
சென்னை புத்தகக் கண்காட்சி பற்றிய தன் அனுபவங்களைக் கூறுமாறு கலை விமர்சகர் இந்திரன் அவர்களிடம் கேட்டோம். அவர் கூறியதாவது:
புத்தகத் திருவிழா என்பது இலக்கிய ஜனநாயகம். எழுத்தாளன் வாசகன் உரையாடல், புத்தக விற்பனையுடன் கேள்விகள் எழுப்பப்பட்டு தமிழ் மொழியையும் அதன் சிந்தனை மரபையும் உயிரோடு வைத்திருக்கும் ஒரு மாபெரும் கொண்டாட்டம்தான் புத்தகத் திருவிழா.
இது வாசகன் எழுத்தாளருடன் உரையாடும் ஓர் இலக்கிய ஜனநாயகத்தின் கொண்டாட்டம்.
காசு கொடுத்துப் புத்தகங்கள் வாங்கப்படுவதில்லை; சிந்தனைகள் வாங்கப்படுகின்றன. கவிஞர்கள் -வரலாற்று ஆசிரியர்கள், பெண்ணியவாதிகள் - மார்க்சியர்கள், தலித் எழுத்தாளர்கள் - தேசியவாதிகள் என்று நேரடி சிந்தனை பரிவர்த்தனைகள் காபி டிபன் பன் பட்டர் ஜாம் உடன் நடந்தேறுகிறது. இது ஒரு நிகழ்வு அல்ல, சிந்தனை ரீதியாகத் தொடரும் அறிவுபூர்வமான ஒரு விவாதம் .தமிழர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவது போல சென்னையில் ஆண்டுதோறும் சென்னை புத்தகக் கண்காட்சியைக் கொண்டாடுகிறார்கள்.
கவிஞர் மீரா 1983இல் என்னுடைய 'காற்றுக்கு திசை இல்லை' ,'அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்' புத்தகங்களை சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனை செய்தார். எனக்கு ஆரம்ப காலத்தில் ஊக்கம் கொடுத்தவர் அவர். அதுமுதல் புத்தகக் கண்காட்சிக்கு வருகிறேன்.
யாளி பதிவு வெளியீடு என்று நான் ஒரு பதிப்பகம் 2000 ஆம் ஆண்டில் தொடங்கி 25 ஆண்டுகள் ஆகின்றன.இது தொடர்ந்து புத்தகங்கள் வெளியிட்டு வருகிறது. என் புத்தகங்களையும் மற்றவர்களின் சில புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது.யாளி தொடங்கியது முதல் நான் புத்தகக் கண்காட்சிக்கு தொடர்ந்து சென்று வருகிறேன்.
அது முதல் என் புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுக் கொண்டே வருகின்றன. இதுவரை 40 நூல்களுக்கு மேல் எழுதி இருக்கிறேன்.இந்த ஆண்டும் எனது 'கலை' என்கிற ஓவியம் சிற்பம் திரைப்படங்கள் பற்றிய கட்டுரை நூல் வெளிவந்துள்ளது. 'திசைகள் நான்கு அல்ல', 'தமிழ் அழகியல்' , 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' என்ற ஆதிவாசிகள் கலாச்சாரம் சார்ந்த நூல்,'உலக இலக்கியம்' போன்றவை நல்ல விற்பனையானவை.
எனது சிற்பம் ஓவியம் திரைப்படம் சார்ந்த கலை விமர்சனக் கட்டுரைத் தொகுப்பு இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளது.
அந்தக் காலத்தில் நான் கடைகள் போடுவதில்லை.எழுத்தாளராகவும் பதிப்பாளராகவும் நூல் விற்பனையாளராகவும் இருக்கும் பொதிய வெற்பன் தான் என் புத்தங்களை விற்றுக் கொடுப்பார்.
புத்தகக் காட்சிகளில் நான் முன்னுரை எழுதிய நூல்கள் பல வெளியிடப்பட்டுள்ளன.நான் எப்போதும் இளைஞர்களை ஊக்குவிப்பவன்.என்னைச் சுற்றிலும் எப்போதும் இளைஞர்கள் இருப்பார்கள்.இப்போது பிரபலமான பாடலாசிரியராக இருக்கும் கபிலன் என்னிடம் ஒரு கவிதைத் தொகுப்பைக் கையெழுத்துப் பிரதியாகக் கொடுத்துப் படிக்கச் சொல்லி இருந்தார். என்னிடம் அது ஒரு வருடம் இருந்தது .அவரது கவிதைகளை வைப்பு முறை எல்லாம் மாற்றி ஒரு முன்னுரை எழுதிக் கொடுத்தேன் 'தெரு ஓவியம்' என்று பெயர் வைத்துக் கொடுத்தேன்.
