வேர்களில் பிறந்த மக்கள் வரலாறு

வேர்களில் பிறந்த மக்கள் வரலாறு

நான் எல்லோரும் போல் வரலாறு, விஞ்ஞானம், மானுடவியல், நாட்டார் வழக்காறு, கல்வெட்டு, தொல்லியல் என வாசிக்கும் சராசரி வாசகன். எனது வாசிப்பில் பல பக்கங்கள் வெற்றிடமாகத் தெரிந்தன. இவற்றில் பெரும்பான்மை மக்கள் வழக்காறுகளாக இருப்பதை அறிந்தேன். இதனை அம்மக்கள் மொழியிலே கொடுக்க தேடிய வடிவம் தான் கதை.

தமிழர் ; பிறமொழியினர்: நஞ்சை நிலங்கள் பாசன கண்மாய்களுக்கு நிரந்தரமான நீர்வரத்து கால்வாய் அமைத்து இருப்பார்கள். தமிழகத்தில் 80% கண்மாய்கள் பாண்டிய, சோழ ஆட்சியில் அமைப்பட்டது என தொல்லியல் துறை சான்று தருகிறது. அப்படியானால் அந்த நிலத்தின் உரிமையாளர்களாக தமிழ்க் குடிகள் மட்டுமே இருந்திருக்க முடியும். இந்த நிலத்தில் தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களுக்கு எப்படி பங்கு கிடைத்தது. இதற்கு விடையாக தமிழகத்தில் நாயக்கர் ஆட்சியில் கருநாடக, ஆந்திரா பிரதேச மக்கள் பெருவாரியாக வந்து குடியேறினர். இவர்களுக்கு நிலங்கள் கிடைக்க ஏற்படுத்தப்பட்ட சட்டம் தான் ‘குடிநீக்கம், குலநீக்கம்'. காந்தி கிராமிய பல்கலைக் கழகப் பேராசிரியர் ஓ.முத்தையா அவர்கள் தொகுத்த ‘தெங்காசிப்பள்ளு' என்ற நூல் எனது தேடுதலுக்கு ஊக்கமளித்தது. அதன் பின் குல நீக்கத்திற்கான காரணிகளை தேடிய போது ‘மநு' தர்மமே இதன் மூலம் என உறுதியானது.

குலநீக்கமும் நிலப்பறிப்பும்: சாதி மாறி மணம் முடித்தவனுக்கு குலநீக்கம் செய்து சாதியை விட்டு ஒதுக்கி ‘பிணம் தூக்கும் தண்டனை' வழக்கிய செய்தி புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுத் தொகுப்பில் படித்தேன். இன்றும் சமூகத்தில் சாதி மறுப்பு மணத்திற்கு கடுமையான எதிர்ப்பு உள்ளதால் இதன் ஆழம் குறித்து பலரிடம் தொடர்ந்து உரையாடினேன்.

சாதியின் இறுக்கம் நாயக்கர் ஆட்சியில் அதிகமானதை வரலாறு பதிவு செய்துள்ளது. ஆனாலும் பட்டியல் குலத்தினராக இன்று அறியப்படும் சாதியினர் நாயக்கர் ஆட்சியில் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டதற்கான சான்றுகள் பல உள்ளது. இதனை தொல்லியல், மானுடவியல், நாட்டுப்புற துறை அறிஞர்களிடம் விவாதித்து தெளிவு பெற்றேன். நிருபராகவும், போட்டோகிராபராகவும் இருப்பதால், நான் போகும் கிராமங்களில் மக்களுக்கு நிலம் கிடைத்த வழக்காறுகள், செப்பேடு, கல்வெட்டு, வருவாய்த்துறை ஆவணங்கள் சேகரித்தேன். மக்களிடம் வம்ச, குடும்பக்கதைகள் ஏராளமாக கிடைத்தன.

