என்னை இஸ்லாமியனாக உணர்கிறேன்! -ஜெயமோகன்... குர் ஆன் மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழா உரை

நூல்வெளியீடு
நூல்வெளியீடு
Published on

பத்ம விபூஷன் மௌலானா வஹீதுத்தீன் கான் எழுதிய புகழ்பெற்ற குர்ஆன் விரிவுரையான தஸ்கீருல் குர்ஆன்(திருக்குர்ஆனின் நினைவூட்டல் ) தமிழ் மொழிபெயர்ப்பு முதல் பாகம் வெளியீட்டு நிகழ்வு இன்று புத்தகக் காட்சி சிற்றரங்கில் நடைபெற்றது. இந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் டாக்டர் சையத் ரஃபீக் பாஷா, மேலாய்வு செய்திருப்பவர் டாக்டர் ஹபீபுல்லாஹ் ( அபி). குட் வேர்ட் புக்ஸ் பதிப்பித்து வெளியிடுகிறது.

இந்நூலை எழுத்தாளர் ஜெயமோகன் வெளியிட்டார். மதுரை இமாம் மவுலவி அப்துல் அஜீஸ் வாஹிதி ஃபாஜில் மிஸ்பாஹி பெற்றுக் கொண்டார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை பல்கலைக்கழகத்தின் அரபி துறைத் தலைவர் ,பேராசிரியர் ஜாகிர் ஹுசைன் பாகவி, சென்னை யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் எஸ். எஸ். ஷாஜகான்,பதிப்பு வரலாற்று ஆய்வாளர் பழங்காசு சீனிவாசன், சென்னை கல்தச்சன் பதிப்பகம் பேராசிரியர் முரளி அரூபன்,மொழிபெயர்ப்பாளர் சாகுல் ஹமீது உமரி,ஜேசு சபை அருட்தந்தை அந்தோணி ரூபன் தாஸ்,சென்னை திரு பிடக தமிழ் நிறுவனம், ஈ.அன்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் நூலை வெளியிட்டு விட்டு எழுத்தாளர் ஜெயமோகன் உரையாற்றும் போது,

" மார்க்க அறிஞர்கள் குடியிருக்கும் இந்த அவையிலே ஓரிரு சொற்கள் சொல்லலாம் என்று நினைக்கிறேன். பொதுவாக என்னுடைய உரைகள் எல்லாமே ஒரு வகையான தனிப்பட்ட உரையாடல்களாக அமைவதுதான் வழக்கம்.

நண்பர்களே! 1986வாக்கிலே என்னுடைய பெற்றோருடைய தற்கொலைக்குப் பிறகு கடுமையான உளச்சிக்கலுக்கும் உளச்சோர்வுக்கும் ஆளாகி, காற்றில் பறக்கும் ஒரு சருகு போலக் திரிந்துகொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் மிகத் தற்செயலாக எனக்கு அஜ்மீர் தர்காவுடன் ஒரு உறவு ஏற்பட்டது. இன்றுவரைக்கும் என்னை வழிநடத்தக்கூடிய ஒரு ஒளியாக அது இருந்து வருகிறது.

நண்பர்கள் அனைவருக்கும் தெரியும். என்னைத் தெரிந்த அனைவருக்கும் தெரியும். இருபத்தி ஐந்து ஆண்டுகளாக அதைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறேன். பலமுறை அங்கே செல்வதுண்டு. அங்குள்ள எல்லா சடங்குகளையும் முறையாகச் செய்து வரக்கூடிய நான். என்னுடைய குடும்பமே அந்த வழியில் நெடுந்தூரம் சென்றுள்ளது. என்னுடைய மகன் அஜிதன் இங்கு இருக்கிறார்.அஜ்மீர் தர்காவை மையமாகக் கொண்டு தமிழில் முதல் இஸ்லாமிக் நாவல் என்று கொள்ளு நதீம் அவர்கள் சொன்ன 'அல் கிசா' என்ற ஒரு நாவலை அவர் எழுதியிருக்கிறார். 1999 இல் என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் என்னுடைய நூல்களைப் பற்றி என்னுடன் உரையாடும்போது அன்றைய இஸ்லாமியப் போக்குகள் சிலவற்றை எனக்கு அறிமுகம் செய்தார். அப்போது என்னுடைய இந்த நம்பிக்கை அல்லது என்னுடைய இந்த வழி, மிகக் கடுமையாக அவரால் நிராகரிக்கப்பட்டது. அது எனக்குப் பெரிய உளச் சோர்வை உருவாக்கியது -

