலம் சரியில்லை எதுவும் நடக்கலாம் என செய்திவருகிறது.

மருத்துவர்கள் பிரார்த்தனை செய்துகொள்ளச் சொல்கிறார்கள். ஒரு பிரார்த்தனை பலிக்கவேண்டுமானால் உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றை நீங்கள் விட்டுவிடவேண்டும் என்று எங்கோ எஸ்.ஏ.பி படித்துள்ளார். தன் நாவல் திரைப்படமாகும் வாய்ப்பை அச்சமயம் துறக்க அவர் முடிவு செய்தார். ஏவிஎம் செட்டியாரிடம் சொன்னதும் அவரும் புரிந்துகொண்டார். அதன் பின்னர் அவருடைய எந்த நாவலும் திரைப்படம் ஆனதில்லை.

அவருக்கு கீதையின் மீது மிகப்பெரிய அபிமானம். அதன் 18 அத்தியாயங்களும் மனப்பாடமாகத் தெரியும். சின்மயானந்தாவின் பகவத்கீதை சொற்பொழிவு காசியில் நடந்தது. எஸ். ஏ.பியும் பார்த்தசாரதியும் அதற்காக காசிக்குச் சென்றிருந்தனர். அச்சமயத்தில் அழகப்ப செட்டியார் இறந்துவிட்டார். அவர்களைத் தொடர்புகொள்ள முடியாத நிலையில், இறந்தவரின் பெயர் பத்திரிகையின் இம்பிரிண்டில் இடம்பெறலாமா என்ற குழப்பத்தில் அச்சுக்குச் செல்லும் முன் ஆசிரியர் குழுவில் இருந்த ரா.கி. ரங்கராஜன் அந்தப் பெயரை நீக்கிவிட்டார். எஸ்.ஏ.பி பின்னர் துக்கம் விசாரிக்க சென்றபோது, என்ன அவர் இறந்த உடனேயே பெயரை நீக்கிவிட்டீர்களே என பெரியம்மா விசனப்பட்டதும் நடந்திருக்கிறது! அதிலிருந்து ஆண்டுதோறும் கௌரவ ஆசிரியர் நினைவு நாளையொட்டி அவருக்கு மரியாதை செய்யும்விதமாக யாரிடமாவது அஞ்சலிக் கட்டுரை வாங்கி வெளியிட்டுவந்தார் எஸ்.ஏ.பி. நான் 1994-இல் ஆசிரியராக இருந்தபோது அப்படி ஒரு கட்டுரை போட்டிருக்கிறேன்.

(குமுதம் ஆசிரியர்

எஸ்.ஏ.பி. அண்ணாமலையின் நூற்றாண்டு இது. இதையொட்டி மூத்த பத்திரிகையாளர் மாலன் நிகழ்த்திய சொற்பொழிவில் இருந்து ஒரு பகுதி.)

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com