அவர் எழுதியிருந்த கவிதைகளில் முதல் கவிதையாக நான் வைத்தது,
'உயிர் எழுத்தில் மெய்யில்லை மெய் எழுத்தில் உயிர் இல்லை ஆய்த எழுத்தில் போராட்டம் இல்லை' என்ற கவிதையைத்தான்.
அதற்கு நீண்ட முன்னுரை எழுதினேன். கடைசியில் எப்படி எழுதி இருந்தேன் என்றால் 'இது நூலகங்களில் ஓவியஅரங்குகளின் வெளிச்சம் பூசிய சில்லிட்டுப் போன அரங்குகளில் இடம்பெறும் ஓவியம் அல்ல. இது தெரு ஓவியம் .விரல்கள் தேய வண்ணங்கள் பூசி வரைந்த தெரு ஓவியம்' என்று எழுதி இருந்தேன்.
இந்த முன்னுரையைப் பார்த்து ஒருவர் "என்னங்க, வயதில் இளைய பையனுக்கு இப்படி எழுதுகிறீர்கள்.இப்படி எழுதினால் பிறகு அவர்கள் வளர மாட்டார்கள்" என்றார்.ஆனால் நான் அப்படி நினைப்பதில்லை. அதை கமல்ஹாசனை வைத்து வெளியிட்டேன். இன்று கபிலன் மிகப்பெரிய கவிஞராக இருக்கிறார். கமலின் படத்தில் நடித்திருக்கிறார். இந்த மாதிரி பழனி பாரதி, வித்யா ஷங்கர், நா முத்துக்குமார் என்று ஏராளமானவர்களுக்கு நான் முன்னுரை எழுதியிருக்கிறேன்; அவர்களை நான் ஊக்கப்படுத்தி இருக்கிறேன்.அவர்கள் யார் என்று தெரியாத போது கூட நான் அவர்களுக்கு முன்னுரை எழுதினேன்.கவிஞர் அறிவுமதி முன்னுரை வேண்டும் என்று கேட்டால் அது ஆணா பெண்ணா என்று தெரியாமல் கூட எழுதிக் கொடுத்து விடுவேன். இளம்பிறை என்ற பெயரில் எழுதிய கவிதைகளுக்கு முன்னுரை கேட்டபோது அவர் யார் என்றே தெரியாது. ஆணா பெண்ணா, எந்த ஊர் எதுமே தெரியாது.எழுதிக் கொடுத்தேன்.எழுத்து நன்றாக இருந்தால் எழுதி விடுவேன்.
அ.இரா.வெங்கடாசலபதி என்னை முன்னுரை கொடுத்தே பேர் வாங்கும் புலவர் என்று கிண்டல் செய்வார்.
இப்படிப் பலருக்கும் நான் முன்னுரை எழுதிக் கொடுத்திருக்கிறேன். ஆனால் அவர்கள் யாருமே சோடை போகவில்லை.அதேபோல் புதிய இளைஞர்கள் நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கும் போது சென்று வாழ்த்தி விட்டு வருவேன்.
என் துணைவியார் மறைந்து பொங்கல் படையல் செய்ய வேண்டிய நாளில் கூட நான் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் சென்று நூலை எழுதிய அந்தப்புதிய இளைஞரை வாழ்த்திவிட்டு வந்தேன்.
ஏனென்றால், மூத்தவர்களுக்கு இளைஞர்களை ஊக்கப் படுத்த வேண்டிய கடமை இருக்கிறது. எங்கிருந்தோ உள் கிராமங்களில் இருந்து எழுத வருகிறார்கள். அவர்களை நாம் நிச்சயமாக தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும்.
நாம் ஆதரவு நிச்சயம் கொடுக்க வேண்டும். நாம் ஆதரவு கொடுத்தால் தான் அவர்கள் வளர்வார்கள். நான் இதைத் தொடர்ந்து செய்து வருகிறேன் .ஆனால் நான் முன்னுரை எழுதிக் கொடுத்த யாரும் சோடை போகவில்லை.
இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
நான் பம்பாயில் இருந்தபோது எங்களுடைய வங்கியின் வடாலா கிளையில் ஒரு கணக்கு பாம்பே யூனியன் டெவலப்மெண்ட் என்பதைக் குறிக்கும் வகையில் 'பி யு டி' என்ற பெயரில் நாங்கள் வங்கியில் நான், கலைக் கூத்தன், ஞான ராஜசேகரன் ஆகியோர் இணைந்து ஒரு கூட்டுக் கணக்கு தொடங்கினோம்.இந்தக் கணக்கில் நிதி வசூலித்து சேர்த்து நாஞ்சில்நாடன் எழுதிய 'தலைகீழ் விகிதங்கள்' புத்தகத்தை வெளியிட்டோம்.முதலில் நீளமாக எழுதி இருந்தார். மிகப்பெரியதாக இருந்தது.அதை அச்சிட்டு வெளியிடுவதற்கு நிதி போதவில்லை. எனவே அதைப் பக்கங்களைக் குறைத்து வெளியிட்டோம்.