நான் என்னை இஸ்லாமியன் என்று உணர்வதுண்டு. ஆனால், எனக்கு அங்கிருந்து கிடைப்பதற்கு ஒரு குரல் இருக்கிறது. ஒரு வழி இருக்கிறது. எனக்கொரு இடம் இருக்கிறது. அது நிராகரிக்கப்படும்போது ஒரு பெரிய சோர்வை நான் அடைந்தேன். அந்தக் காலகட்டத்தில் தான் சதக்கத்துல்லா ஹசனி அவர்கள் எனக்கு அறிமுகமாகிறார். நானும் என்னுடைய மனைவியுடன் என்னோட நண்பர்களிடையே சொல் புதிது என்ற ஒரு இதழை நடத்தி கொண்டு இருந்தேன். அந்த இதழில் ஒரு கட்டத்தில் சதக்கத்துல்லா ஹசனி அவர்கள் சேர்ந்துகொண்டு அவர் அதற்கு ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். அப்போது அவருடனான உரையாடலில் நான் இந்த விஷயத்தை அவரிடம் சொன்னேன். இந்த வகையான ஒரு நிராகரிப்புத் தொனி இன்று உருவாகி வருகிறதற்கு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அது ஒரு குரல் தான். அது இஸ்லாம் குரல் அல்ல. நீங்கள் மௌலானா வஹிதுத்தீன் கான் அவர்களைப் படிக்கணும். அவருடைய குரல் தான் இஸ்லாமுடைய குரல். இன்றைய இஸ்லாமிய குரல் என்று சொன்னார். அப்படித்தான் இந்த ஆளுமை, இந்த பேராசான் எனக்கு அறிமுகம் ஆகிறார்.

நண்பர்களே, தமிழில் ஒரு பொதுப் பத்திரிகையில் வஹிதுத்தீன் கானுடைய முதல் கட்டுரை வெளியானது. இரண்டாயிரத்தி ஒன்றில் நாங்கள் நடத்திய சொல் புதிது இதழில்தான். அதன்பிறகு தொடர்ந்து வேறு சில கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறோம். அதன்பிறகு சொல் புதிது நின்று போய்விட்டது. மௌலானா அவர்கள் இப்போது என்னுடைய தொடர்பில் தான் இருக்கிறார். அதன்பிறகு நான் நீண்ட தொலைவு இங்கே வந்து சேர்ந்து இருக்கிறேன். இந்த இரண்டாயிரத்தி இரண்டுக்குப் பிறகு 'முழுமை அறிவு ' என்ற பெயரில் அறிவியக்கம் ஒன்றைத் தொடங்கி, அதன் வழியாக எல்லா மதம் சார்ந்த கருத்துகளைக் கற்பிக்கக்கூடிய வகுப்புகளை நடத்தி வருகிறோம். இதில் எல்லா மாணவர்களும் அமர்ந்து கற்றுக் கொள்ளலாம். அதில் இஸ்லாமிய சூஃபி வகுப்புகளை நிஷா மன்சூர் அவர்களும், உருது மற்றும் சூஃபி மரபுகளை காதிரி அவர்களும் நடத்தி வருகின்றனர்.

பெரும்பாலும் இந்து, கிறிஸ்தவ மாணவர்கள் அடங்கிய அவையில் இந்த வகுப்பு நடந்து வருகிறது. ஒரு வகையில 2001 இல் சதக்கத்துல்லா ஆசிரியரிடமிருந்து எனக்குக் கிடைத்த வஹிதுத்தீன்கானுடைய செய்தி தான்,இப்பொழுது ஒரு செயலாக மாறி இருக்கிறது என்று சொல்லலாம்.

