இளையராஜா பட போஸ்டர்
இளையராஜா பட போஸ்டர்

இளையராஜா பயோபிக்

ஒரு நீள அகல குறுக்கு வெட்டுப் பார்வை

இயக்குநர் : சார் படத்துல ஒரு முக்கியமான சீன்

ராஜா : என்னய்யா நான் மேடைக் கச்சேரி பண்ற சீனா?

இயக்குநர் : ஆமா சார். கச்சேரியில, அடுத்தபாட்டு பாட நீங்க தயாராகிற சமயத்துல ஆடியன்ஸ்ல ரெண்டுபேர் குசுகுசுன்னு பேசிட்டிருக்கானுக. உடனே மைக்கைத் தூக்கி அவனுக மேல வீசுறீங்க…

அந்த இடத்துலதான், ‘தென்பாண்டிச் சீமையில யார் அடிச்சாரோ’ பாட்டைப் போடுறோம்”

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படவிருக்கிறது என்கிற அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்த நாளிலிருந்து இணையங்களில் நடனமாடிக்கொண்டிருக்கிற மில்லியன் கணக்கான கமெண்டுகளில் மேற்படி பதிவும் ஒன்று.

அவற்றில் பல, ராஜாவின் மேல் பற்றுதலும் பக்தியும் கொண்ட சுவாரசியமானவை. சில வழக்கம்போல் வன்ம குடோன்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.

இன்னும் தெளிவாகச் சொல்வதானால், இப்படம் குறித்து இளையராஜா மற்றும் படக்குழுவினர் தவிர்த்து, எல்லோருமே ரொம்பப் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்.

கடந்த 48 ஆண்டுகளாக, மூன்று தலைமுறை-களையும் தாண்டி, தன் தனித்த இசையால் தமிழ் சமூகத்தையே தாலாட்டிக்கொண்டிருக்கும் ராஜாவின் பயோபிக்கை பூக்கள் தூவி வரவேற்க கோடிக்கணக்கான மக்கள் காத்துக்கொண்டிருக்க, சொற்பமான சிலர், எம்.எஸ்.வி கதையை அல்லவா முதலில் எடுத்திருக்க வேண்டும்? பயோபிக் எடுக்கும் அளவுக்கு இளையராஜா என்ன செய்துவிட்டார்? சம்பளம் வாங்க்கொண்டுதானே இசையமைத்தார்? என்று அடிவயிற்றிலிருந்து வன்மத்தைக் கக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

முதல்படமான ‘அன்னக்கிளி’ தொடங்கி இன்றுவரை, ராஜா பார்க்காத வன்மமா? சபாக்களில் அவர் பெயரை உச்சரிப்பதே தீட்டு என்றொரு காலமும் இருக்கத்தானே செய்தது? இன்னும் சொல்லப்போனால் அந்த வன்மங்கள்தானே இன்றுவரை அவரை எல்லோரும் அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் உட்காரவைத்துக்கொண்டிருக்கிறது.

பல்லாயிரம் வன்மக் கதைகளுக்கு மத்தியில், ஒரு சின்ன சாம்பிள் இது. ‘இளையராஜாவைப் பிரிய நேர்ந்தபோது’, என்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து,… ‘ஒரு இசையமைப்பாளருடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றினேன். ஒரு நிலையில் அந்த இசையமைப்பாளருடன் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது . என்ன செய்வது என்று அறியாமல் ஏழு ஆண்டுகள் இருந்தேன் . காரணம் நான் பிரிந்த அந்த இசை அமைப்பாளரின் திறமையும் ஆளுமையும் பெரியது. அந்த ஏழு ஆண்டுகளில் ஒரு நல்ல இசை அமைப்பாளரை உருவாக்குவோம் என்று எண்ணி முப்பத்தி ஏழு இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றினேன். யாரும் சோபிக்கவில்லை’ என்று மிக வெளிப்படையாகப் பேசினார்.

 ‘ராஜா பயோபிக்ல வில்லன்கள் இருக்காங்களா?’ என்று கேட்கிறவர்களே…இதுபோன்ற பல வில்லாதி வில்லன்களை தனது சுட்டு விரலால் சுட்டுப்போட்டு இந்த இடத்தை அடைந்தவர்தான் ராஜா.

