பாயும் ஏ.ஐ. குதிரை.. கடிவாளம் போடுகிறதா மத்திய அரசு?

பாயும் ஏ.ஐ. குதிரை.. கடிவாளம் போடுகிறதா மத்திய அரசு?
Published on

செயற்கை நுண்ணறிவு (AI) என்பது தற்போதைய காலகட்டத்தில் உலகளாவிய சந்தையை கைப்பற்றி மிகவேகமாக வளர்கின்றதொழில்நுட்ப அலை. இந்த அலை தற்போது உலகளாவிய சந்தையை கைப்பற்றிய பிறகும், ஏ.ஐ தொழில்நுட்பம் சார்ந்த செயலிகள் மற்றும் கருவிகள் பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்பதே உண்மை.

உதாரணமாக சவூதி அரேபியா முதல் செயற்கை நுண்ணறிவு படைத்த சோபியா என்ற ரோபோவுக்கு குடியுரிமை அளித்துள்ளது. அந்த ரோபோ ஏதாவதொரு நகரத்தில் வசிக்கும் போது அதன் செயல்களுக்கு யார் பொறுப்பாளர்? சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் நீதிமுறைகள் ரோபோக்கள் போன்ற கருவிகளுக்கு எந்த வகையில் பொருந்தும்? அந்த ரோபோவின் அபரிமிதமான செயல்திறனால் ஏதேனும் அபாயம் ஏற்பட்டால் அதன் தண்டனை யாருக்கு கொடுக்கப்படும்? வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாத எந்த ஒரு தொழில்நுட்பமும் அழிவு சக்தியாக உருவெடுக்கும் அபாயம் உள்ளது. ஒரு ML அரட்டை இயலி (Machine Learning based chatbot) அதன் நிரல்முறை உரையின் (scripted text) படி வேலை செய்யவில்லை என்றால், அதன் நுண்ணறிவு தனிப்பட்ட முறையில் இயங்கி தகவல்களை சேகரித்தால், தனிநபர் சார்ந்த விதிகளை மீறினால் அதன் பொறுப்பாளர் யார் ?

மிகத் தெளிவான பதில்: அந்த செயலியை உருவாக்கிய வர்த்தக மையம் அல்லது நிறுவனம் தான் என்பது. ஏனெனில் ‘2011 IT விதிகளின் படி’ ஒரு நிறுவனம் அல்லது அந்த நிறுவனத்தின் பகுதியில் எந்தவொரு நபரும் தகவலை சேகரிக்கின்றார் எனும் போது அது நிறுவனத்தின் பொறுப்பாகிறது. ஆனால், அந்த chatbot அதன் மெஷின் லெர்னிங் திறன் காரணமாக அந்த நிறுவனத்தின் தலையீடு இன்றி தானாக செயல்பட்டு தகவல்களை சேகரித்து விட்டதாக அந்த நிறுவனம் கூறினால் சட்டம் ஏற்க முடியுமா? அந்த நிறுவனம் அதன் தகவல் பாதுகாப்பு பொறுப்பை தவிர்க்க முடியுமா? ஏனெனில், மிகுந்த தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த chatbot -களுக்கான தெளிவான விதிகள் இதுவரை வரையறுக்கப்படவில்லை. சட்டத்தில் தெளிவான விதிகள் இல்லாத காரணத்தால் நிறுவனங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் வாய்ப்புகள் உண்டு.

இந்த சூழலில்தான் வளர்ந்த நாடுகள் பலவும் செயற்கை நுண்ணறிவுக்கென்று தனிப்பட்ட விதிமுறைகளில் அதீத கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன. 2018-2019 பட்ஜெட்டிலேயே, ஆஸ்திரேலிய அரசு அங்கே செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை ஆதரிப்பதற்காக $29.9 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை ஒதுக்கியது.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த கட்டமைப்புகளில் நிறுவனத்தின் பொறுப்பு மற்றும் தகவல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முக்கியமான அனைத்து படிநிலைகளிலும் மனிதர்களை உட்படுதல் என்ற அம்சத்தை கனடா போன்ற முன்னணி நாடுகள் முன்னெச்சரிக்கையாக வலியுறுத்தியுள்ளன.

ஜூலை 2017-ல், சீனா 'அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி திட்டம்' ஒன்றை அறிமுகம் செய்தது, இது சீனாவில் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கான 2030 வரையிலான அடிப்படைகள், இதன் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளை வடிவமைக்கிறது

2018 ஏப்ரலில், ஐரோப்பிய யூனியன் செயற்கை நுண்ணறிவு தொடர்பான தொடர்பு ஆவணத்தை வெளியிட்டிருந்தது, இதில் இதற்கென்று பல்வேறு தரப்பட்ட வழிகாட்டுதல்கள், நெறிமுறைகள் மற்றும் சட்டக் கட்டமைப்பு தேவையாக இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளது — மேலும் உறுப்பினர் நாடுகள் அதனை பின்பற்றவும், அல்லது அந்தந்த நாடுகளுக்கேற்றவாறு தனிப்பயனாக்கப்பட்ட மாற்றங்களுடன் பின்பற்றக் கூடிய வரைவு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியது.