நண்பர்களே! இந்த நூலில் இந்தக் குர்ஆன் விரிவுரையை நான் இன்னும் படிக்கவில்லை. இன்றுதான் வெளியாகிறது. இது எனக்குப் பிரியத்திற்குரிய ஒரு நூலாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்த நூலினுடைய செய்தியை வெவ்வேறு கட்டுரைகள் வழியாக மௌலானா அவர்கள் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார். குறிப்பாக ஆங்கிலம் படிக்கக்கூடியவர்கள் அவருடைய கட்டுரைகளை நிறைய பார்த்திருக்கலாம். அவரே ஆங்கிலத்தில் நிறைய எழுதக்கூடியவர். அவருடைய உருது அளவுக்கே அவருடைய ஆங்கிலமும் தனித்தன்மை கொண்டது. ஸ்டைலிஷ்டு என்று சொல்வார்கள். ஒரு அழகிய நடை கொண்டது. வெறும் நடை அழகுக்காகவே அவரைப் படிக்கக்கூடிய வாசகர்கள் நிறைய பேர் உண்டு. ஆங்கில இலக்கியத்தில் அவருக்கு நிறைய வாசகர்கள் உண்டு. அவரை நான் படிக்கும்போது நான் இங்கே சொல்ல வருவது இது ஒரு விரிவுரை அல்ல. ஒரு சுருக்கமான அறிமுகம் தான். இந்த மேடையில் ஒரு வார்த்தையோடு அவர் என்னைத் தொடர்பு கொள்கிறார். பெரும்பாலும் அவருடைய கட்டுரைகள் அனைத்திலுமே திரும்பத் திரும்ப வரக்கூடிய வரி என்பது அமைதி என்பது தான். அப்போது ஒரு கட்டுரையில் ஒரு வரி நான் அதை கோட் பண்ணி இருக்கேன். 'நீதி என்பது அமைதி என்பதாக விளையாவிட்டால் அது நீதி அல்ல. நீதி அமைதியைக் கொண்டுவரவில்லை என்றால் அது அநீதி தான். நீதி அல்ல'. இந்த வரி என்னை நெடுங்காலம் கொந்தளிக்க வைத்த ஒரு வரி.