தன்னை வீழ்த்த நினைத்தவர்களை இடதுகையால் புறந்தள்ளிவிட்டு மீண்டும் மீண்டும் வென்று பேரெழுச்சி அடைந்தவர் அவர். ‘கதைபோல தோணும் இது கதையே இல்ல…இதை கலங்காம கேட்கும் ஒரு இதயம் இல்ல’ என்பதுதானே நம் ராஜாவின் கதை.

 ‘வழி நெடுக காட்டுமல்லி’ என்று இந்த 82 வது வயதிலும் சூப்பர் ஹிட் பாடல் கொடுக்க முடிகிறது. 1500 படங்கள் என்பது சும்மா ஒரு பட்டியல்தான் அவருக்கு. ஆனால் நமக்கோ, ‘விருமாண்டி’யில் சாமியிடம் நூறு சென்ம வரம் கேட்கும் நாயகிபோல் ஆறு சென்ம வரமாவது தேவைப்படும் ராஜாவின் அத்தனை பாடல்களையும் கேட்டுமுடிக்க.

இந்த வயதிலும் காலை 6.55க்கு அவரது கார் ஸ்டுடியோவை நோக்கி கோடம்பாக்கம் மேம்பாலத்தில் தவறாது பயணிக்கிறது.

வெற்றிமாறன், தியாகராஜன் குமாரராஜா போன்ற தமிழின் ஆகச் சிறந்த இயக்குநர்கள் அவருடன் பணிபுரிவதை தங்கள் வாழ்வின் பெருமை என்று கூறி நெகிழ்கிறார்கள். அவருடன் மிக விரைவில் அடுத்து பணி புரியவிருக்கும் இயக்குநர் பா.ரஞ்சித்,” இளையராஜா இல்லையென்றால் நான் இங்கே வந்திருக்க முடியாது. எனக்கு வழிகாட்டிய, எம் முன்னத்தி ஏரை ராஜாவை நம்பித்தான் எங்கள் வீட்டில் என்னை சினிமாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர் பாடல்கள் எனக்கு சினிமாப் பாடல்களாய் இல்லாமல் தன்னம்பிக்கைப் பாடல்களாக இருந்திருக்கின்றன" என்று எப்போதும் நெகிழ்ந்திருக்கிறார்.

இந்த 48 ஆண்டுகளாய் நமது வாழ்வின் மகிழ்வான தருணங்களில், துக்க சமயங்களில், காதல் காலங்களில் என்று எல்லா நிகழ்வுகளிலும் உடனே வந்து அணைத்துக்கொண்டிருக்கிறார்.

’போக வேண்டிய தூரம் பத்து இளையராஜா பாட்டு பாஸ்’ என்றுதான் நமது பயணங்களை அளவிட்டுக்கொண்டிருக்கிறோம்.

ஆறு கோடி பட்ஜெட்டில் படமெடுத்த ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படபாய்ஸ் ‘கண்மணி அன்போடு’ பாடல் கொடுத்ததற்காக ராஜா இருக்கும் திசை நோக்கிக் கும்பிடுகிறார்கள்.

ஆனாலும், ஈசான மூலையில லேசான பல்லிச் சத்தம் போல, அவர் மீதான வன்மங்களும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன… இதோ இந்த ராஜா பயோபிக் வரையிலும்…

படம் குறித்த பல வன்மங்கள் ராஜாவாக நடிக்கவிருக்கும் தனுஷிலிருந்தே தொடங்குகின்றன. தோற்றப்பொருத்தம் குறித்து பொங்கியவர்களுக்கு தக்க பதிலாக நமது ‘அந்தி மழை’ அட்டைப்படம் ஒன்று போதாதா?

தனுஷுக்கு வருவோம். இன்றைய தமிழ் நடிகர்களில் கமலுக்கு அடுத்த இடம் நிச்சயம் தனுஷுக்குத்தான் இருக்கிறது. ‘புதுப்பேட்டை’ தொடங்கி, ‘பொல்லாதவன்’,’ ஆடுகளம்’, வழியாக ‘ராஞ்சனா’, ‘ஷமிதாப் [இந்தி], ‘அசுரன்’ என்று ‘வடசென்னை’ வரை எத்தனை முத்திரைகள்.