வன நில அழிப்பு ; பாண்டிய, சோழ, அரசர்கள் வனத்தின் கருங்காடுகளை (Forest zone) ஒட்டிய ஓரக்காடுகளை (territorial and buffer zone) அழித்து வேளாண்மை செய்தி எங்கும் பதிவாக இல்லை. கருங்காடுகளில் தான் வனவிலங்குகள் இனப்பெருக்கத்திற்காக தங்கும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். மதுரை மன்னர் சொக்கநாத நாயக்கர் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த புலி குத்தி வீரன் நடுகற்கள் அதிகமாக கிடைத்தன. அதனை ஆய்வு செய்த போது மலைகளின் நிலம் பெரும்பான்மையாக விஜயநகர குடிகள் வசம் இருந்ததை, பிரிட்டிஷ் ஆட்சியில் கைப்பற்றப்பட்டதும் அறிய முடிந்தது. பன்றிமலை (கொடைக்கானல்) முழுக்க சுற்றி சுற்றி நடந்தேன். அதில் பளியர் குலத்தினர் மலையின்  அரசர்களாக இருந்த வழக்காற்று செய்தியை கன்னிவாடி பாளையப்பட்டு வம்சாவழி அப்பயநாயக்கர் வாயிலாக அறிந்தேன். இதற்கான சான்றுகளை மலைமக்களான பளியர், புலையர், குன்னுவர் என்ற மன்னாடியர் மக்களிடம் தேடினேன். வழக்காறு, வம்ச கதைகளாகவே கிடைத்தது. இதில் மன்னாடியர் என்ற குலத்தினர் சேர குடிகள் என்ற செய்தியை வெங்கமேடு என்ற சொல் மூலமாகவும், சில வளமை சடங்குகள் கேரளப்பகுதியான மறையூர் கோதமங்கலம், செம்பராங்குலம் சுற்றுப்பகுதியில் வாழும் புலயர், பளியர், முதுவா குடிகளுடன் ஒத்துப் போனதால் எனது தேடுதல் கேரளப்பக்கமாக  சென்றது.

நாவிதர்களும் சித்த மருத்துவமும்: எனது தாத்தா பண்டுவர் குப்புசாமிக்கு தனியாக ஒரு நாவிதர் இருந்தார். நாடார் குலத்தினர் தனியாக நாவிதர் நியமித்து சவரம் செய்யும் மரபு தொடர்கிறது. இதற்கான காரணத்தை தேடிய போது மெக்கன்சி தொகுப்பில் ‘துங்கபத்ரா நதியின் இடது கரையோரம் மைலாரா காடுகளில் குறும்ப அரசு இருந்தது. இவர்களுடன் விஜயநகர அரசு போர் தொடுத்தது. போரில் குறும்ப அரசு தோற்று உயிர்தப்பிக்க தமிழகத்தின் திருவண்ணாமலை, சேலம் மலைப்பகுதியில் குடியேறி ஆட்சி செய்தனர். விஜயநகர ஆட்சி தமிழகத்தில் உருவான போது, சவர தொழிலாளர்கள் போல் வேடமிட்டு குறும்பர் மன்னர்களுக்கு சவரம் செய்வது போல் நடித்து கழுத்தை அறுத்தார்கள்' என்ற செய்தி படித்தேன். ‘மதுரை மாவட்டம் உசிலப்பட்டி பகுதியில் நாவிதன் ஒருவன் சவரம் செய்யும் போது கழுத்தையும் தண்டினை (ஆண் உறுப்பு) அறுத்து விடுவான். அவன் குதிரையில் வருவான், மல்யுத்த வீரன்' என்ற கதையைக் கேட்டுள்ளேன். இதுக்கதை கன்னிவாடி பாளையப்பட்டுக்கு இழுத்துச் சென்றது. இக்கதையின் காலம் மன்னர் சொக்கநாத நாயக்கர் காலத்தை ஒத்திருந்தது.

தில்லி மொகலாய அரசர்கள், மன்னன் திப்பு சுல்தான் போன்றவர்கள் முகச்சவரம் செய்த ஓவியங்களும், பல இந்து அரசர்கள் சவரம் செய்யாத ஓவியங்களும் என்னை கவனிக்க வைத்தன. இது குறித்த தேடுதலில் நாவிதர்கள் குறித்த செய்திகள் சுவராசியத்தை எட்டியது. அரச மரபு காலங்களில் நாவிதர்களுக்கு நஞ்சை நிலம் மானியமாக வழங்கியது தொழிலுக்காக!? மட்டும் இல்லை, என்பதை உள்வாங்கிக்கொண்டேன். ஆண்களுக்கு நாவிதம் செய்தது போல், பெண்களுக்கு யார்? எப்படி? செய்தார்கள்?, இறந்த பின் ஏன் பிணத்திற்கு முக, இடை, சவரம் செய்கிறார்கள் என்ற கேள்விக்கு பல்லாண்டுகள் தேடுதலில் கிடைத்த பண்பாட்டுத் தகவல்கள் என்னை வியப்படைய வைத்தது.