நான் பின் தொடரும் நிழலின் குரல் என்ற ஒரு நாவல் எழுதியிருக்கிறேன். சோவியத் ரஷ்யாவில் நிகழ்ந்த கம்யூனிச சோதனைகளைப் பற்றிய ஒரு பெரிய நாவல். அந்த நாவல் எழுதும்போது இந்த வரியைக் கூட வேணும்னு மொத்த விளைவாக அமைதி அறுவடை செய்யப்படாவிட்டால் விதைக்கப்பட்டது நீதி அல்ல. அப்போ நமக்கு எல்லாருக்கும் நீதி என்பது ஏதோ ஒரு வகையில் ரத்தத்தில் நனைந்து வரும் நீதி என்பது ஒரு வகையான வன்முறை வழியாக விளையும்.... வன்முறைக்கு இடையான எதிர் வன்முறை வழியாக நீதி விளைகிறதென்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கையில தான் நாம சினிமா படங்களை எடுத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனா, மௌலானா அவருடைய இந்த வரி அமைதியென விளையாவிட்டால், அமைதியென வராவிட்டால் அது நீதி அல்ல என்பது திரும்பத் திரும்ப மெடிடேட் பண்ண வேண்டிய ஒரு வரி. அதை யோசிக்க யோசிக்க நம்முடைய ஒட்டுமொத்த நம்முடைய ஸ்பிரிச்சுவாலிடி ரீடிஃபைன் பண்ண வேண்டி வரும். நம்முடைய ஆன்மீகத்தை நாம் மறுவரையறை செய்ய வேண்டும். அதாவது திரும்பத் திரும்ப மதம் என்பது ஒரு கண்டிப்பான தந்தையாக உருவெடுக்கக்கூடிய ஒரு மனநிலை,சென்ற நூற்றாண்டு வரைக்கும் நமக்கு இருந்தது. சென்ற நூற்றாண்டு வரைக்கும் உலகம் முழுக்க இனக் குழு சண்டைகள், போர்கள் என ஒரு உலகம் இருந்தது. அந்த ஒரு வேளை அந்தக் கண்டிப்பு தேவைப்பட்டிருக்கலாம். ஒரு கண்டிப்பான தந்தை, கையில குச்சி வைத்திருக்கக்கூடிய தந்தை. அவருடைய காலடி ஓசையில் நமக்கு அச்சமூட்ட வேண்டும். மௌலானா வஹீதுத்தீன் கான் ஒரு கட்டுரையில் சொல்கிறார். 'மதம் என்பது ஒரு தாய் போல இருக்க வேண்டும்' . அது எனக்கு ரொம்ப முக்கியமான ஒரு வரி. ஆனால் என்னுடைய வீட்டில் என்னுடைய அம்மா எனக்கு நினைவுக்கு வருகிறார். என்னுடைய வீட்டில் எப்போது பார்த்தாலும் இருபத்தி இரண்டு, இருபத்திமூணு குழந்தை இருக்கும். ஊருல எல்லா வேலைக்குப் போற பெண்களுக்கும் குழந்தைங்க இருக்கும். எங்க அம்மாவோட இடுப்புல ஏதோ ஒரு கைக் குழந்தை இல்லாம அம்மா ஞாபகமே வர்றதில்லை. அவர் இறந்து போயி இத்தனை ஆண்டுகள் ஆகிறது. நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகிறது.. தொடர்ந்து என்னுடைய கனவுகளில் வரும்போதெல்லாம் யாரோ ஒரு குழந்தை அவங்க இடுப்புல இருக்கும், ஏதோ ஒரு குழந்தை. அந்தக் குழந்தைக்கு எல்லாம் இன்னைக்கு ஐம்பது வயசு, நாற்பது வயசு ஆயிருக்கலாம். அப்போ ஒரு அம்மா என்பவளுக்கு பேதமற்ற அணைக்கும் தன்மை உண்டு. இன்னாருடைய குழந்தையை தன் குழந்தை என்று எந்நாளும் அணைக்கக்கூடிய ஒரு பேரன்னை. அப்படி ஒரு மதத்தை உருவகம் பண்ணக்கூடிய ஒரு தரிசனம் மௌலானா அவருடைய எழுத்துகளில் இருக்கிறது. பிறர் அல்லாத, பிறிது அல்லாத ஒரு தரிசனம். அதுதான் மூன்றாவதாக அவருடைய பார்வையைப் பற்றி நான் சொல்ல வேண்டிய விஷயம். மிகச் சுருக்கமாகத் தான் இந்த உரையில் சொல்கிறேன். ஆனா, இத நீங்கள் யோசித்து பாக்க வேண்டும். அதாவது, நீங்கச் செல்ஃப் என்பதை, நான் என்பதை, நம் தரப்பு என்பதை எப்படி வரையறுத்துக் கொள்கிறீர்கள்? உங்கள் தரப்பிலிருந்து வரையறுத்துக் கொள்வீர்களா? உங்கள் அல்லாத மற்றவருடைய பார்வையில் நீங்கள் உங்களை வரையறுத்துக் கொள்கிறீர்களா? பெரும்பாலும் நீங்கள் உங்களைப் பற்றிய உங்களுடைய வரையறை என்பது அதர்ஸ் உருவாக்குறதுதான். அல்லது வேறு ஒருவருக்கு காட்டும் பொருட்டு நீங்கள் உருவாக்குவது. அல்லது வேறு ஆட்கள் உருவாக்கி உங்களுக்குக் கிடைக்கிறது. உங்க ஊரில் உங்கள் பர்சனாலிட்டி என்பது ஊர்க்காரங்க சொல்றதுதான். பக்கத்து வீட்டுக்காரங்க சொல்றதுதான். அதுபோல மதம் சார்ந்த அடையாளமும் எதிர் மதம் சார்ந்த ஒரு தன்மையில் இருந்து உருவாகி