இந்நிலையில் இந்தியாவும் புதிய செயற்கை நுண்ணறிவு வழிகாட்டுநெறிமுறைகளை கடந்த நவம்பர் 5 ஆம் தேதி வெளியிட்டது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த ஜனவரியில் கலந்தாலோசனைக்காக வெளியிடப்பட்ட கட்டமைப்பு அறிக்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் செய்யப்பட்ட புதிய அறிக்கையாகும். இந்த அறிக்கை சென்னை ஐஐடியின் அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறையின் தலைவர் பலராமன் ரவீந்திரன் தலைமையில் செயல்பட்ட குழுவால் உருவாக்கப்பட்டது.

சென்னை ஐஐடி பேரா. பலராமன் ரவீந்திரன்
சென்னை ஐஐடி பேரா. பலராமன் ரவீந்திரன்

இந்த அறிக்கை ஏஐக்கான நிர்வாகத்தில் ஏழு கொள்கைளை முக்கியமானதாக விவரித்துள்ளது. அந்த ஏழு கொள்கைகளும் பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவோருக்கான தகவல் பாதுகாப்பு, இத்தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கருவிகளின் நம்பகத்தன்மை, இந்த செயலிகளின் சமூக பொறுப்புணர்வு, செயற்கை நுண்ணறிவின் சமூக புரிதல், அந்த தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மை, சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறும் தன்மை, மொழி மாதிரிகள் (LLMs-Large Language Modules) பற்றிய புரிதல் போன்றவற்றை குறிப்பிடுகிறது. இந்த ஆவண வெளியீட்டு விழாவில் பேசிய குழுத்தலைவர் ரவீந்திரன் இந்த நிர்வாக வழிகாட்டுதல்கள் இந்தியாவின் பெரும்பான்மையான AI குறித்த நடைமுறை அணுகுமுறைகளை நெறிமுறைப்படுத்த உதவும் என்று தெரிவித்தார்.

இந்த அறிக்கை ஆறு பரிந்துரைகளையும் கொண்டுள்ளது.

1.AI தொழில்கட்டமைப்பை விரிவுபடுத்த, டிஜிட்டல் உட்கட்டமைப்பை (Digital public infrastructure) உருவாக்கி AI தொழில்நுட்ப செயலிகள் உபயோகத்தை பெருக்குதல்

2. ஏ.ஐ. துறையில் திறமையை வளர்த்துக் கொள்ளுதல் மூலம் அதன் திறனை மேம்படுத்துதல். (இதற்கென புதிய பாடத்திட்டங்களையும் உட்புகுத்த திட்டமிடப்பட்டுள்ளது)

3. ஏ .ஐ. யை ஒழுங்குபடுத்த சீரான, லாவகமான மற்றும் எளிதில் பயன்படுத்தக்கூடிய கட்டமைப்புகளை(framework) ஏற்றுக்கொள்வது

4. முன்னெச்செரிகையாக செயல்பட்டு இந்தியா சார்ந்த காரணிகளைப் கணக்கிட்டு ஏஐ உருவாக்கும் அபாயங்களைக் குறைத்தல் 5. இதன் மதிப்புச் சங்கிலியில் (value chain) உள்ள பல்வேறு காரணிகள் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த வெளிப்படையான கருத்துக்கள் சாதாரண மக்களுக்கு வழங்குவதன் மூலம் இது உருவாக்கிய புதிய சுற்றுச்சூழலில் அனைவரது பொறுப்பையும் அதிகரித்தல். 6. ஏஐ நிர்வாகக் குழு உருவாக்கம்.

செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த நிர்வாகக் குழுவை உருவாக்க இந்த புதிய குழு பரிந்துரைத்துள்ளது முக்கியமானதாகும். இந்தக் குழு இந்தியாவின் ஏஐ கொள்கைக்கான மைய மூளையாக செயல்படும். பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து இதற்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படுவார்கள்.

இந்த பரிந்துரைகளின் உள்ளீட்டை ஆராயும் போது இவை வெறும் ஏஐ நிர்வாகத்திற்கான வழிகாட்டுதல்கள் மட்டுமே என்பது விளங்குகிறது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் ஏஐ ஒழுங்குமுறைக்கான சட்ட வடிவம் இல்லை. முந்தைய கட்டமைப்பு ஏ.ஐயைப் பயன்படுத்துவதில் உள்ள அபாயங்களை குறைப்பதில் முக்கியத்துவம் கொடுத்திருந்த போதும், தற்போதைய வழிகாட்டு நெறிமுறைகள், ஏஐ அணுகுமுறையை நெறிமுறைகளுடன் ஊக்குவிப்பதாக மாற்றியிருக்கின்றன. இந்த அறிக்கை எதிர்காலத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் மற்றும் நிர்வாகத்தில் 'புதிதாக தோன்றும் அபாயங்கள் , ஏஐயின் அப்போதைய வளர்ச்சி' அடிப்படையில் புதிய சட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

செயற்கை நுண்ணறிவுக்கான புதிய சட்ட திருத்தத்தை உருவாக்க அரசு பரிசீலிக்கிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன்,"உடனடி திட்டங்கள் எதுவும் இல்லை எனவும் அத்தகைய சட்டமூலத்திற்குத் தேவையெனும் நேரத்தில் அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும்,’ எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com