இந்த உத்தரவாதம் ஒருபுறமிருக்க, பட அறிமுக நிகழ்வில் தனுஷ் என்ன சொல்கிறார் கேளுங்கள்…

”நான் இளையராஜா சாரோட ரசிகன், பக்தன். அவருடைய இசைதான் எனக்குத் துணை. இது எல்லோருக்கும் பொருந்தும். இதைத் தாண்டி அவரது இசை என் நடிப்பின் ஆசான். அவருடைய இசையைக் கேட்டு அந்த உணர்வை உள்வாங்கிக் கொண்டுதான் நடிப்பேன். இது வெற்றிமாறனுக்கு நன்றாகத் தெரியும். இளையராஜாவாக, அவரது பயோபிக்கில் நடிப்பது கஷ்டம் என்று எல்லோரும் என்னிடம் சொன்னார்கள். எனக்கு அது கஷ்டமாகத் தெரியவில்லை. அவருடைய இசையைக் கேட்டு அப்படியே எளிதாக நடித்து விடுவேன். அவரின் இசையே எனக்கு அதை சொல்லிக் கொடுத்துவிடும். ஒரு கலைஞனாக இது எனக்கு மிகவும் பெருமையானது. இதற்கான அழைப்பு இளையராஜா சாரிடமிருந்து வந்தது இன்னும் மகிழ்ச்சியானது.” என்று மருகுகிறார் தனுஷ்.

ராஜாவின் பயோபிக் குறித்த அடுத்த பஞ்சாயத்து படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் குறித்து. ராஜா பயோபிக்குக்கு இவர் மிகவும் தவறான தேர்வு என்று ராஜாவின் அதிதீவிர ரசிகர்களே அஞ்சுகிறார்கள். அந்த அச்சத்துக்குக் காரணம் இவரது முந்தைய மூன்று படங்கள். ’ராக்கி’, ‘சாணிகாயிதம்’, ‘கேப்டன் மில்லர்’ ஆகிய மூன்றுமே யதார்த்தத்திலிருந்து வெகுதூரம் விலகி நின்றவை. மட்டுமின்றி மிதமிஞ்சிய வன்முறைக் காட்சிகள் கொண்டவை. உச்சபட்சமாக தனுஷை வைத்து அவர் இயக்கிய கேப்டன் மில்லரில் பயன்படுத்திய பீரங்கிக் குண்டுகளால் லட்சம் ஜீவன்களைக் கொன்று குவித்திருக்க முடியும்.

விளைவு? ‘ராஜா கையில ஆர்மோனியப் பெட்டிக்குப் பதிலா மெஷின் கன்னைக் குடுத்துறப்போறாரு’ என்கிற அளவுக்குப் பதறிப்போயிருக்கிறது ஒரு பெருங்கூட்டம்.

ராஜாவின் தீவிர ரசிகர்களும் தரமான இயக்குநர்களுமான பாரதிராஜா, இந்தி இயக்குநர் பால்கி, கமல், வெற்றிமாறன், ராஜாவின் மண்ணின் மைந்தர் லெனின்பாரதி, தியாகராஜன் குமாரராஜா, வெங்கட் பிரபு, கவுதம் மேனன் என்று டஜன் கணக்கில் சாய்ஸ் இருக்கும்போது அருண் மாதேஸ்வரன் ஏன் என்று கேள்விகள் நீளுகின்றன. [கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுத் தேடியும் இந்த சாய்ஸ்கள் பட்டியல்களில் ஒன்றில் கூட இயக்குநர் பாலாவின் பெயர் இல்லை என்பது நியாயமாரே?]

டிராக் மாறவேண்டாம். அருண் சமாசாரத்துக்கு வருவோம்.

ராஜாவின் பயோபிக்கில் புதிதாகக் கதைவிடவேண்டிய அவசியமோ, சொந்தமாகக் காட்சிகள் சிந்திக்கவேண்டிய தேவையோ இல்லை. அவரது இசை வாழ்வின் ஒரு துளியைச் சரியாகச் சொன்னாலே அது காவியமாகிவிடும். அருணின் படங்களில் வன்முறைக் காட்சிகள் அதிகம் இருந்தன என்பதைத்தாண்டி ஓர் இயக்குநராக அவர் வென்றே வந்திருக்கிறார் என்பதால் அந்தத் தேர்வை குறை சொல்லிக்கொண்டேயிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.