இருக்கு. நான் அது அல்ல. நான் அவங்க அல்ல. நான் இவங்களப் போல அல்ல. நான் வேறு. இதில் இருப்பது நான் பற்றின வரையறை அல்ல. அதிலிருந்து வேறுபடுத்திக் கொள்ளக்கூடியது. மௌலானா அவர்கள் ஒரு ஏழெட்டு கட்டுரையில், குறிப்பாக அவுட்லுக் இதழில் வந்த ஒரு முக்கியமான கட்டுரையில் சொல்கிறார். முழுக்க முழுக்க வேறு ஆட்களே இல்லை என்று எடுத்துக்கொண்டு, எனக்கு ஒரு வரையறையை நான் உருவாக்கிக்கொள்ள முடியும் என்றால் அதுதான் சரியான வரையறை. என் தரப்பிலிருந்து நான் இதுதான். இனி யார் எப்படி இருந்தாலும் நான் இப்படித்தான். எந்தத் தருணத்திலும் நான் இப்படித்தான். இதுதான் செல்ஃப். இப்படி ஒரு வரையறையை இஸ்லாமில் உருவாக்கிக் கொள்ள வேண்டும். உலகளாவ உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று குரல் கொடுத்த முக்கியமான ஒரு ஆளுமை. நம்முடைய காலகட்டத்தில் நம்முடைய மனநிலை எதிர்மறைத் தன்மையை நோக்கி ஈர்க்கப்படுகிறது. அதற்குக் காரணம் என்பது செய்திதான். செய்தி வழியாகத்தான் நாம் விஷயங்களைத் தெரிந்துகொள்கிறோம். செய்தி என்பது எப்போதும் எதிர்மறையாகத்தான் இருக்கும். தினத்தந்தியில் கூட எல்லா செய்தியுமே நெகடிவ் செய்தி. விபத்துகள், கொலைகள், சாத்தியமான நெகடிவிட்டி எல்லாமே ஒரு பத்திரிகையில் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் காலையில ஒரு கப் காப்பியோட நாம நெகடிவிட்டிய தான் பதிவு பண்ணுகிறோம் . ஃபேஸ்புக், எதுவா இருந்தாலும் எதிர்மறைத் தன்மைதான். அதுதான் நமக்குக் கவனத்தை கவருது. நாம ஒரு பஸ்ல போகும்போது ஒரு விபத்துன்னா எந்திரிச்சு பாத்துருவோம். ஒரு டெட் பாட்டி கிடக்குன்னா எந்திரிச்சு பாத்துருவோம். நம்மளோட இந்தக் கியூரியாசிடியின் அடிப்படையில தான் செய்தி உருவாக்கப்படுகிறது. எப்போது செய்தி வணிகமாகுதோ, எப்போ செய்தி ஒரு தொழிலாக மாறுகிறதோ அப்பவே செய்தி என்பது முழுக்க முழுக்க எதிர்மறைத் தன்மை கொண்டதாகவே இருக்கும். ஆக, செய்தி வழியாக நமக்குக் கிடைக்கக்கூடிய அத்தனை பேருமே எதிர்மறை ஆளுமைகளாக. யார் நியூஸ்ல அடிபடுறாங்களோ அவங்க எல்லாருமே பர்சனாலிட்டியா பார்த்தீங்கன்னா எதிர்மறையான ஆள். நெகடிவிட்டி உருவாக்கக்கூடிய, கசப்புகளை, வெறுப்புகளை, நான் பிறர் என்ற வேறுபாட்டை உருவாக்கக்கூடிய ஆட்கள். எப்போ செய்தி வலுவடைந்து வலுவடைந்து ஒரு பெரிய சந்தைத் தன்மை அடைகிறதோ, இன்னு சொல்லப்போனா ஆயிரத்தி தொள்ளாயிரத்தி முப்பது, நாற்பது, ஐம்பதுகளில் செய்தி ஒரு வணிகமாகிறது. பெரிய பிசினஸ் ஆகுது. அதுக்கு பிறகு உலகம் முழுக்க நெகடிவ் பர்சனாலிட்டீஸ் தான் தலைமைப் பொறுப்புக்கு வந்து இருக்காங்க. அந்த மாதிரியான சூழலில் மௌலானா ஆதிப் கான் போன்ற ஒருவர் செய்திகள் வழியாக நமக்கு வர்றதுக்கு வாய்ப்பே கிடையாது. அவரைப் பத்தி தினத்தந்தியிலோ இந்துவிலோ ஒரு நியூஸ் வர்றதுக்கு வாய்ப்பே கிடையாது. அவர் எங்காவது போய் ஏதாவது அதிரடியா பண்ணா ஒழிய செய்திக்கு செய்தி மதிப்பு கிடையாது. அவருடைய ஒரு கட்டுரை யாராவது போடுவாங்களா? அவருடைய அவரைப் பத்தி ஒரு செய்தியைப் போடுவாங்களா?. அப்போ இந்த மாதிரியான பாசிடிவ் பர்சனாலிட்டீஸ் நாம தேடிப் போய்க் கண்டடைய வேண்டும். நம்முடைய காலகட்டம் முழுக்க எதிர்மறைக் குரலில் பேசக்கூடியவர்களை நாம பாத்துட்டே இருக்கோம். நம்முடைய இந்த நெகடிவிட்டி வேணுமா இல்ல அந்த நெகடிவிட்டி வேணுமான்னு சாய்ஸ் தான் கொடுக்கப்படுகிறது. அப்போ முழுக்க முழுக்க சாத்வீகமான குரலில் பேசியவர். முழுக்க முழுக்க நேர் நிலையான குரலில் பேசியவர். வரலாற்றை நோக்கி அமைதியின் குரலில் பேசிய ஒரு பெரிய பர்சனாலிட்டி. நமக்கு இந்த மாதிரி அறிஞர்களின் மொழி பெயர்ப்புகள் வழியாக மட்டும்தான் வந்து சேர முடியும்.