பின்னால் அதுதான் 'சொல்ல மறந்த கதை' திரைப்படமாக வந்தது.
1976 இல் பம்பாய் தமிழ்ச் சங்கம் மூலம் எம்ஜிஆரை வைத்து ஒரு பெரிய விழா செய்தோம் .அதற்காக முதல்வர் எம்ஜிஆர் வந்தபோது பம்பாய் தமிழ் சங்கத்தின் கட்டடத்திற்காக அரசாங்கம் பணம் கொடுக்கும் என்றார். அவர் வரும்போது தமிழ் சங்கத்தின் அரங்கில் சங்க உறுப்பினர்கள் தவிர மற்றவர்களுக்கு இடம் அளிக்கக் கூடாது என்று கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். ஏனென்றால் அதில் இருந்தவர்கள் பெரும்பாலும் மேல் தட்டுக்காரர்கள். முதல்வர்
எம்ஜிஆர் வருகிறார் என்று அறிந்து தாராவி பகுதியில் இருந்து ஏராளமான ஏழை மக்கள் அங்கு கூடி விட்டார்கள்.பெருந்திரளான கூட்டம் அரங்கத்துக்கு வெளியே அலை மோதியது.
ஆனால் அவர்களை உள்ளே விடவில்லை. அங்கே எம்ஜிஆர் வந்து மேடையில் நின்றார் .நானும் அப்போது மேடையில் இருக்கிறேன். இதயம் பேசுகிறது மணியன் எம்ஜிஆர் உடன் வந்திருந்தார்.எம்ஜிஆர் மணியனை அழைத்து அனைத்துக் கதவுகளையும் திறந்து விடச் சொன்னார்.
கதவைத் திறந்து விட்டதும் தமிழ் சங்கத்துக்குள் தாராவியில் இருந்து வந்து இருந்த ஏழை எளிய மக்கள் உள்ளே திரளாகப் புகுந்து விட்டார்கள்.
எம்ஜிஆர் ஒரு பெரிய அதிசயமான விஷயத்தை அப்போது செய்தார். பத்து அடி உயரமான மேடை, அதிலிருந்து மக்கள் மத்தியில் அப்படியே குதித்தார். நான் அவர் பக்கத்திலேயே நிற்கிறேன். எனக்குப் பதற்றமாகிவிட்டது.அப்படிக் குதித்தால் கால் , கை, உடம்பு என்னாகும் என்று நினைக்காமல் சற்று யோசிக்காமல் அப்படியே குதித்தது எங்களுக்கெல்லாம் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.இப்போது விஜய் போன்ற நடிகர்கள் எல்லாம் ஆயிரம் பாதுகாப்புடன் வருகிறார்கள். அவர் மக்கள் மத்தியில் அப்படியே குதித்தால் என்னாகும்?
எம்ஜிஆர் மட்டும் எப்படி இப்படி இருக்கிறார் என்று ஆச்சரியம் தாங்கவில்லை. ஒரு சிறு கீறல் பட்டிருந்தால் கூட போதுமே, அப்படி மக்களிடம் நெருக்கமாக அப்போது எம்ஜிஆர் இருந்தார்.
இந்த தமிழ்ச் சங்கம் எல்லோருக்கும் கதவு திறந்து விடப்படும் என்று உத்திரவாதம் கொடுத்தால் தான் அரசாங்கம் பணம் கொடுக்கும் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.பிறகு நிதி உதவி செய்தார் என்று நினைக்கிறேன்.
அதன் பிறகு கட்டடம் கட்டினார்கள்.
அங்கே நாங்கள் புத்தகக் காட்சி நடத்தினோம். நிறைய சினிமா சார்ந்த புத்தகங்களை விற்பனை செய்தோம். பேல பெலாஸ் எழுதிய 'சினிமா கோட்பாடு' புத்தகத்தை நாங்கள் பெரிதும் சிபாரிசு செய்து விற்பனை செய்தோம்.
பிறகு அங்கே கவியரங்கமும் நடத்தினோம். நான், அகிலன் கண்ணன், திலீப் குமார் போன்றவர்கள் எல்லாம் கவிதை வாசித்தோம். இந்தப் பழைய அனுபவங்களையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.