இன்னும் சொல்லப்போனால் அருணுக்கு விடப்படுகிற ஒரு சவால் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

இணையத்தில் நடமாடுகிற அடுத்த ஆலோசனை. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைப்பாளராகப் போட்டால் நன்றாக இருக்குமே என்பது.

இவர்களை ‘கனியிருப்ப காய் கவர்ந்தற்று’ என்பதை அறியாத அப்பாவிகள் என்பதா, அடப்பாவிகளா என்பதா? ஓ ஜீசஸ்.

இன்னும் சிலர் படத்தில் வைரமுத்து இருக்கிறாரா? அவர் பாத்திரத்தில் நடிக்கப் பொருத்தமானவர் யார்? மணிரத்னம், பாலசந்தர் போன்றவர்களுடன் நடந்த மோதல்கள் இருக்குமா? ஏ.ஆர். ரஹ்மான் இந்தக் கதையில் வருவாரா? சில இயக்குநர்களுக்கு இசையமைக்கமாட்டேன் என்று தனது ஸ்டுடியோவுக்குள் கூட அனுமதிக்காமல் துரத்தி அடித்தாரே? அந்தக் காட்சிகள் எல்லாம் உண்டா? பயோபிக் என்றாலே எல்லாவற்றையும் பதிவு செய்யவேண்டுமல்லவா? என்று 24 * 7 நீள, அகல, குறுக்குவெட்டு விசாரணைகள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த அலசல்கள் பல தளங்களில் பல கோணங்களில் மயிர்பிளக்க விவாதிக்கப்படுகின்றன. சிலர் இன்னும் கொஞ்சம் ஆழமாக இறங்கி அந்தந்த பாத்திரங்களுக்கு யாரெல்லாம் பொருத்தமாக இருப்பார்கள் என்று ஃபோட்டோஷாப்பில் நடிகர்களின் முகங்களைப் பொருத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ராஜாவின் கதையில் இவர்களெல்லாம் எதற்கு?

 ‘ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். கடைசிவரைக்கும் அவர் மட்டும்தான் ராஜாவாம்’ என்பதுதானே ராஜாவின் கதை.

பண்ணைப்புரத்திலிருந்து கிளம்பியபோது அம்மா கொடுத்த வானொலியை விற்றுத்தான் சென்னைக்கு வந்தாராம் ராஜா. அவர் இசையமைப்பாளர் ஆனபோது அவருக்காகவே அத்தனை வானொலிப் பெட்டிகளும் விற்றுத் தீர்ந்ததுதான் வரலாறு.

இப்படி ஒரு வரலாறு இந்த பிரபஞ்சத்தில் யாருக்காவது உண்டா?

இந்த ஒற்றைச் செய்தியை மட்டுமே சொல்லி, ராஜா சென்னைக்கு வந்தார்…போராடினார்…போராடினார்…போராடினார். வாழ்வின் ஒரு பொன்மாலைப் பொழுதில் பெரியவர் பஞ்சு அருணாசலத்தை சந்தித்தார். அடுத்த சில மாதங்களில் ‘அன்னக்கிளி’ படத்தில் அறிமுகம் இளையராஜா’ என்று வந்தது. சுபம். என்று படத்தை முடித்தால் கண்கள் குழமாகி கைக்குட்டையைத் தேடுவோம்தானே?

ஸோ… இப்போதைக்கு ராஜா பயோபிக்கின் முதல் பார்வையாக வெளியிடப்பட்டுள்ள 70களில் ஒரு ஆர்மோனியப் பெட்டியுடன் ஆதரவற்ற ஒற்றை மனிதராய் மெட்ராஸில் வந்து நிற்கும் காட்சியை ரசித்தபடி கம்முன்னு கிடப்போம் என்று சொல்லி நேயர் விருப்பமாக இந்த பாடலைக் கேட்போம்.

வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா… ஓரம்போ…ஓரம்போ…

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com