நம்முடைய உள்ளிருக்கக்கூடிய நன்மை நோக்கிய ஒரு தேடல் நமக்கு இருக்கும்.... இயல்பாக தீமை நோக்கிய எதிர்மறைத்தன்மை நோக்கிய ஒரு பரபரப்பு நமக்கு இருந்தால், அதுக்கு அடியில் நன்மை நோக்கிய ஒரு தேடல் நமக்கு இருக்கும். அதைக் கொண்டு நாம் சென்றடைய வேண்டிய ஒரு புள்ளி என்று மௌலானா போன்றவர்களைச் சொல்ல வேண்டும். அவரை நோக்கி நம் அனைவரையும் வழிநடத்தக்கூடிய பொறுப்பு இந்த மாதிரியான மொழிபெயர்ப்புகளுக்கு உண்டு என்று நான் நினைக்கிறேன்.

நண்பர். காதிரி அவர்கள் இந்த விழாவுக்கு அழைத்தபோது, இந்த உரையை ஆற்றுவதற்கான என்னுடைய தகுதியாக நான் நினைத்தது இது ஒன்றுதான். அவரிடமிருந்து ஒரு சிறு துளியேனும் இந்த நம்பிக்கை நேர்நிலைத் தன்மையை பிடிவாதமாகக் கடைசிவரைக்கும் முன்னுவைத்து விடலாம் என்கிற ஒரு உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொண்டு இருக்கிறேன். அதன்பொருட்டு அவருக்கு உலகம் முழுக்க இருக்கக்கூடிய லட்சக்கணக்கான மாணவர்களில் ஒரு கடைநிலையைச் சேர்ந்த ஒரு மாணவன் என்று நான் என்னைக் சொல்லிக்கொள்ள முடியும். ஆகவேதான் இந்த உரை அவர்பொருட்டு ஆற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பெருமைக்குரிய சையத் ரஃபீக் பாஷா அவர்கள் இந்த நூலை மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். இது குர்ஆன் உடைய ஒரு விரிவுரை அல்லது தெளிவுரை. பழங்காசு சீனிவாசன் அவர்கள் இங்கு குர்ஆன் மொழிபெயர்ப்பு ஒரு பட்டியலைக் கொடுத்து இருக்கிறார். ஏறத்தாழ முப்பத்தொன்பது நூல்கள் இதற்கு முன் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன. இதிலே அபி அவர்களுடைய மொழிபெயர்ப்பு இல்லை என்று நினைக்கிறேன். அதில் சேர்த்தால் முப்பத்தொன்பது மொழிபெயர்ப்பு இருக்கலாம். ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தொன்பது முதல் சீராகக் குர்ஆன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மொழிபெயர்ப்புக்கும் ஒரு தேவை இருக்கிறது. நான் அபி அவரிடம் கேட்டேன், இந்த புதிய ஒரு மொழிபெயர்ப்புக்கான தேவை என்ன? அவர் சொன்னார், அரபு வார்த்தைகள் அவற்றுக்குச் சாத்தியமான தமிழில் இருக்கக்கூடிய ஒரு மொழிபெயர்ப்புக்கு ஒரு அர்த்தத்தை கொடுத்து மொழிபெயர்க்கப்பட்டன. ஆனால் அந்தச் சாத்தியமானது எது சிறந்தது எது பொருத்தமானது என்று கண்டுபிடித்து ஒரு மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும். குறிப்பாக அடைப்புக்குறிகளுக்குள் அதனுடைய other possibilities மாற்று வாய்ப்புகளைக் கொடுத்து மொழிபெயர்க்கும் போதுதான் சரியாக இருக்கும். அதிகமான அடைப்புக்குறிகள் கொண்ட ஒரு மொழிபெயர்ப்பு இன்னும் கவித்துவமான ஒரு மொழிபெயர்ப்புக்கான முயற்சி என்று அவர் சொன்னார். அவர் தொடர்ந்து மொழிபெயர்ப்புகள் செய்து கொண்டிருக்கிறார். அந்த மொழிபெயர்ப்புக்கு மேல் இந்த உரை ஏன் தேவைப்படுகிறது? எளிமையாகச் சொன்னால் ஒரு நூல் தமிழில் கிடைக்கிறதே படிக்க வேண்டியதானே! ஏன் அதுக்கு மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது? ஏன் அதற்கு மேல் உரை தேவைப்படுகிறது? அது முக்கியமான கேள்வி.