பேறுகாலம் பார்த்தவர்களுக்கு மருத்துவச்சி என பட்டம் உள்ளபோது அவர்களது கணவர்களுக்கு ஏன் மருத்துவர் என்ற பட்டத்திற்கு பதிலாக நாவிதர் என்ற கேள்விக்கு விடை தேடினேன். நீதிக் கட்சியின் துவக்கப்புள்ளியான ஆனந்தம்பண்டிதரின் எழுத்துக் களை தொகுத்த பேராசிரியர் கோ.இரகுபதியின் நூல்கள் இதற்கு விளக்கம் கொடுத்தன.

சித்த மருத்துவத்தில் மூலப்பொருள்கள் வெடிப்பொருள்களே: க.ப.அப்பாதுரையார் தனது ‘தென்னாட்டு போர்க்களங்கள்' நூலில் 600க்கும் மேற்பட்ட போர்களை குறிப்பிடுகிறார். போர்வீரர்களுக்கு மருத்துவம் மட்டும் இல்லையெனில் மனித குலமே அழித்திருக்குமே. போர்களத்தில் என்ன விதமான உயிர் காக்கும் மருத்துகள் பயன்படுத்தினார்கள் என கூடுதலாக தேடிய போது பற்பம், செந்துரம், நுட (எலும்பு முறிவு) மருத்துவம் குறித்து எனக்கு தெரிந்தாலும் ஆழமாக தேடினேன். படை எடுப்பின் போது மருத்துவர்கள் தனிப்படையாக செல்வார்கள். அதைப்போல், கடல் வணிகத்தில் ஈடுபட்டால் கடலுக்குள் பலமாதம் பயணம் செய்திடும் போது உடல் நலக்குறையை தீர்க்க மருத்துவரோ, அல்லது மருந்துடனோ சென்றாக வேண்டும். கடல் மற்றும் புது நிலப்பரப்பின் தட்பவெப்பத்தை எதிர்கொள்ள யானைத் தந்தத்தில் செய்த சிறுகுடுவைகளில் பற்பம், செந்தூரங்களை அடைத்து வைத்து செல்வார்கள். எனது வீட்டில் உள்ள சிறுகுடுவைகள் இதற்காக பயன்பட்டவை' என எனது தந்தை சொன்ன செய்தி வியக்க வைத்தது.

எழுத்தாளர் முத்துநாகு
எழுத்தாளர் முத்துநாகு

இந்தியாவில் மட்டும் பண்டுவம் என்ற சித்த மருத்துவம் உள்ளதற்கான கேள்விக்கான விடை பல்லாண்டுகள் கழித்து கிடைத்தது. பிரிட்டிஷ் ஆட்சியில் இதை முடக்கிடும் முகமாக கல்கத்தா, கோமான், சர்.உஸ்மான் என கமிட்டிகளை நியமித்தனர். அந்த அறிக்கையில் ‘நாயக்கர் ஆட்சியில் சித்த மருத்துவ மருத்துகளுக்கு கட்டுப்பாடு விதித்தார்கள்' என்ற செய்தி கண்களை விரிய வைத்தது. சித்த மருத்துவத்தில் உடனடியாக உயிர் காக்கும் மருந்துகள் பற்பம், செந்தூரம். இவை தயாரிக்கும் மூலப்பொருள்கள் கெந்தகம், வெடியுப்பு, பாதரசம், தாளகம், மிருதாசிங்கி, பவளம், லிங்கம், மனோசீலை, துத்தம், துருசு, குங்கிலியம் போன்றவை படைகளில் பீரங்கிகளுக்கு வெடிமருந்தாக பயன்படுத்தப்பயன்பட்டதால் அரசு கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. இதே போல் கிணறு. சங்க காலத்திலே கிணறு இருந்த குறிப்பு இருந்தாலும், ஆழமாக கிணறு வெட்ட வெடி எந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு அனுமானமான தகவல்களே எனக்கு கிடைத்தது. இதே போல் தோல் உற்பத்தி மிகையான காலம், புகையிலை பயிரிடப்பட்ட காலம் இவை குறித்தும் ஆய்வாகவே செய்தேன்.