எல்லா மூல நூல்களுக்கும் உரைகள் தேவைப்படும். உரை தேவைப்படுவது அந்த நூலின் குறைபாடுனாலல்ல. நம்முடைய குறைபாடுதான். வாசகர்களுடைய குறைபாடு தான். ஏனென்றால், மூல நூல்கள் அழிவில்லாத என்றும் உள்ள விவேகத்தை மெய்ஞானத்தை சொல்லக்கூடியவை. அவை மாறுவதில்லை. அவற்றுக்கு எந்த வகையான குறைபாடுகள் எப்போதும் இருப்பதில்லை. அவை மலைகளைப் போல. அது என்றும் அங்கேதான் இருக்கும். லட்சக்கணக்கான கோடிக்கணக்கான ஆண்டாக அங்கே தான் இருக்கும். நாம ஒரு அறுபது, எழுபது, எண்பது, தொண்ணூறு வருஷம் இங்க வாழ்ந்து குமிழி போல உடைஞ்சுட்டு இருக்கோம். நாம காலத்திற்கும் இடத்திற்கும் கட்டுப்பட்டவர்கள். நம்முடைய சிந்தனை, நாம் வாழும் காலம், நாம் வாழும் சூழலுக்குக் கட்டுப்பட்ட இந்த கால இடத்திலிருந்து நாம் அந்த மலைகளுக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய காலம் இடமும் மாறும் போது நம்முடைய பார்வையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய முன்னோர் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த நம்முடைய முன்னோர், அவர்கள் வாழ்ந்த, அவர்கள் திகழ்ந்த ஒரு சூழலில் இருந்து கொண்டு ஒரு அர்த்தத்தை எடுத்திருப்பார்கள். அது அவர்களுக்குப் பொருத்தமாகக் கூட இருந்திருக்கலாம். ஆனா நாம வேறு இடத்தில் இருக்கிறோம். நாம எளிய மனிதர்கள். நாம் காலத்திற்கு இந்த இடத்திற்கு கட்டுப்பட்டார்கள். ஸ்தலகால பரிணாமம் என்று சம்ஸ்கிருதத்தில் சொல்வார்கள். அந்த ஸ்தலகால பரிணாமத்திற்கு ஏற்ப ஒரு நூலை மறுபடியும் பெற்றுக்கொள்ளுவதற்காகத்தான் விரிவுரைகள், உரைகள் தேவைப்படுகிறது.

நண்பர்களே! ஃபூக்கோ பெண்டுலம் என்ற ஒன்று உண்டு. அது ஃபூக்கோ என்கிற ஒரு பெரிய அறிவியல் அறிஞர் கண்டுபிடித்த ஒரு பெரிய ஊசல். ஆஸ்திரியாவின் ஒரு அருங்காட்சியகத்தில் ஏறத்தாழ முந்நூறு அடி நீளமுள்ள அந்த ஊசல் இருக்கிறது. கண்ணால் பார்க்க அவ்வளவு பெரிதாக இருந்த அந்த விந்தையை நீங்கக் கண்ணால் பார்க்கலாம். அது ஒரு புள்ளியில் தொங்கவிடப்பட்ட ஒரு குண்டு தான். அது ஆட்டவிடப்பட்டு ஆடிக்கொண்டே இருக்கும். அவ்வளவுதான். ஆனா தரை கீழே ஒரு வட்டம் வரையப்பட்டு அதுல வந்து நுணுக்கமான பாகைகள் இருக்கும். நீங்கப் பாத்துட்டே இருந்தீங்கன்னா அந்தக் குண்டு ஆடிக்கிட்டே இருக்கும். கொஞ்ச கொஞ்சமா அது ஆடுற கோணம் மாறுவது தெரியும். கொஞ்ச நேரத்துக் முன் இப்படி ஆடிக்கிட்டு இருந்தது. அப்படி ஆடி ,அப்புறம் இப்படி ஆடும். அப்புறம் இப்படி ஆடும். முழு வட்டமும் சுற்றி அந்தக் குண்டு மாறும். அறிவியல் படி அந்தக் குண்டு மாறவே இல்லை. அந்தக் குண்டு அதே மாதிரி ஆடிக்கொண்டு பூமி தான் சுத்திட்டு இருக்கு. பூமி சுற்றுவதை கண்ணால் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக நிரூபிப்பதற்கான வாய்ப்பாக உருவாக்கியது தான் அந்தப் பெண்டுலம். மூல நூல்கள் அந்தப் பெண்டுலத்தை போல. அவை இன்றைக்கும் அப்படியே தான் இருக்கு. பூமி சுட்டிக்கொண்டிருக்கிறது. நாம் பூமியோடு கடக்கிறோம். புதிய வாழ்க்கை, புதிய சூழல் வந்திருக்கிறது. அதற்கேற்ப இன்றைக்குத் தேவையான ஒரு தரிசனத்தை முன்வைத்து, குர்ஆனைப் பார்க்கக்கூடிய ஒரு பார்வை. மலை அங்குதான் இருக்கிறது. நின்றிருந்த இடத்தை சற்றே மாற்றி வேறொரு பார்வையை நமக்கு அளிக்கிறார் மௌலானா வஹிதுத்தீன் கான்.

அந்தப் பேராசானின் நினைவை வணங்கி இந்தத் தருணத்தில் உரையை நிறைவு செய்கிறேன். வணக்கம்!"இவ்வாறு ஜெயமோகன் பேசினார். நிகழ்வை சையத் பையஸ் அகமது காதிரி நேர்த்தியாகத் தொகுத்து வழங்கினார்.

- அருள்செல்வன்

logo
Andhimazhai
www.andhimazhai.com