பாம்புக்கடிக்கு நஞ்சு முறிவு மருந்து; நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை வேளாண்மையே பெரும் உற்பத்தி தொழிலாக இருந்தது. பாம்பு, பூரான், சியான், நட்டுவாகாலி, தேள் போன்ற நஞ்சுள்ள உயிர்கள் அதிகம் இருந்த காலம் அதுவே. இவைகள் தீண்டாதவர்களே இருக்க மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். அப்படியானால் இவைகள் கடித்தவுடன் உடனடியாக உயிர் காகும் பல வித மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளதே?. அன்றைய காலத்தில் நஞ்சு முறிவிற்கு மருந்து இல்லையென்றால் இன்றைய மானுட சமூகமே இல்லாமல் அல்லாவா போயிருக்கும் என திடமான முடிவெடுத்தேன்.

கிறித்தவமும் இசுலாமும்: கிறித்தவம் தமிழக நிலப்பரப்பில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு வந்தாலும், மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய மூலத்தை தேடினேன். இராகவ ஐயங்காரின் ஆய்வு நூல்கள் எனக்கு துணை நின்றது. ஏசு சபை பாதிரியார் ஆல்வரேஷ் கன்னிவாடி எல்லையில் தங்கிப்பிரச்சாரம் செய்தது, மன்னர் சொக்கநாத நாயக்கருக்கு இவர் ஆங்கிலம் உள்பட பல மொழிகளைக் கற்றுக்கொடுத்தார் என்ற செய்தியின் வேர்களைத் தேடினேன். அதில் குல நீக்கமான மக்கள் கிறித்தவம் நிழலில் நின்றதை உணர முடிந்தது. அதே போல் இசுலாம் தமிழக நிலப்பரப்பில் எப்படி மக்களோடு கூடி தவழ்ந்ததை ‘பண்டரப்படை' என்ற ஒற்றைச்  சொல்லை வைத்தே தேடி ஓரளவிற்கு சேகரித்தேன்.

சலவைத் தொழில்; அடையாளம் தெரியாது இறந்தவர்களை சட்டையின் கழுத்துப்பட்டையில் உள்ள குறியீட்டு மை அடையாளத்தின் மூலம் கண்டுபிடிப்பார்கள் என பிரிட்டிஷ் குறிப்பு சொல்கிறது. இந்த மை  சித்த மருத்துவதற்கு பயன்படும் சேங்கொட்டையின் மை எனத் தெரிந்தது. இதை எனது தாத்தாவிடம் வண்ணார் சமூகத்தினர் வாங்கிச்செல்வதை சிறுவயதில் பார்த்துள்ளேன். சலவைக்கு காரம் என்ற சவுட்டு உப்பு பயன்படுத்துவது, வெள்ளாவியின் தொழில் நுட்பம், இதை விட முக்கியமானது சாதி வாரியாக குறியீடு போடுவதை தேடி பல நூறு மைல்கள் பல நூறு சலவை தொழிலாளர்களை சந்தித்தேன்.

சுளுந்து; தீ.... இன்று மின்சாரமாக, கையடக்க தீப் பெட்டியாக, மாறியதால் தீயின் பிரமிப்பு நம்மிடம் அகன்றுவிட்டது. 200 ஆண்டுகளுக்கு முன்பு தீயினை எப்படி அணையாமல் காத்தார்கள் என தேடிய போது தீச்சட்டியை ஊர் ஊராக சுமந்து திரிந்த அம்மன் கொண்டாடிகள் ஆய்வில் சிக்கினார்கள். இப்படியான சமூகத்தில் புழக்கத்தில் உள்ள பல  சொற்கள் வரலாற்றை சுமந்துள்ளதை தேடித்தேடி சேகரித்து பல்கலைகழக பேராசிரியர்கள், மானுடவியல் ஆய்வாளர்கள், கல்வெட்டு, தொல்லியல்துறை அறிஞர்களிடம் பல்லாண்டுகள் விவாதித்போது, இவை குறித்து பல்கலை கழகத்தில் கூட ஆய்வு மேற்கொள்ளவில்லை எனத் தெரிந்தது. மக்களின் வரலாற்றை கதையாகக் கட்டமைத்தது தான் சுளுந்தீ.

ஜூன், 2023

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com